மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

என் அப்பா(சிறுகதை-இறுதிப்பகுதி)

தேமொழி

Jan 16, 2016

my father2(கரோலின் கான் எழுதிய சிறுகதையின் மொழிபெயர்ப்பு)

என் அப்பாவின் வாழ்வில் நிகழ்ந்ததை நினைத்தால் என் இதயமே அவருக்காக இரத்தம் வடிக்கும். “விதியை மதியால் வெல்லலாம்” என்று வாழ்நாள் முழுவதும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இளைஞர் ஒருவர் எப்படி இடிந்து போயிருப்பார் என்று என்னால் கற்பனை செய்ய முடிகிறது.

நான் மதிக்கும் சில சிறப்பான பொருட்களை ஒரு பெட்டியில் வைத்திருக்கிறேன். அதில் என் அப்பாவின் இரு பொருட்கள் இருக்கின்றன. ஒன்று கருப்பு வெள்ளைப்படம் கொண்ட அவருடைய உயர்நிலைப்பள்ளியின் மாணவர் அடையாள அட்டை. அதில் ஆளைக் கவரும் தோற்றத்தில் அவர் இருக்க மாட்டார், ஆனால் புத்திசாலி என்பது வெளிப்படும் தோற்றத்துடன், கொஞ்சம் கூச்ச சுபாவம் தோற்றம் கொண்டவராக, அக்காலத்தில் பொதுவாக வழக்கில் இருந்த கருப்பு வண்ண சீருடையில் இருப்பார். மற்றொன்று பள்ளி நாட்களில் அவர் எழுதிய நாடகத்தின் கையெழுத்துப் பிரதி. கருநீல மையில், அழகான கையெழுத்தில் எழுதப்பட்ட பதிவின் இறுதியில் 1972 இல் “டாய்” எழுதியது (By Tai, 1972) என்ற குறிப்பிருக்கும்.

இவையிரண்டையும் நான் 2000 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் என் தாத்தா வீட்டிற்குப் போன பொழுது ஒரு புத்தகக் குவியலில் கண்டெடுத்தேன். அவற்றைப் பார்த்த பொழுது நான் எவ்வளவு அதிர்ச்சி அடைந்தேன் என்பது எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. நான் அறிந்தவரை அறுவையான, பலவீனமான மனிதராக, புகை பிடிப்பதும், சீட்டு விளையாடுவதும், சீன சதுரங்கம் விளையாடுவதும், குடிப்பதும் எனப் பொழுதைக் கழிக்கும் என் அப்பாவினுடையவை அவை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எப்பொழுதாவது புன்னகைக்கும் அவர், என்னை அரவணைத்து முத்தமிட்டதையோ, என்னுடன் பேசி என் இன்ப துன்பங்கள், அச்சம், கவலைகள் என எதிலும் பங்கு கொண்டதையோ நான் அறிந்ததில்லை. என் பள்ளியில் தேர்வுகளில் நான் பெறும் மற்றொரு முதல் மதிப்பெண் மட்டுமே அவருக்கு மகிழ்ச்சியைத்தரும்.

என் அப்பா குடித்திருக்கும்பொழுது அவரை எனக்குப் பிடிக்கும், அப்பொழுதுதான் அவர் அதிகம் பேசுவார். அந்தச் சமயம் அவர் அரசியல், வரலாறு என்று பேசுவதை விரும்புவார். ஒருமுறை குடித்திருந்த பொழுது கவிதை ஒன்றை எழுதினார். அதன் கடைசி இரு வரிகளும் எனக்கு நினைவிருக்கிறது.

“கடந்த இருபது ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்க்கத் துணிவில்லை

கனவிலும் புத்தகங்களின் வாசனை என்னை வெட்டிக் கொல்கிறது”

my father4பல்கலைக்கழகக் கல்வி என்பது இனி கிட்டாது என்ற நிலையில் 1979 இல் என் அப்பா தனது நினைவுகளில் ஆழ்ந்து போனார். கிராம மக்கள் அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என நினைத்தார்கள். அப்பா மிகவும் அமைதியானவராகி விட்டார். பல நாட்களுக்குக் காலையில் வீட்டை விட்டுச் சென்றால் இருட்டிய பிறகுதான் வீடு திரும்புவார். கிராமமக்களில் சிலர் அவரை கேலி செய்தனர், ” இறவாது உயிர்த்தெழும் ஒரு ஃபீனிக்ஸ் பறவை என்று தன்னை நினைத்திருந்தார், ஆனால் அவர் சாதாரணக் கோழி என்பது தெரிந்துவிட்டது. அதிலும் பிற நாட்டுக்கோழிகளில் இருந்து எந்த வேறுபாடும் இல்லை,” என்று ஏளனம் செய்தார்கள். 1970 களின் காலகட்டத்தில், அவர் தனது துயரில் இருந்து மெதுவே மனம் தேற சீனாவின் விவசாயக் குடும்பம் ஒன்றினால் பொறுத்திருக்க இயலவில்லை. ஒரு மாதத்திற்குள் தாத்தா அவரை வயலுக்கு வேலைக்கு அனுப்பினார். ஆரம்பத்தில் இருந்து ஒன்றுவிடாமல் கற்றுக்கொள்ள வைத்தார். நாட்டுப்புறங்களில் விவசாயம் தெரிந்திருந்தால் குறைந்தது பட்டினியால் சாகாமலாவது இருக்கலாம்.

என் பாட்டி சொல்லியிருக்கிறார்கள், 1979 ஆம் ஆண்டின் இலையுதிர்காலம் முடிவில், ஒரு இரண்டு நாட்களுக்கு என் அப்பா காணாமல் போய் விட்டாராம். பக்கத்துக் கிராமத்தில் இருந்த ஒரு சிலர், அமைதியாக ஒரு இளைஞன் ஆற்றங்கரையில் தனித்து அமர்ந்திருந்ததைப் பார்த்ததாகச் சொல்லியிருக்கிறார்கள். என் அப்பாவின் குடும்பம் பதறிப் போய் அவரைத் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். அவர் ஆற்றில் குதித்திருப்பாரோ என்று அஞ்சியிருக்கிறார்கள். ஆனால் மூன்றாம் நாள் வெளிறிய முகத்துடனும் நீலம் பாரித்த உதடுகளுடனும் அவர் வீடு திரும்பியுள்ளார். அந்த இருநாட்களிலும் என்ன நடந்தது என யாருக்குமே தெரியாது, ஆனால் அதற்குப் பிறகு அப்பா தனது தலைவிதியை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வந்திருந்தார். தனது புத்தகங்களை எல்லாம் திரட்டி கிட்டங்கியில் போட்டு மூடி, அத்துடன் தனது கனவுகளையும் சேர்த்து மூடிவிட்டார்.

பிற்காலத்தில், விவசாயம், வியாபாரம், அம்மாவுடன் மழலையர் பள்ளி நடத்துவது என அப்பா எல்லாவித வேலைகளையும் செய்தார். ஆனால் எதிலுமே அவருக்குப் பற்றுதல் இருக்கவில்லை. பெரும்பாலும் என் அம்மாவையே எதற்கும் நம்பி இருந்தார். பெரும் பொறுப்புகளையும், முக்கியமான பெரிய முடிவுகள் எடுப்பதையும் அம்மாவிடம் விட்டுவிட்டார். எனக்கு ஐந்து வயது இருக்கும்பொழுது கிராமத்திற்கு அருகில் இருந்த பெரிய நகரத்திற்குக் குடி பெயர்ந்தோம். “நான் என் வாழ்வின் மிகச் சிறந்த நாட்களைத் தொலைத்துவிட்டேன்,” “சிறந்த வாய்ப்புகள், சிறந்ததான எதுவுமே என் கைநழுவிப் போய்விட்டது,” என்று என்னிடம் சொல்லுவார். அப்பொழுதெல்லாம் அவர் தனது சோம்பேறித் தனத்திற்கு சப்பைக் கட்டு கட்டுகிறார் என்று நினைப்பேன். ஆனால் இப்பொழுது புரிகிறது, தனது கையாலாகாத நிலையால் ஏற்பட்ட தன்னிரக்கம் அவரை அவ்வாறு பேசச் செய்துள்ளது என்பதை.

முன்னர் பலமுறை என் அப்பாவை வருந்தச் செய்யும் வகையில் நான் பேசியுள்ளேன். அவர் குடும்பத்திடம் அவருக்கு அக்கறையில்லை என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன். ஆனால் நான் வளரத் தொடங்கியதும், காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக அவரை மன்னிக்கத் துவங்கினேன். அவரைப் புரிந்து கொள்ள முயன்றேன். அவர் நிலையில் நானிருந்திருந்தால் அவரைவிட நல்ல முறையில் செயல்பட்டிருப்பேனா? எனக்குத் தெரியவில்லை.

my father52008 இல் நான் ‘காயோகோவ்’ தேர்வு எழுதிய பொழுது மழை கொட்டியது. பள்ளிக்கு வெளியே மழையில் ஒரு கையில் குடையும், மறு கையில் எனக்குப் பிடித்த பழங்களையும், கேக்குகளையும் கொண்ட பையைப் பிடித்தபடி எனக்காக அப்பா காத்திருந்ததைப் பார்த்த பொழுது அவரது கதை என் மனதில் ஓடியது. அவர் மிகவும் வயதானவராகத் தளர்ந்து போய்விட்டிருந்தார், நான் அவருக்குத் தெரியாதவாறு முகத்தைத் திருப்பிக் கொண்டு சத்தமில்லாமல் அழத் துவங்கினேன்.

____________________________________________________________________________________

குறிப்பு:

‘கரோலின் கான்’ அவர்களின் சிறுகதை, அவரது அனுமதி பெற்ற பிறகு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கரோலினுக்கு நன்றிகள் உரித்தாகிறது.

My Father (http://theanthill.org/my-father)

Family history of the first gaokao after the Cultural Revolution

– by Karoline Kan (https://twitter.com/karolinecqkan)

Karoline Kan is a journalist in Beijing at Radio France Internationale


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “என் அப்பா(சிறுகதை-இறுதிப்பகுதி)”

அதிகம் படித்தது