மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

என் அப்பா(சிறுகதை)

தேமொழி

Jan 9, 2016

my father2(கரோலின் கான் எழுதிய சிறுகதையின் மொழிபெயர்ப்பு)

my father13பல ஆண்டுகளாக நான் என் அப்பாவை வெறுத்திருக்கிறேன். என் பார்வையில், உலகிலேயே பொறுப்பற்ற ஒரு அப்பா என்றால் அது அவர்தான். எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற அவர் பணம் எதுவும் சம்பாதித்ததில்லை. குடும்பமாக பொழுதைக் கழிக்கும்பொழுது அதில் மகிழ்ச்சி அடையாதவர், முதல் ஆளாக வெளியேறிவிடுவார். தனது பிள்ளைகள் பள்ளியில் மகிழ்ச்சியாகப் படிக்கிறார்களா என்று அவர் கவலைப்பட்டதில்லை, ஆனால் அவர் எதிர்பார்த்தது போல நாங்கள் மதிப்பெண் பெறாவிட்டால் அவருக்குக் கோபம் மட்டும் வரும். அடிக்கடி அம்மாவுடன் சண்டை போடுவார், அதற்குக் காரணமும் எனக்குத் தெரியாது.

“யாரை நீங்கள் குறை சொல்ல முடியும்? எல்லாம் உங்கள் தலையெழுத்து” என்று அம்மாவும் பதிலுக்குக் கத்துவார். அம்மா தனது நினைவிலிருந்து முப்பதாண்டுகளுக்கு முன்னர் அப்பாவின் வாழ்வில் நடந்த கசப்பான நிகழ்வுகளை மீண்டும் சொல்லும்பொழுது அப்பா அமைதியாக இருப்பார், அறையின் மறுபக்கத்தை நோக்கித் திரும்பி தனது சிகரெட்டைப் பற்ற வைப்பார். அம்மா அவரது மனதின் வலியை நினைவுபடுத்தும் பொழுது, அப்பாவின் சிகரெட்புகை வழியே அவர் கண்களின் கண்ணீரைப் பார்த்த நினைவுள்ளது.

என் அப்பா தியான்ஜின் (Tianjin) அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில், பழமைவாதக் குடும்பத்தின் முதல் மகனாக 1957 ஆம் ஆண்டு கோடை காலத்தில் பிறந்தார். கடினமான வாழ்க்கை, ஆனால் அனைவரும் அவரிடம் அன்பு செலுத்தியது மட்டுமில்லாமல் செல்லம் கொடுத்துக் கெடுத்தார்கள். எனது தாத்தா பள்ளிக்கே சென்றது கிடையாது, அதில் அவருக்கு வாழ்நாள் முழுவதும் தாளாத வருத்தம் உண்டு. எனவே தனது கடந்த கால விருப்பங்களைத் தனது மகன் நிறைவற்ற வேண்டும் என எதிர்பார்த்தார். “கல்வி கற்ற அறிவாளியாக இருப்பதைவிட உலகில் சிறந்தது எதுவும் கிடையாது” என்று தனது அருகில் உள்ளோரிடம் சொல்லிக்கொண்டிருப்பார். அவர்களுக்கு, அவர் ஏன் தனது மகனை வயல் வேலைகளைச் செய்யச் சொல்வதில்லை, அதற்குப் பதில், வறுமையான அந்த காலகட்டத்தில், தனது பிள்ளையின் வயதை ஒத்த மற்ற பிள்ளைகள் தங்கள் குடும்பத்திற்காக வயல்வெளியில் உழைக்கும்பொழுது, இவர் மட்டும் தனது மகனை நூல்கள், கவிதைகள், கதைப்புத்தகங்கள் படிக்கவும், பழைய வானொலிப்பெட்டி வழியாக ஒலிபரப்பப்படும் உலகச் செய்திகளை கேட்கவும் அனுமதிக்கிறார் என்று புரியாது.

my father9அப்பாவும் தனது குடும்பம் தன்மீது வைத்திருந்த நம்பிக்கையைக் குலைக்கவில்லை. அவருக்கு நல்ல நினைவாற்றல் உண்டு, பள்ளியிலும் நன்றாகப் படித்தார். எனது பாட்டி என்னிடம் சொல்லியிருக்கிறார்கள், ஒருமுறை கணக்கு ஆசிரியர் வகுப்பில் ஒரு கணக்கைப் போட வழிதெரியாமல் சங்கடப்பட்டாராம், ஆனால் தனது கையை உயர்த்திய என் அப்பா அதுநாள்வரை வகுப்பில் சொல்லியே தரப்பட்டிராத வழிமுறைகளின்படி அந்தக் கணக்கின் விடையைச் சொல்லியிருக்கிறார். இச்செயல், அந்தச் சிறிய கிராமப்புற பள்ளியில் என் அப்பாவைப் புகழ் பெறச் செய்தது. இது எந்த அளவு உண்மை என்று எனக்குத் தெரியாது, ஆனால், இதன் பிறகு சீனாவின் புகழ் பெற்ற கணித மேதையின் பெயரை ஒட்டி என் அப்பாவிற்கு “இரண்டாம் ஹுவா லூ கெங்” (Hua Lo-keng) என்று பட்டப்பெயர் சூட்டப்பட்டது. இன்னமும் அவரது ஊரில் அவரை அவ்வாறு அழைப்பதுண்டு.

சீனாவின் கிராமப்புறங்களில், 1960களிலும் 70களிலும் அதிகம் பொழுதுபோக்க ஏதும் வாய்ப்பிருந்ததில்லை. என் அப்பாவும் தனது பெரும்பாலான நேரங்களை, ரொமான்ஸ் ஆஃப் தி த்ரீ கிங்டம்ஸ், தி ஆர்ட் ஆஃப் வார், தி வாட்டர் மார்ஜின் (Romance of the Three Kingdoms, The Art of War, The Water Margin) போன்ற புத்தகங்களை படிப்பதில் செலவிட்டார். எனது தாத்தா நெல் பயிரிட்டு, களையெடுத்து, குதிரைக்குத் தீவனம் தருவதையெல்லாம் செய்து கொண்டிருக்கும் பொழுது, எனது அப்பாவிற்கு தன்னைச் சுற்றி சுற்றி வரும் சிறுவர்களிடம் கதைகள் சொல்வதில்தான் அதிக விருப்பம் இருந்தது. ‘இந்த வயதான விவசாயிக்கு ஒரு நகர்ப்புற மகன் இருக்கிறான்’ என்று பிறர் என் தாத்தாவிடம் வேடிக்கையாகக் கேலி பேசுவார்கள். அதைக் கேட்கும் தாத்தாவும் புன்னகையுடன், ‘என் மகன் நல்ல அறிவாளி, நன்றாகப் படிப்பவன்’ என்று பெருமை பேசுவார்.

என் அப்பா என்றுமே தன்னை அந்த கிராமத்தில் வாழும் மனிதராகக் கருதியதில்லை. மக்கள் அவரை ஆணவக்காரர் என்று சொல்வார்கள். அந்தக் கிராமத்தின் பிற இளைஞர்களை அவர் தனது நண்பர்களாக என்றும் தன் மனதில் கருதியதுமில்லை. அவர்கள் தன்னை மதிப்புடன் பார்ப்பதை மட்டுமே விரும்பினார். அவர்களை அவர் கேலி செய்வார். ஒவ்வொருவருக்கும் அவர் பட்டப்பெயர் வைப்பதும், அது பிரபல்யமாக மாறுவதும் வழக்கம். வாத்து போன்ற குரலை உடையவருக்கு “வாத்து சாங்” என்ற பெயரும், நிறம் குறைவான, குட்டையான ஐந்தாவது பிள்ளையாக இருப்பவரை “குட்டி ஐந்தாம் உருளைக்கிழங்கு” என்றும், சீன அதிபர் மாவோ போல முடிவெட்டிக்கொண்டு, தனது சட்டைப்பையிலும் இரண்டு சிறிய சிவப்பு அட்டை போட்ட புத்தகம் வைத்திருக்கும் மாவோ ரசிகரை “இரண்டாம் மாவோ” என்றும் அவர் அவர்களுக்குப் பட்டப்பெயர்கள் சூட்டுவார்.

என் அப்பா பள்ளிநாட்களில், படிக்க வேண்டிய முக்கியமான காலத்தில், 1966 ஆம் ஆண்டிலிருந்து 1976 ஆம் ஆண்டுவரை சீனாவில் கலாச்சாரப் புரட்சி நடந்தது. பள்ளியில் வகுப்புகள் மூடப்பட்டன, இல்லாவிட்டால் சரிவர நடத்தப்படவில்லை, வழக்கமான பாடங்களுக்குப் பதிலாக திட்டமிடப்பட்ட சிறப்பு கலாச்சாரக்கல்வி மற்றும் தொழிற்கல்வி பாடங்களும்கூட அப்பொழுது கற்றுக் கொடுக்கப்படவில்லை. படிக்க விரும்பாத மாணவர்களுக்கோ அது ஒரு சொர்க்க வாழ்க்கை. ஆனால் கற்பதில் ஆர்வம் கொண்டிருந்த என் அப்பாவைப் போன்ற மாணவர்கள் படிப்பதற்கான சரியான வாய்ப்பையும் காலத்தையும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

my father11என் அப்பா ஆரம்பப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பொழுதே, 1966 ஆம் ஆண்டிலேயே கல்லூரியின் உயர் கல்விக்கான ‘காயோகோவ்’ (Gaokao) தேர்வுமுறை கைவிடப்பட்டுவிட்டது. சீன அதிபர் மாசேதுங் (Mao Zedong), 1968 ஆண்டின் ‘பீப்பிள்ஸ் டெய்லி’ (People’s Daily) செய்தித்தாளில், “கல்வி என்பது புரட்சிக்கு வழிவகுக்க வேண்டும், பாட்டாளி மக்களின் வாழ்வு உயர உதவிபுரிவதாக இருக்கவேண்டும்” என்று எழுதினர். விவசாயிகளுக்கும், உழைப்பாளிகளுக்கும், வீரர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்பு என்பது 70களில் நடைமுறைக்கு வந்தது. அதனால் ஒருவரது குடும்பப் பின்னணி உயர் கல்வி கற்க முக்கியக் காரணியாக அமைந்தது. அத்துடன் அரசியலில் ஆர்வம் கொண்டிருப்பதும் அவசியம் என்றானது. என் அப்பா தனக்கு இதனால் உயர்கல்வி கற்க வாய்ப்பிருப்பதாக எண்ணினார். ஆனால் அது முற்றிலும் தவறான எண்ணம். உயர்கல்வி கற்பது பரிந்துரைகளின் அடிப்படையில் என்று மாறியது. என் அப்பாவின் குடும்பப் பின்னணியில் பாதுகாப்புப்படை பிரிவினர், கட்சி உறுப்பினர்கள், அல்லது செம்படையின் வீரர்கள் என யாரும் இல்லாததால் என் அப்பா பரிந்துரைக்கப்படவில்லை. 1975 ஆம் ஆண்டு அப்பா தனது பள்ளிப்படிப்பை முடித்தார். ஆனால் அவரது உயர்கல்விக்கான கதவுகள் முற்றிலும் அடைக்கப்பட்டுவிட்டன என்பதை அவரால் நம்ப முடியவில்லை.

பின்னர் அக்டோபர் 21, 1977 இல் மீண்டும் ‘காயோகோவ்’ தேர்வு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. கல்லூரியில் படிக்க விரும்பிய என் அப்பாவின் ஆசையை இது துளிர்விடச் செய்தது. ஒரு மாதம் கடந்த பிறகு நடக்கப் போகும் தேர்விற்காகக் கடினமாக உழைத்து தன்னை தயார் செய்து கொண்டார். தனது குடும்பத்தில் கல்லூரியில் அடியெடுத்து வைக்கப்போகும் முதல் மாணவனாகத்தான் இருப்போம் என நம்பிக்கையுடன் இருந்தார். அந்த குளிர் காலத்தில் தாத்தா என் அப்பாவைத் தனது குதிரை வண்டியில் தேர்வு நடக்குமிடத்திற்கு அழைத்துச் சென்றார், வெளியே குளிரில் பலமணி நேரம் காத்திருந்தார். சீன வரலாற்றிலேயே குளிர்காலத்தில் நடத்தப்பட்ட ஒரே ‘காயோகோவ்’ தேர்வு அதுதான், குறைந்த அளவில் மாணவர் பங்கு பெற்ற தேர்வும் அதுதான். 5.7 மில்லியன் மாணவர்களில் 300,000 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதினார்கள்.

அப்பாவின் தேர்வு முடிவுகளும் சிறப்பாக இருந்தது. அறுவை சிகிச்சை மருத்துவம் படிக்க ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது. அவர் முதல் ஆண்டு படிப்பிற்கு தன்னைத் தயார் செய்து கொண்டிருக்கும் பொழுதே, குடும்பத்தில் சிலர் தங்கள் மனதை மாற்றிக் கொண்டார்கள். மருத்துவராவதா? அது நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்யும் வேலைக்காரன் போன்ற பணிதானே என்று எண்ணினார்கள். அப்பா தனது மருந்துப்பெட்டியுடன், வெறுங்காலுடன் கிராமம் கிராமாகச் சென்று தனது மருந்தை ஏமாற்றி விற்கும் ஆளாக வாழுமாறு அவரது வாழ்க்கை அமைந்துவிடுமோ? என்பது போன்ற விவாதங்கள் என் தாத்தாவைக் குழப்பியது. அவருக்குப் பிற கிராமத்து மக்களின் பார்வையில் தனது மகன் வெறும் மருத்துவம் பார்க்கும் ஊழியனாகத் தென்படுவார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனது மகனிடம், நான் உன்னை அந்த மருத்துவக் கல்லூரியில் படிக்க அனுமதிக்கமாட்டேன், மீண்டும் அடுத்த ஆண்டு ‘காயோகோவ்’ தேர்வுக்குத் தயார் செய், தேர்வு எழுது. நீ படிப்பதற்குச் சிறந்த படிப்பு எது எனத் திட்டமிடுவோம் என்றார்.

அடுத்த ஆண்டு, 1978 ஆம் ஆண்டு கோடையில் என் அப்பா மீண்டும் ‘காயோகோவ்’ தேர்வு எழுதினர். இந்தமுறை அவர் இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். ஒரு அறிவியல் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படிக்க முடிவு செய்தார். ஆனால், சில நாட்கள் கழித்து, கல்வி நிறுவனத்தின் உள்ளூர் பிரிவின் அதிகாரி, ஒரு புதிய கல்விக் கொள்கையின் காரணமாக அவரது விண்ணப்பத்தை பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வழியில்லை என்று கூறினார். சென்ற ஆண்டு படிக்க இடம் கொடுக்கப்பட்டும் அதனை ஏற்றுக் கொள்ளாது புறக்கணித்தவர்களுக்குத் தண்டனையாக அவர்கள் தகுதியை இழக்கிறார்கள். நம் நாட்டில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி குறைவு, அதனால் உனது விண்ணப்பத்தை நான் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப் போவதில்லை என்று கூறிவிட்டார்.

my father12யாருக்குமே அந்த அதிகாரி கூறியது உண்மையா என்று அறிய வழியில்லை. அந்த காலகட்டம் எதிலுமே குழப்பங்கள் நிறைந்த காலம், அதனால் உண்மையிலேயே அப்படி ஒரு கொள்கை இருந்ததா, அல்லது அவர் கூறிய காரணத்திற்கு வேறேதும் பின்னணி இருந்ததா என்று தெரிந்து கொள்ளவும் வழியில்லை. அவர் அந்த பதவிக்குப் புதிதாக வந்தவர், அதனால் துடிப்புடன் செயல்பட விரும்பினார் எனவும் வதந்தி உண்டு. ஒரு சிலர், அவரது மருமகள் தேர்வை சரியாக எழுதவில்லை. ஆனால் அந்தப் பெண்ணும் என் அப்பா படிக்க விரும்பிய அதே பல்கலைக்கழகத்தில் அதே படிப்பைப் படிக்க விரும்பினார். ஒரே பள்ளியில் இருந்து இருவர் சென்றால் அவருக்கு இடம் கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்பதால், என் அப்பா பலிகடா ஆக்கப்பட்டார் என்றும் கூறினார்கள்.

எனது அப்பா மீண்டும் மூன்றாவது முறையாக 1979 இல் தேர்வு எழுத முயன்றார். ஆனால் இம்முறை தேர்வுக்குப் பதிவு செய்த பொழுதே, அவர் வயது வரம்பைக் கடந்துவிட்டதால் தேர்வு எழுதத்தகுதி இல்லை என்று தடை செய்யப்பட்டார். அப்பொழுது அவருக்கு வயது 22, அவரது எதிர்காலமே மரண தண்டனைக்கு உள்ளானது.

 

____________________________________________________________________________________

குறிப்பு:

‘கரோலின் கான்’ அவர்களின் சிறுகதை, அவரது அனுமதி பெற்ற பிறகு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கரோலினுக்கு நன்றிகள் உரித்தாகிறது.

My Father (http://theanthill.org/my-father)

Family history of the first gaokao after the Cultural Revolution

– by Karoline Kan (https://twitter.com/karolinecqkan)

Karoline Kan is a journalist in Beijing at Radio France Internationale

____________________________________________________________________________________

-இதன் அடுத்த பகுதி அடுத்த இதழில் வெளிவரும்


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “என் அப்பா(சிறுகதை)”

அதிகம் படித்தது