செப்டம்பர் 18, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

எப்போது சீரமைக்கப்படும் திருநெல்வேலி தென்காசி நெடுஞ்சாலை?

பா. வேல்குமார்

Aug 6, 2016

திருநெல்வேலி முதல் தென்காசி வரை உள்ள நெடுஞ்சாலையின் மோசமான நிலையினால் கடந்த ஆறு மாதங்களாக விபத்து அதிகரித்து வருகின்றது.

Siragu-thirunelveli-road1

விலை மதிக்க முடியாத மனித உயிரின் இழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது, கடந்த வாரம் நெல்லை மாவட்டம் மாறாந்தை என்னும் ஊரின் அருகில் ஏற்பட்ட விபத்தினால் ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளனர்.

மரணப் படுக்கையில் உள்ள குழியினைப் போன்று, போக்குவரத்து அதிகமுள்ள ஒரு நெடுஞ்சாலையின் மோசமான நிலையினைக் கண்டு தினந்தோறும் அலுவலகத்திற்கு பணிக்காக பேருந்தில் பயணம் செய்பவர்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவியரும் மனம் குமுறுகின்றனர், ஒரு அரசினை மக்களாகிய நாம் எதற்காக தேர்ந்து எடுக்கிறோம் என்ற அக்கறை ஆளும் அரசின் மனதிலும், அரசு அதிகாரிகளின் மனதிலும் உள்ளதா என்னும் கேள்வி ஒவ்வொரு மனிதரின் மனதிலும் எழாமல் இல்லை.

மக்களின் வரிப் பணத்தில் இயங்கும் அரசு அவர்களின் தேவை என்ன என்பதை அறிந்து, அதனை நிறைவேற்றித் தருவது அரசின் தலையாய கடமை என்பதை எப்போது உணரப் போகின்றது.

Siragu-thirunelveli-road2

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இரவு நேரத்தில் கேரளா மற்றும் செங்கோட்டை செல்வதற்காக இருநூற்றுக்கும் மேலான லாரிகளும், திருநெல்வேலி முதல் தென்காசி வரை தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளும், தற்போது குற்றாலத்தில் அருவிகளில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களும் ஏறத்தாழ ஒரு நாளைக்கு ஐநூறுக்கும் மேற்பட்ட வாகனங்கள் திருநெல்வேலி முதல் தென்காசி வரை உள்ள நெடுஞ்சாலையினை பயன்படுத்துகின்றனர்.

கடந்த வருடம் தென்மேற்கு பருவ மழையின் போது பெய்த மழையினால் சேதமடைந்த இந்த சாலையின் நிலை நாளுக்கு நாள் மேலும் சீரழிந்து வருகின்றது.

ஒரு சாலையின் தரம் எவ்வாறு உள்ளது, அதனை எப்போது மேம்படுத்துவது, ஒரு நாளைக்கு இந்த சாலையினை எவ்வளவு நபர்கள் பயன்படுத்துகின்றனர் என்பதை எல்லாம் அலசி ஆராய்ந்து அதற்கேற்றார்போல் செயல் திட்டம் தீட்டி, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது, ஒரு அதிகாரியின் கடமை என்பதை எப்போது உணரப் போகின்றார்கள் நெடுஞ்சாலைத் துறையினர்.

Siragu-thirunelveli-road3நாள்தோறும் செய்தித் தாள்களில் வரும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையினை நினைக்கும் போது மனம் பதறுகின்றது.

அரசு அலுவலகங்களில் அதுவும் பொதுத்துறையில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் தங்களது பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும், மேலும் சட்டமன்ற உறுப்பினர் என்பவரும் நாம் மக்கள் பணி செய்யத்தான் வந்துள்ளோம், அதனை சீரும், சிறப்புமாக செய்ய வேண்டும் என்பதை மனதில் கொண்டு, மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து, அவர்களது தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்து உதவ வேண்டும்.

மக்களின் வரிப்பணம் தான் நம்முடைய வாழ்க்கைப் பணம் என்பதை அரசு அலுவலர்களும், சட்டமன்ற உறுப்பினர்களாகிய மக்கள் பிரதிநிதிகளும் எப்போது உணரப் போகின்றார்கள் என்பதே பொதுமக்களின் மனதில் எழும் கேள்வியாக உள்ளது.


பா. வேல்குமார்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எப்போது சீரமைக்கப்படும் திருநெல்வேலி தென்காசி நெடுஞ்சாலை?”

அதிகம் படித்தது