செப்டம்பர் 18, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

எப்போ வருவாரோ … ? (சிறுகதை)

ஸ்ரீதரன்

Aug 11, 2018

siragu eppa varuvaro1

”வைதேகி, வைதேகி” என்று சிவகாமி கத்தியது சமையல் அறையில் கூட்டுக்குத் தாளித்துக் கொண்டிருந்த வைதேகி காதில் விழுந்தது. அடுப்பை அணைத்துவிட்டு வந்து ”என்னம்மா வேண்டும் உங்களுக்கு?”  என்று மாமியாரைக் கேட்டாள்.

சிவகாமி படுத்தப் படுக்கையாய் இருக்கும் ஒரு நோயாளி. வயசு எழுபத்து ஆறு. போன வருடம்வரை கோலோடு நடமாடிக் கொண்டிருந்தாள். இப்போது டையாபர் கட்டும் நோயாளியாய் மாறி விட்டாள். வைதேகிதான் மாமியாருக்கு  டையாபர் மாற்றி, குளிப்பாட்டி, வேளாவேளைக்கு மருந்து கொடுத்து சாப்பிடக் கொடுத்து கவனித்துக் கொள்கிறாள்.

மாமனார் சம்பத் எண்பது வயது ஆகிறது. அவருக்கு இருக்கும் ஒரே பிரச்சனை டெம்னிஷியா என்று சொல்லப்படும் ஞாபக மறதிதான். வெளியே போனால் வீட்டு முகவரியை மறந்து விடுவார். ஏன் அவர் பெயரையே சில சமயம் மறந்து விடுவார். அவரை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்வது கடினமென்றாலும் பக்கத்தில் உள்ள தெரிந்தவர்கள் உதவியுடன் வைதேகி  எப்படியோ அவரைப் பார்த்துக்கொள்கிறாள்.

கிருஷ்ண குமாருக்கும் வைதேகிக்கும் ஜாதகம் பொருத்தம் பார்த்து சாஸ்திர சம்பிரதாயப்படி கல்யாணம் நடந்தது. மாப்பிள்ளைக்கு மதுரையில்  வங்கியில் வேலை. கை நிறையச் சம்பளம். பத்து மணியிலிருந்து ஐந்து மணி வரை வேலை. மாலை ஆறு மணிக்குள் வீட்டுக்கு வந்துவிடுவார். வைதேகி மிகவும் மகிழ்ச்சியாய் குடும்பம் நடத்தினாள். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்குச் சான்றாக அக்‌ஷயா பிறந்தாள். மழலை தரும் இன்பத்தில் வாழ்க்கைப் படகு ஆனந்தமாய் போய் கொண்டிருந்தது.

கிருஷ்ணகுமாருக்கு இயற்கையிலே கடவுள் மேல் அதிக பக்தியுண்டு. காலை எழுந்ததும் குளித்துவிட்டு பூசை, புனஸ்காரம் எல்லாம் நியமமாய் செய்வான். அது போல் வைதேகியும் ஆசார குடும்பத்திலிருந்து வந்தவள். குளித்துவிட்டுத் தான் சமையல் அறைக்குள் நுழைவாள். மாமியார், மாமனாருக்குத் தேவையானதைச் செய்வாள்.

தீடிரென்று கிருஷ்ணகுமாருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு ஏற்பட்டது. அருகில் இருந்த ஒரு மடத்துக்கு அடிக்கடி போவான். கிருஷ்ண பக்தன் ஆனான். வைதேகியும் அதே பொருட்படுத்தவில்லை. கடவுளிடம் அதிக பக்தி வந்திருக்கு. அதுவும் நல்லதுதானே என்று மகிழ்ச்சியடைந்தாள்.

அன்று ஞாயிற்றுக் கிழமை. காலையிலே கிருஷ்ணகுமார் வெளியே போய்விட்டான். எப்போதும் ஞாயிற்றுக் கிழமை இருவரும் சேர்ந்தே சாப்பிடுவார்கள் என்பதால் வைதேகி தன் கணவருக்காகக் காத்திருந்தாள். மூன்று மணி ஆகி விட்டது. கிருஷ்ணகுமார் வரவேயில்லை. அடுத்த நாளும் வரவேயில்லை. வைதேகிக்கும் அவனுடைய பெற்றோர்களுக்கும் தாங்க முடியாத அதிர்ச்சி. அவன் வேறு ஊர் எங்காவது போய்விட்டானா? அல்லது ஏதாவது விபத்தில் உலகத்தை விட்டு நீத்து விட்டானா? அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.கதவு தட்டப்படும்போது எல்லாம் அவன் வந்துவிட்டான் என்ற எதிர்பார்ப்புடன் கதவைத் திறப்பாள் வைதேகி.  வங்கி மேலாளர் செய்தித்தாளில் காணவில்லை என்று அறிக்கை கொடுத்தார். பலனில்லை. ஆறு மாதம் ஆனது. கிருஷ்ணகுமாரைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவனை வங்கியிலிருந்து நீக்கி விட்டார்கள்.

அப்போது வைதேகிக்குவங்கியிலிருந்து கணக்கு பார்த்து கொஞ்சம் பணம் கொடுக்கப்பட்டது. கணவனே காணாமல் போனபின் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? கணவன் இறந்து விட்டார் என்றால் அந்தத் துக்கம் நாளிடையில் சரியாகிவிடும். கணவர் காணவில்லையென்றால் எந்தப் பெண்ணுக்கும் அது பெரிய இடி. அந்தச் சோகத்தை வார்த்தையால் விவரிக்க முடியாது. “என் நிலமை வேறு எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது” என்று வைதேகி மாமியாரிடம் சொல்லி அழுவாள்.

மூன்று வயதுக் குழந்தை அக்‌ஷயாவுக்கு அப்பா முகம் கூட சரியாக ஞாபகம் இருக்காது. அப்பா எப்போம்மா வருவாரு? என்று கேட்கும்போது அவளுடைய நெஞ்சைப் பிழிந்ததுபோல் வலி எடுக்கும். இரவில் படுக்கையில் படுத்திருக்கும்போது அவனுடைய நெஞ்சின் மயிர்க்கற்றைக்குள் முகத்தைப் புதைத்து இளைப்பாறியது, அவனுடன் உல்லாசமாய் இருந்த தருணங்கள், மகிழ்ச்சியாய் இருந்த கணங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வந்து அவளைத் துன்புறுத்தியது. வைதேகிக்கு மனசு ஒடிந்துவிட்டது.பித்துப்பிடித்தவள் போல் எப்போதும் இருப்பாள். உளநல ரீதியாக மீண்டெழுந்து இயல்பான வாழ்க்கைக்கு வருவதற்குள் இரண்டு வருடங்கள் ஒடி விட்டன. நடந்தது விட்டது. எல்லாம் விதி செய்த பிழை. ஒடுங்கிபோய் இருப்பதைவிட ஆக வேண்டியதைப் பார்ப்போம்.மாமனார் மாமியாருடன் இருந்தாலும் ஏதாவது வேலையில் சேருவோம் என்று வேலைக்காக முயற்சி செய்தாள்.

இதற்கு மாமியாரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. ”வீட்டிலேயே இரு, வேலைக்குப் போக வேண்டாம். வருகிற வருமானத்திலே சமாளித்துக் கொள்ளலாம்” என்று அதட்டினாள்.

மாமனார் அவளுக்கு ஆதரவு கொடுத்து,”கணவனைக் காணவில்லையென்னும் சோகத்திலே அவள் இடிந்து போய் இருக்கிறாள். அவள் வீட்டிலே இருந்து அந்தத்துக்க நினைவுகளில் மூழ்கி இருப்பதைவிட வேலைக்குப் போவதே மேல்” என்றதால் ஸ்ரீஜி எக்ஸ்போர்ட்ஸ் என்னும்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாள்.அந்த நிறுவனத்தின்  தலைமை அலுவலகம் அகமதாபாத்அருகில்  இருக்கிறது. அங்கு மொத்தம் பத்து பேர் வேலை செய்கிறார்கள். உரிமையாளர் உமாசங்கர் திருவேதி குஜாராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். இரண்டு மாதத்திற்கு  ஒருமுறை ஈரோடு வருவார்.

காலசக்கரம் வேகமாகச் சுழன்றது. தினந்தோறும் தன் கணவன் வந்து விடுவான் என்னும் நம்பிக்கையிலே ஏழு வருடங்கள் ஓடிவிட்டன.சுற்றத்தாரும் உறவினரும் இவ்வளவுநாள் வராதவன் இனிமேல் எப்போ வரப்போகிறான்? உயிரோடு இருக்கிறானோ என்னவோ? நீ  இளமையாய்தான் இருக்கிறாய். நீ ஏன் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது என்று அவள் மனதைக் கலைக்கப் பார்த்தனர்.அவள் அத்தை பையன் கார்த்திக்கு அவள் மேல் ஒரு கண். அவனுக்குக் கல்யாணம் ஆகவில்லை. அவன் அவளிடம், ஏழு வருடம் ஆகியும் வராத உன் கணவர்எப்போ வருவாரோ என்று கேலியாக பேசி அவள் மனத்தைக் காயப்படுத்தினான். ”நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாய் இருப்போம். கணவனே இல்லாத போது அவருடைய பெற்றோருடன் நீ இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உன்னை ராணி மாதிரி வைத்துக் கொள்கிறேன். நீ என்னுடன் வா” என்று வற்புறுத்தினான். அவள் பிடிவாதமாய்,”என் கணவர் உயிரோடு இருக்கிறார் என்று என் உள்மனசு சொல்கிறது. அக்‌ஷயாவைப் படிக்க வைக்க வேண்டும்.  என் மாமனார், மாமியாரைக் கவனித்துக் கொள்ள வேண்டியது என் கடமை. நான்  அவருக்காகக் காத்திருப்பேன். அவர் வருவார் என்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதுதான் என் விருப்பம். என்னை யாரும் வற்புறுத்த வேண்டாம்” என்று உறுதியோடு கூறினாள். ”இப்படியும் ஒரு பொம்பளையா” என்று அவளை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆச்சர்யத்தோடு பார்த்தனர். கணவன் வீட்டை விட்டுப் போய் பதினைந்து வருடம் ஆகி விட்டது. அக்‌ஷயாவுக்கு பதினெட்டு வயது முடிந்துவிட்டது. அறிவோடும் பண்போடும் நல்ல முறையில் அவளை வளர்த்துவிட்டாள்.அவள் இப்போது கல்லூரியில் வணிகத்துறையில் பட்டப்படிப்பு படிக்கிறாள்.

ஸ்ரீஜி எக்ஸ்போர்ட் நிறுவனம் நிறுவி ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டதால் பொன்விழா நடத்த  முடிவு செய்யப்பட்டு அதற்கு ஈரோடில் உள்ள கிளை அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும் அழைப்பு வந்தது. நிறுவனமே சொந்த செலவில் விமானம் மூலம் பணி புரிபவர்களை அழைத்துச் சென்றது. இந்தச் சாக்கில் வைதேகிக்கும் அகமதாபாத் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

அவர்கள் அலுவலகத்தில் வேலை செய்த பைரவி, தீபா, சந்தியா ஆகிய பெண்களும் அகமதாபாத் போனார்கள்.

அன்று இரவு ஏழு மணி, பக்கத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றார்கள். அது ஒரு கிருஷ்ணர் கோவில். ஏதோ மடம் நிர்வகித்துக் கொண்டிருக்கிறது. ஏராளமான காவி உடை அணிந்த துறவிகள் அங்கே தென்பட்டனர். ஆர்த்தி முடிந்தது. கோவிலை விட்டு கீழே இறங்கும்போது வைதேகியின் பார்வை ஒரு துறவியின் மேல் விழுந்தது. அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. அவருடைய மூக்குக்கு மேலே இருக்கும் கறுப்பு,தலையும் வழுக்கை.  அவளுக்கு நன்றாகத் தெரியும். அவளுடைய கணவர் கிருஷ்ண குமாருக்கு மூக்குக்கு மேல் மச்சம்  உண்டு. அப்படியானால் இவர்.. என்று அவள் உள்ளம் பரபரப்பு அடைந்தது. அவள் இன்னும் நெருங்கிப் போய் பார்த்துத் தன் கணவர்தான் என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டாள்.

”வாடிப் போகலாம். சாமியாரைப் பார்த்தது போதும்” என்று பைரவி கண் சிமிட்டக் கூட வந்தவர்கள் சிரித்தார்கள்.

இல்லை, இவரை எங்கேயோ பார்த்தது போல் இருக்கிறது.” இருங்கள் அவர் யார் என்று கேட்டு விட்டு வருகிறேன்” என்று அருகில் மேஜையின் அருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம்,”அந்தத்துறவியின் பேர் என்ன? என்று தமிழில் கேட்டாள். அதிர்ஷ்டவசமாக அவள் யாரைக் கேட்டாளோ அவர், ”நீங்க தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கிங்களா?” என்று வினவினார். வைதேகி ஆச்சர்யத்துடன், உங்களுக்குத் தமிழ் தெரியுமா? என்று கேட்க, ”நான் பதினைந்து வருடம் சென்னையில் செளகார்பேட்டையில் வசித்தேன். தமிழ் நன்றாகத் தெரியும்” என்றார்.

”ரொம்ப நல்லதாய் போயிற்று. மூக்கில் மச்சம் இருக்கிற சாமியார் எனக்குத் தெரிந்தவர் போல் தோன்றுகிறார். அவர் எங்கள் ஊரைச் சேர்ந்தவரா?” என்று தெரிய வேண்டும். அவர் பெயர் என்ன? என்றாள்.

அவர் இங்கு பத்து வருடமாய் இருக்கிறார். அவர் தென்னாட்டிலிருந்து வந்தவர்என்று கேள்விப்பட்டேன். எதுவும் தெரியாது. அவரிடம் போய் அவர் பூர்வீகத்தைப் பற்றிக் கேட்க முடியாது. வேறு ஏதாவது உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். என்னால் முடிந்ததைப் பண்ணுகிறேன்.

”அவரை ஒரு முறை பார்த்து ஆசி வாங்க விரும்புகிறேன் அதாவது முடியுமா? தயவு செய்து…” என்று கெஞ்சினாள் வைதேகி.

எங்கள் மடத்தில் உள்ள துறவிகள் பெண்கள் விசயத்தில் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். பெண்களை ஏறிட்டுப் பார்ப்பதில்லை. மடத்தின் குருவின் கட்டளை அப்படி. அதனால் அவரை உங்களால் பார்க்க முடியாது. இருந்தாலும் நீங்க கேட்டதால் அவரிடம் கேட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு உள்ளே போய் விட்டு வந்தவர், சுவாமிஜி யாரையும் பார்க்க முடியாது என்று கூறிவிட்டார் என்றார்.

ஆசி வாங்குவது பற்றி கேட்டீங்களா?

”அவர் பெண்களைச் சந்திப்பதில்லை. அவர் இருக்கும் இடத்திலிருந்தே உங்களுக்கு ஆசிவழங்கி இருப்பார்.. அவரை நீங்கள் பார்க்க முடியாது.

நேரம் ஆகி விட்டதால் வைதேகி அந்த இடத்தை விட்டுக் கிளம்ப வேண்டியதாயிற்று. அவள் மனசுக்கு ஒரு ஆறுதல். தன் கணவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். சாமியாராய் இருக்கிறார். அது போதுமே. அதுவரை தவித்த அவள் மனசுக்கு நிம்மதி  கிடைத்தது.

”இந்தப் பயணத்தால் வைதேகிக்கு அவள் கணவனைப் பார்க்க முடிந்தது. அவருடன் பேச முடியாவிட்டாலும் பரவாயில்லை. அவரைப் பற்றி  எதுவுமே தெரியாமல் இருந்ததற்கு இது மேல்” என்றாள் சந்தியா.

அங்கிருந்து விமானத்தில் கிளம்பி சென்னை வந்து பிறகு காரில் ஈரோடு வரும் வரை அவளுடைய மனசில் கணவரைப் பற்றிய எண்ணங்களே ஓடிக் கொண்டிருந்தன.

வீட்டை அடைந்ததும் மாமனாரிடம், மாமா, ”அக்‌ஷயா அப்பாவை அகமதாபாத்தில் ஒரு கோயிலில் பார்த்தேன். அவரைப் போலிருந்தது.மடத்தில் துறவியாய் இருக்கிறார். என்னால் பேச முடியவில்லை.”

”யாரைப் பார்த்தாய்?”

”நம்ம பையன் கிருஷ்ணகுமாரைத்தான் பார்த்திருக்கிறாள்” என்று மாமியார் சொன்னார்.

”எனக்கு யாரையும் ஞாபகமிலை” என்று மாமனார் சொல்லி விட்டார். அவருக்கு ஞாபக மறதி வியாதியால். பெற்ற பையனையே மறந்து விட்டார்.

”சாமியாராய் போன கிருஷ்ணகுமார் திரும்பி வருவான் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. வேறு பெண்ணை கல்யாணம் செய்துண்டு வாழ்க்கை நடத்தாமல் சாமியாராய் இருப்பதே  உத்தமம்“ என்றாள் மாமியார்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட கார்த்திக் அவளைத் தேடி வந்து, “உன் புருஷன் உன்னையும் பெற்றவர்களையும் தவிக்க விட்டுவிட்டு சாமியாராய் போய்விட்டான். நான் சொன்னமாதிரி முன்பே கல்யாணம் செய்துகொண்டிருக்கலாம். உன் முட்டாள்தனத்தால் காலத்தை விரயமாக்கி விட்டாய். இன்னும் குடி முழுகி விடவில்லை. இப்போதாவது நம் திருமணத்துக்கு ஒத்துக்கொள். உனக்காகத்தான் நான் யாரையும் திருமணம் செய்யாமல் காத்திருக்கேன். என்னிடம் ஏராளமாய் பணம் இருக்கிறது. நீ வேலைக்குப் போக வேண்டியதில்லை. நாம் சந்தோஷமாய் இருக்கலாம்.”.

”ஐயோ சாமி! என்னை விட்டுவிடு. எனக்கு இதில் துளியும்  சம்மதமில்லை. என்னை வற்புறுத்த வேண்டாம். நான் கடைசி வரை இப்படியே இருந்து விடுகிறேன். நான் போய் விட்டால் படுத்தப் படுக்கையாய் இருக்கும் மாமியார், ஞாபகமறதி மாமனார் இவர்களை  யார் பார்த்துக் கொள்வார்கள்?” என்றாள்.

”அந்த கிழங்கள் எப்படியோ போகட்டும் . நான் நாளைக் காலை வருவேன். அதற்குள் யோசித்து உன் முடிவைச் சொல். நாளைக் காலை எட்டு மணிக்கு தாலியோடு வருவேன். தயாராய் இரு. வீட்டிலேயே உனக்குத் தாலி கட்டி என் வீட்டுக்கு உன்னை மனைவியாய் அழைத்துச் செல்வேன் “  என்றவன் அங்கிருந்து அகன்றான்.

”ஒரு பெண் அழகாக இருந்ததால் இந்த ஆண்கள் சும்மாவே இருக்க மாட்டார்களா? நாசமாய் போறவன்” என்று எண்ணினாள் வைதேகி.

வைதேகி இரவில் படுத்திருக்கும்போது  நன்றாக யோசித்துப் பார்த்தாள். ஒரு பெண் தனியாக இருந்ததால் அவளுக்குப் பாதுகாப்பு இல்லாமல் போகிறது. கார்த்திக் மாதிரி இருப்பவர்கள் வற்புறுத்தி வன்முறையில் பெண்ணை ஆட்கொள்கிறார்கள். உயிர் போனாலும் அதற்கு உட்படக்கூடாது. ஒரு பெண்ணுக்குத் தைரியம்தான் ஆயுதம் என்று சிந்தித்துக்கொண்டே உறங்கி விட்டாள்.

அடுத்த நாள் காலை எழுந்திருக்கும்போது மன உறுதியுடன் எழுந்தாள். மாமியார் மாமனாருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளைச் செய்தாள். அப்போது எட்டு மணி. சமையலறைக்குள் நுழைந்து ஒரு பொருளை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டு வாசல்படி அருகே வந்தாள்.

அப்போது கார்த்திக் வீட்டின் வெளி கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். மீசையுடன் பார்க்க  ஆஜானுபவனாக இருந்தான்.

”தயாராய் இருக்கியா?” என்று தன் கையிலிந்த மஞ்சள் கயிற்றைக் குதுகலத்துடன் காட்டினான்.

”உள்ளே வராதே அப்படியே வெளியே போடா நாயே.”

ஒரு அடி முன் வைத்தான்.

”இன்னொரு அடி வைத்தாயானால் என்ன நடக்கும் என்று பார்” என்ற வைதேகி இருப்பிலிருந்து கத்தியை எடுத்து அவன் மேல் வீசுவது போல்  கோபத்தில் கண்கள் மின்ன நின்றாள்.

பாயும் புலி போல் நின்றிருந்த அவளைப் பார்த்து திகைத்த அவன், ” பயம் இல்லாமல் என்னை எதிர்க்கிறாளே.. இவளை எலி என்று நினைத்தேன். தேவை ஏற்பட்டால் பெண் புலியாக மாறுவாள் போலிருக்கிறது ”என்று நினைத்து, “நான் ஆண் சிங்கமடி என் கிட்டேயிருந்து நீ இன்று தப்ப முடியாது“ என்றான்.

அவள் புலி பாய்வதைப் போல் அவனருகில் தாவினாள்.

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அவன் அச்சத்துடன் இரண்டடி பின் வாங்கினான். ஒரு கும்பிடு போட்டு விட்டு தெருவில் இறங்கி திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.

”அங்கே என்னம்மா சத்தம்” என்று கேட்ட மாமியாருக்கு, ”பூனை வந்தது. விரட்டி விட்டேன்” என்றாள் சிரித்துக்கொண்டே.


ஸ்ரீதரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எப்போ வருவாரோ … ? (சிறுகதை)”

அதிகம் படித்தது