மே 30, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

எளியோர் இனமே எழுக! (கவிதை)

இல. பிரகாசம்

Apr 15, 2017

Siragu-tamilan

 

 

வலியோர் கொடுஞ்செயல் அறவே ஒழிந்திட

எளியோர் இனமே எழுக!

வலியார் கரங்குவியு மதிகார மதனை

உடைத்திட வீறுடன் எழுக!

எளியோர் எளிமை தனைஎடை போட்டு

ஏய்க்கும் அதிகார வர்க்க

அரசியல் நிலைமை அறவே ஒழிந்திட

எளியோர் இனமே எழுக!

 

சனநாயக போர்வையில் ஏதேச் சதிகாரம்

புரியும் அரசினை எதிர்த்து

சனநாயக முறையினை மீட்கும் “மக்கள்

புரட்சியை” நோக்கி எழுக!

எல்லார்க்கும் எல்லாம் பொதுமை என்னும்

பொதுவுடமைச் சமுதாயம் மலர்ந்திட

ஏற்றத்தாழ் வுகள்இல்லா வுலகம் படைத்திட

எளியோர் இனமே எழுக!

 

வலியார் எளியாரை வாட்டும் நிலையினை

ஏளியார் தேக வலியோ

டெதிர்க்கும் உறுதியோடு எளியோர் சமுதாயம்

ஒன்றென அணிதிரண் டெழுக!

உலகம் உயிர்முதல் என்னும் பொதுமை

அறிவினோடு மக்கள் சமுதாயம்

மேன்மையுற மீண்டெழுந் திரத்துடனே வலியோடு

எளியோர் இனமே எழுக!


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எளியோர் இனமே எழுக! (கவிதை)”

அதிகம் படித்தது