எழுபதாயிரம் கிராமங்கள்(கவிதை)
வையவன்Sep 10, 2016
எழுபதாயிரம் கிராமங்களில்
இந்தியாவின் இதயம்
துடித்துக் கொண்டிருப்பதாக
என்றோ சொன்னார்
சுட்டுக் கொல்லப்பட்ட
அந்த சுத்தாத்மா
ஆம் ! அது துடித்துக் கொண்டு தான் இருக்கிறது
குற்றுயிராக, எழுபதாயிரம் கிராமங்களில் !
உயிர் முற்றிலும் போய்விட்டால்
யார் போடுவார்கள் வோட்டு?
கடன் தள்ளி சலுகை வீசி
இலவசங்களைவிட்டெறிந்து
மறுமலர்ச்சி தோன்றிவிடாது பாதுகாத்து
அவ்வப்போது உயிர்த்தண்ணீர்
ஊற்றி ஊற்றி அடிமை வளர்ப்புத்
தொழில் செய்து வருகிறோம்
கூடவே சினிமாவும் காட்டிக் கொண்டு!
ஆனால் கிராம சுயாட்சியை சினிமா காட்டினால்
எழுபதாயிரம் கிராமங்களும் எழுந்து போய்விடும்.
விவசாயம் தோற்றதால் நிலத்தை
மனை போட்டு விற்றுவிட்டு
கூலிக்குப் போகிறான் உழுதுண்டு வாழ்ந்தவன்
ஏதோ ராமராஜ்யத்திற்காக
ராம ஜபம் செய்து வந்தவரை
ஒவ்வொரு காந்தி ஜெயந்தியன்றும்
நினைவு கூர்ந்து நேரமிருந்தால்
நாலு வார்த்தை போற்றிப் புகழ்ந்தோமா?
டாஸ்மார்க் மதுக்கடையில்
எல்லாம் மறந்தோமா என்று
சாகமுடியாமல் செத்துக்கொண்டிருக்கின்றன
எழுபதாயிரம் கிராமங்களும்.
வையவன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “எழுபதாயிரம் கிராமங்கள்(கவிதை)”