ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

ஒப்பிடாதீர்கள் ! ஒத்துக்கொள்ளுங்கள் !

செல்வக்குமார் சங்கரநாராயணன்

Jul 2, 2016

Siragu oththukkol2ஒப்பிடுவது என்பது நம்மில் வளர்ந்துள்ள களை எடுக்கப்பட வேண்டிய குணம். நமது ஒட்டு மொத்த நிம்மதியை குத்தகைக்கு எடுத்து அணு அணுவாய் நம்மை சித்திரவதைகள் செய்யக்கூடியது இந்த ஒப்பிடுவது. “அவன் வண்டி(மகிழுந்து) வாங்கிட்டான்! நானும் வாங்கனும்”, “அவன் இரு சக்கரவண்டி வாங்கியிருக்கான், அதுக்காகவே நானும் வாங்கனும்” இப்படித்தான் ஆரம்பிக்கிறது இந்த ஒப்பிடுதல். ஒப்பிடுதல் என்பது எவ்வளவு கீழ்த்தரமானது என்றால் நமது சுயமதிப்பை வெகுவாக நமக்குள்ளே கீழே தள்ளிவிடும். “நேத்து இந்நேரம் வேலைக்குச் சேர்ந்தான் வீடு வாங்கிட்டான்” என்பதால் வீட்டை மட்டும் தான் நீங்கள் ஒப்பிடுகிறீர்கள், அவர் அதற்கான எடுத்த சிரமத்தை அல்ல. உங்களுக்கு ஒன்று தெரியுமா? ஆப்பிரிக்கா கண்டத்தில் நுறு கோடி பேர் தான் வாழ்கின்றனர், ஆனால் நம் இந்திய நாட்டில் நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர், பாருங்கள் எவ்வளவு வித்தியாசம் என்று. ஒப்பிட்டு ஒப்பிட்டு, பார்த்துப் பார்த்து அதை அடைய முடியாமல் போகும் பொழுது நமது மதிப்பை நாமே நொந்து கொள்வோம். அப்படி இல்லை என்றால் நமது பெற்றோரையோ, நாம் வேலைக்குச் சேர்ந்த நிறுவனங்களையோ நொந்து கொள்வதும் உண்டு.

ஒருவரை உங்களுடன் ஒப்பிடுவது ஆரோக்கியமான முறையில் இருக்கும் பட்சத்தில் அங்கு நன்மை மட்டும் கிடைக்கும். உதாரணத்திற்கு, “அவன் வண்டி வாங்கியிருக்கான், ஆனால் இந்தக் வண்டி வாங்க அவன் பட்ட கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும்! அவனைப் போலவே நானும் உழைச்சுக் கஷ்டப்பட்டு அதை ஒரு நாள் வாங்குவேன்” என்று நீங்கள் எண்ணும் பொழுதுகள் உங்களுக்குள் இருக்கும் ஒப்பிடும் தன்மை உங்களை ஒரு நல்ல பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் நாம் தான் அதைச் செய்வதில்லையே!, கடனை வாங்கியாவது அந்தக் வண்டி நம் வீட்டின் முன் நிற்க வேண்டும் என்று அதை வாங்கி வைத்துவிட்டு கடனும் கட்டி, வண்டியையும் விற்கும் நிலைமைக்கெல்லாம் சிலர் தள்ளப்படும் தவிர்க்க இயலாத சூழலை நாம் கண்டும் கேட்டும் இருப்போம்.

Handsome Young Man Thinking - Isolatedநாம் எப்பொழுதும் கண் முன் இருப்பவைகளைப் பற்றியே சிந்திந்து சிந்தித்து பின்னால் புதைந்து இருக்கும் எதையும் நினைத்துப் பார்ப்பது கிடையாது. பின் அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள நேரிடும் பொழுது “கொஞ்சம் யோசிச்சுருக்கலாமோ!” என்பது போல விழிப்பது நமக்கு வாடிக்கையாயிற்று. ஆனால், நாம் ஒவ்வொரு செயல்களைச் செய்யும் பொழுதும் நாம் விழிப்புடன் இருப்பதற்கு மூளையாலும், மனதாலும் நமக்கு ஒரு மணி அடித்துக் காண்பிக்கப்படுகிறது. அதைப் பற்றிக் கொண்டு அதன் படி சிந்தித்து செயல்பட்டால் நமக்கு வரும் கவலைகளும் சோகங்களும் கூடுமானவரை நம்மாலேயே  தவிர்க்கப்படும். நமக்கு இருக்கும் மிகப்பெரிய சொத்தே சிந்திப்பது தான், ஆனால் நாம் அதை மட்டும் தான் அதிகம் செய்வதில்லை. விலங்குகள் சிந்திக்கின்றன என்றால் நாம் சிந்திப்பதைப் போல பகுத்தறிவுடன் கிடையாது. நமக்குத் தான் பகுத்தறிவுப் புதையல் இருக்கிறது என்றாலும் அதை சரியாகச் செய்வதே கிடையாது நாம்.

Siragu-oththukkol3என்னால் இவைகள் செய்ய  முடியாது, ஆனால் செய்ய முயற்சி எடுக்க  முடியும் என்று நிதர்சனத்தை ஒத்துக்கொள்ளுங்கள். இதை காரோடு ஒப்பிடலாம்! என்னால் இப்பொழுது கார் வாங்க முடியாது, ஆனால் பின்னாளில் அந்தக் கார் வாங்கும் நிலைமைக்கு நான் உயர்ந்து இருப்பேன் என்பதை மனதார அங்கீகரியுங்கள். உங்கள் மனதை நீங்கள் தான் புரிந்து கொள்ளவும் புரிய வைக்கவும் முடியும்.  நிதர்சனத்தைப் புரிந்து கொள்ளுங்கள் அதன் படியே நடக்கச் சித்தமாயிருங்கள், எவ்வித துன்பமும் உங்களை அடையாது என்பதற்கு நான் பொறுப்பு. இப்பொழுது இருக்கும் இந்த நிலைமையைக் கொடுத்த இறைவனுக்கு நன்றியுணர்வுடன் இருங்கள். அடுத்த கட்ட வாழ்விற்கு ஆனந்தமாய்த் தயாராகுங்கள். பிறகு பாருங்கள் நீங்கள் நினைத்தது எல்லாம் உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் தானே உங்களுடன் வந்து நிற்கும்!


செல்வக்குமார் சங்கரநாராயணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஒப்பிடாதீர்கள் ! ஒத்துக்கொள்ளுங்கள் !”

அதிகம் படித்தது