அக்டோபர் 23, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

ஒரு தீக்காடு: உள்ளே சிறு பூச்சிகளும் வெளிச்சமும்..

வித்யாசாகர்

Oct 8, 2016

siragu-image2

ஒரு சிறு தீ பரவி காடொன்று அழிவதுபோல் ஒரு சின்ன சிரிப்போ, உயிர்மீதான கருணையோ, மனிதம் மிக்கதொரு உணர்விலெழுந்த சிறு அறிவின் பொருட்டோ நம் மொத்த மனிதர்களின் மனஇருளும் ஒருசேர அகன்றுபோகாதா? எவ்வளோ முகங்கருக்கும் எண்ணங்களால் சூழும் அசிங்க வாழ்க்கைதான் நாமின்று வாழ்வதில்லையா..? இதெல்லாம் நீங்கி இந்தச் சண்டைகளெல்லாம் விட்டு விலகி நாமெல்லோரும் ஒருவரையொருவர் அன்பு வழியவழிய ஆரத் தழுவிக்கொள்ளமாட்டோமே…?!!

உயிர்தானே? எல்லாம் ஈரமுள்ள இதயம் தானே? கொஞ்சம் இரக்கமோ மானுட அன்போ எல்லோருக்கும் பொதுவாய் சுரப்பின் மனிதரை மனிதரிப்படி சாதியென்றும் மதமென்றும் மேலோரென்றும் கீழோரென்றும் பிரித்து மேல்கீழ் வகுத்து ஒருவரை ஒருவரிப்படி வருத்தப்பட வைப்போமா?

தண்ணிக்குச் சண்டை, மண்ணுக்குச் சண்டை, சாதிக்குச் சண்டை, சாமிக்கும் சண்டை மொத்தத்தில் மடிவது யார்? மனிதரில்லையா? மனிதர் மடிந்து மனிதன் யாருக்காகப் போராடுகிறான்? இன்னும் எத்தனை பேருந்து எரித்து’ எவ்வளவு மனிதர்களைக் கொன்று எவரொருவர் சிரித்துகொண்டே வாழ்ந்தோ செத்தோப் போய்விட முடியும்?

யாருக்கு நாம் துன்பம் இழைக்கிறோம்? எவரை நாம் கொல்கிறோம்? எது என் விருப்பம்? எதற்கானது எனது போராட்டம்? கேள்விகளை சுமந்து சுமந்து ஓடாது சற்று நின்று சிந்திப்போமே..?!!

சமநிலையை விட ஒரு பெரிய எரிச்சல், சமநிலையை விட ஒரு கோழைத்தனம், சமநிலையை விட ஒரு சார்பு நில்லல், ஒருவன் செத்துக்கொண்டிருக்கும்போது பேசும் சமநிலையை விட வேறு பெருங்கொடுமை இல்லை தான். ஆனால் இயல்பாக எல்லோருக்கும் ஏற்படும் உள்ளச் சமநிலையால் மட்டுமே நீயும் நானும் பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்து அடுத்தவேளைச் சோற்றை நிம்மதியாய் உண்ணவும், உள்ளச் சிரிப்பால் நாம் வாழ்க்கையை மகிழ்வோடு நகர்த்திடவும் இயலும்.

மனதின் ரணம், அழுத்தம், வெறி, கோபம் எல்லாவற்றையும் எடுத்ததும் போட்டு உடைத்திடவோ அல்லது வீரியம் பொங்குமளவிற்கு உடனே காட்டிடவோ மனிதப்பண்பு அனுமதிப்பதேயில்லை. மனதை அமைதியாக்கிப் பார்த்தால் மட்டுமே அடுத்தவரின் கோபத்தைக் கூட கருணையால் அணுகிட முடிகிறது. கொதிக்கும் நீரில் நீரள்ளி ஊற்றினால் அந்த நீர் கூட சுடவேச் செய்யும். சற்று நிதானித்தால் இரண்டுமே ஆறிப்போகும். காரணம் காலம் ஒரு அருமருந்து. அனைத்தையும் காலம் ஆற்றித் தருகிறது. அதற்கு பொறுக்கும் மனப்பக்குவம் நமக்குத் தேவை. ஒருவனின் நிதானமற்ற இடத்தில மீண்டும் அவனே விழுவதை நம் வரலாறு நமக்குக் காட்டுகிறது.

இங்கே எவர் விழுவதும் பிறருக்கு வலிப்பதுவுமல்ல நமது ஆய்வு. தீங்கு விளைவிப்பவர் தீங்கையே அறுப்பர். எனவே தீங்கினைவிட்டு விட்டு விலகு என்று கேட்கிறேன். விதைப்பதே விளைகிறது எனில், நாம் நன்மையையே விதைப்போம் என்கிறேன். நாம் நல்லதை நோக்கி நடப்போம், நாளை உலகம் நம் பின்னால் வந்தே தீரும், வரட்டுமே என்கிறேன். அதற்காக பிறர் நk;மை அடிக்கும்போது நாம் நம் கன்னத்தையெல்லம் காட்டவேண்டாம், அடிக்க நினைக்கும் முன்னரே நாம் எத்தனை வலிமையுள்ளவர் என்பதை அடிப்பவர் முன்அறிய நம் வாழ்வுதனை நெறிபடுத்தி வைப்போம்.

உண்மை நெருப்புப் போன்றது. எடுத்து வீட்டினை கொளுத்துபவர் கொளுத்தட்டும். நாமெடுத்து நம் வீட்டு விளக்குகளில் அடைப்போம். வாழ்க்கைக்குள் திணிப்போம். மொத்த உலகமும் நம்மால் வெளிச்சம் பெறட்டும். உண்மையும் நேர்மையும் கண்ணியமும் வழுவாத அறம் சார்ந்த வாழ்க்கை தமிழரது வாழ்க்கை என்பதற்கு நம் பாட்டன் திருவள்ளுவரின் திருக்குறள்கள் சான்றாக நிற்கிறதே, அதை மறந்து எப்போது வாழத் துணிந்தோமோ அங்கேதான் நாம் நம் வாழ்க்கையையும் தொலைக்கத் துவங்கினோம்.

நடந்தது போகட்டும். மீண்டும் அ எழுதுங்கள். அன்பிலிருந்து நேர்மையிலிருந்து உண்மையின் வழியே கண்ணியத்தோடு பயணப்படுங்கள். அறம் நமது உயிருக்கு இணை இல்லை, அறத்தோடு வாழ்வது தான் நாம் உயிரோடு வாழ்வது என்பதை உணருங்கள். ஒரு செயல் தீதெனில் செய்ய மறுங்கள். தீத் தொட்டு கையுதறும் வலிபோல, ஒவ்வொரு சிறு தவற்றின்போதும் அச்சப்படுங்கள். இயல்பு தடுமாறி எந்தக் கோட்டையை எழுப்பினாலும் அதனுள் இயல்பின் நன்மையும் சாபமும் ஒருங்கே இருக்கும் என்பதை உணருங்கள்.

வாழ்க்கையை வள்ளுவம் போதிப்பது போல் வேறொன்றும் போதிப்பதில்லை. ஆனால் நம்மில் எத்தனைப் பேருக்கு திருக்குறள் விளக்கத்தோடு புரியும்? இருக்கும் திருக்குறளை விட்டுவிட்டு எங்கெங்கோ அறிவு தேடி அலைவதே ஒரு அறிவீனமில்லையா? எனவே திருக்குறள்களை வாசிக்கப் பழகுங்கள். அதன்வழி வாழ முற்படுங்கள்.  குழந்தைகளுக்கு திருக்குறள் புரியட்டும். திருக்குறள் புரிகையில் அன்பு புரியும், பண்பு புரியும், வீரம் எதுவென்று தெரியவரும், வெற்றி தோல்வி கடந்து வாழ்க்கை அறத்தோடானதாக அமையும்.

இனி எல்லாம் மறக்கட்டும். துன்பம் மறக்கட்டும். எல்லாம் மாறும், நல்லதாய் மாறட்டும். விடுதலை’ அமைதி’ அன்பு’ மானிட இன்பம்’ அனைத்து உயிர்களுக்குமானது என்பதை எல்லோரும் ஒரே நேரத்தில் உணர்ந்திட முடியாதுதான். ஆயினும், ஒவ்வொருவராய் அதை உணர ஆரம்பித்தால்போதும் எங்கேனும் ஓரிடத்தில் மெல்ல மெல்ல நாமெல்லோருமே அதை முழுமையாய் உணர்ந்திருப்போம். மாற்றங்கள் நிகழவே நிகழும். இனி அது எல்லோருக்குமானதாக நிகழட்டும்.

எதிரியைக் கூட ஒரு மனிதராய்க் காண்போம். போ வாழ்ந்து போ.. என்று விட்டுவிட்டு மனிதத்தோடு நாம் நடப்போம். எவரும் இந்த மண்ணின் மீது யாருக்கும் எதிரியில்லை. இடைவெளி அகன்றால்; இயல்பது புரிந்தால்; பேசி யுணர்ந்தால்; எல்லோருமே நாம் நண்பர்கள் தான். எல்லோருக்கும் அன்பு. எல்லோருக்கும் வணக்கம். நண்பர்கள் வாழ்க..


வித்யாசாகர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஒரு தீக்காடு: உள்ளே சிறு பூச்சிகளும் வெளிச்சமும்..”

அதிகம் படித்தது