சனவரி 23, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை இருக்கிறது.

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jul 28, 2018

siragu poolaan devi1

4 ஆடி 10 அங்குல உயரத்தில் ஒரு பெண், மிகப் பெரிய கொள்ளைக்காரியாக திகழ்ந்தார் என்பது வியப்பைத் தருகின்றதா? ஆம் ஒடுக்கப்பட்டச் சமூகத்தில் பிறந்த ஒரு பெண் சாதியின், ஆணாதிக்கத்தின் விளைவால் எந்த அளவிற்கு மனம் வெறுத்து தன்னை பாலியல் வன்புணர்வு செய்த சாதியவாதிகளை பழிவாங்க கொள்ளைக்காரியாக மாறினார் என்பதை  பூலான் தேவி அவர்களின் வாழ்க்கையைப்  படிக்கும் போது தெரிந்துக் கொள்ள முடியும். பூலான் தேவி உத்திரபிரதேச மாநிலத்தில் ஆகஸ்ட் 10 1963 ஆம் ஆண்டு, ஜலான் மாவட்டத்தில் இருக்கும் ஜோர்க்கி கபர்வா என்ற கிராமத்தில் பிறந்தார். மல்லாஸ் எனப்படும் மிகவும் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவள். படகு ஓட்டுவது தான் இவர்களின் வாழ்வாதாரம்.

அன்றைய காலக் கட்டங்களில் பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் முன்னரே திருமணம் செய்யும் முறை மிகத் தீவிரமாக வடநாடுகளில் (இன்றும் கூட ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது) உண்டு. பூலான் தேவிக்கும் 11 வயதிலேயே (வயதுக்கு வரும் முன்னரே) திருமணம் நடந்தது. ஏற்கனவே இரண்டு முறை திருமணம் செய்த, 30 வயது புட்டிலால் என்பவன் கணவன். வயது வரும் வரை அம்மா வீட்டில் இருந்த பூலான் தேவியை வலுக்கட்டாயமாக புட்டிலால் இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வுச் செய்து கொடுமை செய்தான். அங்கிருந்து சில நாட்களில் தப்பி வந்த பூலான் தேவி தன் வீட்டில் மகிழ்ச்சியாக இருந்தார். இந்த நிலையில் பூலான் தேவியின் கணவன் மீண்டும் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டான். கேட்கவே கொடுமையாக இருக்கின்றது அல்லவா? தமிழ் நாட்டில் இன்று தந்தை பெரியார் போன்ற தலைவர்கள், திராவிடர் காட்சிகள் கொண்டு வந்த திட்டங்கள் காரணமாக இந்தக் கொடுமைகள் ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கின்றது. ஆனால் வடநாடு நம்மை விட  இன்றும் பெண்கள் விடுதலை,  சமூக நீதி போன்ற தளங்களில் மிக பின்தங்கி இருக்கின்றன. அந்த பின்தங்கிய சூழலால் பாதிக்கப்பட்டவர் தான் பூலான் தேவி.

இந்த நிலையில் பெற்றோர் வீட்டில் எதைப் பற்றியும் கவலை இன்றி பட்டாம் பூச்சியாய் திரிந்த பூலான் தேவியை அவரின் மாமன் மையாதீன் பாலியல் வன்புணர்வு செய்ய தொல்லைகள் கொடுத்துக் கொண்டு வந்தான். அதை எதிர்க்கொண்டு வரும்போதே, மிகக் கொடுமையான நிகழ்ச்சி பூலான் தேவியின் வாழ்க்கையில் நடந்தது. அது தான் அவரின் வாழ்வையே புரட்டிப் போட்டது. அந்த கிராமத்தின் பணக்கார உயர் வகுப்பினர், பூலான் தேவியை அவரின் பெற்றோர் முன்னிலையிலேயே வன்புணர்வு செய்தனர். இந்தக் கொடிய நிகழ்ச்சியை அடுத்து பூலான் தேவி தன் சகோதரிகளுடன் அந்த ஊரை விட்டே வெளியேறினார்.  ஆனால் அவரின் மாமன் கொள்ளைக்கூட்டத்திற்கும் பூலான் தேவிக்கும் தொடர்பு இருப்பதாக கிராம மக்களை தூண்டி காவல் துறையில் புகார் அளிக்கச் செய்தான். தன் ஆசைக்கு இணங்காத அந்தச் சிறுமியை பழி வாங்கவே இப்படிச் செய்தான். காவல் துறை பூலான் தேவியை கைது செய்தது. சட்ட நெறிகளைக் காக்க வேண்டிய காவலர்கள் பூலான் தேவியை காவல் நிலையத்தில் வன்புணர்வு செய்தனர்.

siragu poolaan devi4

மீண்டும் மீண்டும் 15 வயதிற்குள்ளாகவே ஒரு சிறுமி இந்தச் சமூகத்தின் சாதியம், மற்றும் ஆணாதிக்க கொடுமையால் சிதைக்கப்படுகின்றாள். வறுமை, பசி, பட்டினி, வன்புணர்வு, அடக்கு முறை என இவை அனைத்தையும் எதிர்த்து மிக இள வயதில் போராட பூலான் தேவி தள்ளப்படுகிறார். பூலான் தேவி மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு வருகின்றது. அப்போது நீதிபதி இவரின் வயதை கணக்கில் கொண்டு அவரை விடுதலைச் செய்கின்றார்.

ஒரு வருடம் தன் கிராமத்தில் இருந்த பூலான் தேவியை பாபு குஜார்சிங் என்ற கொள்ளைக்காரத் தலைவன் கடத்திச் செல்கின்றான். அங்கு தான் பூலான் தேவி தன்னை சிதைத்த அந்த உயர் வகுப்பினரை பழி வாங்க, குதிரை ஏற்றம், துவக்கி சுடுதல் என அனைத்தையும் கற்றுக் கொள்கின்றார்.  அப்போது தான் வறண்டு போன அவள் மனதில் புது நம்பிக்கையை அன்பால் விதைக்கின்றார் விக்ரம்மல்லா. அவர் கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்தவர், எனினும் பூலான் தேவிக்கு எப்போதும் காவலாக இருக்கின்றார். இருவருக்கும் காதல் மலர்கின்றது. கொள்ளைக்கு கூட்டத்தலைவன் ஒரு கட்டத்தில் கொலைச் செய்யப்படுகிறான். பின் விக்ரம்மல்லா தலைவன் ஆகிறான். பூலான் தேவிக்கும் அவனுக்கும் திருமணம் நடைபெறுகின்றது. கொள்ளைக்கூட்டத்தின் துணையுடன் தன்னை வேட்டை ஆடியவர்களைத் தேடித்தேடி கொன்றார் பூலான் தேவி. 1980 ஆம் ஆண்டு ஒரு கொள்ளைகூட்டச்  சண்டையில் பூலான் தேவியின் கணவர் கொல்லப்படுகின்றார். மீண்டும் பூலான் தேவியை ஆதிக்க சாதி (தாகூர்) கொடூரர்கள் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்கின்றனர். அங்கிருந்து அந்த கிராம மக்களின் உதவியோடு காட்டிற்குள் தப்பிச் செல்கின்றார். வேறு ஒரு கொள்ளைக்கூட்டத்துடன் சேர்ந்து தன் பலத்தை அதிகரித்துக் கொள்கின்றார். அந்தக் கொள்ளைக்கூட்டத்திற்கு தலைவன் மான்சிங். தன் கணவரை கொன்றவர்களுக்கு அடைக்கலம் தந்தாக பிக்மாய் கிராம மக்களை 1982 இல் இவ்ரகள் சுடுகின்றனர். இதில் 22 பேர் மாண்டு போனார்கள். பூலான் தேவியைப் பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டது. அப்போது முதலமைச்சராக இருந்த வி.பி.சிங் அவர்கள் இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்று பதவி விலகினார்.

இவ்வளவு தேடுதல் வேட்டை இருந்தும், 48 வழக்குகள் அவர் மீது இருந்தும் பூளன் தேவியை காவல் துறை பிடிக்க முடியாதற்கு காரணம், கிராம மக்களின் உதவி. அதற்கு அவர்கள் சொன்ன காரணம், இங்கு இருக்கும் உயர் சாதி  இந்துக்களின் கொடுமைகளில் இருந்து எங்களை அரணாக இருந்து காப்பாற்றுவது பூலான் தேவி என்பது தான்.  இறுதியாக  பிந்து நகரத்தில் 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி பன்னிரெண்டாம் தேதி பொதுமக்கள் முன்னிலையில் பூலான் தேவி சரணடைவார் என்று அறிவிக்கப்பட்டது. திட்டமிட்டபடி அன்று காலை ஒன்பது மணிக்கு முதல் மந்திரி அர்ஜுன் சிங் முன்னிலையில் தன்னுடைய ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தார்  பூலான் தேவி.

பெரிய கொள்ளைக்காரி என்று பழிக்கப்பட்டாலும், அவரின் இந்த திசை திரும்பலுக்கு இந்தச் சமூகமே முழுப் பொறுப்பு. மேலும் சாதியத்தை எதிர்த்து தொடர்ந்து போரிட்டவர். சிறையில் இருந்தாலும், உள்ளிருந்தபடியே 1991 ஆம் ஆண்டு அரசியலில் கால் பதித்தார். பின் தொடர் அழுத்தங்களால் 1994 ஆம் வருடம் 11 வருடங்கள் கழித்து வெளிவந்து உமத் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

வெளியில் வந்தும் தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி தொடர்ந்து மக்களுக்கு பாடுபட்டு வந்தார். 1996 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சா பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார்.

siragu poolaan devi2

1999-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலிலும் அதே மிர்சாபூர் தொகுதியில் 2-வது முறையாக நின்று அபார வெற்றி பெற்றார்.

அவரின் வாழ்க்கையை பண்டிட் குயின் என்று திரைப்படமாக எடுத்து வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் 2001 ஆம் ஆண்டு 2001 ஆம் ஆண்டு பாராளுமன்ற கூட்டத்திற்கு சென்று வீடு திரும்பிய பூலான் தேவியை அவரது வீட்டு வாசலில் வைத்து மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். உடலில் ஐந்து குண்டுகள்  பாய்ந்த நிலையில் பூலான் தேவி துடிதுடித்து  உயிரிழந்தார்.

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்று சொன்னாலும், இங்கு பூலான் தேவி துவக்கி தூக்கி போராடுவதற்கு சாதியும், பெண்ணடிமையும், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையும் முக்கிய காரணங்கள் என்பதை மறக்க முடியாது.

பூலான் தேவியின் இந்த வரிகளை படிக்கின்ற போது நம் மனசாட்சி நம்மை கேள்வி எழுப்பவே செய்யும், பூலான் தேவிகள் குற்றவாளிகளா? அல்லது இந்தச் சமூகம் குற்றவாளியா? எண்ணிப் பாருங்கள் .

எனக்காக நான் பேச ஒருமுறை கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனினும், என்னைப் பற்றி பலர் பேசியிருக்கிறார்கள். பலபேர் என்னைப் புகைப்படம் எடுக்கவும், அவற்றைத் தங்கள் சுயநலத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தியும் இருக்கிறார்கள். தாங்க முடியாத துயரங்களை அனுபவித்தவளும், அவமானப்படுத்தப்பட்டவளுமான ஓர் அப்பாவிப் பெண்ணைப் பலரும் திட்டினார்கள், கேவலப்படுத்தினார்கள், பழித்தார்கள்…

siragu poolaan devi23jpeg

எங்கு பிறந்தவர்களாயினும், எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாயினும் சரி, தோலின் நிறம் அல்லது எப்படிப்பட்ட உருவம் கொண்டவர்களாய் இருந்தாலும் சரி, ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை இருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தத்தான் நான் விரும்பினேன்.

உதவி கேட்டு நான் கைகளை நீட்டினேன் என்றாலும் எவரும் எனக்கு உதவவில்லை. சமூகம் என்னை ஒரு சிறு பூச்சியாகவும், குற்றவாளியாகவுமே பார்த்தது. நான் நல்லவள் என்று சொல்லவில்லை, ஆனால், நான் எப்பொழுதும் ஒரு குற்றவாளியாய் இருந்ததில்லை. மொத்தத்தில் நான் செய்ததெல்லாம் எனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குப் பழி வாங்கினேன் என்பது தான்.

-பூலான் தேவி


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஒவ்வொருவருக்கும் சுயமரியாதை இருக்கிறது.”

அதிகம் படித்தது