மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கங்கா

சு. தொண்டியம்மாள்

Jan 18, 2020

siragu jeyakandhan3
முன்னுரை

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழுக்கு வந்த கலைவடிவம் நாவல். மேலைநாட்டு இலக்கியத் தாக்கத்தால் தமிழில் அறிமுகமான நாவல், வடிவம் அளவு கருத்துச் செறிவு முதலான காரணங்களால் பெரும் செல்வாக்கைப் பெற்ற கலைவவமாகத் திகழ்ந்தது. எழுத்தின் ஆற்றலும் கூர்மையும் அணியாகக் கொண்டு படைக்கப்பட்ட நாவல்கள் மக்களின் வாழ்க்கையை வாழ்வியல் சூழல் மாற்றத்தை மறுமலர்ச்சியை வெளிப்படுத்தும் ஊடகமாகச் செயல்பட்டன சிந்தனையாளர்களும் இயக்கவாதிகளும் நாவலைத் தம் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லும் கருவியாகக் கொண்டனர். இவ்வரிசையில் ‘‘ஜெயகாந்தன்’‘ குறிப்பிடத்தக்கவர்.

ஜெயகாந்தன் 1950 களில் படைப்புகளை எழுதத் தொடங்கி அறுபதாண்டு காலமாகத் தனது எழுத்தின் வலிமையால் பல பரிசுகளைப் பெற்றவர். சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை, சுயசரிதை, கவிதை எனப் பல வடிவங்களில் படைப்புகளைத் தந்தவர். இவரது சிறுகதைகளும், நாவல்களும் இவரை ஞானபீட பரிசுக்குரியவராக அடையாளம் காட்டிற்று.

ஜெயகாந்தனின் படைப்புகள் சமுதாய மாற்றத்தை நோக்கிய கலைப்படைப்புகள் சமூகத்தின் தாழ்ந்த பக்கங்களை சமுதாயப் புறக்கணிப்பிற்குள்ளானவர்களை சமுதாய முரண்பாடுகளை வெளிக்கொணரும் படைப்பிலக்கியங்களாக ஜெயகாந்தன் கதைகள் அமைந்தன.
சமுதாயக் கட்டக்குள் மரபுகள் வைதவ்ய நெறிகள் என்னும் பெயரால் கல்வி, சொத்துரிமை போன்றவை மறுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் படைப்புகள் ஜெயகாந்தனால் படைக்கப் பெற்றன. பொதுவுடமை இயக்க ஈடுபாட்டுடன் எழுத்துப்பணிக்கு வந்த ஜெயகாந்தக் பெண்களின் வாழ்வியல் மலர்ச்சிக்கு வித்திடும் கதைகளைப் படைத்தளித்தார்.

பெண் என்பவள் ஆணுக்குரிய அனைத்து உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் உரியவள் என்னும் கருத்தினை ஜெயகாந்தன் நாவல்கள் உணர்த்துகின்றன. சமுதாயத்தில் காணப்பெறும் பலவகைப்பட்ட குடும்பச் சூழல்களில் பெண் சந்திக்கும் சிக்கல்களையும் அதற்கு ஜெயகாந்தன் முன்வைக்கும் தீர்வுகளும் ஏற்றுக்கொள்ள கூடியவைகளாகும். ஜெயகாந்தன் நாவலில் படைக்கப்பட்டுள்ளன பெண் பாத்திரங்கள் சமுதாயத்தில் காணப்பெறும் உண்மை மாந்தர்களைப் பிரதிபலிப்பன.

பெண் என்பவள் ஆணுக்குரிய அனைத்து உரிமைகளுக்கும் கடமைகளுக்கும் உரியவள் என்னும் கருத்தினைச் ஜெயகாந்தன் நாவல்கள் உணர்த்துகின்றன. சமுதாயத்தில் காணப்பெறும் பலவகைப்பட்ட குடும்பச் சூழல்களில் பெண் சந்திக்கும் சிக்கல்களையும் அதற்கு ஜெயகாந்தன் முன்வைக்கும் தீர்வுகளும் ஏற்றுக் கொள்ள கூடியவைகளாகும். ஜெயகாந்தன் நாவலில் படைக்கப்பட்டுள்ள பெண் பாத்திரங்கள் சமுதாயத்தில் காணப்பெறும் உண்மை மாந்தர்களைப் பிரதிபலிப்பன.

‘‘சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் நாவலில் கதைத் தலைவியான ‘‘கங்கா’‘ வின் பாத்திரப்படைப்பனை விளக்கும் முறையில் இக்கட்டுரை அமையப்பெற்றுள்ளது.

பாத்திர படைப்பு என்பது ஒரு பெயர் சூட்டி விடுவதோ, அங்க வருணனை நடத்தி விடுவதோ அல்ல, மனம், அறிவு சிந்தனை, குண இயல்பு சூழ்நிலைகளின் போது வெளிப்படும் உணர்ச்சிகள் இவற்றையெல்லாம் கூர்ந்து அறிந்து அனுபவமாக வெளிப்படுவதைத் தீட்டுவதாகும். இவ்வகையில் கங்காவின் பாத்திரம் வரையப்பெற்றுள்ளது.

பதினெட்டு வயதில் கல்லூரி மாணவியாக உருவத்தில் குழந்தை. அசடு தனக்கு நேரும் கொடுமைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாக அபலை பெண்ணாக “கங்கா” படைக்கப்பெற்றுள்ளாள். மேலும் மாமா என்னும் புலியிடம் தன்னை காப்பாற்றி கொள்ளும் சாமர்த்திய சாலியாக தெருவில் அவள் யாரையும் நிமிர்ந்து பார்க்காத பெண்ணாக அலுவகத்தில் திமிரானவளாக சமூகத்தில் புதுமை பெண்ணாக வாழ தகுதியற்றவள் என்னும் எண்ணத்தில் வாழும் பெண்ணாக கங்கா சித்தரிக்கப் பெற்றுள்ளாள். ஒரு பெண்ணின் பல்வேறு பரிமாணங்களையும் அவளது உள்ளத்தில் எழும் நியாமான ஆசைகளையும் கங்கா வழி ஜெயகாந்தன் நயம்பட எடுத்துரைத்துள்ளார்.

ஒரு மாலை நேரத்தில் யார் என்று அறிமுகம் இல்லாத ஒருவனிடம் வாழ்க்கை இழந்த பெண். அதனை அம்மாவிடம் கூறியவள். வீட்டிலிருந்து வெளியில் துரத்தப்பட்டவள் மாமாவின் அடைக்கலத்தால் படித்து பணிபுரியும் பெண்ணாக உயர்ந்தாலும் தனக்கு நேர்ந்த கொடுமையில் இருந்து விடுபடமுடியாமல் தனக்குத் தானே வட்டம் அமைத்து கொண்டு தனி ஒருத்தியாய் வாழும் ‘‘கங்கா’‘ தனக்காக வீட்டை விட்டு வெளியே வந்த அம்மாவை ‘‘அம்மா’‘ என்று பனிரெண்டு வருடங்களாக அழைக்காத பெண் மாமா செய்த உதவிக்காக அவர் செய்யும் சேட்டைகளை பொறுத்து கொள்ளவும் முடியாமல், தடுக்கவும் முடியாமல் துடிக்கும் நிலை, பேருந்தில் நெருங்கும் ஆண்களின் செயல்களை கண்டிக்க முடியாத நிலை போன்ற நிலைகளில் கங்காவின் பாத்திரபடைப்பு என்னதான் புதுமை பெண்ணாக வலம் வந்தாலும் மனதளவில் எதையும் எதிர்க்க முடியாத கோழையாக இன்றைய பெண்களின் நிலை போலவே இவளின் நிலை உள்ளதை கங்கா வழி தெளிவாக ஜெயகாந்தன் படம் பிடித்து காட்டியுள்ளார்.

நீ இனிமேலும் கெட்டுப் போகாம இருக்கணும்னா உன்னை இன்னொருத்தர் கையை எதிர்பார்க்காதவளாக உன் சொந்தக் காலிலே நிக்கறவளாக உருவாக்கிக்கனும் என்று கூறிய மாமாவின் சொற்கள் அவளுக்குள் தன்னம்பிக்கை தரும்போது இவள் தன்னம்பிக்கை மிக்க பாத்திரமாக உள்ளது.

நீ இயற்கையிலேயே எவ்வளவு கீழ்த்தரமான குணம் உடையவள்னு தெரியறதா? ஏன்னா யாருன்னே தெரியாத ஒருத்தனுக்கு அவ்வளவு சுலபமா எப்படி உன்னாலே இணங்க முடிஞ்சுது?

‘‘நியாயமாப் பார்த்தால் அந்த பேர் தெரியாத எவனோதான் உன் புருஷன் விவாகம் குடும்ப வாழ்க்கை இதெல்லாம் உனக்கு அந்தக் கார்லேயே உண்டாகி அப்பவே அழிஞ்சு பொய்யாய்ப் போயிருத்து| என்ற மாமாவின் கூற்று அவளின் வாழ்க்கையை கிழித்து உரைப்பதாக உள்ளது.

நிற்கதியாய் நிற்கும் போது கடவுளாய் தெரிந்தவர் இன்று பேர் தெரியாத எவனோ? அவனை விட கீழ்த்ரகுணம் படைத்தவராக கங்காவின் முன் அவர் நிற்கிறார்.

அவள் பன்னிரெண்டு வருடம் துறவி வாழ்க்கையை மேற்கொண்டவள் மாமாவிடம் இருந்து தப்பிக்க மகாத்மாவின் வாசகங்களை பயன்படுத்திய போது கண் முன்னே பாரதி கண்ட புதுமைப் பெண்ணாகவே அவள் காட்சியளிக்கிறாள்.

‘‘நான் பெண்களுக்கு சொல்வது இதுதான் உன்னை ஒருவன் பலாத்காரமாகக் கற்பழிக்க முயலும் பொழுது உனக்கு நான் அகிம்சையை உபதேசிக்க மாட்டேன் நீ எந்த ஆயுதத்தையும் பிரயோகிக்கலாம். நீ நிராயுபாணியாக இருந்தால் இயற்கை உனக்குத் தந்த பல்லும் நகமும் எங்கே போயிற்று? இந்த நிலையில் நீ செய்கிற கொலையோ அது முடியாதபோது நீ செய்து கொள்கிற தற்கொலையோ பாபமாகாது” என்ற வரிகளே கங்காவை இறுதி வரை காத்தது.

இதுவரை புதுமைபெண்ணாக சித்தரிக்கப்பட்ட கங்காவின் பாத்திரம் இதற்கடுத்த நிகழ்வுகள் மூலம் சராசரி பெண்ணாய் கோழைத்தனமாக முடிவு எடுக்கும் அபலயாய் கண் முன்னே தெரிகிறாள்.

ஆர். கே.வி.யின் சந்திப்பின் மூலம் பேர் தெரியாத நபரின் பெயரை தெரிந்து கொள்கிறாள். மாமாவின் ஒற்றை வார்த்தைக்காக அவனை தேடும் பணியில் ஈடுபடும்போது அவளின் உள்ளுணர்வுகள் சராசரி பெண்ணின் மனநிலையை தாண்டி மிகைப்படுத்தப்பட்டுள்ளது. கங்காவின் பாத்திரப்படைப்பு சமூகத்தில் தன்னை காத்து கொள்வதற்காக வெறுப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்துபவள். அதற்கு காரணமானவனை சந்திக்கும்போது அன்பையும் பாதுகாப்பையும் எதிர்பார்ப்பவளாய் காட்சிபடுத்தப்பட்டது ஜெயகாந்தனுக்கு மட்டுமே உரிய சிறப்பு.

‘‘தான் செய்யற எந்தக் காரியத்துக்கும் தான் பொறுப்பு ஏத்துக்க முடியாது என்று கூறும் பிரபு மீது கோபம் கொள்ளாமல், இந்த உலகம் நம்மை பற்றி என்ன வேண்டுமானாலும் நினைக்கட்டும் ‘‘மஞ்சு’‘ மட்டும் தன்னை தவறாக நினைக்க கூடாது என்று கூறும்போது கங்கா அசட்டு பெண்ணாகவே வலம் வருகிறாள்.

பிரபுவின் உடல்நலத்தில் இவள்காட்டும் அக்கறை தனிமையில் அவனை நினைத்து கற்பனையில் ‘‘கங்கா ‘‘ வாழும் வாழ்க்கை சராசரி பெண்ணின் மனநிலையை நம் கண்முன் கொண்டு வருகிறார் ஜெயகாந்தன்.

‘‘எனக்கு கொஞ்ச நாளாகவே ஒரு பயம் என்னை யாராவது ரேப்’‘ பண்ணிடுவாளோன்னு நான் எப்பவும் பயந்துண்டு இருக்கேன் அப்படி யாராவது பலாத்காரமா கெடுக்க வந்தா நான் பணிஞ்சுடுவேனாங்கற பயம். அப்படி ஏதாவது நடக்கனும்னு என் தலையெழுத்து இருந்தா அது இன்னொருத்தனா இருக்க வேண்டாம் நீங்களாகவே இருந்துடட்டும்னு உங்களை நானே தேடிப்பிடிச்சேன் என்று ‘‘கங்கா ‘‘ கூறுவது இச்சமூகத்தில் ஒரு பெண் பொருளாதார அடிப்படையில் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் ஒரு ஆண் துணை இல்லாமல் வாழ முடியாதவளாய் கங்காவின் பாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.

நான் விரும்பினாக்கூட இன்னொரு தடவை கெட்டுப் போறத்துக்கு எனக்குத் தலைவிதி இல்லே போலே என்று நினைக்கும் கங்காவின் பாத்திர படைப்பு சற்று நெருடலாகவே உள்ளது. அறியாத வயதில் தன் வாழ்க்கையை இழந்த ஒருவனிடம் பனிரெண்டு வருடம் கழித்து சொந்த காலில் நிற்கும் ஒரு பெண் அவனிடமே தன் வாழ்க்கையை தேடுவாளா? என்று நினைக்கும் போது கங்காவின் பாத்திரப்படைப்பு விசித்திரமானதாக தோன்றுகிறது.

ஆர். கே.வின் மூலம் வரும் வரன் மகளை திருமண கோலத்தில் பார்க்க வேண்டும் என்ற அம்மாவின் ஆசை, அண்ணனின் கரிசனம் எல்லாவற்றிற்க்கு மேலாக பிரவுவின் பக்குப்பட்ட மனநிலை. கங்காவை மஞ்சு இடத்தில் வைத்து பார்ப்பதால் கங்காவை விட்டு விலகினால் புதிய வாழ்க்கை அவளுக்கு அமையும் என நினைக்கும் பிரபுவின் கூற்றால் கங்காவின் ஆசை நிறைவேறாமல் திசைமாறி போகும் பறவை போல் கங்காவின் கதாபாத்திரம் படைக்கப்பட்டுள்ளது.

முடிவுரை

வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்கு பிடித்த மாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை. கங்காவின் கதாபாத்திரமும் அவ்வகையில் படைக்கப்பட்டதே.

காலங்கள் மாறும்போது மனிதர்களும் மாறித்தான் ஆகவேண்டும். மாறிய மனிதர்களைக் காலத்தின் மாற்றமே காண வைக்கிறது. பல மாற்றங்கள் சமுதாய வாழ்வில் புதுமையானவையாக இருந்தாலும் தனி மனிதர்கள் வாழ்வில் காலங்கடந்த மாற்றங்களாகவே நிராசைகளின் நிலைத்த சித்திரங்களாகவே உயிரிழந்து வந்து நிற்கின்றன.


சு. தொண்டியம்மாள்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கங்கா”

அதிகம் படித்தது