நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியும் அதனால் தூண்டப்படும் நிலநடுக்கங்களும்

தேமொழி

Jul 8, 2017

Siragu-Earthquakes-fi

தற்கால மனித வாழ்விற்கு இன்றியமையாத எரிபொருளான கச்சா எண்ணெய் எடுக்க கடலிலும் (Offshore Drilling), நிலத்திலும், எண்ணெய்க் கிணறுகளும், இயற்கை எரிவாயுக்கான கிணறுகளும் தோண்டப்பட்டு வருவது கடந்த 150 ஆண்டுகளாகவே நிகழ்ந்து வருகிறது. வணிக நோக்கில் முதலில் ‘எட்வின் டிரேக்’ ( Edwin Drake) என்பவரால் 1859 ஆம் ஆண்டு பென்சில்வேனியா (Pennsylvania ) வில் தோண்டப்பட்ட எண்ணெய்க் கிணற்றின் ஆழம் வெறும் 69.5 அடிகள் மட்டுமே. குடிநீர் கிணறு போல சாதாரண ஒரு ஆழத்தில் துவங்கி தொழில்நுட்பம் விரிவடைந்த காரணத்தினால் சில ஆயிரம் அடிகள் எனத் தற்காலத்தில் தோண்டப்பட்டு எரிபொருட்கள் பெறப்படுகின்றன.

இந்நாட்களில், எண்ணெய் உற்பத்தி செய்பவர்களால் ‘ஹைட்ரோ ஃபிராக்கிங்’ (hydrofracking, hydraulic fracturing, hydrofracturing) என்னும் ‘நீரழுத்த பாறைத்தகர்ப்பு’ முறையாகிய ஒரு நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு 10,000 அடிகளுக்கும் மேலான ஆழத்தில், படிமப்பாறைகளுக்கு இடையில் இருக்கும்   கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியன பிரித்தெடுக்கப்படுகிறது. பாறைப்படிமங்களில் இருக்கும் எரிபொருட்கள் கலவை ‘ஷேல்’ (shale) என்று குறிப்பிடப்படுகிறது. நீரும் கரிமமும் அதன் வேதிப்பண்பு என்பதால் ‘ஹைட்ரோ கார்பன்’   (hydrocarbon) அல்லது ‘நீர்க்கரிமம்’ உற்பத்தி என்றும் குறிப்பிடப்படும் வழக்கம் தோன்றியுள்ளது. ஆனால் அடிப்படை செயல்பாடு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதாகும்.

Siragu Earthquakes1இவ்வாறு நீரழுத்த பாறைத்தகர்ப்பு முறையில் செயற்கையாக நிலநடுக்கம் தூண்டப்படுவது பக்கவிளைவாக நிகழ்கிறது. இயற்கையில் நிகழும் நிலநடுக்கங்களுக்கு மாறாக ஏற்படும் இந்த நிலநடுக்கங்கள் தூண்டப்பட்ட நிலநடுக்கங்கள் என அறிவியல் ஆய்வுகள் சான்றுகளுடன் உறுதிப்படுத்தியுள்ளன. ‘தூண்டப்பட்ட நிலநடுக்கம்’ (Induced Seismicity/Induced Earthquakes) நிகழ்வதைக் கடந்த ஐம்பது ஆண்டுகளாகவே அறிவியல் ஆய்வாளர்கள் அறிந்துள்ளார்கள், இவை குறித்து ஆய்வுக்கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் புவியியல் ஆய்வு நிறுவனமாகிய ‘யுஎஸ்ஜிஎஸ்’ அல்லது ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் ஜியாலஜிக்கல் சர்வே’ (USGS – The United States Geological Survey) என்ற அறிவியல் நிறுவனத்தின் அறிவியலாளர்கள் கடந்த 1950 முதலாகவே அமெரிக்காவில் நிகழும் நிலநடுக்கங்களை எரிபொருட்கள் உற்பத்திக்காகத் தோண்டப்படும் கிணறுகளின் நடவடிக்கையுடன் இணைத்து ஆராய்ந்து வருகிறார்கள். தூண்டப்படும் நிலநடுக்கங்கள் இந்த நூற்றாண்டில் குறிப்பாக 2009க்குப் பிறகு அமெரிக்காவின் மத்திய மாநிலங்களில் பலமடங்கு அதிகரிக்கத் தொடங்கவும் இது குறித்த விழிப்புணர்வு மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது எனலாம்.

முன்னர் எப்பொழுதோ ஓரிரு முறை நிலநடுக்கங்கள் நிகழ்ந்த பகுதியில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுவதும், அப்பகுதியின் எண்ணெய்க் கிணறு நடவடிக்கைகள் குறைந்தால் எண்ணிக்கையின் அளவு குறைவதும், நடவடிக்கை அதிகரித்தால் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் இதன் முக்கியமான அறிகுறியாகக் கொள்ளலாம்.

வழக்கத்திற்கு மாறாக ஒரு பகுதியில் திடீர் என நிலநடுக்கங்கள் அதிகரிக்கவோ அல்லது குறையவோ நேரிட்டால், இது இயற்கைக்கு மாறான நிகழ்வா என அறியும் நோக்கில் பின்வரும் மூன்று கேள்விகளுக்கான விடையை ஆய்வாளர்கள் அறிய முற்படுவார்கள்:

1. இந்த நிலநடுக்கப் பகுதி எண்ணெய் உற்பத்தி செய்யும் பகுதிக்கு அருகாமையில் உள்ளதா?

2. உற்பத்தி நடவடிக்கையை அதிகரிக்கவோ, குறைக்கவோ அல்லது நிறுத்தவோ செய்ததால் நிலநடுக்கங்களின் எண்ணிக்கையில் மாறுதல்கள் ஏற்படுகின்றதா?

3. ஏற்பட்ட நிலநடுக்கம் எத்தகையது? (அதன் ஆழம் என்ன? புவியின் மேற்பரப்பில் நிகழ்கிறதா? அதன் நிலஅதிர்வின் அளவீடு என்ன?) போன்ற நிலநடுக்கம் குறித்த வினாக்கள் எழுப்பப்படும்.

நிலஅதிர்வின் அளவீட்டை இன்றும் நாம் ‘ரிக்டர் அளவு’ (Richter scale) என்று அழைப்பது பொதுவாக வழக்கமென்றாலும், சரியான அளவீட்டு முறையின் பெயர் ‘மொமெண்ட் மக்னிடியூட் ஸ்கேல்’ (Moment Magnitude Scale – MMS). ‘Mw‘ அல்லது ‘M’ என்று இது குறிப்பிடப்படுகிறது. ஆனால் கணக்கிடும் முறை வேறென்றாலும் குறிப்பிடும் அளவில் மாறுதல் இல்லாத வண்ணம் செயல்முறைப்படுத்தப்பட்டுள்ளது. M 3.0 அளவிற்கும் மேலுள்ள நிலநடுக்கங்களினால் கட்டிடங்களுக்குச் சேதமும் அதனால் உயிரிழப்புகளும் அதிகரிக்க வாய்ப்பும் அதிகமாவதால் நிலநடுக்கத்தின் அளவீட்டைக் குறிப்பிடுவது முக்கியத்துவம் பெறுகின்றது.

ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எண்ணிக்கைக்கும் எண்ணெய் உற்பத்தி நடவடிக்கைக்கும் தொடர்பு இருப்பது பல ஆண்டுகளாகவே கவனிக்கப்பட்டாலும், எண்ணெய் உற்பத்தி நடவடிக்கைதான் நிலநடுக்கத்திற்குக் காரணம் என்ற ஒரு சுலபமான முடிவை ஏற்றுக் கொள்வது ஆய்வாளர்களுக்கு வழக்கமில்லை. இரண்டுக்கும் பொதுவான வேறொரு அடிப்படைக் காரணமும் இருக்கலாம் என்ற ஐயத்தில் மேலும் ஆராய்ந்து, எண்ணெய் உற்பத்திக்கான செயல்பாடுகள் எந்த விதத்தில் புவியின் மேற்பரப்பைப் பாதிக்கிறது?, அதன் அறிவியல் அடிப்படை என்ன? என்று தெரிந்து கொள்வது ஆய்வாளர்கள் நோக்கமாக இருப்பதால் வரலாற்றுத் தரவுகள் இந்த ஆய்வுக்கு இன்றியமையாததாக அமைகிறது.

எனவே, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி எவ்வாறு நிலநடுக்கத்தைத் தூண்டுகிறது என்பதை அறிந்து கொள்ள நிலநடுக்கம் குறித்த வரலாற்றுப் பின்புலமும், எண்ணெய் எடுக்கும் வழிமுறையையும் தெளிவாக அறிவியல் அடிப்படையில் அறிந்து கொள்ளத் தேவையுமிருக்கிறது.

எண்ணெய் எடுக்கும் முறை பெரும்பாலும் நான்கு அடிப்படை செயல்களை உள்ளடக்கியது.

1. நீரழுத்த பாறைத்தகர்ப்பு (Hydraulic Fracturing), இந்தச் செயல்பாட்டில் அதிக அளவு M 4.6 நிலநடுக்கம் வரை ஏற்பட்டுள்ளது (ஆல்பெர்ட்டா மற்றும் கொலம்பியா) பதிவாகியுள்ளது.

2. எண்ணெய் உற்பத்தி அல்லது எண்ணெய் எடுத்தல் (Oil Production/Extraction), இந்தச் செயல்பாட்டில் அதிக அளவு M 7.0 நிலநடுக்கம் வரை ஏற்பட்டுள்ளது (பாக்கிஸ்தான்) பதிவாகியுள்ளது.

3. மாசடைந்தநீர் வெளியேற்றுதல் (Wastewater Disposal), இந்தச் செயல்பாட்டில் அதிக அளவு M 5.6 நிலநடுக்கம் வரை ஏற்பட்டுள்ளது (ஓக்லஹோமா) பதிவாகியுள்ளது.

4. மேம்படுத்தப்பட்ட முறையில் எண்ணெய் மீட்பு (Enhanced Oil Recovery), இந்தச் செயல்பாட்டில் அதிக அளவு M 4.5 நிலநடுக்கம் வரை ஏற்பட்டுள்ளது பதிவாகியுள்ளது.

நீரழுத்த பாறைத்தகர்ப்பு முறை 1947 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இம்முறையில் ஒரு மைல் ஆழத்தில் புவியில் ஆழ்துளையிடப்படுகிறது. மேம்படுத்தப்பட்ட இக்கால முறையில் செங்குத்தாக இடப்பட்ட ஆழ்துளை குழாய் எண்ணெய் பகுதியை அடைந்ததும் கிடைமட்டத்தில் திருப்பப்பட்டு மேலும் ஒரு இரண்டு மைல் தொலைவிற்கு துளையிடப்படுகிறது. இத்துளை சிமெண்ட் மற்றும் இரும்பு உலோகம் கொண்டு பூசப்பட்டு உறுதியாக்கப்படுகிறது. இதனால் பூமியில் உள்ள நீர் துளையிட்டு உருவாக்கிய எண்ணெய்க் குழாய்க்குள் கசியமுடியாதவாறு தடுக்கப்படுகிறது. பிறகு இக்குழாயில் திரவத்தை உட்செலுத்தி படிமப்பாறையை உடைத்து, அதிலுள்ள எண்ணெய்யை உள்ளிழுக்க ஏதுவாகத் துளையிடும் கருவியொன்று பல துளைகளை இடுகிறது.

Siragu Earthquakes2

அடுத்து, படிமப்பாறைகளைத் தகர்க்குமளவு ஆற்றலுக்குத் தேவையான அதிக அழுத்தத்தில் சுமார் 60,000 பேரல்கள் மணல், நீர், சிறு அளவில் வேதிப்பொருட்கள் கொண்ட திரவக்கலவை புவியினுள் செலுத்தப்படுகிறது. இது பாறைகளை சிதைப்பதால் அவற்றின் இடையில் அடைபட்டிருக்கும் எண்ணெய், எரிவாயு ஆகியன வெளிப்பட்டு ஆழ்துளை குழாயினுள் உறிஞ்சப்பட்டு நிலத்திற்கு மேல் எடுத்துச் செல்லப்படுகிறது. குறைந்த கால அளவில், சில நாட்களில் நீரழுத்த பாறைத்தகர்ப்பு நிலை முடிவு பெற்றுவிடும். சிறிய அளவு M 2.0 அளவு கொண்ட தூண்டப்பட நிலநடுக்கங்கள் இந்தச் செயல்முறையின் பக்க விளைவாக ஏற்படுவதுண்டு.

இவ்வாறு எண்ணெய் உற்பத்தி செய்யப்படும்பொழுது எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றுடன் பலகோடி ஆண்டுகளுக்கு முன்னர் நிலத்தடியில் புதையுண்டு போன உப்புத் தன்மை கொண்ட கடல்நீரும் துணைப்பொருளாகக் கிடைக்கிறது. இவ்வாறு கிடைக்கும் நீர் ‘மாசடைந்த நீர்’ (Co-produced water/wastewater) என அழைக்கப்படுகிறது. இந்த நீர் மறுசுழற்சியாக பாறைத்தகர்ப்புத் திரவமாகப் பயன்படுத்தப்பட்டோ (Reused as frac fluid), அல்லது நீர்நிலைகளில் வெளியேற்றப்பட்டோ, அல்லது மீண்டும் மற்றொரு ஆழ்துளை குழாய் கிணறு மூலம் நிலத்தடி நீரைப் பாதிக்காவண்ணம் புவியின் மிகவும் அதிகமான ஆழத்திற்கு உட்செலுத்தப்பட்டோ கழித்துக் கட்டப்படுகிறது.

இந்த நீரில் வேதிப்பொருட்கள், இயற்கையாகவே மண்ணில் கலந்துள்ள கதிரியக்க வேதிப்பொருட்கள் போன்றவையும் கலந்து அத்துடன் உப்புத்தன்மை கொண்ட உவர் நீராகவும் இருப்பதால் மனிதர்களுக்கும், செடிகளுக்கும், விலங்குகளுக்கும் எந்த வகையிலும் பயன்படுத்த வகையின்றி நச்சுத் தன்மை கொண்டதாக அமைந்துள்ளது. மாசடைந்த பல கோடி பேரல்கள் நீர், பல ஆண்டுகள் என நீண்ட கால அளவில் நிலத்தின் உட்செலுத்தப்படும். இவ்வாறு மாசடைந்த நீரை நீர்நிலைகளிலோ, ஆழ்துளைக் கிணறுகளின் வழி புவியில் உட்செலுத்தும் பொழுது இந்தச் செயல்பாடு நிலநடுக்கங்களை (injection-induced earthquakes) அதிக அளவில் தூண்டக் காரணமாகிவிடுகிறது.

நிலத்திற்கு அடியில் செல்லும் நீர் அங்கு அதிக அளவு நீரழுத்தத்தைத் தோற்றுவிக்கிறது. இதனால் புவித்தட்டுகளின் பிளவுகளில் நுழையும் நீர் புவிதட்டுகளை நகரச் செய்வதால் தூண்டப்பட்ட நிலநடுக்கங்கள் நிகழ்கின்றன (wastewater injection can raise pressure levels and thus increases the likelihood of induced earthquakes) என்பது சுருக்கமான அனைவருக்கும் புரியும் வகையில் கொடுக்கப்படும் ஒரு எளிய விளக்கம். இதனைக் கீழ் காணும் வரைபடங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

Siragu Earthquakes3

Siragu Earthquakes4

முதன்முதலில் மனித நடவடிக்கையால் தூண்டப்பட்ட நிலநடுக்கம் 1894 ஆம் ஆண்டு ஜோகன்ஸ்பர்க்கில் நிகழ்ந்தது என அறியப்படுகிறது. முதன்முதலில் அமெரிக்க மண்ணில் மாசடைந்த நீரை ஆழ்துளைக் கிணறு மூலம் புவியுட்செலுத்தும் செயலால் நிலநடுக்கம் தூண்டப்படுவது ‘ராக்கி மவுண்ட்டன் ஆர்செனல்’ (Rocky Mountain Arsenal) என்னும் அமெரிக்க அரசின் வேதியல் தளவாடங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது. கொலராடோ மாநிலத்தின் டென்வர் (Denver, Colorado) நகரில் தளவாட தொழிற்சாலையின் மாசடைந்த நீர் 12,000 அடி ஆழம் கொண்ட ஒரு கிணற்றில் செலுத்தப்பட்டது. மார்ச் 1962 இல் இச்செயல் தொடங்கப்பட்டு மாதம் 130,000 பேரல்கள் மாசடைந்த நீர் புவியுட்செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்பகுதியில் வழக்கத்திற்கு மாறாகப் பல நிலநடுக்கங்கள் தோன்றின. சிறிய மற்றும் நடுத்தர அளவில் 700 க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் இப்பகுதியில் 1962-1966 ஆண்டுகளுக்கிடையேயான காலகட்டத்தில் ஏற்பட்டன. குறிப்பாகக் கட்டிடங்களை சேதப்படுத்தும் அளவிற்கு 1967 ஆம் ஆண்டு M 4.8 அளவு கொண்ட பெரிய நிலநடுக்கம் ஒன்றும் ஏற்பட்டது.

Siragu Earthquakes5ஒரு பரிசோதனையின் விளைவாக முடிவை அறிவது போல மாசடைந்த நீரை உட்செலுத்தும் செயல்பாடு தொடங்கியவுடன் நிலநடுக்கங்களும் அதிகரித்து, இடையில் தற்காலிகமாக நிறுத்திய பொழுது நிலநடுக்கங்களும் குறைந்து, மீண்டும் தொடங்கியபொழுது நிலநடுக்கங்களும் அதிகரித்து, பின்னர் முற்றிலுமாக நிறுத்திய பின்னர் நிலநடுக்கங்கள் குறைந்தது என்ற தரவுகள் இவையாவும் தூண்டப்பட்ட நிலநடுக்கங்கள் என்று உறுதி செய்தன. இப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் தூண்டப்பட்ட நிலநடுக்கங்கள் என்பதை அறிவியல் ஆய்வறிக்கைகள் 1960 களிலேயே பதிவு செய்துள்ளன (Healy J.H. et al., 1968, The Denver Earthquakes; Science, V. 161, p. 1301-1310). மாசடைந்த நீரை வெளியேற்றியதன் விளைவாகத் தூண்டப்பட்ட நிலநடுக்கங்கள், செயல்பாட்டை நிறுத்திய பின்னரும் 1980 ஆண்டுகள் வரையிலும் தொடர்ந்தன.

மாசடைந்த நீரைப் புவியினுள் செலுத்துவதால் நிலநடுக்கங்கள் தூண்டப்படுகின்றன என்பதை மேலும் உறுதி செய்யும் நோக்கில் பரிசோதனை முறை ஒன்றை முன்னெடுக்க விரும்பினர் ‘யுஎஸ்ஜிஎஸ்’ நிறுவனத்தின் புவியமைப்பியல் அறிவியலாளர்கள்(Geologists). இதற்கு உதவியது ‘செவ்ரான் எண்ணெய் நிறுவனம்’ (Chevron Oil Corporation). அவர்களது எண்ணெய்க் கிணறுகளில் ஒன்றில் நீரினழுத்தம் புவிதட்டுகளின் பிளவுகளில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் கண்டறியும் ஆய்வினை நடத்த 1969 ஆம் ஆண்டில் அனுமதி கொடுத்தது. எண்ணெய்க் கிணறு அமைந்திருந்த பகுதி நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதியான ரேஞ்ச்லி என்ற கொலராடோ (Rangely, Colorado) மாநிலத்தின் பகுதி. செவ்ரான் நிறுவனமும் எண்ணெய் உற்பத்தியின் காரணமாக நீரை அப்பகுதியில் புவியினுட்செலுத்திக் கொண்டிருந்தது.

ஆய்வாளர்களும் இதனை நல்ல வாய்ப்பாகக் கருதி உட்செலுத்தப்படும் நீரினழுத்தத்தைக் குறைத்தும் அதிகரித்தும் பல சோதனைகளைச் செய்தனர். எந்த அளவு நீரழுத்தம் காரணமாக நிலநடுக்கம் தூண்டப்படுகிறது என்பதைக் கணிக்கும் வகையில் அச்சோதனைகள் உதவின. குறிப்பிட்ட அளவிற்கு மேல் நீரழுத்தத்தை அதிகரித்தால் நிலநடுக்கம் ஏற்படுவதும், நீரழுத்தத்தின் அளவைக் குறைத்தால் நிலநடுக்கம் நின்றுபோவதும் புவியினுள் செலுத்தப்படும் நீரின் அழுத்தத்தின் அளவிற்கும் நிலநடுக்கம் தூண்டப்படுவதற்கும் தொடர்பு இருப்பதைத் தெளிவாகக் காட்டியது.

மாசடைந்த நீரை உட்செலுத்தும் அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தூண்டப்படும் நிலநடுக்கங்களைக் கட்டுக்குள் கொண்டுவரலாம் என்பது இந்தச் சோதனையின் மூலம் உறுதியானது. இருப்பினும் இந்த ஆய்வின் முடிவு காலப்போக்கில் முக்கியத்துவம் பெறாமல் மறக்கும் நிலையும் ஏற்பட்டது. அதாவது, மீண்டும் அமெரிக்காவின் மத்திய மாநிலங்களில் எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக திடீரென நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் வரை இந்த ஆய்வுகளின் முடிவு முக்கியத்துவம் இழந்து போனது.

எண்ணெய் உற்பத்திப் பகுதியில் அதிகரிக்கும் நிலநடுக்கங்களின் பின்னணியில் இருப்பது மாசடைந்தநீரை புவியினுள் செலுத்தும் செயல் என்பதை மீண்டும் நினைவுகூற வேண்டிய சூழ்நிலை ஏற்பட நேர்ந்ததற்கு, ‘ஷேல்’ படிமப் பாறைகளில் இருந்து எண்ணெய் எடுக்க ஆழ்துளைகளிட்டு, அதனைக் கிடைமட்டமாகவும் திருப்பித் துளையிட்டுக் குழாய் அமைத்து அதிக எண்ணெய் எடுக்கமுடியும் என்ற அளவில் முன்னேறிய தொழில்நுட்ப வளர்ச்சிதான் காரணம். அதிக அளவில் எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கவும், அதனால் அதிக அளவு கிடைத்த மாசடைந்த நீரையும் புவியினுள் செலுத்த வேண்டிய கட்டாயமும் அதனுடன் சேர்ந்தே வந்தது. அதனால் முன்னிருந்த கிணறுகளின் அளவு போதாமல் ‘டீப்த்ரோட்’ (Deep Throat) என்று அழைக்கப்படும் மிகப் பெரும் கிணறுகளின் (SWD- saltwater disposal well) மூலம் மாதத்திற்கு 300,000 பேரல் மாசடைந்த நீரைப் புவியினுள் செலுத்தத் தொடங்கினார்கள். அதிக அளவு மாசடைந்த நீரைப் புவியினுள் செலுத்தும் முயற்சியால் அதிக அளவில் தூண்டப்பட்ட நிலநடுக்கங்களும் அதன் விளைவாகச் சேர்ந்தே உருவானது.

அமெரிக்காவில் பலகாலமாக கலிபோர்னியா மாநிலமே அதிக நிலநடுக்கங்கள் ஏற்படும் பகுதி என்ற பெயர் பெற்று வந்தது. இதனையும் மிஞ்சிவிடும் மாநிலமாக 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு மாறிவிட்டிருக்கிறது நாட்டின் மையப் பகுதியில் இருக்கும் ஓக்லஹோமா மாநிலம். 2008 ஆம் ஆண்டுக்கு முன் நிலநடுக்கம் எப்பொழுதாவது ஏற்படும் பகுதியாக இப்பகுதி இருந்தது. 1973 ஆண்டு முதல் 2008 ஆண்டு வரை இடைப்பட்ட காலத்தில், ஆண்டொன்றுக்குச் சராசரியாக 24 என்ற எண்ணிக்கையில் M 3.0 அளவுக்கு மேல் உள்ள நிலநடுக்கங்கள் இங்கு நிகழ்ந்தன.

எண்ணெய் உற்பத்தி அதிகரித்ததில், 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு M 3.0 அளவுள்ள நிலநடுக்கங்களின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்குச் சராசரியாக 277 என்ற எண்ணிக்கையில் அதிகரித்தது. முன்னிருந்த நிலைக்கு 300 மடங்கு அதிகப்படியான நிலநடுக்கம் என 2014 ஆம் ஆண்டில் நிலநடுக்கங்கள் எண்ணிக்கையில் மேலும் அதிகரித்தது. குறிப்பாக M 3.0 அளவீட்டிற்கும் அதிகமான நிலநடுக்கங்கள் ஆண்டுக்கு 500 க்கும் மேல் நிகழும் நிலை ஏற்பட்டுள்ளது. நூறு ஆண்டுகள் காலகட்டத்தில் 13 என்ற எண்ணிக்கையில் எதிர்பார்க்கக்கூடிய M 4.0 அளவு கொண்ட நிலநடுக்கங்களை ஆறே மாதங்களில் ஓக்லஹோமா எதிர்கொண்டது. இவ்வாறு அதிகரித்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட இடங்கள் யாவுமே எண்ணெய் உற்பத்தி நடக்கும் இடங்களுக்கு அருகாமையில் இருப்பவையே. கலிபோர்னியா போல நிலநடுக்கத்திற்கு ஏற்ப வீடுகட்டும் விதிமுறைகள் ஓக்லஹோமா கடைபிடிக்கத் தேவையின்றி இருந்து வந்தது. இதனால் M 5.6 அளவு நிலநடுக்கத்தில் வீடுகள், நெடுஞ்சாலைகள் எனக் கட்டுமானங்கள் பல சேதமடைந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அவர்களுக்கான மருத்துவ உதவியின் தேவையும் அதிகரித்தது.

Siragu Earthquakes6இது போலவே, டெக்சாஸ் மாநிலத்தின் டல்லஸ்-ஃபோர்ட் வொர்த் (Dallas–Fort Worth area of Texas) பகுதியில் 2008 ஆம் ஆண்டு வரை யுஎஸ்ஜிஎஸ் நிறுவனம் ஒரு நிலநடுக்கத்தைக் கூடப் பதிவு செய்யும் நிலை ஏற்பட்டதில்லை. பிறகு நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. இவற்றுக்கும் எண்ணெய் உற்பத்தியின் அதிகரிப்பே காரணம்.

இவ்வாறு எண்ணெய் உற்பத்தி செயல்பாடுகள் காரணமாகத் தூண்டப்பட்ட நிலநடுக்கங்கள் அதிகரித்த இடங்கள் அமெரிக்காவின் மத்தியப்பகுதி மாநிலங்களாக டெக்சாஸ், ஓக்லஹோமா, கன்சாஸ், அர்க்கன்சாஸ், ஒஹையோ, கொலராடோ போன்ற மாநிலங்களாகும்.

Siragu Earthquakes7மேலும்,

ஹார்ன் ரிவர் பேசின், கனடா (Horn River Basin, Canada) பகுதியில், ஏப்ரல் 2009 முதல் டிசம்பர் 2011 வரை ஏற்பட்ட 31 நிலநடுக்கங்கள், குறிப்பாக ஆகஸ்ட் 2012 இல் ஏற்பட்ட M 3.6 அளவு நிலநடுக்கம் என யாவற்றுக்கும் காரணம் அங்கு நடைபெற்ற நீரழுத்த பாறைத்தகர்ப்புகள் எனவும்,

யங்ஸ்டவுன், ஒஹையோ (Youngstown, Ohio) பகுதியில், டிசம்பர் 31, 2011 அன்று ஏற்பட்ட M 4.0 அளவு நிலநடுக்கத்திற்குக் காரணம் அங்கு நடைபெற்ற மாசடைந்தநீரை புவியினுள் செலுத்தியது எனவும்,

M 3.9 (மே 10, 2012), M 4.8 (மே 17, 2012), M 4.1 (ஜனவரி 25, 2013), M 4.0 (செப்டெம்பர் 2, 2013), M 4.1 (செப்டெம்பர் 2, 2013) என ஐந்து கிழக்கு டெக்சாஸ் பகுதி நிலநடுக்கங்கள்,

M 5.7 அளவில் பிராக், ஓக்லஹோமா (Prague, Oklahoma) பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்,

எனப் பல நிலநடுக்கங்கள் எண்ணெய் உற்பத்தி முயற்சிகளால் தூண்டப்பட்ட நிலநடுக்கங்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளன.

கச்சா எண்ணெய் இயற்கை எரிவாயு உற்பத்தியின்பொழுது கையாளும் முறைகளில், நீரழுத்த பாறைத்தகர்ப்பு மற்றும் மாசடைந்தநீரை புவியினுள் செலுத்துதல் என்ற இரு செயல்பாடுகளில் எதனால் அதிக அளவு தூண்டப்படும் நிலநடுக்கங்கள் என்ற கேள்வி எழும்பொழுது (fracking or wastewater disposal?), மாசடைந்த நீரைப் புவியினுள் செலுத்தும் நடவடிக்கையானது அதிக அளவிலும், அளவில் பெரியதுமான தூண்டப்படும் நிலநடுக்கங்களை உருவாக்குகிறது என்பது தெரிய வருகிறது. அத்துடன் நீரினழுத்தம் வெகுவிரைவில் உயர்ந்து, மிகப்பரவலாகப் பரவுவதுடன், அதனால் ஏற்படும் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டதன் தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாகப் பல நிலநடுக்கங்களும் உருவாகும் என்பதும் ஆய்வின் வழி தெரிய வந்துள்ளது.

Siragu Earthquakes8

பொதுவாக எண்ணெய் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள் (நீரழுத்த பாறைத்தகர்ப்பு, மாசடைந்தநீரை புவியினுள் செலுத்துதல்) நிகழும் பகுதிகளின் 15 கிமீ தொலைவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டால் அது எண்ணெய் உற்பத்தியின் தொடர்பான தூண்டப்பட்ட நிலநடுக்கம் எனக் குறிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. டல்லஸ் பகுதியில் நிகழும் நிலநடுக்கங்களை வரைபடத்தில் குறிக்கத் தொடங்கிய பொழுது, நிலநடுக்கங்கள் ஏற்பட்ட பகுதியின் அருகாமையில் மாசடைந்தநீரை புவியினுள் செலுத்தும் கிணறு அமைந்திருந்தது, அறிவியல் ஆய்வாளர்களைத் தவிர்த்து தூண்டப்படும் நிலநடுக்கங்களின் காரணத்தை பொதுமக்களுக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் நிலையை உருவாக்கியது.

 Siragu Earthquakes9

நிலநடுக்கங்கள் குறித்த அறிவியல் ஆய்வுகளின் நோக்கம், அதிலும் குறிப்பாக நிலநடுக்கம் குறித்த தரவுகளைச் சேகரிப்பதன் நோக்கம், தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்ற முன்னெச்சரிக்கை கொடுக்கவேண்டும் என்பதே. இதுவரை அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பதற்கும் தூண்டப்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கும் காணக்கிடைக்கும் தொடர்பினைப் போல, நார்த் டக்கோட்டா, மாண்டானா போன்ற நாட்டின் வட பகுதிகளில் எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் இடங்களில் தூண்டப்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்படுவதைக் காண இயலவில்லை (இந்தவாரம் மாண்டானாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும் [M 5.8 earthquake, Montana, United States, Jul 5, 11:30 PM, 2017, at Lewis and Clark fault line] இயற்கையாக நிலத்தட்டுகள் உராய்வினால் ஏற்பட்டது என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது). இப்பகுதியில் எண்ணெய் உற்பத்தியின் பொழுது மாசடைந்த நீரைப் புவியினுள் செலுத்தும்பொழுது நீரழுத்தம் நிலநடுக்கத்தைத் தூண்டாததின் காரணம் குறித்து புவியடியில் நிலவமைப்பில் ஏதேனும் வேறுபாடு இருக்கலாம், இதற்காக புவியியல், இயற்பியல் துறை சார்ந்தோர் அடிப்படை அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டியத் தேவையிருக்கிறது என்று ‘யுஎஸ்ஜிஎஸ்’ நிறுவனத்தின் புவியமைப்பியல் அறிவியலாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

கட்டுரைக்கு உதவும் விளக்கப் படங்கள், கீழ்க்காணும் சான்றுகள் குறித்திடும் வலைத்தளங்கள், கட்டுரைகள், காணொளிகளில் இருந்து பெறப்பட்டது.

_____________________________________________________________________

References:

WEBSITES:

About Induced Seismicity, Lawrence Berkeley National Laboratory – http://esd1.lbl.gov/research/projects/induced_seismicity/, http://www.lbl.gov/

Induced Seismicity References – http://esd1.lbl.gov/research/projects/induced_seismicity/references.html

RESEARCH JOURNALS AND ARTICLES:

The Leading Edge, Special Issues on Induced Seismicity, June 2015, USGS – https://earthquake.usgs.gov/research/induced/edge.php

Injection-Induced Earthquakes, William L. Ellsworth, Earthquake Science Center, U.S. Geological Survey, Menlo Park, CA 94025, USA. Science 12 Jul 2013: Vol. 341, Issue 6142, 1225942; DOI: 10.1126/science.1225942 – http://science.sciencemag.org/content/341/6142/1225942

Drilling-induced earthquakes may endanger millions in 2016, USGS says. By Anna Kuchment, Scientific American, March 28, 2016 – http://www.pbs.org/newshour/updates/drilling-induced-earthquakes-may-endanger-millions-in-2016-usgs-says/

Oil and Gas Company’s Disposal of Wastewater Causes Sharp Rise in Quakes, Nearly 90 percent of temblors in the central U.S. are now caused by water injected into underground wells, By Alexandra Witze, Nature magazine on June 19, 2015 – https://www.scientificamerican.com/article/oil-and-gas-company-s-disposal-of-wastewater-causes-sharp-rise-in-quakes/

Wastewater Injection Caused Oklahoma Earthquakes, A new study attributes the recent surge of quakes in central Oklahoma to the injection of wastewater at a handful of high-rate wells across the state, By Kevin Schultz on July 3, 2014 – https://www.scientificamerican.com/article/wastewater-injection-caused-oklahoma-earthquakes/

VIDEOS:

“Energy Technologies and Manmade Earthquakes”, NASEM – The National Academies of Sciences, Engineering and Medicine; http://www.youtube.com/watch?v=Uuh9lHavdvc&feature=youtu.be

“Yes, Humans Really Are Causing Earthquakes”, Speaker: Justin Rubinstein, USGS Research Geophysicist, August 27, 2015 – URL: https://online.wr.usgs.gov/calendar/2015/aug15.html & https://www.youtube.com/watch?v=N9P2OgTNiY8

“Injection-Induced Seismicity”, Speaker: Bill Ellsworth, USGS, December 2, 2013 – https://earthquake.usgs.gov/contactus/menlo/seminars/896


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியும் அதனால் தூண்டப்படும் நிலநடுக்கங்களும்”

அதிகம் படித்தது