மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கடவுளும் கழுதையும் (பாகம் -3) (வெற்றியின் இரகசியம்) (கட்டுரை)

வேம்பையன் தொல்காப்பியன்

Apr 15, 2013

தேர்வுக்குப் படித்தல்:

இன்று பெரும்பாலும் தேர்வு என்பது அறிவுள்ளவரைத் தேர்ந்தெடுக்க அமைக்க‌ப்பட்டது அன்று. அறிவுள்ளவராக‌ யார் காட்டிக் கொள்ள முடியும் என்பதையே அது அடையாளம் காண்கிறது. அது படித்ததைப் புரிந்து கொண்டதைச் சோதிப்பதைவிடப் படித்ததை நினைவு வைத்திருப்பதையே சோதிக்கிறது. எனவே தேர்வைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்வது அவசியம். இங்கு எடுத்துக் காட்டுக்கு இத்தகைய தேர்வைக் கொள்வோம். தேர்வுக்குப் படித்தல் என்பதைக் கருத்துகளைப் புரிந்து கொள்ளுதல் (கடவுள்) மனப்பாடம் செய்தல் (கழுதை) எனப் பிரித்துக் கொள்ளலாம்.

தேர்வுக்குரிய பாடப்பகுதி எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து விட முடியாது. அதே போல் எல்லாவற்றையும் புரிந்து கொண்டு விட்டால் மட்டும் போதாது. சூத்திரங்கள், சமன்பாடுகள் போன்றவற்றை எழுத்து பிறழாமல் தெரிந்து வைத்திருக்காவிடில் எவ்வளவு புரிந்து வைத்திருந்தாலும் தேர்வுக்கு உதவாது.

கருத்துகளைப் புரிந்து கொள்ளும் கடவுள் வேலையில் அவற்றை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் கடவுள் வேலையும் அவற்றைப் பட்டியல் இடும் கழுதை வேலையும் இருக்கும். அதே போல் மனப்பாடம் செய்யும் கழுதை வேலையில் நினைவில் இருந்த கொக்கிச் சொற்கள், முறைகள் இவற்றைக் கண்டு பிடிப்பது என்ற கடவுள் வேலையும் அந்தக் கொக்கிகளின் படி உருத்தட்டும் கழுதை வேலையும் இருக்கும்.

இது தேர்வுக்குப் படிப்பதற்கான பொது வரை படம் ஆகும். பாடத்திற்குப் பாடம் சற்று வேறு படலாம். கடவுள் வேலையும், கழுதை வேலையும் ஒன்றன் பின் ஒன்றாக நடக்க வேண்டிய அவசியமில்லை. அவை மாறி மாறி, ஒன்றை ஒன்று பாதித்துச் செழுமைப்படுத்தலாம்.

கடவுள் பாதை - கழுதைச் சாலை

மிதி வண்டி ஓட்டத் தெரிந்தால் மொபெட் ஓட்டுவதைச் சுலபமாகக் கற்றுக் கொள்ளலாம். ஏனெனில் இரண்டு சக்கர வண்டியை பேலன்ஸ் செய்யும் திறமையை ஏற்கனவே பெற்று இருப்பீர்கள். அது போல் மொபெட் ஓட்டத் தெரிந்தது ஸ்கூட்டர், மோட்டார் பைக் ஓட்ட உதவும். மாட்டு வண்டி, குதிரை வண்டி ஓட்டத் தெரிவது கார் ஓட்டக் கொஞ்சம் பயன்படும். ஏனெனில் நம்மை விட அகலமான ஊர்தியை ஓர் ஒரத்தில் உட்கார்ந்து அதன் அகலத்தைக் கணக்கில் கொண்டு ஓட்டப் பழகி இருப்போம். கார் ஓட்டினால் வேன் ஓட்டலாம். அதுபோல் கடவுள் – கழுதை சிந்தனை எப்படி நம்மை மற்ற அலசல்களிலும் பாதிக்கும் என்பதைப் பாதை (கோடு) போட்டுக் காட்டுவோம்; நீங்கள் அதைக் கொண்டு சாலை (ரோடு) போட்டுக் கொள்ளலாம்.

வேலை செய் - வேலை வாங்கு

 ஒவ்வொருவருக்கும் எப்படித் தங்கள் பணி, தொழில் வளர்ச்சிப் போக்கை (career path) அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமான முடிவாகும். அதில் வேலை செய்வதா, வேலை வாங்குவதா என்பது முதல் படி முடிவு. எல்லோருக்கும் இரண்டும் இயல்பாக அமைந்துவிடாது. ஆனால் கடவுளும், கழுதையும் கலந்து இருப்பது போல் வேலை செய்வதும், வேலை வாங்குவதும் கலந்து இருக்கும். எதுவும் தனித்து நிற்க முடியாது. ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு பணியிலும் வேலை செய்வதும் வேலை வாங்குவதும் வெவ்வேறு விகிதத்தில் கலந்து இருக்கும். நம் ஊழியர்கள், பிள்ளைகள் இடம் தான் என்றல்ல, நம் மேலாளர், ஒத்த வயது உறவு, நண்பர்களையும் நம் விருப்பத்திற்குச் செயல் பட வைப்பது வேலை வாங்குவது தான்.

வேலையைத் தானே செய்வதற்கும் வேலையைப் பிறர் செய்ய வைப்பதற்கும் பொதுவான திறன்களும் தனித்துவமான திறன்களும் தேவைப்படுகின்றன. வேலையைத் தானே செய்ய வன் திறன் (hard skill / technical skill) மிகவும் தேவை. வேலையைப் பிறரைச் செய்ய வைக்க மென் திறன் (soft skill / people skill) மிகவும் வேண்டும். எப்படிக் கடவுளும் கழுதையும் தனித்து இல்லையோ அதே போல் வன் திறன் மற்றும் மென் திறன் மட்டும் தனித்து இயங்க முடியாது. அவற்றின் கலப்பு விகிதம் ஒவ்வொரு பொறுப்பிலும் வேறுபடும்.

வன் திறன் என்பது தொழில் நுட்பத் திறன். எடுத்துக்காட்டாக, சமையல் கலையில் தேர்ச்சி, அனுபவம் பெற்றிருப்பது. மென் திறன் என்பது மனிதர்களைத் தனியாகவும், கூட்டாகவும் இயக்கும் ஆளுமை. எடுத்துக்காட்டாக, சமையல் அறையில் பல சமையல் விற்பன்னர்களைக் கூட்டாக இயக்கி விடுதியின் வாடிக்கையாளர்க‌ள் விரும்பும் பண்டங்களைக் குறித்த நேரத்திற்குள் நல்ல தரத்தில் செய்து அளித்தல்.

 நம்மிடம் எது எவ்வளவு உள்ளது என்பதில் தெளிவு இருக்குமானால் சமுதாயத்தில், நிர்வாகத்தில் நம் ‘இடம்’ எது என்பதில் குழப்பம் இருக்காது. வாழ்வின் போக்கில் நம்மிடம் உள்ளது கூடவும், குறையவும், வளரவும் செழுமையுறவும் செய்யும். இத்தகைய அலசல்கள் வாழ்வில் ஒரு முறை செய்த பின் தேவைப்படாது என்று எண்ணி விடக்கூடாது.

 அறிவும் உணர்வும்

மக்களை இயக்க (மத, கட்சி) ரீதியாக திரட்டுவதற்கு (மேய்ப்பதற்கு, வழி நடத்துவதற்கு) முன்னணியில் இருப்பவர்கள் அறிவுப் பூர்வமாக இருந்து கொண்டு மக்களை உணர்வு பூர்வமாக வைத்திருக்க வேண்டும். இது ஒன்றும் சரியோ தவறோ அல்ல. நடைமுறை உண்மை. வெறும் கைகளில் நாலைந்து தேங்காய்களை எடுத்துச் செல்லலாம். பயிற்சி செய்தால் பத்து தேங்காய்களைப் பேலன்ஸ் செய்யலாம். ஆனால் அதை விட அதிகம் (20, 30…) தேங்காய்களைத் தூக்கிச் செல்ல ஒரு (உணர்வுப்) பை வேண்டும்.

(பகுத்து) அறிவு பிரிக்கும். (தொகுப்பு) உணர்வு சேர்க்கும். மெய்யறிவும் மெய்யுணர்வும் எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும்; அதாவது எல்லாம் எங்கும் எப்போதும் ஒருங்கிணைந்து ஒளிருவதை அறிவுணர்த்தும். பக்கப் பாதை! மீண்டும் முதற் பாதைக்கு வருவோம்.

 தேங்காய்களுக்குப் பை போதும். மாங்காய் மக்களுக்குத் தாங்கள் பிறர் பையில் இல்லை, தங்கள் தங்கள் கையில் இருப்பதாக நினைப்பு (மூளை விலங்கு) வேண்டும். அதனால் மக்களை, தாங்கள் அறிவுப் பூர்வமாகச் சிந்தித்து இயக்கத்தில் இருப்பதாகவும் தங்களை வழி நடத்துபவர்கள் உணர்வு பூர்வமாக மக்கள் நலனுக்காகக் காலம், பொருளையும் செலவிடுவதாகவும் தேவையானால் உடல், உயிரையும் அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதாகவும் நம்பும் படி வைத்திருக்க வேண்டும். இது குடும்பத்திற்கும் பொருந்தும். அதனால் அறிவுக்கோ உணர்வுக்கோ முதல் இடம் கொடுப்பது, அடிமையாக இருப்பது தோல்விக்குத் துணையாகும். ‘அறிவையும் உணர்வையும் ஆளுவது எதுவோ அதுவே நாம்’ என்பது வெற்றிக்கு வழி ஆகும்.

 கடவுளும் கழுதையும் ஒன்று

உணர்ந்தவருக்கு எல்லாம் ஒன்று. உணராதவருக்கு ஒன்றும் பலவாம். அதாவது தனித்தனியாகத் தெரியும் பொருள்கள், கருத்துகளின் ஒருங்கிணைந்த இயக்கத்தைக் கண்டு தெளிந்து விட்டவர்கள் மேம்போக்கான (கடவுள், கழுதை போன்ற) பிரிவுகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு அதைச் சடங்கு / வறட்டுத்தனம் ஆக்கி விட மாட்டார்கள். அப்படி இல்லாதவர்கள் கழுதைக்கு ஐந்து கால்கள் எப்படி வந்தன‌, ஐந்தாவது கால் இந்தப் புத்தகத்தில் சொல்லிய படி பார்த்தால் எதைக் குறிக்கிறது என்று ஆராய்ச்சி செய்து கொண்டு இருப்பார்கள்.

 அதனால் கடவுள் கழுதை என்பதெல்லாம் நம் புரிதலுக்காக, நம்மை நாமே வழி நடத்திக் கொள்வதற்காக நமக்கு நாமே வழங்கிக் கொள்ளும் வரை படம். அவ்வளவு தான். வரை படத்தில் (map) முக்கியமான வழிகாட்டிகள் (landmarks) இருக்கும். சாலையில் உள்ள எல்லா வளைவு, நெளிவு, சுளிவுகளும் மரம், செடி, கொடிகளும் கோவில், குளம், குட்டைகளும் ஆடு, மாடு, அணில்களும் வீடு, வீதி, விளக்குக் கம்பங்களும் இருக்காது.

 வரை படம் என்றால் சுருக்கமாகக் காட்டுவது. கவிதை, செய்யுள் என்றால் சுருக்கமாகச் செறிவாகக் கூறுவது. கவிதையில் சொல்லி விட்டாலே புலவன் பாடி விட்டாலே உண்மை என்று நினைக்கும் சிலருக்காக இந்த வரிகள்!

 கடவுளும் கழுதையும் உண்டு

கடமைகள் புரிதலைக் கொண்டு

கடவுளும் கழுதையும் ஒன்று

கண்டவர் காட்டுவார் வென்று

 கடவுள் பங்கு, கழுதை பங்கு என்ற இரண்டையும் உள் வாங்கிக் (உண்டு) கடமைகள் புரிந்து வெற்றி கண்டவர், கடவுளும் கழுதையும் ஒன்று என்று  காட்டுவார்.

எதையும் எழுதி விடுவதால், பாடி விடுவதால் உண்மை ஆகி விடாது; அதன் படி வாழ்வதாலேயே உண்மை ஆகும். அதன் மறுதலை என்னவென்றால் எது வாழ்கிறதோ அதுவே உண்மை.

 கடவுள் வேலை கழுதை வேலை என்ற பிரிவு இல்லை, எல்லாமே கடவுள் வேலை தான் அல்லது கழுதை வேலை தான் என்று சொல்ல வரவில்லை. அவை நம் மன நிலை, அணுகு முறையைப் பொறுத்து இருக்கவே இருக்கின்றன. நாம் கடவுள் ‘மூட்’டில் (mood) இருந்தால் கழுதை வேலையும் கடவுள் வேலையாகும். கழுதை ‘மூட்’டில் இருந்தால் கடவுள் வேலையும் கழுதை வேலையாகும். நாம் எந்த மனநிலையில் அதிகம் இருக்கிறோம் என்பது நாம் அறிந்தும் தெளிந்தும் வைத்திருப்பனவற்றைப் பொறுத்தது.

கழுதை மிஞ்சினால், உதைத்தால் (சலிப்பு, ஒழுக்கத்தின் இறுக்கம் boredom, inflexiblity of discipline) கடவுளிடமும் கடவுள் மிஞ்சினால், குழப்பினால் (குறுகிய நேரத்தில் கொட்டும் புதுமையின் அழுத்தம் stress of too many new things in too short time) கழுதையிடமும் தஞ்சம் புக வேண்டும். போச்சு, போச்சு, அந்த இரகசியமும் அவுட்!

வெற்றி நடையில் வெளியே போங்க

வெற்றியின் இரகசியங்களைக் கரைத்துக் குடித்து விட்டீர்கள். இனி எல்லாம் வெற்றி தான். ஆனால் எல்லோருக்கும் வெற்றி ஆகுமா, கூடுமா?

கீரை, வெண்டைக் காய், கேரட் உடலுக்கு ஆரோக்கியமானது என்று தெரிந்து வைந்திருந்தால் போதுமா? அடிக்கடிச் சாப்பிட்டு வந்தால் தான் பயன். அது போல் வெற்றிக்காக வழிகளைத் தெரிந்து வைத்திருப்பவர்கள் பலர். சிலர் தான் அந்தப் பாதையில் விடாது நடப்பவர்கள். ஆக வெற்றிக்கு விடா முயற்சி முக்கியம். சரியான வழியில் செல்லாவிட்டால் வாழ்க்கை அவ்வப்போது சரியான வழியைச் சுட்டிக்காட்டும். ஆனால் விடாமுயற்சிக்கு வழி விடா முயற்சி தான். நீந்துவதற்கு வழி நீந்துவது தான்.

அதற்காக விடாமுயற்சி என்று கடல் நீரை இறைக்கவோ கோட்டைச் சுவரைத் தலையால் முட்டி உடைக்கவோ கிளம்பி விடலாமா? ‘முயற்சி திருவினை ஆக்கும்’(616), ‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்’(619) என்று எழுதிய திருவள்ளுவர்,

ஒல்வது அறிந்து அறிந்ததன் கண் தங்கிச்

செல்வார்க்குச் செல்லாத தில்(472)

என்று நடக்க வாய்ப்புள்ளதை அறிந்து அதில் விடா முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். அப்படி வெற்றிக்கான வழியில் விடாது முயற்சி செய்யப் போனால் நம்மைப் போலவே நாலு கோடி பேர் போட்டிக்கு வந்து விடுகிறார்கள்!

 எங்கள் உயர்நிலைப் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர் கால் பந்தாட்டக் குழுவிற்கு உற்சாகம் ஊட்டச் சொல்வார். ‘முடிந்தால் நீங்கள் காலை பாலைக் குடித்துவிட்டு வந்து இந்தப் பாலை (ball) நன்கு உதையுங்கள் எனச் சொல்வார்.நாங்கள் எல்லாரும் சிரிப்போம், அப்போது சொன்னார் ‘எதிர் அணிக்கு அவுங்க ஆசிரியரும் இதையே தான் சொல்லி இருப்பார், மறந்து விடாதீர்கள்!’.

Do not fall into the trap of all-or-nothing thinking there is no way I can fit in a three-hour study session today, so I will just wait until http://www.writemypaper4me.org/ the weekend

வேம்பையன் தொல்காப்பியன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கடவுளும் கழுதையும் (பாகம் -3) (வெற்றியின் இரகசியம்) (கட்டுரை)”

அதிகம் படித்தது