மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கடவுளும் கழுதையும் (வெற்றியின் இரகசியம்)

வேம்பையன் தொல்காப்பியன்

Mar 15, 2013

வெற்றி அடைய உள்ளே வாங்க

ஊடலில் மட்டுமே அனைவரும் தோற்க விரும்புகின்றோம். அதற்கு அடுத்து குழந்தைகளிடம் விளையாடும் போது சில சமயங்களில் தோற்பதாக நடிக்கின்றோம். இவை போக‌ ஈடுபடும் மற்ற எல்லாவற்றிலும் எப்போதும் அனைவரும் வெற்றி பெறவே ஆசைப்படுகின்றோம். அதற்கான வெறி இருப்பவர்கள் சிலர் வெற்றி பெறுகின்றார்கள். மீதமுள்ளோரில் பலர் பிறரையும் சிலர் தம்மையும் குறை கூறித்திரிகின்றோம்.

சிலர் வெற்றி பெறப் பலர் தோற்க வேண்டும் தானே. அப்படிப்பட்ட சிலர் வெற்றி பெற என்ன செய்கிறார்கள் என்பது பற்றி எவ்வளவோ நூல்கள் வெளிவந்து விட்டன. என்றாலும் காதலைப் பற்றிப் பாடி, எழுதிச் (காதலிப்பதை விட்டு விட்டு) சலிக்காதது போல் வெற்றி பெறுவதைப் பற்றிப் படித்துச் (வெற்றி பெற இறங்கி வினையாடுவதை விட்டு விட்டு) சலிக்கவில்லை. ஆக, இந்தக் கட்டுரையில் புதிதாக எதுவும் இருக்கிறதா என்பது நீங்கள் ஏற்கனவே எந்தெந்த‌ப் புத்தகங்களைப் படித்துள்ளீர்கள் என்பதைப் பொறுத்தது.

இப்படி உள்ள‌ உண்மையைச் சொன்னால் கட்டுரையைப் படிப்பீர்களா? அதனால் சில விளம்பர‌ உண்மைகள் இதோ.

  • இக்கட்டுரையில் நீங்கள் எடுத்துப் பின்பற்றத்தக்க சூத்திரங்கள் உள்ளன.
  • இதில் சொல்லியுள்ள உத்திகளை ஏற்கனவே தெரிந்து வைத்து இருப்பவர்கள் அவற்றைப் பின்பற்ற உற்சாகம் பெறுவார்கள்.

 பின்பற்றி வருபவர்கள் அவற்றைப் பிறருக்கு (பிள்ளைகளுக்கு, மாணவர்களுக்கு, நண்பர்களுக்கு, பணியாளர்களுக்கு) எப்படி எடுத்துச் சொல்லிப் பின்பற்றும் படி உற்சாகம் ஊட்டுவது எனத் தெரிந்து கொள்வார்கள்.

  • கதை போல் படித்துக் களிக்க விரும்பினால் இந்தக் கட்டுரை உங்களை மகிழ்விக்கும்.
  • தத்துவப் பித்தர்களுக்கு ஆங்காங்கே சில முத்துகள் வெளிப்படையாக மறைந்துள்ளன.
  • பள்ளிப் பிள்ளைகள் முதல் நிறுவன, குடும்ப உறுப்பினர்கள், தலைவர்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கக் கூடியது.
  • இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு வெற்றிக்கு வழி சொல்லும் மற்ற  புத்தகங்களைப் படித்தால் பயன் அதிகம் இருக்கும்.
 கடவுளே துணை – கழுதையே வினை

   கடவுளுக்கு ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற மூன்று வேலைகளை நாம் கொடுத்திருந்தாலும் நமக்கு மிகவும் பிடித்தது ஆக்கல் தான் இல்லையா? கடவுள் அழிக்கும் போது யார் சிரிக்கிறாங்க? கடவுள் செயல்ன்னு யார் நினைக்கிறாங்க? ஒரு புதுக் குழியைத் தோண்டுவது கடினம், தோண்டிய குழியை ஆழப் படுத்துவதையும் அதில் மண்ணைப் போட்டு மூடுவதையும் விட  ஆக, கடவுள் சிருஷ்டி கர்த்தா. புதுமைப் பித்தன். உருவாக்கும் ஆதி. படைப்பு, புனைவுக்கு (creativity) அடையாளம்.

     கழுதை ,  கழுதை என்றாலே பொதி சுமக்கும் வேலை தான் நினைவுக்கு வரும். சிலருக்கு கழுதையின் குரல் நினைவுக்கு வரலாம். சிலர் கழுதைக்கு நீளமாகத் தொங்குவதை நினைக்கலாம். அவரவர் இருக்கும் மனநிலையைப் பொறுத்தது. ஒருவருக்கே இவை அத்தனையும் நினைவுக்கு வரலாம், இங்கே எனக்கு வந்தது போல.

    என்றாலும் நம் கதைக்குக் ‘கழுதை’ என்றால், கேள்வி கேட்காது, ஒரே வேலையை (அல்லது சில வேலைகளை) மீண்டும் மீண்டும் அலுக்காது செய்வதற்கு அடையாளமாக வைத்துக் கொள்வோம். அதாவது தோண்டிய குழியை மேலும் ஆழமாக்குவது. அதற்குப் பெரிய அறிவு தேவையில்லை அல்லவா? அதிக அறிவு இருந்தால் சமுதாயத்தில் அத்தகைய வேலைகள் ஒழுங்காக நடக்காதே.

   கடவுளும் கழுதையும் நமக்கு இப்போ எதுக்கு? எந்த வேலையிலும் கடவுள் (brain) பங்கும் கழுதையின் (brawn) பங்கும் இருக்கும். அதாவது ஆக்க வேலை, அடிமை வேலை. ஒரு பங்கை மட்டும் செய்தா வேலை உருப்படாது. ஆங்கிலத்தில் இன்னும் பொருத்தமாக God work and Dog work என்று கொள்ளலாம். ஆங்கிலத்தில் அதே எழுத்துக்களில் (D G O) இரண்டு சொற்களும் அமைந்து இருப்பது ஒன்றில் ஒன்று பொதிந்திருப்பதையும் புதைந்திருப்பதையும் நினைவில் கொள்ள வசதியாக உள்ளது.

 எளி நுட்பம் (low tech)அதி நுட்பம்  (high tech)

   இப்ப சமைக்கிறதை எடுத்துக்குவோம். சமையலில் கழுவுதல், சுத்தம் செய்தல், நறுக்குதல், வெட்டுதல், அரைத்தல் எனப் பல கழுதை வேலைகள் உள்ளன. அடுப்பில் வைத்து உணவுப் பண்டத்தைச் செய்து இறக்கும் கடவுள்  (ஆக்க creative) வேலையை மட்டும் நன்றாகச் செய்தால் போதுமா?

   நாங்கள் நால்வர் இளைஞர்களாக வேலைக்குச் சேர்ந்த புதிதில் அவ்வப்போது சமைத்து உண்போம். மற்ற மூவருக்கும் என்னை விட நன்றாகச் சமைக்கத் தெரியாதது நமக்கு நல்லதாகப் போய் விட்டது. கழுதை வேலைகளைக் கச்சிதமாக அவர்களிடம் தள்ளி விட்டு கடவுள் வேலையை அய்யா பார்த்துக் கொள்வார். சொல்ல வேண்டுமா, நண்பர்கள் கவனித்து விட்டனர். ‘டேய், லோ டெக் வேலைகள் எல்லாம் எங்கள்ட்ட தள்ளிட்டு ஹை டெக் வேலை மட்டும் உனக்கா’ என்று எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

    ‘யார் சொன்னா, காய்கறி நறுக்குவது லோ டெக் வேலை என்று? காய்கறிகளை ஒரே வாக்கில் ஒரே அளவில் வெட்டுவது சுலப‌மல்ல. அதுவும் ஹை டெக் வேலை தான். முதலில் அந்த ஹை டெக் வேலையைச் செய்யப் பழகிக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் செய்யும் ஹை டெக் வேலையைச் செய்யலாம்’ என்று அடித்துப் பேசினேன்.

     நண்பர்கள், ‘பையல் எதோ அளக்கிறான்’ என்பது போல் பார்த்தார்கள். உடனே கத்தியை வாங்கி கேரட்டையும், பீன்ஸையும் எப்படி லாவகமாக‌ நறுக்க வேண்டும் என்று செய்து காண்பித்தேன். அப்படி நறுக்காவிடில் ஒரே அளவாக வேகாது; அது சுவையைக் குறைக்கும்; வேண்டுமென்றால் நீங்கள் அடுப்பு வேலையைப் பார்த்துக் கொள்ளுங்கள்; நான் இந்த வேலைகளைக் கவனிக்கிறேன் என்று போடு போட்டேன். வயிற்றில் அடிக்கும் முன் நாக்கில் கை வைத்தேன். பிறகென்ன, மீண்டும் கடவுள் வேலை எனக்குத் தான்! அதே சமயம் நண்பர்கள் பார்வையில் என்னைப் பாராட்டிப் (பிரமாதம், உன்னைக் கட்டிகிறவளுக்குக் கவலை இல்லை!) புகழ்ந்து சமையல் வேலையை என் தலையில் கட்டி விட்டது அவர்களின் வெற்றியாகும்.

    ஏதோ வெற்றியின் இரகசியம் சொல்றேன்னுட்டு சுய புராணம் பாடிக்கிட்டு இருக்காரு என்று நினைக்கிறீங்க. அதே தான். சந்தடி சாக்குல நம்ம பந்தை அடிச்சக்க வேண்டியது தான். ஐயையோ, என்னை அறியாமலேயே வெற்றியின் ஓர் இரகசியத்தைச் (அதுக்குள்ளேயே)  சொல்லிட்டேனே. சரி போகட்டும், இனிமேல் விழிப்பா இருப்பேன்.

   முதலில் சொன்ன வரியை மீண்டும் கவனிங்க. எந்த வேலையிலும் கடவுள் பங்கும் கழுதையின் பங்கும் இருக்கும். எல்லா வேலையிலும்,  கழுதை வேலை இருக்கும் என்று நினைப்பதிலும் தவறில்லை.

கடவுளுக்குள் கழுதை - கழுதைக்குள் கடவுள்

    நண்பர்களைச் சமாளிப்பதற்காக‌ச் சொல்லியதில் ஒரு சமாச்சாரமும் உள்ளது. காய்கறி, கேரட், பீன்ஸ், உருளைக் கிழங்கு ஆகிய இக்காய்கறிகள்  ஒரே அளவில் இருப்பதில்லை. இவற்றை ஒரே சீராக வெட்டுவது ஆக்க வேலையாகும். கேரட் நீளத்தில் விட்டம் (diameter) குறைந்து கொண்டே வருகிறது. உருளைக் கிழங்கு உருளையாக (cylindrical) இருப்பதில்லை. சேனைக் கிழங்கிற்குப் பானைக் கிழங்கு என்று பெயர் வைத்திருக்கலாம் அதன் வடிவம் அப்படி உள்ளது. அதைச் சீராக நறுக்குவது கடவுளுக்கே முடியும்.

   சில காய்கறிகளைக் கழுவிய பின் நறுக்க வேண்டும். சிலவற்றை நறுக்கிய பின் கழுவ வேண்டும். சிலவற்றின் தோலைச் சீவி விட்டுக் கழுவி நறுக்க வேண்டும். லோ டெக் என்பதிலும் சில பல‌ ஹை டெக் விசயங்கள் உள்ளன. (வெங்காயத்தைத் தோலை உரித்து நறுக்கிய பின் கழுவும் சில நளன்களும் உள்ளனர்!)

   பாத்திரம் கழுவுதல், வீடு கூட்டுதல் என்பன போன்ற சலிப்பூட்டும் வேலைகளிலும் மூளைக்கு வேலை உள்ளது. கடினமாக (HARD) உழைக்காமல் கச்சிதமாக (SMART)) உழைக்கும் சவால் உள்ளது.

  சமையலில் அடுப்பில் வைத்துச் சமைக்கும் கடவுள் பங்கில் தொடர்ந்து கிண்டுதல் போன்ற சலிப்பான கழுதை வேலைகளும் உள்ளன. அந்தக் கிண்டுதலிலும் எந்தக் கரண்டியை எப்படிப் பிடிப்பது,, எப்படிச் சமமாகக் கிண்டுவது போன்ற கடவுள் குறிப்புகள் இருக்கும். கிண்டுதலில் சலிப்பு வராமல் இடையே அடுத்து அடுப்பில் வைக்க வேண்டியதை அணியப்படுத்தும் வேலைகளை ஊடு பயிர் போல் செய்து வருதல் போன்ற சவால்கள் உள்ளன.

கழுதை

கடவுள்

கதை சொல்லிக் கருத்தைச் சொல்வது நல்லது. படம் காட்டிக் கதை சொல்வது வெல்வது. பாடம் சொன்னால் சலிப்பாக இருக்கும். படம் காட்டினால் புரியாதவனுக்கும் புரியும். இதோ இன்னொரு இரகசியம் வழுக்கி வெளி வந்து விட்டது.

    வழக்கமாக ஒரு தாளுக்கு இரண்டு பக்கம். ஆனால் அதை மேற்காட்டியுள்ளது போல் மோபியஸ் (mobius) சுற்று ஆக்கி விட்டால் அதற்கு ஒரே ஒரு பக்கமே. ஒரு நீளமான காகிதத் துண்டை ஒரு முறுக்கு முறுக்கி அதன் முனைகளை ஒட்ட வைக்க மோபியஸ் சுற்று உருவாகும். வெளிப் பக்கம் என்று அதில் நகர்ந்து கொண்டு போனால் உள்பக்கம் ஆகி விடும். உள்பக்கம் என்று போய்க் கொண்டு இருந்தால் வெளிப்பக்கம் ஆகிவிடும். இது கடவுளுக்கு அடையாளம். அதாவது உள்ளும் புறமும் ஒன்று. ஓயாத உள்-வெளிச் சுழற்சியின் அடையாளம். ஆக்கல் – அழித்தல் உள்ளுறை வட்டம். ஆக்கம் நீடிக்க அழிவாகும். அழிவு நீடிக்க ஆக்கம் ஆகும்.

   அதில் காத்தல் என்ற கட்டம் போட்டக் கழுதை வேலை உள்ளது. அதைக் கடவுள் வேலை, கழுதை வேலை என்று பிரித்துப் பார்க்கும் போது கழுதை வேலைக்குச் செங்கல் சுவர் அடையாளமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ‘கழுதை கெட்டால் குட்டிச் சுவர்‘ என்றும் நீங்கள் நினைவு வைத்துக் கொள்ளக் கொக்கி போட்டுக் கொள்ளலாம். அதாவது ஒரே மாதிரியான செயல்களை மீண்டும் மீண்டும் அலுக்காது செய்வதில் நாம் புதியனவற்றைக் கட்டி எழுப்புகின்றோம்.

எடுத்துக் காட்டுகள்:

உண்பது, கழிப்பது à உடல் வளர்ச்சி;

பள்ளி/கல்லூரிக்குச் சென்று  ஒவ்வோரு ஆண்டுப் பாடமாகப் படிப்பது à பட்டம் பெறுவது;

குழியைத் தொடர்ந்து தோண்டுவது à கிணறு.

மோபியஸ் சுற்று ஒவ்வொரு புள்ளியிலும் புதிதாக இருப்பது போல் உற்சாகம் ஊட்டும். ஆனால் தொடக்கமும் முடிவும் ஒவ்வொரு கணத்திலும் , புள்ளியிலும் ஒன்றாய் இலங்கிச் சுழலும்.

எடுத்துக் காட்டுகள்:

பிறத்தல் – வளருதல் – இனப் பெருக்கம் செய்தல் – இறத்தல்.

மதங்கள் / கட்சிகள் / இயக்கங்கள் தோன்றுதல் – பரவுதல் – நீர்த்துப் போதல்.

பங்குச் சந்தை ஏறுதல் – இறங்குதல்.

அடிமைத்தனம் – போராட்டம் – விடுதலை – புதிய அடிமைத் தனம்.

மேடு வளரப் பள்ளம் உருவாகும். பள்ளத்தை நிரப்ப மேடு கரையும்.

செங்கல் சுவர்க் கழுதை வேலையில் உள்ள கடவுள் பங்கைக் காணும் போது அது வெற்றுச் சுவர் என்பது போய் வளைந்து நெளிந்து மோபியஸ் கடவுளாக ஓட்டத்தை (உற்சாகத்தை) ஏற்படுத்தும். மோபியஸ் சுற்றானக் கடவுளைக் கட்டி எழுப்புவதே ஒவ்வொரு புள்ளியிலும் நடக்கும் (கட்டம்) செங்கல் சுவர்க் கழுதை வேலை தான் என்பதை ஏற்கும் போது கழுதையின் முக்கியத்துவம் விளங்கும்.

மோபியஸ் சுற்றின் (கடவுளின்) ஓட்டம் வேகமாகச் சுழலும் சக்கரம் நிற்பது போல் தோற்றமளிப்பது போன்றது. அதே சமயம் நிற்கும் சக்கரம் வேகமாகச் சுழலுவது போலும் தோன்றலாம், கருதப் படலாம்.

(தொடரும்….)

There must exist an analysis of the information collected and this must be directed towards answering http://firstessaywritinghelp.com/ the research questions raised by the dissertation

வேம்பையன் தொல்காப்பியன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கடவுளும் கழுதையும் (வெற்றியின் இரகசியம்)”

அதிகம் படித்தது