சனவரி 16, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

கடவுளை அவமதித்தவர்கள் (சிறுகதை)

தவமுதல்வன்

Oct 28, 2017

Siragu kadavulai1

மலையின் விளிம்பில் ஒதுங்கிக் கிடந்தது அந்த காலனி. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கலைத்துப் போட்ட தீப்பெட்டிகளைப்போல வீடுகள் இருந்தது. ஊரின் நடுவே கொஞ்சம் சமதளமான இடம் எஞ்சியிருந்தது. அங்கேதான் மாரியம்மன் கோயிலின் அடையாளமாக ஒரு நாவல் மரம் ஒன்று நின்றது. அதனைச் சுற்றி தரையில் குத்தப்பட்ட வேல்கள் நின்றன. சிலவற்றில் எலுமிச்சை பழங்கள் குத்தப்பட்டிருந்தன. அந்த இடத்தைச்சுற்றி கொஞ்சம் காலி இடமிருந்தது. குழந்தைகள் விளையாடும் இடமாகவும் மாறிப்போக, கோயில் குழந்தைகளுக்கு மைதானமாகவும் மாறிப்போனது. ‘வொலிபோல்’ பந்துகளோ, சிறுவர்களின் குட்டி பந்துகளோ சில நேரம் வேலில் படுவதுண்டு. வேலை விட்டு வரும் சனங்கள் அதைப் பார்க்க நேரிட்டால்,

“இந்த சனியன் புடுச்ச வெள்ள காட்ட பாருங்க கோயில்ன்னு பாக்குதா, சாமிண்ணு பாக்குதா ஒரே ஆட்டம்தான்”
ஏசிக்கொண்டே போவார்கள். அவர்கள் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை. கேட்டாலும் அவர்களிடம் பதிலுமில்லை. விளையாட்டு… விளையாட்டு…

சில நேரங்களில் யார் மேலிலாவது பந்து பட்டுவிடும். அன்றைக்கு காலனியே ரெண்டுபடும். எந்தப் பயலின் பந்து யார்மேலில் பட்டதோ அந்த இரண்டு வீட்டின் எல்லா விசயங்களும் பொது வெளிக்கு வந்து விடும். யார் யோக்கியம், யார் யோக்கியம் இல்லை, புள்ள வளர்த்த லெட்சணம் எல்லாம் வெளியே வந்து சந்தி சிரித்துவிடும்.

பந்தை அடித்த பயல் சிறுவனாக இருந்தால் தேயிலை மிளார்களின் விலாசலில் அவன் பின்புறம் வரி வரியாக தடித்து வீங்கிபோகும். பெரியவனாக இருந்தால் அசிங்கமான பேச்சை கேட்கவேண்டியிருக்கும். இருந்தாலும் என்ன செய்வது ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு. எதையாவது செய்யத்தானே வேண்டும். கையும் காலும் சும்மாவா இருக்கும். ‘கிட்டிபுள்’ அடித்துப் பார்த்தார்கள் ‘யார் கண்ணுலயாவது படட்டும் அப்புறம் இருக்கு இந்த சனியன் புடிச்ச வெள்ளக் காட்டுக்கு’ என்றே எல்லோரும் எரிந்தார்கள் உள்ளுக்குள். அவர்கள் எதிர்பார்ப்பு வீணாகாமல் தண்ணீர் சுமந்துகொண்டுபோன தெய்வானையின் முதுகில் பட்டது. பீலிகரையில் சண்டை வந்து சத்தம் கேட்டால் ஊரே சொல்லும் அது அவளுடைய தொண்டைதான் என்று. பீலிக்கரையே நாறிப்போகும். அப்படி ஒரு அசிங்கமான பேச்சு அவளுடையது. விடுவாளா கிட்டிபுல் அடித்தவனை. மைதானமே தெறித்த ஓடியது அவளின் அசிங்கமானப் பேச்சில்.

ஓரிரு கிழமைகள் அந்த மைதானத்தில் சிறுவர்களைக் காண முடியவில்லை. சின்னஞ்சிறுசுகள் திரிந்தன. அதையும் காதைத் திருகி அழுகையோடு கூட்டிக்கொண்டு போனார்கள். இப்போது எறிபந்து ஆட்டம் தொடங்கியது. எல்லோரும் வட்டமாக குழுமி நின்று நெருக்கிக்கொண்டு பந்தை சாரங்களுக்குள் வைத்து மறைத்ததுக்கொண்டு ஒவ்வொருவரும் தங்களுக்குள் ரகசியமாக யாரேனும் ஒருவர் அதை வாங்கி மறைத்துக் கொண்டு எதிர் அணியை துரத்தி எறிந்தார்கள். அவர்கள் ஆளாளுக்குத் துரத்த பந்து யார்கையில் இருக்கு என்றே தெரியாமல் சிலர் காலனிக்குள் ஓடி கூரைகளை இடித்துத்தள்ளினார்கள். பாத்திரங்கள் உருண்டுஓடின. எறிந்த பந்து சிலரின் கூரைகளில் பட்டு ஓடு உடைந்தது.

“அங்க அலைஞ்சி இங்க அலைஞ்சி ஒரு எடத்த புடுச்சி ஒரு குடிசைய கட்டுனா அதையும் இந்த காலனி வெள்ளக்காடு நாசம் பண்ணுது நாசமா போக“ வீட்டுக்காரர்கள் கூடிப்பேசி பஞ்சாயத்து வரை அது போய் நின்றது. அவரவர் வீடுகளிலும் கண்டிசன் போட்டார்கள். மீறி விளையாடினால் கால்களை ஒடித்து விடுவதாக சொல்லியிருந்தார்கள். இஸ்கூல் விட்டு வந்த பிள்ளைகள் ஆங்காங்கே இடம் இருக்கும் கோடிபுறங்களில் இழைந்தார்கள் அல்லது ஒண்டிக்கிடந்தார்கள்.

நாவல் மரம் வெட்டப்பட்டு அங்கே ஊரார் பல மாதங்களாக ஊரார் திட்டமிட்ட கோயில் கட்டும் வேலையைத் தொடங்கியிருந்தனர். கோயில் கட்டுவதற்காகவே கோயில்கமிட்டி வாராவாரம் வரி வசூலித்திருந்தது. கணக்குவழக்கில் அடிதடிகள், வரி தராதவருக்கு ஏச்சுக்கள், கூட்டத்தில் தள்ளுமுல்லுகள், கோயில் தலைவர் மாற்றங்கள் எல்லாம் கடந்தது. வரிப்பணம் பல ஆயிரங்கள் சேர்ந்திருந்தது. அந்தப் பணம்தான் முருகன் கோயிலாக எழும்பியது. பொழுது விடிந்து பொழுது சாய்ந்தால் மலைமலையாக தேயிலைத் தோட்டங்கள் ஏறி இறங்கியும், காலையிலும் மாலையிலுமாக கூலிப் பணம்தான் வரியாக சேர்ந்து கோயிலாக உருமாறிக்கொண்டிருக்கிறது என்றுகூட சொல்லலாம். மைதானம் முழுவதும் கட்டுமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது. இப்போது பெரியவர்கள்கூட அந்த பக்கம் போவதிலை.

ஊரே புதுக்கோயிலின் கோபுரத்தை அண்ணாந்து பார்த்து மெச்சிக்கொண்டது. கும்பாபிசேகம் நெருங்குவதால் கோயிலுக்கு காலனி சனங்கள் எப்போதும் வருவதும் போவதுமாக இருக்க இன்னோர் புறம் குழந்தைகளும், சிறுவர்களும், இளந்தாரிப் பொடியன்களும் ஆட்டத்தில் மும்முரமாக இருந்தனர். எவர் அதட்டியும் அவர்கள் யாருக்கும் காது கொடுத்து கேட்பதாக இல்லை. விளையாட்டிலே அவர்கள் கவனமிருந்தது. நம்ம புள்ளைக தானேப்பா நல்ல நாளும் அதுவுமா. வெளயாடிட்டு போகட்டும். யாரோ சொல்லவும் அதை கேட்டவர்கள் அப்புறம் யாருக்கு பயப்பட வேண்டும். விளையாடும் குழந்தைகளின் சிரிப்பொலியும் குதூகலமும் தான் கோயிலைச் சுற்றி மகிழ்ச்சியை வட்டமிட வைத்திருந்தது. கோயில்விழா காலம் முழுதும் மாலை நேரத்தின் அளவில்லா விளையாட்டால் காலனியில் வாண்டுகள் முதல் பெரிய பொடியன்கள் வரை தெனமும் திருவிழா ‘நடந்தா நல்லாயிருக்கும்டா’ என்று கூட பேசிக்கொண்டனர். தேயிலைத் தோட்டவாழ்வு அப்படி அனுமதித்து விடுமா என்ன.

திருவிழா முடிந்து மாணவர்களும், குழந்தைகளும் வழக்கம் போல ‘இஸ்கூலுக்கு’ திரும்பிகொண்டிருந்தனர். ஆனாலும் விளையாட்டின் மிச்ச மீதி அவர்களிடம் தங்கியிருந்தது. கோபுரங்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டே போனார்கள். உயர்ந்து நின்ற மலையின் விளிம்பில் இன்னோர் அடையாளம் முருகன் கோயில்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியபோது சொந்த பந்தங்கள் வீட்டில் சில நாள் தங்கினார்கள். சொந்த ஊருக்குப் போனார்கள். தான் ஒண்டிக்கொள்ள ஒரு இடம் தேடினார்கள். ஆமாம் ஒண்டிக்கொள்ளத்தான். எங்கும் இடம் தேடி புறம்போக்கில் ஒதுங்கிக் கிடந்த இடங்களை பிடித்து குடிசை போட்டார்கள். அது இரவோடு இரவாக பிரித்து எறியப்பட்டது. மீண்டும் குடிசை அடித்தார்கள். அதிகாரிகள் வந்தார்கள். போலீஸ் பட்டாளம் வந்தது. ஆட்களை அள்ளிக்கொண்டு போனார்கள். வழக்குகள் போட்டார்கள். அசருவதாக இல்லை. குடிசை அடித்தார்கள் அது நிலை பெற்றது. ஒன்றன்பின் ஒன்றாக வீடுகள் கூடிகொண்டே போக அது இந்திரா காலனியாக நிலை பெற்றது. சமதளமற்று மேட்டு பூமியாக, பாறைக்காடக கிடந்த நிலம், உழைக்கத் தயங்காத கரங்களினால் சமதளமானது. காலனி நடுவே கிடந்த இடத்தைதான் திடலாகவும் கோவிலாகவும் பாவித்தார்கள். தேயிலை தூரின் அடியில் அதன் கொட்டைகளைக் கொண்டு விளையாடிய ஒரு பொடியனுக்கு தேள் கொட்டி விடவே. அதன்பிறகே கோயில் பக்கம் விளையாடத் தொடங்கினர்.

கோயில் பக்கம் பால்வாடி குழந்தைகள் திரிந்தன. அவர்களுக்கு கோபுரங்களில் வடிக்கபட்டிருந்த காளை மாடுகள், பசுமாடுகள், சிங்கம், மயில்கள், சாமி சிலைகள் எல்லாவற்றையும் பார்த்து தங்களுக்குள் அதை உரிமைகொண்டாடி எனக்கு உனக்கு என பிரித்துக்கொண்டார்கள். கை தட்டி சிரித்துக்கொண்டார்கள். கருவறையின் எதிரே இருந்த நந்தி மீது அமர்ந்து வண்டி ஓட்டினார்கள். மயில்மீது ஒன்று ஏறி உட்கார்ந்து அதன் கொண்டையை பிடித்து திருகிவிளையாடினார்கள். அதற்கு கல்லுமண்ணை அள்ளி சாமிக்கு சாப்பாடு போட்டார்கள். சாப்பிடல மிளார் எடுத்து அடிச்சிடுவேன், கயறு எடுத்து கட்டி வச்சிருவேன் என்று நந்தியை மிரட்டினார்கள்.

அட சில்லு வண்டுகளா ஒரு மொழம் இருந்துகிட்டு பண்ற அநியாயத்தை பாரு. யாராவது கண்டா என்ன கொன்னுபுட்டாக, கெளம்புங்க, கெளம்புங்க.

ஆயாவின் சத்தம் கேட்டு குழந்தைகள் பால்வாடியை நோக்கி ஓடினார்கள். பால்வாடியின் உள்ளே பலர் சில்லிடும் ஈரத்தரையில் உட்கார்ந்தவாறு அழுது கொண்டிருந்தனர் அக்குழந்தைகளின் நினைப்பையும் சுமந்து அவர்களின் தாய்மார்கள் எந்த மலையில், எந்த நிரையில் கொழுந்து கூடைகளுடன் இழைந்து திரிகிறார்களோ.

எதிர்பாராத திடீர் கோயில்கூட்ட அறிவிப்பை கோயில் கமிட்டியினர் சத்தம் போட்டு காலனியை சுற்றி வந்தனர். வழக்கம்போல வீடுகளில் கூட்டத்திற்கு போவோரை அவரவர் வீட்டார் கண்டித்தனர். “தண்ணிய குடிச்சுப்புட்டு வந்து பேசுவானுங்க. யாரு சொன்னாலும் கேட்க மாட்டாங்க போவாதிங்க. நமக்கு வேண்டாங்க. யாரோ எப்படியோ போகட்டுங்க. ஒரு கட்டுப்பாடு இல்லாத ஊரு இது”.

“எல்லாரும் இப்பிடியே சொல்லிட்டு இருந்தா யாருதான் போறது”
இப்படி சொல்லிவிட்டு ஓரிருவர் போனார்கள். அவர்கள் கையில் தீபந்தம். பாட்டில்களில் ஊற்றியிருந்த மண்ணெண்ணெய் பந்தம் எரிந்து முடிவதற்குள் கூட்டம் முடிக்கவேண்டும் என்று பலர் அவதிப்பட்டாலும் ஆளாளுக்கும் பேச்சு நீண்டு கொண்டே செல்ல சிலர் “என்னமோ பண்ணுங்கப்பா” என்று இருளில் மறைந்தனர். கோயில் கமிட்டித்தலைவர் மட்டும் கோயிலைசுற்றி காம்பவுண்டு சுவர் கட்டியே ஆகவேண்டும் என்பதிலும் வரியை பெருந்தொகையை தீர்மானிப்பதிலும் குறியாக இருந்தார்.

“வருசா வருசம்… இப்படி வரி போட்டா என்னால கட்டமுடியாது. வீட்டுக்கு நாலு தகரம் வாங்கி போட முடியல எனக்கு இதுல போய் நான் எங்க வரி கட்டமுடியும்”.

“இங்க பாருங்க எல்லோரும்……. கோயில் எடத்துலதான் நம்ம காலனி குழந்தைங்க ஆட்டம், நந்தி பக்கத்தில இருந்த மயில் தலையில உள்ள கொண்டையை யாரோ ஒடச்சிட்டாங்க, இது நமக்கு நல்லதில்ல, ஒண்ணு ரெண்டு கொழந்தைங்க செய்ற இந்தமாதிரி வேலையால நாம எல்லாரும் தெய்வ பொல்லாப்புக்கு ஆளாகனும். அதனால யாரையும் உள்ள விடாம ஒடனே சுத்தி சுவர் கட்டியே ஆகணும்”. விசிறியடித்த குளிர்காற்று அந்த மலையில் மோத உள்ளே நுழைந்த காற்று ஓரிரு தீ பந்தங்களை அணைத்தது. குளிர்ந்த காற்றும் மண்ணெண்ணெய் தீர்ந்துபோயிருந்த பந்தங்களும் சீக்கிரம் வீட்டுக்கு போய் அடுப்பில் காய்ச்சவேண்டும் என நினைக்கத் தோன்றியது பலருக்கும்.

“சீக்கிரம் கூட்டத்த முடிங்கப்பா கையி காலெல்லாம நடுங்குது” எல்லோர் மனநிலையையும் யாரோ ஒருவர் சொன்னார். இறுதியாக சுற்றுச்சுவர் கட்டவும் வரி போடப்பட்டது. வீடுகளுக்கு ‘பட்டா ‘ வாங்கவேண்டும் என பொடியன் பேசிக்கொண்டிருந்தான். யார் காதிலும் விழுவதாக இல்லை அவன் கோரிக்கை. “முதல்ல தெய்வத்திற்கு செய்யணும்பா அப்பத்தான் நம்மள அது நல்லா வச்சிருக்கும்பா “ பெரியவங்க நாங்க சொல்றதை கேளுங்கப்பா “

அந்த பொடியன் அதற்குமேல் பேசவிருப்பமின்றி இருளில் மறைந்துபோனான். மீண்டும் வரி போட்டார்கள் . முதலாளிமார் வீட்டுக்கு அலைந்தார்கள் . மேஷ்திரிகளிடம் கெஞ்சினார்கள் . காலனி காலனியாக நன்கொடை வசூலித்தார்கள் .

அந்த மலையில் கொஞ்சம் சமதளமாக இருந்த இடமும் சுற்றுச்சுவரால் அடைக்கப்பட்டது. அந்த சுவரை பார்த்த ஊர்சனம் “அப்பாடா இப்பத்தான் கோயில் சுத்தாமாக இருக்கு இனி இந்த ஊருக்கு எல்லாம் நடக்கும்” என பேசிக்கொண்டனர்.

காலனி குழந்தைகள் வெறுத்துப்போய் பழையபடி தேயிலைகாடுகளில் ஓடிஒழிந்து விளையாட ‘சிலதுகள்’ வீட்டின் கோடிப்புறங்களில் ‘மண்ணுல விளையாண்டது’. ‘வேலைவிட்டு வந்த’ அவர்களின் அப்பா அம்மாக்கள் வழக்கம் போல “கையி கால் எல்லாம் எவ்வளவு அசிங்கமானயா இருக்கு பாரு சனியனே “ என திட்டி குழந்தைகளை கழுவி விட்டனர் .
அந்த வெள்ளக்காடுகள் கோயில் வளாகத்தை வெறுப்போடு பார்ப்பதை யாரும் அறியவில்லை.


தவமுதல்வன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கடவுளை அவமதித்தவர்கள் (சிறுகதை)”

அதிகம் படித்தது