ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

கதையும் என்னை விட்டு வெளியேறியிருந்தது!! (சிறுகதை)

குமரகுரு அன்பு

Aug 14, 2021

siragu kadhayum1

மழைக்கு பயந்துதான் ஓரமாய் நின்றேன்
மழையோ என்னைப் பார்த்தபடியே பெய்து கொண்டிருக்கிறது
அதன் கண்ணைப் பார்க்க அஞ்சியபடி
நனைந்த சட்டையை சரி செய்வது போல் நடிக்கத் துவங்கினேன்! சில வருடங்கள் கழித்து என்னால் குடை வாங்க முடிந்தது. அப்போது மழை பெய்தது நான் குடைக்குள் நனையாமல், மேலிருந்த குடையின் வளைவால் என் கண்களை மறைத்துக் கொண்டு நடக்கத் துவங்கினேன். நான் மழையை சந்திக்க மறுப்பதை உணர்ந்த வெயில், “நல்லா பெய்யட்டும்!” என்று என்னை பழி வாங்கியது.
இன்னும் சில காலங்கள் சென்ற போது ரெயின் கோட் வாங்கியிருந்தேன், பைக்கில் ரெயின் கோட் போட்டபடி பூட்ஸ் கால்களுடன் கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும் ஹெல்மெட் அணிந்து பயணித்து மழையைப் பார்க்காமல் வேகமாய் சென்று பழகிவிட்டேன். மழையும் “என்னிடமிருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்கிறாய்?, என்றாவதொரு நாள் நீ என்னிடம் நனைந்துதான் ஆக வேண்டும்” என்றபடி வேகமாய் பெய்து கொண்டிருந்தது.

வெள்ளம் வந்த காலங்களில் வீட்டுக்குள்ளிருந்தே கண்ணாடி சன்னல் வழியாக மழையைப் பார்த்ததுண்டு, அதன் கண்களை பார்க்கும் போது மட்டும் கூனி குறுகிவிடுவேன்.

இப்போதெல்லாம் காரில் எல்லா கண்ணாடியையும் ஏற்றிக் கொண்டு மழையில் பயணிக்கிறேன். மழையை துச்சமாக பார்ப்பதை அது அறிந்திருக்க கூடும். என்னை நனைக்க அது படும் பாடறிந்து, பள்ளங்களில் தேங்கியிருக்கும் மழை நீரில் காரின் சக்கரங்களை ஏற்றி நீரைச் சிதறடித்து மழையை வெறுப்பேற்ற கூட தோன்றும். மழை எனக்குள் ஊறிப் பிசைந்து வாழ்ந்து கொண்டிருந்தது. எதற்காக மழைப் பிடிக்காமல் போனதென்று தெரியாது? ஆனால் நனையாமலே வாழ்ந்துவிட்டேன்.

மகனோடு வந்து அமெரிக்காவில் வாழும் நாட்கள் வந்துவிட்டன. இங்கேயும் மழை பெய்யும். சில காலங்களில் பனி கொட்டும். ஆனால், பனிமழை நீர்மழையைப் போல என்னை பயமுறுத்தவில்லை.

உடம்புக்கு முடியாமல் போன போது ஏரோபிளேனில் ஏற்றி என்னை ஊருக்கு அனுப்பினார்கள். உடன் மருமகளும் 4 வயது பேரனும் வந்தார்கள். சன்னலோரம் உட்கார்ந்தபடி, ஏரோப்ளேனின் சிறிய சன்னலின் வழியே கீழே தெரிந்த கரிய மேகங்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்,  பேரன் “என்ன தாத்தா பாத்துட்டுருக்க?” என்று கேட்டான். “அதோ அங்கே கருப்பா மேகங்கள் தெரியுற இடமெல்லாம் மழை பெய்யுதுறா! நாம மழையே இல்லாத இடத்துக்கு மேல பறந்துக்கிட்டிருக்கோம்! மழைக்கிட்டயிருந்து தப்பித்து பறந்துக்கிட்டிருக்கோம்!” என்று சொல்லி சிரித்த என்னைப் பார்த்து… “ஏன் தாத்தா மழைக்கிட்டயிருந்து தப்பிக்கனும்” என்று கேட்டவனிடம் சொல்ல என்னிடம் பதிலில்லை.

நல்ல மழை காலத்தில் மரணித்த நான்,
மின் மயானத்துக்குள் எரிந்து கொண்டிருந்த நாளிளும் வெளியே அவ்வளவு மழை. சத்தம் “ஜோவென!” கேட்டது. “சாகிற வரை என்னிடம் நனையாமலே தப்பித்து எரிந்து விட்டாயா??” என்று நினைத்த மழை,  பெருத்த அழுகையாக அழுது கொண்டிருந்தது போல்…
நான் எரிந்து முடித்திருந்த மறுநாள் காலை, சாம்பலை எடுக்க வந்திருந்த என் பிள்ளை, சாம்பலை எடுத்து கொண்டு காரில் கடற்கரல நோக்கி செல்லும் வழியெல்லாம் பெருத்த மழை பெய்து கொண்டேயிருந்தது. “எங்கப்பாவுக்கு! எதனாலையோ மழையேப் பிடிக்காம போயிருச்சு! ஏன்னு யாருமே கேட்டதும் இல்லை அவரும் சொன்னதில்ல. ஆனா, பாருங்க அவரு செத்த அன்று பிடித்த மழை இன்னும் விடலை. அப்பா இருந்திருந்தா ‘மழை ஏன்பா உங்களுக்கு பிடிக்காது’ன்னு இப்போ கேட்டிருக்கலாம்.” என்று கார் ஓட்டி கொண்டிருந்த அவன் மச்சினனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

அஸ்தியை கடலில் கரைத்து மாலைகளையும் அலையில் மிதக்கி விட்டுவிட்டு திரும்பிய அவர்கள்! காரிலிருந்து பார்த்து கொண்டிருந்தார்… முன்னைவிட அதிக மழை கடலுக்குள் பொழிவதைப் போல தெரிந்தது!! வியப்பிலும் வியப்பாக கரையில் மழையில்லை, கார் ஏறும் போது இருந்த மழையெல்லாம் இப்போது கடலுக்குள் பொழிந்து கொண்டிருப்பதைக் கண்டு மிகவும் ஆச்சர்யபட்டபடி அங்கிருந்து புறப்பட்டார்கள்!!

 


குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கதையும் என்னை விட்டு வெளியேறியிருந்தது!! (சிறுகதை)”

அதிகம் படித்தது