ஆகஸ்டு 17, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

கந்தரலங்கார நூலில் உபதேச மொழிகள்

முனைவர் மு.பழனியப்பன்

Jun 30, 2018

siragu arunagirinaadhar1

அருணகிரிநாதர் முருகப்பெருமானின் அலங்காரக் கோல அழகினை வியக்கும் நிலையில்  பாடிய நூல் கந்தர் அலங்காரம் ஆகும். இவ்வலங்காரப் பாடல்கள் முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த பாடல்கள்என்று புகழப்பெறுகின்றன. பாதாதிகேசமாக முருகப்பெருமானின் அழகு இந்நூலில் அலங்காரமாகக் காட்டப்பெறுகிறது. மேலும் கந்தனின் ஊர்தி, படை, கொடி போன்றனவும் புகழப்பெறுகின்றன. இந்நூல் கந்தனின் அலங்காரத்தை மட்டும் சொல்லாமல் அவனை நம்பினால் உயிர் முக்தி நிலை பெறும்என்ற கருத்தை உறுதிபட மொழிகின்றது. இந்நூலில் முருகன் தனக்கு உரைத்த உபதேச மொழிகளையும், உலகம் உய்ய தான் அருளும் உபதேச மொழிகளையும் இணைத்துப் பாடுகின்றார் அருணகிரிநாதர்.

முருகப்பெருமான் அருணகிரிநாதப்பெருமானுக்கு “ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து உச்சியின்மேல் அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேன்” (8) போன்ற அரிய உபதேசத்தை அருளினார் என்று கூறப்படுகிறது. அவ்வுபதேசப் பொருள் வானன்று, காலன்று, தீயன்று, நீரன்று, மண்ணுமன்று, தானன்று, அசரீரி அன்று, சரீரி அன்று. (9). ஐம்பூத எல்லை கடந்து, உருவமுடையதாகவும் உருவம் அற்றதாகவும் இல்லாமல் தனிப்பெருவெளியாக முருகப்பெருமான் அருணகிரிநாதருக்குக் காட்சி தந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

எதுவும் அற்ற பாழ் வெளியில், தன்னந்தனியான நிலையில் அருணகிரிநாதர் தெளிவாக உணரும்படி உபதேசப்பொருளை முருகப் பெருமான் விளக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வுபதேசங்களை உள்வாங்கித் தன் அடியார்கள் உய்யும் வண்ணம் அருணகிரிநாதர் தன் பாடல்களில் எடுத்து மொழிகின்றார். இதன் காரணமாக அந்த உபதேச மொழிகளே அருணகிரிநாதரின் பாடல்களின் உபதேசங்களாக வெளிப்பட்டுள்ளன என்பதை உணரமுடிகின்றது. கந்தரலங்காரத்தில் இடம்பெற்றுள்ள உபதேச மொழிகளின் தொகுப்பினை இக்கட்டுரை தருகின்றது.

எழுத்துப் பிழையின்றிக் கற்க!

தமிழ் மக்கள், தமிழைப் பிழையில்லாமல் எழுதவும் படிக்கவும் செய்தால் மட்டுமே தமிழ் மொழியானது வளர்ச்சி பெற இயலும். அதனை மறந்திருக்கும் தமிழ் மக்களுக்குத் தமிழைக்காக்க உபதேசம் செய்கின்றார் அருணகிரிநாதர். அவர் தமிழ் வளர்ச்சிக்குரிய இச்செயல்பாடுகளை இந்நூலின் இரண்டாம் பாடலிலேயே தந்து தன் தமிழ் உணர்வை வெளிப்படுத்துகிறார். மேலும் திருப்புகழை அவர் வேலன் கவி என்று போற்றுகிறார். இவ்வகையில் தமிழையும் முருகனையும் ஒன்றாகவே காணும் பெரியார் அருணகிரிநாதர் ஆவார். “வேலன் கவியை அன்பால் எழுத்துப்பிழையறக் கற்கின்றிலீர்” (2) என்ற தொடரில் வேலன் கவியை எழுத்துப்பிழையறக் கற்க அவர் வைக்கும் வேண்டுகோள் தமிழையும் வளர்க்கிறது. முருகன் கவியையும் வளர்க்கிறது.

                “கிழியும்படி அடற்குன்று எறிந்தோன் கவி கேட்டுருகி

                இழியும் கவி கற்றிடாது இருப்ப்Pர் எரி வாய் நரகக்

                குழியும் துயரும் விடாய்ப்படக் கூற்றுவன் ஊர்;க்குச் செல்லும்

                வழியும் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே” (56)

இப்பாடலில் முருகப்பெருமானின் கவிதைகளைப் படிக்கச் சொல்லி வேண்டுகோள் வைக்கிறார் அருணகிரிநாதர்.

தனிமனிதருக்கான உபதேச மொழிகள்:

உலக மக்கள் செய்ய வேண்டியன என்ன என்னவென்று பட்டியல் இடுகின்றார் அருணகிரிநாதர். “தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும் இடுங்கோள் இருந்தபடி இருந்கோள்” இப்படிச் செய்தால் வேலை விடும்கோன் இறைவனின் அருள் தானே வந்து வெளிப்படும் என்கிறார் அருணகிரிநாதர். (16)

மனிதர் ஒவ்வொருவரும் அகங்காரம் இன்றி இருக்கவேண்டும். மனத்தை அடக்கிக் கொள்ள வேண்டும்.  நினைப்பு, மறப்பு அற்று ஓங்காரப் பரம்பொருளான இறைவனைச் சிறு அளவாவது எண்ணி சும்மா இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இறைவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு இருப்பவர்களை எமதூதர் யாதும் செய்யமாட்டார்கள். (55)

தனிமனிதனை கவலையற்ற உலகிற்கு, முக்தி நிலைக்குப் படிப்படியாக கந்தரலங்காரத்தில் அழைத்துச் செல்கிறார் அருணகிரிநாதர்.

                அராப்புனை வேணியன் சேயருள் வேண்டும் அவிழ்ந்து அன்பாற்

                குராப்புனை தண்டையந் தாள் தொழல் வேண்டும் கொடிய ஐவர்

                பராகக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல் வேண்டும் என்றால்

                இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே” (74)

என்ற நிலையில் இறைவன் அருள் பெற நல்வழி காட்டுகிறார் அருணிகிரிநாதர். இறைவன் அருள் வேண்டுமானால் கொடிய ஐவர் (ஐந்து புலன்களை அடக்கல்) நிலையை அடக்கவேண்டும். மனம் பதைப்பில்லாமல் இருக்கவேண்டுமானால் இரவு பகல் பாராத தனி இருக்கையில் இறைவனைக் குறித்து அமைதியுடன் வணங்கவேண்டும்.

யோகமோ வேறு எதுவுமோ செய்து முக்தி நிலையை அடைய முடியாது என்கிறார் அருணகிரிநாதர். “விழி நாசிவைத்து முட்டிக் கபாலம் மூலாதாரம் நேரண்ட மூச்சையுள்ளே ஓட்டிப் பிடித்தெங்கும் ஓடாமற் சாதிக்கும் யோகிகளே உங்கள் யோகத்தைவிட, முருகனை முன்வைத்து தியானம் செய்தால் அதுவே முக்திக்கு வழியாகும்”(85)

                “யான்தான் எனும் சொல் இரண்டும் கெட்டாலன்றி யாவருக்கும்

                தோன்றாது சத்தியத் தொல்லைப் பெருநிலஞ் சூகரமாய்

                கீன்றான் மருகன் முருகன் க்ருபாகரன் கேள்வியினாற்

                சான்றாரு மற்ற தனிவெளிக்கே வந்துச் சந்திப்பதே”

தனி மனிதருக்குள் யான், தான் என்ற அகங்காரம் இருக்கும்வரை முக்தி என்னும் பெரும்பேறு வாய்க்காது. முருகப்பெருமான் எனக்குச் சொன்ன மெய்ப்பொருள்கள்தான் இதற்குச் சான்று. தான், யான் என்ற நிலைகள் அற்ற நிலையில் தனி வெளியில் வந்து என்னை முருகப்பெருமான் சந்தித்து உபதேசம் அருளினான் என்று அருணகிரிநாதர் தன் சொற்களால் தனி மனிதனை முக்தி வாழ்வு பெறும் முழுமனிதனாக ஆக்கி மகிழ்கிறார்.

சமுதாயத்திற்கான உபதேச மொழிகள்

இப்பட்டியலில் மனத்தை அடக்குவதும், கோபத்தை அடக்குவதும் தனிமனிதனுக்கு உரிய கட்டுப்பாடுகள். தானம் இடுதல் என்பது சமுதாயம் சார்ந்தது. தான் வாழும் சமுதாயம் நலமாக இருக்கவேண்டும் என்றால் அனைவரும் மற்றவர்க்கு ஏதாவது கொடுக்கும் மனப்பக்குவத்தைப் பெற்றாகவேண்டும். தானம் செய்தலே சிறந்தது என்பது அருணகிரிநாதர் வாக்கு. “வறிஞர்க்கென்றும் நொய்யின் பிளவு அளவேனும் பகிர்மின்” (18) என்பது அருணகிரிநாதர் சொல்லும் கொடையின் அளவாகும். ஒவ்வொரு நாளும் நொய்யின் பிளவு அளவாவது தானம் செய்யவேண்டும் என்பது மனித குல மகிழ்ச்சிக்குத் தரும் வித்தாகும். அவ்வாறு இல்லாமல் யாருக்கும் தாராது மண்ணுள்ளே புதைத்து வைப்பதால் பயன் ஏதும் இல்லை. அப்பொருள் உங்களைத் தொடர்ந்து வராது என்பதை அறிந்து மற்றவர்க்குக் கொடுங்கள். (20). நாள்தோறும் இறைவனை வணங்கி, அதன்பின் வெந்த உணவையாவது அல்லது இலைக்கறிகள் எனப்படும் பச்சையாக உண்ணத்தகுந்த காய்கறிகளையும் பசித்தோர்க்கு அளித்து உதவுங்கள்.  இது மீளப்பயணமாக விளங்கும் இறப்பின்போது பொதிசோறாகி இவ்வறம் உங்களுக்கு உதவும். (51)

                “வேடிச்சி கொங்கை விரும்பும் குமரனை மெய்அன்பினால்

                 பாடிக் கசிந்துஉள்ள போதே கொடாதவர் பாதகத்தாற்

                 தேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்து

                 வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே”  (53)

குமரப் பெருமானை மெய்யன்பால் தொழவேண்டும். உயிருடன் உள்ள காலத்திலேயே பிறருக்குப் பொருள் கொடுத்து உதவுதல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் முருகப் பெருமானை எண்ணாது, பொய்யான வழியில் சேர்க்கும் பொருள்கள் எல்லாம், திருடர்க்கு ஆகும். அல்லது வாடிக் கவலை கொண்டு, வாழ்நாளை வீழ் நாளுக்கும் படி இழக்க நேரிடும் என்பதே மேற்கண்ட பாடலின் பொருள்.

இவ்வுடல் இறந்த நிலையில் அதனை எரியூட்டினால் ஒரு பிடி சாம்பல் கூட மிஞ்சாது. இதுவே உலக இயற்கை. இந்த நிலையாமை உடைய வாழ்வில் நாள்தோறும் உணவினை உண்டு இந்த உடலைப் பெருக்கச் செய்து வருகிறது மனிதகுலம். அவ்வாறு உடல் வளர்க்கும் உணவில் ஒரு கைப்பிடி அளவாவது மற்றவர்க்கு அளிக்கும் நன்முறையைக் கைக்கொண்டால் அது மிக்க பலனைத்தரும். (57)

உயிர் பிரிந்த காலத்தில் பொன், பொருள், சிங்கார வீடு, மனைவி, மக்கள்  யாரும் உடன் வரமாட்டார்கள். ஆனால் பிறர்க்கு ஒன்று தரும் தானமானது வேலவன் அருள்போல தக்க சமயத்தில் வந்து உதவும், ஆகவே மற்றவர்க்குக் கொடையளியுங்கள். (59)

                “நீர்க்குமிழிக்கு நிகரென்பார் யாக்கை நில்லாது செல்வம்

                பார்க்கு மிடந்தந்த மின்போலும் என்பார் பசித்துவந்தே

                ஏற்கும் அவர்க்கிட எண்ணி எங்கேனும் எழுந்திருப்பார்

                வேற்குமரற்கு அன்பிலாதவர் ஞானம் மிகவும் நன்றே” (66)

சமுதாயத்தில் சில மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் யாக்கை நிலையில்லாதது. அது நீரக்குமிழி போன்றது. செல்வம் மின்னலைப் போல நிலையில்லாதது என்று உலக தத்துவம் பேசுவார்கள். ஆனால் தன்னை நம்பி வந்தவர்க்கு ஒன்றும் தராமல் அவ்விடத்தில் இருந்து நழுவிச் சென்றுவிடுவர். அவர்கள் இறைவன் மீது அன்பில்லாதவர்கள் ஆவர். அவர்களின் ஞானம் மிக மிக நல்லது. இவ்வாறு வாய்ச்சொல் வீரர்களின் இயல்பு பற்றி அறிவிக்கிறார் அருணகிரிநாதர்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கந்தரலங்கார நூலில் உபதேச மொழிகள்”

அதிகம் படித்தது