சனவரி 22, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

கனவுகள் (சிறுகதை)

குமரகுரு அன்பு

May 22, 2021

siragu kanavugal1

கனவுகளைத் தொலைத்துவிட்டான். அத்தனை கனவுகள். நினைவு தெரிந்த சிறு வயதிலிருந்து சிறிது சிறிதாக சேர்த்து வைத்த அவ்வளவு கனவுகளையும் தொலைத்து விட்டான். இப்போதிருக்கும் நிலையில் கண்ணாடியில் தெரியும் அவன் முகம் முழுக்க வீங்கிய பெரிய பழுத்த சீழ் நிறைந்த கொப்புளம் போல தெரிந்தது. வெடித்தால் தேவலாம் என்று உள்ளூர சிறு ஆசை துளிர்த்தது. ஆசைகள் கனவுகளால் ஏற்படாதவை. ஆசைகள் தற்காலிமாக யாரையாவது எதையாவது பார்க்கும் போது தோன்றி பிறகு அடைய கூடியதாக, அடைந்த பின் தற்காலிகமான சிறு மகிழ்வைத் தந்துவிட்டு சிட்டைப் போல் சிறகடித்து போய்விடும். கனவுகள் அப்படியல்லவே!!

காகிதங்களில் வண்ணம் சேர்த்து குழைத்து குழைத்து பூசி மெருகேற்றி மெருகேற்றி, மிகச் சிறந்ததொரு ஓவியமாக மிளிற வேண்டிய கனவுகளை அவன் ஏனோ உருகி வழிந்தோடும் மெழுகின் முனையில் நெருப்பாக இருந்து அணையும் வரை எரிந்து கொண்டேயிருந்துவிட்டான். மெழுகொன்று எங்கே எப்போதெரிய வேண்டுமென்று தெரியாமல் எரிந்தணைவதொரு சாபமில்லையா! அவனுக்கொரு போதும் சாபம் பக்தி மூடநம்பிக்கைகளின் மேல் என்றெதன் மீதும் பிடிப்பில்லை. அவனும் அவன் கனவும் கண்ணாடி தொட்டிக்குள் நீரினூடே நீந்தியபடியிருக்கும் மீன்களைப் போலவும் அதை இரசித்து காணும் கண்களைப் போலவும் அவ்வளவு அந்நியோன்மாய் இருந்ததைப் பற்றி இப்போது நினைத்தால் அவன் உடம்பெல்லாம் சப்பாத்தி கள்ளியின் முள் குத்துவதைப் போலும், ஒட்டுத்துணியின்றி பாலைவனத்தின் மதிய வெயிலில் கிடப்பதைப் போன்றும் நாற்றமடிக்கும் கழிவு நீரில் மிதப்பதைப் போலவும் அமில மழையில் நனைவதைப் போலவும்…

அத்தனை வெறுப்பையும் கொட்டித் தீர்க்க ஒரு மடியின்றி தவிக்கும் நிலையில்… அவனுக்குள் இருந்த கடைசி துளி நம்பிக்கையும் விஷமாகி அவனை கொல்ல துவங்கி விடும் போல் இருந்தது!! அப்போதுதான் அவன் தனக்குத்தானே பேச துவங்கினான்… தான் குடித்த போத்தல்களைத் தாங்கியிருக்கும் மேசையை கழிவறையின் கண்ணாடி வழியேப் பார்த்த போது அவனுக்கு குமட்டி கொண்டு வந்தது. அவன் பிம்பம் முதல் அனைத்தும் சுழன்று ஒன்றிரண்டாகி இரண்டு நான்காகி நான்கு எட்டாகியென எல்லாம் அவன் கண்களுக்குள் சுக்குசுக்காக உடையத் துவங்கின. தோல்வியின் இரவு மரத்தின் கீழ் எப்போதுமிருக்கும் நிழல் என்றும் இரவில் மட்டும்தான் தெரியாமல் போகும் பகலில் எப்படியும் வெளிவந்துதான் ஆக வேண்டும் என்றும் புரியாமல் கண்ணீர் உகுத்தபடி சுருண்டு விழுந்தவனின் மயக்கம் உறக்கமாகி இன்னொரு கனவைப் பிடித்து கொண்டு வந்து அவனிடம் தின்ன கொடுத்தது.


குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கனவுகள் (சிறுகதை)”

அதிகம் படித்தது