மே 8, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

கற்க கசடற- இணையமும் ஆர்வமும் இருந்தால் போதுமே!

சௌமியன் தர்மலிங்கம்

Apr 16, 2016

inaya thalam3

இணைய வசதிகள் பெருகிவிட்ட இன்றைய நாளில் அறிவினை வளர்த்துக்கொள்ளவும், திறன்களை பெருக்கிக் கொள்ளவும் ஏராளமான இணையதளங்கள் உலகெங்கும் நடத்தப்படுகின்றன. ஒருவர் தனக்கு கற்பதற்கான வாய்ப்பு இல்லை என்றோ, மறுக்கப்பட்டது என்றோ கூறவே இயலாது. ஆர்வம் இன்மை அல்லது சோம்பேறித்தனம் மட்டுமே திறன்கள் இல்லாத தன்மைக்குக் காரணம் என்று இனி சுட்டப்படும். ஏனென்றால் அந்த அளவிற்கு சுயமாக கற்றறிந்து கொள்வதற்கு வசதிகள் பெருகிவிட்டன.

அத்தகைய இணையதள கல்வி கற்கும் வாய்ப்புகளை கீழே உள்ள சிறிய பட்டியல் மூலமாக அறிந்துகொள்ள முயல்வோம்.

* முதலாவதாக கீழே தரப்பட்டுள்ள இணையதளம் அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் உலகளாவிய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு பாடங்களைக் கற்றுத் தருகிறது. கணிணி முதற்கொண்டு இசை வரை வெவ்வேறுபட்ட பாடங்கள் இவ்விணையதளத்தில் உள்ளன. மிகக் குறைந்த செலவிலோ அல்லது இலவசமாகவோ இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம்.

https://www.coursera.org/

* அடுத்ததாக கொடுக்கப்பட்டுள்ள தளம் காணொளிகள் மூலமாக அறிவினை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. அமெரிக்க டாலர் 25 கொடுத்தால் உறுப்பினராக இணைந்துகொள்ளலாம். எண்பதாயிரம் காணொளிகள் இந்த தளத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ளன.

https://www.lynda.com/

* இந்தத் தளமானது சற்றே விலை அதிகமானதாகும். அமெரிக்க டாலர் 10 முதல் 500 வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். வணிகம், தொழில்நுட்பம் என்று பல்வேறு துறைகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.

https://www.udemy.com/

* அடுத்த இணையதளம் தொழில்நுட்பத்திற்காகவே கூர்ந்த நோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் அதிநவீன தொழில்நுட்பங்களில் அறிவினை வளர்த்துக்கொள்ள இந்த இணையதளம் உதவுகிறது. பயிற்சிக்கான கட்டணத்தை மாதாமாதம் செலுத்தும் வசதியும் உள்ளது.

https://www.udacity.com/

* கீழே தரப்பட்ட இணையதளம் லாபமற்ற நோக்குடன் இலவசமாகவே பல்வேறு பாடங்களில் உரைகளைத் தருகிறது. அவை காணொளியாகவும், கட்டுரைகளாகவும் வழங்கப்படுகின்றன. கணிதம், அறிவியல், பொருளாதாரம், கலைகள், கணிணி தொழில்நுட்பம் என்று அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது.

https://www.khanacademy.org/

* அடுத்ததாக தரப்பட்டுள்ள இணைதளம் கணிணி தொழில்நுட்பத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. வெகுவேகமாக கற்றறிவதற்கு உதவும் வகையில் இதன் பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கணிணி மொழிகள் பலவும் மிகவும் விரிவாகவும், விளக்கமாகவும் கற்றுத்தரப்படுகிறது.

http://www.codecademy.com/

* முதலில் கூறப்பட்ட இணையதளம் போல ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் இணைந்து இவ்விணையதளம் இலவசமாக பல பாடங்களை வழங்குகிறது. ஆனால் படித்து முடித்தவுடன் சான்றிதழ்கள் வழங்கப்படுவதில்லை.

https://iversity.org/

* அடுத்ததாக காணொளி மூலமாக பாடங்களை நடத்தும் இணையதளமாக இது விளங்குகிறது. இவ்விணையதளத்தில் உறுப்பினராக இணைந்தும் கற்கலாம் அல்லது சிறிய தொகையை கட்டிவிட்டு குறிப்பிட்ட பாடத்தை மட்டும் கற்கவும் வசதி உள்ளது. 20 சதவிகிதம் வரை கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது.

http://www.skillshare.com/

இவ்வாறு இணையதளம் மூலம் கற்பதற்கு ஏராளமான வசதிகள் இன்றைய நாளில் ஏற்பட்டுள்ளது. இணைய வேகமும் பெரிதும் அதிகரித்துவிட்ட சூழலில் உள்ளுரிலிருந்து உலகளாவிய பல்கலைக்கழகங்கள் வழங்கும் பாடங்களை கற்பதற்கான வசதிகள் மேம்பட்டுள்ளன. இதனை மாணவர்களும், இளைஞர்களும் மற்றும் கற்பதில் ஆர்வம் உள்ள அனைவரும் அறிந்து தேடி தங்களுக்கு விருப்பமான துறைகளில் அறிவை பெருக்கிக் கொள்ளலாம்.


சௌமியன் தர்மலிங்கம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கற்க கசடற- இணையமும் ஆர்வமும் இருந்தால் போதுமே!”

அதிகம் படித்தது