ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

கலப்புத் திருமணமும் பார்ப்பனர்களும்

இராமியா

Jan 26, 2019

iragu kalappu thirumanam2
பார்ப்பனர் அல்லாதார் இயக்கங்கள் துடிப்பாகச் செயல்பட்டுக்கொண்டு இருந்த காலங்களில் கலப்புத் திருமணம் என்ற பேச்சைக் கேட்டாலே உயர்சாதிக் கும்பலினருக்குச் சினம் பொங்கி வந்து கொண்டிருந்தது. ஆனால் இன்று கலப்புத் திருமணங்கள் அந்த அளவிற்கு எதிர்க்கப்படுவது இல்லை. உயர்சாதியினருக்கும் இடை நிலை சாதியினருக்கும் இடையே ஆங்காங்கே கலப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன. இது சாதிக் கருத்தியலுக்கு எதிரான பெரும் முன்னேற்றமாகச் சித்தரிக்கப்படுகிறது.

ஆனால் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கும் மற்ற வகுப்பினருக்கும் கலப்பு ஏற்படும் போது, அதுவும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பு ஆணுக்கும் ஆதிக்க சாதிப் பெண்ணுக்கும் திருமணம் என்றால் அதற்குக் கடும் எதிர்ப்பு தோன்றுகிறது. அது மட்டும் அல்ல, சில / பல சமயங்களில் அது ஆணவக் கொலைகளிலும் முடிகிறது. இப்படி இருக்கும் நிலையில் இன்று நடக்கும் கலப்புத் திருமணங்கள் வளர்ச்சியா? வீக்கமா?. வளர்ச்சி என்றால் அதை மேற்கொண்டு தொடரவும், வீக்கம் என்றால் அதை வளர்ச்சியாக மாற்றவும் நாம் என்ன செய்ய வேண்டும்?

சாதி / வருணக் கலப்புத் திருமணங்கள் இன்று நேற்று இருந்து அல்ல, அது தோன்றிய காலம் தொட்டே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மனு அநீதி வெளிப்படையாக ஆட்சி செய்து கொண்டு இருந்த காலத்தில், ஒரு பார்ப்பனன் நான்கு வருணத்தைச் சேர்ந்த பெண்களையும் திருமணம் செய்து கொள்வது ஒப்புக் கொள்ளப்பட்ட நடைமுறையாகவே இருந்தது. அது போல் ஒரு சத்திரியன் பார்ப்பனர் அல்லாத மூன்று வருணப் பெண்களையும், ஒரு வைஷ்யன் பார்ப்பனர், சத்திரியர் தவிர்த்த இரண்டு வருணப் பெண்களையும் திருமணம் செய்து கொள்ளலாம். சூத்திரனோ சூத்திரப் பெண்ணை மட்டுமே திருமணம் செய்து கொள்ள முடியும்.

ஆனால் அப்படிக் கலப்புத் திருமணம் நடந்தது என்பதற்காக, கீழ் வருணப் பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் மேல் வருணத்திற்கு உரிய எவ்விதமான உரிமைகளையும், நன்மைகளையும் பெற்று விட முடியாது. (அதுவும் குறிப்பாகப் பார்ப்பனர்களுக்கான உரிமைகளை / நலன்களை அடைந்து விடமுடியவே முடியாது) அக்குழந்தைகள் தாயின் வருணத்திலேயே சேர்க்கப்பட்டன.

விதிவிலக்காக உயர் வருணப் பெண்கள் கீழ் வருண ஆண்களுடன் சேர நேர்ந்து, அதனால் பிறக்கும் குழந்தைகள் மிக மோசமாக நடத்தப்பட்டன. எடுத்துக்காட்டாக ஒரு பார்ப்பனப்பெண் ஒரு சூத்திர ஆணுடன் சேர்ந்து அதனால் பிறக்கும் குழந்தைகள் நான்கு வருணத்தையும் கடந்து சண்டாள சாதியில் சேர்க்கப்பட்டன. அக்குழந்தைகளும் அத்தாய்மார்களும் கொடூரமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதன் மூலம் பார்ப்பனப் பெண்கள் வேறு வருண ஆண்களுடன் சேரக்கூடாது என்ற கடுமையான செய்தி அவர்களுக்குச் சொல்லப்பட்டது. அதாவது பார்ப்பன ஆதிக்கம் தளராமல் இருப்பதற்கும், பார்ப்பனர்கள் அதிகபட்ச சுகம் அனுபவிப்பதற்குமான ஏற்பாடாகத்தான் கலப்புத் திருமணம் அமைந்து இருந்தது.

இந்நிலை பார்ப்பனர் அல்லாதார் இயக்கங்கள் தோன்றும் வரையில் எவ்விதத் தடையும் இல்லாமல் தொடர்ந்து கொண்டு இருந்தது. பார்ப்பனர் அல்லாதார் இயக்கங்கள் தோன்றி, தங்கள் உரிமைகளுக்காகப் போராடும்போது மனு அநீதி அனுமதிக்காத கலப்புத் திருமணத்தை வழக்கத்திற்குக் கொண்டு வர முனைந்தனர். ஆனால் சூத்திர மக்கள் கல்வியிலும், அதிகார வேலைகளிலும் வாய்ப்பு பெறும் வரையில் அது வளர்ந்து வேர் விட முடியாமலேயே தத்தளித்துக் கொண்டிருந்தது. காலப்போக்கில் பார்ப்பனர் அல்லாதார் இயக்கங்கள் போராடி, சமூக, பொருளாதார நிலையில் சிறு சிறு வெற்றிகளைப் பெற்றன. இதன் காரணமாக அதிகார மையங்களில் அவர்கள் ஓரளவு இடம் பெற்றனர். அவ்வாறு இடம் பெற்றவர்கள் தங்கள்வகுப்பு மக்களின் உரிமைகளையும், நலன்களையும் முன்னெடுப்பதைத் தடுக்கும் விதமாகப் பார்ப்பனர்கள் பல சூழ்ச்சிகளைக் கையாண்டனர். அவற்றில் ஒன்று தான் பார்ப்பனப் பெண்கள் (அதிகார மையத்தில் நுழைந்து இருக்கும்) சூத்திர ஆண்களைத் திருமணம் செய்து கொண்டது.

iragu kalappu thirumanam1

சூத்திரர்கள் அதிகார மையங்களில் ஓரளவு இடம் பெற்ற நிலையில், இவ்வகையான கலப்புத் திருமணங்கள் நடப்பது பார்ப்பனர்களுக்கு எளிமையான செயலாகவே இருந்தது. அப்படிக் கலப்புத் திருமணம் செய்து கொண்ட பார்ப்பனப் பெண்கள், அதிகார மையத்தில் நுழைந்த சூத்திர ஆண்கள் தங்கள் வகுப்பு மக்களின் நலன்களை முன்னெடுக்காதபடி கவனமாகப் பார்த்துக் கொண்டனர். மனு அநீதி வெளிப்படையாக ஆட்சி செய்து கொண்டு இருந்த காலத்தில், சூத்திர ஆண்களுடன் சேரும் பார்ப்பனப் பெண்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். ஆனால் பார்ப்பனர் அல்லாதார் இயக்கங்கள் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் நலன்களுக்காகவும் போராடி ஓரளவு வெற்றி பெற்ற காலத்தில், சூத்திர ஆண்களுடன் சேரும் பார்ப்பனப் பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்.

அதாவது இந்தக் கலப்புத் திருமணமும் பார்ப்பன ஆதிக்கம் தளர்ந்து விடாமல் இருக்கவே பார்ப்பனர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

கீழ் வருணத்துப் பெண்களை மேல் வருணத்து ஆண்கள் திருமணம் செய்து கொள்வதால், சொத்து உரிமை உட்பட எந்த உரிமைகளையும் எதிர்பார்க்க முடியாது என்ற மனு அநீதி வெளிப்படையாக ஆட்சி செய்து கொண்டு இருந்த காலத்தில், பார்ப்பனர்கள் கீழ் வருணத்துப் பெண்களைத் தாராளமாகத் திருமணம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் இரத்த உறவு வைத்தே சொத்து உரிமை உட்பட பிற உரிமைகள் இருக்க முடியும் என்ற உரிமையியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்த பின், பார்ப்பனர்கள் சூத்திரப் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்த்து விட்டனர்.

அதாவது இந்த விதமான கலப்புத் திருமணத்திலும் / கலப்புத் திருமணத்தைத் தவிர்த்தலிலும் பார்ப்பன ஆதிக்கம் தளர்ந்து விடக் கூடாது என்ற கருத்தியலே மேலோங்கி நின்றது.

இவ்வாறு ஆதி காலம் தொட்டு, இது வரைக்கும் நடந்த கலப்புத் திருமணங்களுக்குப் பார்ப்பன ஆதிக்கக் கருத்தியலே காரணமாக இருந்திருக்கையில், இன்றைய கலப்புத் திருமணங்களுக்கும் இக்கருத்தியலே காரணமாக இருக்கும் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். வானத்தில் உள்ள கோள்கள் அனைத்துமே உருண்டையாக இருக்கும் போது பூமி மட்டும் தட்டையாக இருக்க முடியாது, அதுவும் உருண்டையாகத் தான் இருக்க முடியும் என்று புரிந்து கொள்வது எவ்வளவு தர்க்க ரீதியான நியாயமோ அவ்வளவு தர்க்க ரீதியான நியாயமே இன்றைய கலப்புத் திருமணக் கருத்தியல் பார்ப்பன சதி வலைக்குள் சிக்கி உள்ளது என்று புரிந்து கொள்வதும். சாதிக் கட்டுமானத்தை வலுவிழக்கச் செய்வதற்காகப் பெரியாரும் அம்பேத்கரும் முன்னெடுத்த கலப்புத் திருமண உத்தியில் இன்று பார்ப்பனர்கள் ஊடுருவி, சாதிக் கொடுமைகைளை வலுப்படுத்தவும், நிரந்தரப் படுத்தவும் முனைந்து கொண்டு இருக்கிறார்கள். எப்படி?

எந்த ஒரு செயலுக்கும் அதன் பின்னே ஒரு உள் நோக்கம் (motive) இருக்கும். பார்ப்பனர் அல்லாதார் இயக்கங்கள் கடுமையாகப் போராடியதன் விளைவாக, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க அரசியல் நிர்ணயச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்டது. இது சாதி அடிப்படையில் இல்லாமல் பொருளாதார அடிப்படையில் இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் போராடிப்பார்த்தனர். அப்படிச் செய்தால் பெரும் பணக்காரர்களான பார்ப்பனர்களும் “ஏழை” என்று பெயர் வைத்துக் கொண்டு, ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கபளீகரம் செய்து கொள்ளலாம் என்று சூழ்ச்சி செய்தனர். ஆனால் பெரியாரும், அம்பேத்கரும் இந்திய சமூகத்தில் ஒடுக்குமுறை சாதி அடிப்படையில் தான் உள்ளது என்று எடுத்துக்காட்டினர். ஆகவே தீர்வும் சாதி அடிப்படையில் தான் இருக்க முடியும் / வேண்டும் என்று கூறினர். அதன் பேரில் சாதி அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்று சட்டத்திலும் உறுதி செய்யப்பட்டது.

சட்டத்தில் உறுதி செய்யப்பட்டு இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் பார்ப்பனர்கள் பல முறைகேடுகளைச் செய்தனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும் என்பதைப் பற்றி முழுமையாக மவுனம் சாதித்தனர். தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு அளிக்க வேண்டிய 18% இடங்களை அளிக்காமல் 5%க்கும் குறைவாகவே அளித்து தகுதியான நபர்கள் கிடைக்கவில்லை என்று கூறி அழிச்சாட்டியம் செய்தனர். அதுவும் கேந்திரமான இடங்களில் ஒரு இடத்தைக் கூட அளிக்காமல் ஏமாற்றினர். இக்கொடுமையை ஒவ்வொரு மீளாய்வின் போதும் தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சுட்டிக் காட்டினாலும், பார்ப்பன ஆதிக்க இந்திய அரசு கண்டு கொள்வதே இல்லை.

இந்நிலையில் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு அளிக்க ஆணை பிறப்பித்த உடன் பார்ப்பனர்களுக்குக் கிலி பிடித்து விட்டது. பெரியாரின், காமராசரின் முயற்சியாலும், நெ.து.சுந்தரவடிவேலுவின் வழிகாட்டலிலும் (மைய அரசு மற்றும் வட மாநிலங்களைப் போல் அல்லாமல்) தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு முறை செயல்படுத்தப்பட்டது. இதில் வாய்ப்பு பெற்ற ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் (பொதுப் போட்டியில் வென்ற) பார்ப்பனர்களை விடத் திறமைசாலிகள் என்று தெளிவாக மெய்ப்பித்தார்கள் / மெய்ப்பித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

இந்த 27% இட ஒதுக்கீடு ஆணை செயல்படுத்தப்பட்டால், அதிகார மையங்களில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் எண்ணிக்கை பொருட்படுத்தத்தக்க அளவில் கூடி விடும். அப்படி நிகழ்ந்தால், பார்ப்பனர்களில் திறமைக் குறைவானவர்களை ஓசையின்றித் தேர்வு செய்வதிலும், திறமைசாலிகளான ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை ஒதுக்கி வைக்கும் வழிகளிலும் உராய்வு ஏற்படும். இதை எப்படியேனும் தவிர்த்தே ஆக வேண்டும் என்று சூழ்ச்சி செய்த பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டைத் தவிர்க்க அரசுப் பணிகளைத் தனியார்மயப்படுத்த முனைந்தனர். அதன் மூலம் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு அதிகாரம் பகிரும் வேகத்தை மட்டுப்படுத்தவும், காலப்போக்கில் முற்றிலுமாகத் தவிர்த்து விட வேண்டும் என்றும் அவாள் திட்டமிட்டனர். நடைமுறைப்படுத்திக் கொண்டும் இருக்கின்றனர்.

எப்படிச் செய்தாலும் அரசு வேலைகள் என்பது தவிர்க்க முடியாமல் இருந்தே தீரும் என்ற காரணத்தினாலும், அவை அதிகாரம் படைத்தவையாகவே இருக்கும் என்பதாலும், அவற்றில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் நுழையாமல் தடுக்க ஏதாவது செய்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சி தான் கலப்புத் திருமணக் கருத்தியலில் ஊடுருவும் உத்தி.

கலப்புத் திருமணம் என்ற கருத்தியல் சமூகத்தில் உலவினால், பிறக்கும் குழந்தைகளின் சாதியை நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்படும். இதைச் சாக்காக வைத்துக் கொண்டு, சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு முறையை நீக்கி விடலாம். இட ஒதுக்கீடு முறையை நீக்கிச் சூது நிறைந்த பொதுப் போட்டி முறை மட்டுமே தேர்வுக்கு வழி என்று நிலைப்படுத்தி விட்டால், வழக்கம் போல் திறமைக் குறைவான பார்ப்பனர்களை உயர் நிலை வேலைகளில் எளிதாக அமர்த்த முடியும். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் உள்ள திறமைசாலிகளை புறந்தள்ளவும் முடியும். மொத்தத்தில் வருணாசிரம அதர்மத்தை அப்படியே பாதுகாக்க முடியும். இது தான் பார்ப்பனர்களின் உள் நோக்கம் (ulterior motive).

இது பார்ப்பனர்களின் உள் நோக்கம் என்பது வெறும் யூகமா அல்லது சான்றுகள் ஏதாவது இருக்கிறதா? ஆம், சான்றுகள் இருக்கவே செய்கின்றன. முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் பார்ப்பன சோதிடர்களிடம் கலப்புத் திருமண மணமக்களைப் பற்றிய சாதகப் பொருத்தம் பார்க்கச் சென்றால் சினந்து எரிந்து விழுவார்கள், கடுமையாகத் திட்டுவார்கள், இறுதியில் பொருத்தம் பார்க்காமலேயே திருப்பி அனுப்பி விடுவார்கள். ஆனால் அவாளே இப்பொழுது வெகு இயல்பாகப் பொருத்தம் பார்த்துச் சொல்கின்றனர். அதே சமயம் தாழ்த்தப்பட்ட வகுப்புப் பையனின் சாதகத்தையும் இடைநிலைச் சாதிப் பெண்ணின் சாதகத்தையும் கொண்டு சென்றால் “மிகவும் அக்கறையுடன்” பின் விளைவுகளைப் பற்றி யோசிக்கும்படி “அறிவுரை” கூறுகின்றனர். இது பார்ப்பனர்கள் கலப்புத் திருமண உத்தியைப் பார்ப்பன ஆதிக்கத்தை வலுப்படுத்தும் ஆயுதமாகப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள் என்பதை மெய்ப்பிக்கிறது. அது மட்டும் அல்ல, இந்நிகழ்வுகளைப் பின் புலமாக வைத்து ஒடுக்கப்பட்ட வகுப்பு இளைஞர்களே இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசும் அளவிற்கு மூளை வெளுப்பு செய்தும் இருக்கிறார்கள். இது பார்ப்பனர்கள் தங்கள் சதித் திட்டத்தில் வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது.

அப்படியானால் கலப்புத் திருமண முறை ஒவ்வாத ஒன்றா? நிச்சயமாக இல்லை. கலப்புத் திருமணம் சாதிய அமைப்பின் இலை, கிளை, தண்டுகளை வெட்டத்தான் செய்கிறது. வேர்களை முழுமையாக வெட்டிச் சாய்ப்பது இல்லை. அதன் வேர்கள் யாவை? அவற்றை வெட்டிச் சாய்ப்பது எப்படி? அது தான் விகிதாச்சாரப் பங்கீடு முறை. எப்படி என்று கேட்கிறீர்களா? ஆதியில் இருந்து பார்ப்பனர்கள் வகுத்த விதிமுறைகளில் வருண அடிப்படையில் தான் தொழில் செய்ய வேண்டும் என்பதற்கே தலையாய முக்கியத்துவம் கொடுத்து வந்து இருக்கிறார்கள். மற்ற விதிமுறைகளை மீறினால் கொடுக்கப்படும் தண்டனையை விட வருண அடிப்படையை மீறித் தொழிலை மேற்கொள்பவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையே மிகவும் கடுமையாக இருந்திருக்கிறது. பகவத்கீதை 18வது அத்தியாயம் 46, 47, 48வது பாடல்கள் “ஒருவன் தான் சார்ந்த வருணத்து வேலையைச் செய்யத் திறமை இல்லா விட்டாலும் அதையே செய்ய வேண்டும்; வேறு வருண வேலையைச் செய்யத் திறமை இருந்தாலும் அதைச் செய்யக் கூடாது; இதனால் மனித வளம் வீணாவதைப் பற்றியோ, நிர்வாகம் நாசமாவதைப் பற்றியோ கவலைப்படக் கூடாது” என்று தெளிவாகக் கூறுகின்றன.

இதன் மூலம் வருண முறையை ஒழித்துக் கட்டி, அனைத்து வருண / சாதியினரும் அனைத்து நிலைத் தொழிலையும் செய்யும் நிலையை உருவாக்குவதே சாதிக் கொடுமைகளை அவற்றின் வேர்களில் தாக்கி ஒழிக்கும் ஒரே வழி என்று புரிந்து கொள்ள முடியும். சாதிக் கொடுமைகளின் வேர்கள் அழிந்து விட்டால், அதன் பின் உள் சாதி மணமுறை, தீண்டாமை முதலிய பிற நடைமுறைகள் காலப் போக்கில் உலர்ந்து உதிர்ந்து விடும். ஆகவே நாம் கலப்புத் திருமண முறையில் மன நிறைவு அடைந்து விடாமல் விகிதாச்சாரப் பங்கீடு முறையை முன்னெடுப்பதில் தலையாய கவனம் செலுத்த வேண்டும்.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கலப்புத் திருமணமும் பார்ப்பனர்களும்”

அதிகம் படித்தது