சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கலை மூலமாக சிரமப்படுபவர்களுக்கு உதவும் பெண் ஓவியர்

நிகில்

Jan 30, 2016

kalai3நமது சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு, தனது ஓவியங்கள் மூலமாக குரல் கொடுத்து வருபவர் ஓவியர் ஸ்வர்ணலதா. இவரது ஓவியங்கள் உலகெங்கும்  பாராட்டப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஓவியர் திருமதி ந.ஸ்வர்ணலதா பெண்கள்  மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் முகநூலுடன் சேர்ந்து நடத்திய 100 இந்தியப்  பெண் சாதனையாளர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்தப் பெண் சாதனையாளர்கள் முகநூல்  வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஸ்வர்ணலதாவிற்கு கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்த முயற்சிக்கும் சாதனைக்காக இந்த விருது கிடைத்திருக்கிறது.

அவரிடம் நடத்திய நேர்காணலின் போது பல விடயங்களை மனம் திறந்தார்.

kalai2

ஓவியத்தின் மீது ஈர்ப்பு வந்தது எப்போது?

ஓவியர் ஸ்வர்ணலதா: நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சிங்கப்பூர். திருமணம் முடித்து வந்த இடம் தமிழ்நாடு. பள்ளியில் படிக்கும் போதே பலவிதமான ஓவியங்களை வரைவேன். ஆனால் என்னால் தொடர்ச்சியாக அதன் மீது கவனம் செலுத்த முடியவில்லை. திருமணத்திற்குப் பிறகு ஓய்வாக இருக்கும் நேரத்தில் வரைய ஆரம்பித்தேன். 1998 ஆம் ஆண்டு முதல் உலகின் பல பகுதிகளில் ஓவியக் கண்காட்சி நடத்தி வந்தேன்.

உங்கள் ஓவியங்கள்  பெண்களுக்கு ஆதரவாக இருக்க என்ன காரணம்?

kalai4

ஓவியர் ஸ்வர்ணலதா: முக்கியமாக பெண்களுக்கெதிராக  இழைக்கப்படும் வன்முறைகளையும், அநியாயங்களையும், அவமானங்களையும் பார்த்து மனம் வருந்திய நாட்கள் ஏராளம். அந்த இன்னல்களின் மூலம் எப்படி அவர்கள் ஒரு சிறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதை, பல வித ஓவியங்களாக சித்தரித்துள்ளன. எடுத்துகாட்டாக பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது, அடக்குமுறை, தன்னுடைய ஆசையை வெளியே சொல்லாமல் தனித்தீவாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக என் தூரிகை மூலமாக குரல் எழுப்பி வருகிறேன்.

டெல்லியில் நிர்பயா கொடூரமாக பாதிக்கப்பட்டு ஏற்பட்ட மரண  நிகழ்வு நடந்த நேரத்தில், நிர்பயா என்னும் தலைப்பின் கீழ் 37க்கும் மேற்பட்ட ஓவியங்களைத் தீட்டி டெல்லியில் கண்காட்சி நடத்தினேன். இது அங்குள்ள மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பைப் பெற்றது, ஊடகங்கள் பெரிதும் பாராட்டின.

பெண்களுக்கு நீங்கள் செய்யும் சேவை என்ன?

ஓவியர் ஸ்வர்ணலதா: ஆசிய பெண்கள் ஸ்தாபனம் என்னும் தொண்டு நிறுவனத்தையும் துவங்கி உள்ளேன். கலையின் வழியாக வரும் வருமானம், தொண்டு நிறுவனம் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்காக  பயன்படுத்தப்படுகிறது.  வாழ்க்கையில் சிரமப்படும் பெண்களுக்கு இலவசமாக கலை மற்றும் கைத்தொழிலை கற்றுத்தருகிறேன். பெண் குழந்தைகளின் கல்விக்காக முடிந்த வரை உதவுகிறேன். அடுத்தவர்களின் சிரமங்களைப் பார்ப்பதற்கு மனம் பாடுபடுகிறது. கலை மூலமாக வரும் சம்பாத்தியத்தை எப்பொழுதும் சிரமப்படுபவர்களுக்காகத்தான் செலவழிப்பேன்.

kalai5

பெண்களை சார்ந்து மட்டும் தான் உங்கள் ஓவியங்கள் இருக்குமா?

ஓவியர் ஸ்வர்ணலதா: கலாச்சாரத்தையும், காவியங்களையும் பெருமைப்படுத்தும் வகையில்  ஓவியங்களைப் படைத்து இருக்கிறேன்.  இது தவிர மது, புகைபிடித்தல்,  சுற்றுச்சூழல் போன்ற விடயங்களையும் ஓவியமாக வரைந்து இருக்கிறேன்.

காணாமல் போகும் நமது தமிழ் மொழி பற்றியும், நமது தமிழ்த் தாயைப் பற்றியும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் ஓவியம் வரைந்துள்ளேன். இதனை நம்முடைய பள்ளிகள் அனைத்திலும் வைப்பதற்கான முயற்சி நடந்து வருகிறது.

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமா?

ஓவியர் ஸ்வர்ணலதா: கண்டிப்பாக எனது குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்தனை விடயங்களும் சாத்தியப்பட்டு இருக்காது. என் கணவர் சந்திரசேகரன் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். அவர் என்னுடைய செலவிற்காகத் தரும் பணத்தை தூரிகை, வண்ணங்கள் வாங்க பயன்படுத்திக் கொள்வேன். பெண்கள் விரும்பும் ஆடை, ஆபரணங்கள் வாங்க ஆசைப்படுவதில்லை. நம்மால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும். இந்த நோக்கத்தில்தான் என்னுடைய ஒரே மகனையும் வளர்த்து வருகிறேன்.

kalai6மறக்க முடியாத நிகழ்வு?

ஓவியர் ஸ்வர்ணலதா: வார இதழைச் சேர்ந்த ஒருவர் என்னை நேர்காணல் செய்ய வரும் போது, தமிழக முதல்வரான ஜெயலலிதா அவர்களின் படத்தை வரைந்து கொண்டிருந்தேன். கண் மட்டுமே மீதம் இருந்தது. நான் அந்த ஓவியத்தில் கண் தீட்டி முடிந்த போது, அவர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஓவியம் வரைந்த போது நடந்த நிகழ்வு பத்திரிகைகளில் வெளியாக, நேரில் என்னை அழைத்த முதல்வர் சம்பந்தப்பட்ட ஓவியத்தை என்னிடமிருந்து வாங்கினார். மேலும் கடந்த ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்களின் கூட்டமைப்புகளின் இரண்டாவது மாநில மாநாடு பொழுது தலைமை நீதிபதி S.K.கவுல்  தலைமையில் நடந்தபோது, அங்கு என்னுடைய ஓவிய கண் காட்சியைத் திறந்து வைத்தார். என்னுடைய ஓவியங்களை வெகுவாகப் பாராட்டினார்.

எதிர்காலக் கனவு என்ன?

ஓவியர் ஸ்வர்ணலதா: நுண் கலைக் கல்லூரியில்(Fine Arts College) படித்து வந்தவர்களுக்கு மட்டுமே ஓவியக்கலையில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆர்வத்தால் சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைந்து, போராடி வெளியே வந்தாலும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுப்படுவதில்லை. இது மிகவும் வருத்தமளிக்கும் விடயமாகும். மேலும்  ஓவியக்கலையில்  பெண்கள் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். நிர்பயா போன்ற பெண்கள் பாதிக்கப்பட்ட பிறகும், நமது சட்டம் குற்றவாளிகளை தண்டிக்க முடியவில்லை. பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும். என்னுடைய ஓவியங்கள் வழியாக இந்த சமூகத்தில் எப்போதும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்.


நிகில்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கலை மூலமாக சிரமப்படுபவர்களுக்கு உதவும் பெண் ஓவியர்”

அதிகம் படித்தது