ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

கல்யாண முருங்கையின் மகத்துவம்

சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்

Apr 25, 2015

arun chinnaiahசிறகு இணையதள நேயர்களுக்கு என் அன்பான வணக்கங்கள். நான் உங்கள் மருத்துவர் அருண்சின்னையா. பல்வேறு மூலிகைகளைப் பற்றி நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். சென்றமுறை நான் முருங்கைக் கீரையின் மகத்துவம், அதனுடைய மருத்துவ பலன்கள், அதை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று நான் உங்களோடு, உங்களுக்காக எழுதியிருந்தேன். இப்பொழுது உங்களிடம் சில வார்த்தைகள் வேறொரு மூலிகையைப் பற்றி பேசப்போகிறேன். ஆரோக்கியமான உடல்நலம் வேண்டும் என்றால் ஆரோக்கிய உடல்நலத்திற்கான மூலிகைகளை, மருந்துகளை தொடர்ந்து எடுக்கிற பொழுது நீங்கள் அதனை அடையலாம். வாழ்க்கை என்பது ஒரு வரம் என்பதை ஒவ்வொருவரும் முழுமையாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்றாற்போல் தன்னுடைய வாழ்வியல் சூழலை அதற்கேற்றவாறு தன்னுடைய உணவுவகைகளை வகைப்படுத்திக் கொள்கிற பொழுது கண்டிப்பாக நீங்கள் மிகச்சிறந்த பலனை அடைய முடியும். அந்த வகையில் இன்று நாம் பார்க்கக்கூடிய ஒரு மூலிகை என்னவென்றால் கல்யாண முருங்கை.

kalyaana murungai2இன்றும் கிராமங்களில் கல்யாண முருங்கையை முள்முருங்கை என்று சொல்வார்கள். பார்ப்பதற்கு பூவரசு இலை மாதிரி இருக்கும். மரத்திலே முள் இருக்கும், இலைக்கு கீழாகவும் முள் மாதிரி வடிவம் இருக்கும் அதனால் இதை முள்முருங்கை என்று சொல்வார்கள். பெண்களுக்கு உண்டான பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய ஒரு அற்புதமான வல்லமை இந்த கீரைக்கு உண்டு. இன்றைக்கும் கிராமங்களில் கல்யாண முருங்கை அடை செய்வார்கள். இந்த கல்யாண முருங்கை இலை மூன்று, சிறிது மிளகு சேர்த்து அரைத்து மாவோடு கலந்து அடையாக செய்வது உண்டு. இன்னும் சில இடங்களில் கல்யாண முருங்கை இலையை சாறெடுத்து பச்சரிசியுடன் சேர்த்து பிட்டு மாதிரி செய்து சாப்பிடுவதும் உண்டு. வீட்டிற்குப் பின்பாக முருங்கை மரம் வைத்த பண்டைய தமிழ் மரபு உண்டு. அதாவது வீட்டிற்கு முன்பாக ஒரு தோட்டம், பின்பாக ஒரு தோட்டம் என்று நமது வாழ்வியல் அமைப்பில் இருந்தது. இன்றைக்கு நாம் அதெல்லாம் கடந்து வேறு ஒரு இடத்திற்கு வந்துவிட்டோம். அதாவது கல்யாண முருங்கை மரம் வீட்டிற்கு முன்பாக வைத்து அழகு செய்வார்கள். ஏன் கல்யாண முருங்கையை வீட்டிற்கு முன்பாக வைக்கவேண்டும் என்றால், அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இந்த கல்யாண முருங்கை மரம் வீட்டிற்கு முன்பாக இருந்தால் அந்த வீட்டில் குடியிருக்கும் பெண்களுக்கு கருப்பை நோய் வராது என்று ஒரு ஐதீகம் உண்டு.

kalyaana murungai6ஒரு வீடு என்றால் பெண்கள், பிள்ளைகள் இருப்பதற்கான வாய்ப்பு உண்டு. அந்தமாதிரி இருக்கக்கூடிய பெண் பிள்ளைகளுக்கு, பெண்மை சார்ந்த எந்த நோயும் வராது என்பது ஐதீகம், இது முற்றிலும் உண்மையான செய்தியும் கூட. எப்படியென்றால் இந்த கல்யாண முருங்கை இலையைப் பார்த்தீர்கள் என்றால் பெண்களுக்காகவே இறைவன் படைக்கப்பட்ட ஒரு அற்புதமான மரம் என்றே சொல்லலாம். பெண்மையை மேம்படுத்தக்கூடிய ஒரு விசயம் என்று பார்த்தால் பெண்களுக்கான உடம்பில் ஓடக்கூடிய நாளமில்லா சுரப்பி என்று சொல்வோம் அதாவது ஹார்மோன், இந்த நாளமில்லா சுரப்பில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்து, ஒரு பெண்ணை பெண்மை உள்ள பெண்ணாக மாற்றக்கூடிய தன்மை இந்த கல்யாண முருங்கை இலைக்கு உண்டு. எனவே இந்த கல்யாண முருங்கை இலையை நீங்கள் அடையாக செய்யலாம், தோசையாக செய்யலாம், அல்லது கல்யாண முருங்கை இலையை சூப்பாக செய்து சாப்பிட்டும் மருத்துவ குணத்தை பெற முடியும். மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், இஞ்சி, உளுந்துமாவு மற்றும் இவற்றுடன் கல்யாண முருங்கை இலையை நறுக்கி சேர்த்து, உப்பு சேர்த்து, எண்ணெய் சேர்த்து சூடாக சுவையாக சூப்பாக செய்து சாப்பிடலாம். மிகச்சிறந்த பலனை கண்டிப்பாக அனுபவிக்க முடியும்.

ஒரு பெண்ணுக்கு பார்க்கும் பொழுது பெண்மை தாய்மையாவது மிக முக்கியமான விசயம். ஒரு பெண் பேரிளம் பெண்ணாக இருக்கவேண்டும், மிகவும் அழகாக இருக்கவேண்டும், பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கவேண்டும் என்றால் கண்டிப்பாக அந்தப் பெண் நல்ல உடல்நலத்தோடு இருக்க வேண்டும். குறிப்பாக சொல்லப்போனால் அந்தப் பெண்ணின் கருப்பை சரியான முறையில் இருக்கவேண்டும், அந்தப் பெண்ணிற்கு fallopian tube என்று சொல்லக்கூடிய சினைக்குழாயாக இருந்தாலும் சரி, ovary என்று சொல்லக்கூடிய சினைப்பையாக இருந்தாலும் சரி, ஒரு முழுமையான நூறு சதவிகித ஆரோக்கியத்துடன் இருக்கிற பொழுதுதான் அந்தப் பெண் மிகச்சிறந்த பெண்ணாக, ஆரோக்கியமுடைய பெண்ணாக கருதப்படுவாள். ஆக நம் பண்டைய தமிழ்மரபிலே நமது இல்லங்களிலேயே, நமது இல்லங்களுக்கு முன்பாக அலங்கரித்த ஒரு அற்புதமான இந்த கல்யாண முருங்கை, பெண்களுடைய கருப்பை சார்ந்த நோய்களை பேணிப் பாதுகாப்பதில் அதற்கு இணை இல்லை என்றே சொல்லமுடியும்.

kalyaana murungai5ஒரு பெண்ணிற்கு கரு உண்டாக வேண்டும் என்றால் அது கர்ப்பப்பைக்கு உள்ளே இருக்கக்கூடிய, உள்ளே உருவாகக்கூடிய endometrium என்று சொல்லக்கூடிய அந்த சதை வளர்ச்சி சரியாக இருக்கவேண்டும். அந்த சதை வளர்ச்சி சரியாக இருக்கிற பொழுதுதான் ஒரு கரு அந்த endometrium ல் ஒட்டி குழந்தையாக உருவெடுக்கக்கூடிய சூழல் இருக்கும். இன்றைய வாழ்க்கை சூழல் நிறைய பெண்களுக்கு துவர்ப்பான உணவுகளை எடுக்காத காரணத்தினால், நார்ச்சத்து உணவுகள் எடுக்காத காரணத்தினால், துரித உணவுகளை தொடர்ந்து எடுக்கக்கூடிய காரணத்தினால், உணவுமுறை மாற்றத்தினால், மன அழுத்தத்தினால், மன உந்துதலினால் கரு உண்டாதலில் மிகப்பெரிய சிரமங்கள் ஏற்படுகிறது. எனவே இந்த endometrium என்று சொல்லக்கூடிய அந்த சவ்வு கருப்பைக்கு உள்ளே வளராத சூழலினால், சரியாக வளராத சூழலினால் உண்டான கருவும் சிதைந்து போகக்கூடிய சூழல்கள், சோகங்கள் என்று நம்மிடையே ஏராளமாக இருப்பதை நாம் கண்கூடாகக் காண இயலும். ஆக கல்யாணமுருங்கை மரத்தின் பட்டையை ஒன்றிரண்டாக இடித்து தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து பாதியாக சுண்டச்செய்து காலை வெறும் வயிற்றில் ஒரு பெண் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் கண்டிப்பாக அந்த கர்ப்பப்பைக்கு உள்ளே உண்டாகக்கூடிய endometrium என்று சொல்லக்கூடிய அந்த கருப்பை சவ்வு முறையாக உருவாகும். முறையாக உருவாகும் பட்சத்தில் முறையான அந்த கருசுழற்சி நேரத்தில் முறையான உடலுறவு இருக்கும் பட்சத்தில் தம்பதிகளுக்கு வெகுவிரைவிலே குழந்தை பிறக்கும் என்பதில் எந்த ஐயமும் கிடையாது.

kalyaana murungai8நாம் இன்னும் சில விசயங்களைப் பார்க்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் நேரத்தில் வயிற்றுவலி என்பது மிகச் சாதாரண விசயமாக இன்று இருக்கிறது. நிறைய பெண்கள் அதற்கான வலிநீக்கி மருந்துகள் என்று சொல்லக்கூடிய pain killers-ஐ தொடர்ந்து விடாமல் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த வலிநீக்கி மருந்துகளை தொடர்ந்து எடுக்கிற பொழுது என்னவாகும் என்றால் கருப்பை தளர்வாகும், சினைக்குழாய் தளர்வாகும், சினைப்பையில் பல்வேறு பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பாகும்.இன்னும் சிலநேரங்களில் சினைப்பைகளில் PCOS என்று சொல்லக்கூடிய Poly Cstic Overy Syndrome என்று சொல்வோம் சினைப்பையில் சில கட்டிகள் உருவாகலாம். நாம் சாப்பிடக்கூடிய சாக்லெட் மாதிரி சில கட்டிகள் வரலாம், இன்னும் சில நேரங்களில், அந்தக் கட்டி பெரிதான நிலையில் வரலாம். அப்படி சினைப்பையில் கட்டிகள் வருகிறபொழுது அங்கே தகுதியான ஒரு கருமுட்டை உருவாகாத சூழல் உண்டாகும். தகுதியான ஒரு கருமுட்டை உருவாகாத சூழலில் அந்தக் கருமுட்டை கரு உண்டாகாத சமயத்தில் மாதவிடாயாக வெளிப்படும் பொழுது கடுமையான வயிறுவலி, முதுகு வலி, மனஉளைச்சல், கழுத்துவலி, தலைவலி, வாந்தி போன்ற குறிகுணங்களைக் காட்டி மாதவிடாய் வெளிவருகிற பொழுது அந்தப் பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் மிகப்பெரிய வேதனையாக வந்து அமையும். அப்பேற்பட்ட தருணங்களில் அதை முழுமையாக சரிசெய்யக்கூடிய ஒரு தன்மை இந்த கல்யாண முருங்கை இலைக்கு உண்டு.

kalyaana murungai9கல்யாண முருங்கை இலையை மருந்தாக பாவிக்கும்முன் இன்னும் சில சுவாரசியமான செய்திகளைப் பார்ப்போம். கல்யாணமுருங்கை என்று ஏன் பெயர் வைத்தார்கள் நம் முன்னோர்கள் என்று பார்க்கும் பொழுது, சில வீடுகளில் மூன்று நான்கு கன்னிப்பெண்கள் இருப்பார்கள். அந்த கன்னிப் பெண்களுக்கு கல்யாணம் ஆனால்தான் அந்த அம்மா அப்பாவிற்கு ஒரு ஏக்கம், ஒரு பாரம், ஒரு சுமை குறையும். கன்னிப்பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கையை நடவேண்டும் என்ற முறையான மரபு இருந்தது உண்டு. அதேபோல் பெண்கள் அதிகமாக இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கையை நட்டு அந்த கல்யாண முருங்கை இலையை மாதந்தோறும் அந்தப் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் கொடுத்துவருகிற பொழுது அந்தப் பெண்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நல்ல ஒரு பேரிளம்பெண்ணாக, இளமையான பெண்ணாக, அழகான பெண்ணாக உருவெடுக்கப்பட்டு விரைவிலேயே கல்யாணம் ஆகும் என்பதற்காகவே, இந்த கல்யாண முருங்கையை நமது பழக்கத்தில் தமிழர்கள் பயன்படுத்தி வந்தார்கள் என்பதை நாம் உணர வேண்டும். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது இப்பேற்பட்ட வலி, வேதனையில் அவஸ்தைபடக்கூடிய பெண்கள் மாதவிடாய் போகக்கூடிய அந்த நேரங்களில் வலி, வேதனை இருக்கிறது என்றால் மிக எளிமையாக சரிசெய்வதற்கு ஏற்ற ஒரு மூலிகை எது என்றால் கல்யாண முருங்கை இலை.

மூன்று கல்யாண முருங்கை இலையுடன் மூன்று மிளகு சேர்த்து ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து வடிகட்டி சாப்பிடுவது ஒரு முறை. அல்லது இவற்றை விழுதாக அரைத்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது கண்டிப்பாக endometrium சார்ந்த பிரச்சனைகள் சரியாகும், சினைக்குழாய் சார்ந்த பிரச்சனைகள், சினைக்குழாயில் அடைப்பு, தகுதியான கருமுட்டை இல்லாத தன்மை எல்லாமே சரியாகி விரைவிலேயே குழந்தை உண்டாகக்கூடிய ஒரு சூழலைக் கொண்டுவரும். ஆக மாதவிடாய் நேரத்தில் வரக்கூடிய அந்த சூதக வாய்வு முதுகுக்குப் பின்பாக அதாவது சூதக வாய்வு என்பது மாதவிடாய் நேரத்தில் அந்த இரத்தத்தை சூதகம் என்று தமிழில் சொல்லுவோம். இந்த சூதகம் வெளியேறும் பட்சத்தில் சூதகம் வெளியேறியதால் உடம்பில் உண்டாகக்கூடிய அந்த பற்றாக்குறை ஏற்பட்ட இடத்தில் வரக்கூடிய வலிதான் சூதக வாய்வு. அந்த சூதக வாய்வு பிரச்சனையை முழுமையாக சரிபண்ணக்கூடிய தன்மை இந்த கல்யாண முருங்கை இலைக்கு உண்டு. நான் சொன்ன மாதிரி கல்யாண முருங்கை இலையை அடையாகவோ, துவையலாகவோ, சூப்பாகவோ, தோசையாகவோ செய்து தொடர்ந்து சாப்பிடலாம்.

kalyaana murungai4கல்யாண முருங்கை இலையை மிளகு, பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து மாதவிடாய் ஆகக்கூடிய முதல் மூன்று நாட்கள் விடாமல் தொடர்ந்து சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் உங்களுக்குள் இருக்கக்கூடிய பெரிய பெரிய பிரச்சனைகள் முழுமையாக சரியாகும். உங்களுக்கு குழந்தை இல்லாத கோளாறு இருக்கிறது என்றால் கல்யாண முருங்கை இலை, இம்பூரல் இலை இந்த இரண்டையும் சமஅளவு காயவைத்து பொடிசெய்து வைத்துக்கொண்டு காலை மற்றும் இரவு என்று இரண்டு வேளை விடாமல் தொடர்ந்து சாப்பிடலாம். இன்னும் அதிகமான பலன் வேண்டுமென்றால் கல்யாண முருங்கை இலை, இம்பூரல் இலை, அசோகப்பட்டை, சந்தனம் இந்த நான்கையும் நன்றாக சம அளவு கலந்து அரைத்து வைத்துக்கொண்டு காலை மற்றும் இரவு என்று இரண்டு வேளை ஒரு தேக்கரண்டி அளவு அதிலிருந்து எடுத்து தண்ணீர் தேவையான அளவு சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து பாதியாக சுண்டவைத்து காலை, இரவு இரண்டு வேளை தொடர்ந்து விடாமல் சாப்பிடுகிற பொழுது கருப்பை நோய்கள், மாதவிடாய் கோளாறுகள், சினைப்பை நோய்கள், கருக்குழாய் அடைப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகள் சரியாகி விரைவில் குழந்தை உண்டாகக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டாகும்.

kalyaana murungai3ஆக கல்யாண முருங்கை என்று ஏளனமாக எண்ணாமல் இயன்ற அளவிற்கு நமக்கும் இடம் இருக்கும் பட்சத்தில், அந்த கல்யாண முருங்கை மரத்தை நீங்கள் நடவு செய்யலாம். அதை நீங்கள் விதையாகவோ, செடியாகவோ நடவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. அந்த கல்யாண முருங்கை இலை கட்டையை எடுத்துவந்து நன்றாக செதுக்கி மேல்பகுதியில் சிறிது சாணத்தை வைத்து பூமியில் ஊன்றினால் கூட கல்யாணமுருங்கை மரம் முளைத்து வரக்கூடிய வல்லமை உடையது. அதை மருந்தாக பாவிக்கும் பொழுது நமது வீட்டிலே எத்தனைப் பெண்கள் இருந்தாலும் நோயே இல்லாமல் மிகச் சிறந்த ஆரோக்கியத்துடன், சிந்தனைத் தெளிவுடன், தெளிவான ஒரு நிலையோடு இருப்பார்கள் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை. எனவே கல்யாண முருங்கையை மருந்தாக்குங்கள், கல்யாண முருங்கையை உங்களது உடம்புக்கு விருந்தாக்குங்கள், உங்கள் வம்சத்தை விருத்தி செய்யுங்கள். வாழ்க வளமுடன்.


சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கல்யாண முருங்கையின் மகத்துவம்”

அதிகம் படித்தது