களப்பிரர் காலம் குறித்து இன்று நாம் அறிவது என்ன?
தேமொழிDec 22, 2018
மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும், பகதூர்கான் திப்பு சுல்தான், மாமன்னர் அக்பர் போன்ற வரலாற்று நூல்களை எழுதியுள்ள டி.கே.இரவீந்திரன், களப்பிரர் காலம் குறித்து எழுதியுள்ள நூல் விகடன் பிரசுரம் 2016 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள ‘தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்’ என்ற நூல். இதழியல் பின்புலம் கொண்டவராக வரலாற்று நூல்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்ட டி.கே.இரவீந்திரன் இந்த நூலில் பொதுவாக தமிழக வரலாறு குறித்த அறிமுகத்துடன் துவங்கி, களப்பிரர் வருகை, அவர்களது ஆட்சிக்காலம் என விவரித்து இறுதியில் களப்பிரர் வீழ்ச்சி வரை 30 அத்தியாயங்களில் 230 பக்கங்களில் எளிய நடையில் எழுதியுள்ளார்.
களப்பிரர்கள் காலம் இருண்டகாலம்:
ஆம், இவ்வாறுதான் நாம் பள்ளியில் படித்துள்ளோம். தமிழகத்தை ஆட்சி செய்த முடியுடை மூவேந்தர்களை வீழ்த்தி அன்னியரான இவர்கள் தமிழகத்தை ஆண்டனர். இவர்கள் ஆட்சிக்காலம் பற்றிய தொல்லியல் தடயங்கள் மற்றும் இலக்கியக் குறிப்புகள் போன்ற தரவுகள் இல்லாமையால் வரலாற்று ஆசிரியர்கள், சங்கம் மருவிய காலம் முதல் மீண்டும் பல்லவரும் பாண்டியரும் தமிழக ஆட்சியை மீட்டெடுக்கும் வரையில் உள்ள இடைப்பட்ட மூன்று நூற்றாண்டுகளை இருண்டகாலம் எனக் குறிப்பிட்டனர். கிபி 250 – 550 வரையில் களப்பிரர் ஆட்சியின் கீழ் தமிழகம் இருந்தது என்பதும், அவர்கள் இன்றைய மைசூர் பகுதிக்கு அண்மையில் இருக்கும் நந்தி மலைப்பகுதியில் இருந்த ஓர் இனத்தவர் என்பதால் வடுக கருநாடர் என்று இலக்கியக் குறிப்புகள் கூறுகிறது என்பதுவும் இன்று பெரும்பாலோர் ஏற்றுக் கொள்ளும் கருத்தாக இருக்கிறது. ஆகவே, வரலாற்றாசிரியர்கள் கருத்தின்படி இவர்கள் ஆரியருமல்லர் தமிழருமல்லர் ஆனால் திராவிட இனத்தவர், குறிப்பாகக் கன்னட வடுகர்.
சிரவணபெலகுளா பகுதி களப்பப்பு நாடு என அறியப்பட்டதாகக் கன்னட நூல் மற்றும் அப்பகுதி கல்வெட்டுகள் கூறுகின்றன. எடுத்துக்காட்டாக, ஆட்சி துறந்து சமணமுனிவர் பத்ரபாகுவுடன் தென்னகம் வந்த மௌரியப்பேரரசரான அசோகரின் பாட்டனார் சந்திர குப்தர், தென்னகம் வந்து களபப்பு நாட்டிலுள்ள களபப்பு மலையில் தங்கினார் என ‘வட்டாராதென’ என்ற சமண இலக்கியம் குறிப்பிடுகிறது. களப்பிரர் வாழ்ந்த பகுதி அது எனச் சுட்டப்படுகிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் இன்றைய ஓசூருக்கு வடபகுதி களப்பிரர் பிறப்பிடம். அவ்வழியாக வந்து அன்றைய மழநாடு பகுதியை (இன்றைய தருமபுரி, சேலம்) வென்று (கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வளத்திய மாவளர் புல்லி – அகநானூறு: 61 மற்றும் 295 – என்பது இலக்கியம் தரும் செய்தி) தமிழகத்தில் புகுந்தனர்.
முதன்முதலில் சற்றொற்ப நூறாண்டுகளுக்கு முன்னர், ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கிடைத்த (இன்று இங்கிலாந்தின் அருங்காட்சியகத்தில் இருக்கும்) வேள்விக்குடிச் செப்பேடு கொடுத்த தகவலே களப்பிரர் குறித்துக் கிடைத்த முதல் தொல்லியல் சான்று. பின்னர் களப்ரர், களப்பிரர், களப்பரர், களப்பாளர், களப்பாழர், கள்வன், கலியரசர் எனப் பலவேறுவிதமாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் களப்பிரர்கள். இவர்கள் காலத்தை ஒரு பறவைப்பார்வையில் அறிய உதவும் வகையில், களப்பிரர்கள் குறித்த பற்பல செய்திகளை விரிவாக, பல களப்பிரர் வரலாறும் கூறும் நூல்களின் உதவியுடன் ஆய்வு செய்து தொகுத்து அளித்த முறையில் வெளிப்படும் நூலாசிரியரின் ஈடுபாடு பாராட்டிற்குரியது.
களப்பிரர் குறித்து இன்று நாம் அறிவது:
களப்பிரர் ஆட்சிக் காலகட்டத்தை அவர் வாழ்ந்த வரலாற்றுக்காலத்துடன் பொருத்தி அறிந்துகொள்ள நூலாசிரியர் மேலும் சில சிறப்புச் செய்திகள் தருகிறார், அவை; இறையனார் அகப்பொருளைக் குறித்த விளக்கப் பகுதி, மூவேந்தரையும் வென்ற அச்சுதக் களப்பாளனையும் பின்னர் வென்ற களத்தூர் பூசல குல நல்லவன் என்ற ஒருவன் மீதான தனிப்பாடல் ஒன்று, களப்பிரர் ஆட்சியில் சமணசமயத் தலைவர் வச்சிரநந்தி கி.பி. 470 ஆம் ஆண்டு மதுரையில் உருவாக்கிய திரமிள சங்கம் என்னும் திராவிடத் தமிழ்ச் சங்கம், இக்காலத்தில் எழுதப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த விளக்கமான பகுதி, களப்பிரர் கால சைவ இலக்கியங்கள், களப்பிரர் காலத்தில் அவர்கள் கட்டுப்பாட்டில் கொடும்பாளூர் வட்டாரத்தை ஆட்சி செய்த சிற்றரசர்களான இருக்குவேள் அரசர்கள், கொங்கு சோழர்கள், களப்பிரர் காலத்தில் இலங்கையின் அரசியல் சூழல், இரேணாட்டுச் சோழர்கள் பற்றிய சில செய்திகள்.
தமிழ் வளர்ச்சியின் நிலை என்று அணுகினால்; பண்டைய இலக்கியங்கள் வெண்பா ஆசிரியப்பா கலிப்பா வஞ்சிப்பா ஆகிய நான்குவகை யாப்புகளைக் கொண்டு தொல்காப்பிய இலக்கண அடிப்படையில் அமைந்திருக்க, பின்னர் களப்பிரர் காலத்தில் தாழிசை, துறை, விருத்தம் கொண்ட புதிய பாவினங்களும் உருவானதும், கல்வெட்டுகளில் காணப்பெறும் பழைய தமிழி பிராமி ஓலைகளில் எழுதும் நிலைக்கேற்ப வட்டெழுத்தாக வடிவம் பெற்றதும் களப்பிரர் காலமே.
களப்பிரரின் சமயச் சார்பு குறித்து இலக்கிய ஆய்வுகள் கூறுவது:
களப்பிரர் சமண பெளத்த ஆதரவாளர்கள் என்பதும் அதனால் வேத மதம் இடருற்றது என்பது போன்ற அனுமான அடிப்படையிலான குற்றச்சாட்டுகள் இந்நாள் ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. சமணம் களப்பிரர் காலத்திற்கு முன்னரே தமிழகத்தின் தென்பகுதிகளில் சிறந்திருந்தது என்பதற்குப் பல தொல்லியல் சான்றுகள் இருப்பதே இதற்குக் காரணம். களப்பிர மன்னர்களின் பெயர் அச்சுதன் என்பது போல வைணவப் பெயர்களாக இருப்பதும், அவர்கள் திருமாலை வணங்கி அருள்பெற்றார்கள் என்று கூறும் யாப்பருங்கலப் பாடல் வரிகள் களப்பிரர் வைணவர் என்றும் கருதச் செய்யும்.
ஐந்தாம் நூற்றாண்டில் சோழ நாட்டின் புகாரிலும் பூதமங்கலத்திலும் வாழ்ந்து அபிதம்மாவதாரம் என்ற நூலை எழுதிய ஆச்சாரிய புத்ததத்த தேரர் என்பவர் அரசன் அச்சுதக் களப்பாளன் பற்றி தம் நூலில் குறிப்பிடுகிறார். களப்பிரர் காலத்தில் சோழ மண்டலத்தில் பெளத்த துறவிகள் ஆதரிக்கப்பட்டுள்ளார்கள், பாண்டிய மண்டலத்தில் சமணர்களும் ஆதரிக்கப்பட்டுள்ளனர் என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது. இக்கால எல்லையில்தான் சோழன் கோச்செங்கண்ணான் பல சைவ வைணவ மாடக்கோயில்களை எழுப்பினான். அவற்றுக்கு எந்த ஊறும் நேரவில்லை. சைவ வைணவ இலக்கியங்களும் காரைக்கால் அம்மையார் மற்றும் ஆழ்வார்கள் போன்றவர்களால் எழுதப்பட்டு வந்தன. கூற்றுவ நாயனார் என்ற களப்பிர மன்னன் சைவம் சார்ந்தவராகவும், திருமங்கை ஆழ்வார் என்ற மன்னர் வைணவராகவும் இருந்ததை இலக்கியங்கள் கூறுகின்றன என்று பல கோணங்களில் ஆராயும் ஆய்வாளர்கள், களப்பிரர்கள் எந்தச் சமயத்தை சார்ந்தவர் என்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை என்றாலும், அவர்கள் பிற சமய வளர்ச்சிக்கு இடையூறாக இல்லை என்றும் முடிவு செய்கிறார்கள்.
ஆகவே, வேள்விக்குடிச் செப்பேட்டு செய்தியின் மூலம் பார்ப்பனருக்கு அளிக்கப்பட்ட கொடையை களப்பிர மன்னன் ஏன் மீட்டான் என்பதை மறுபரிசீலனை செய்யத் தேவையுள்ளது. அதன் அடிப்படையில் வேதமதங்களின் எதிரிகள் களப்பிரர் என்று தீர்மானிப்பது அனுமானம் என்பதைச் சுட்டுகிறார் நூலாசிரியர். தொல்லியல் தடயங்களாக களப்பிரர்கள் வெளியிட்ட மயில் மீதமர்ந்திருக்கும் முருகன் படம் அச்சிடப்பட்ட காசும் கூடக் கிடைத்துள்ளது. மேலும் கல்லாடம், பெரியபுராணம் போன்ற நூல்கள் களப்பிரர் ஆண்ட காலத்திற்கும் பிறகு சில நூற்றாண்டுகள் கழித்தே அக்காலத்தைக் குறித்து கூறும் பிற்கால நூல்கள் என்பதையும் கவனத்தில் கொண்டால் களப்பிரர் குறித்து வைதீக சமய எதிரிகள் என முன்வைக்கப்படும் கருத்துகள் அனுமானங்கள் என்பது தெளிவாகும்.
களப்பிரர் குறித்து தொல்லியல் ஆய்வுகள் கூறுவது:
முதலில் மாற்றுக்கோணத்தில் மயிலை சீனி வேங்கடசாமி ‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்’ என்ற தனது நூலில் கிடைக்கும் இலக்கியத் தரவுகளின் அடிப்படையில் தமிழ்ப் பண்பாடு தழைத்தோங்கிய காலகட்டம் களப்பிரர் காலம், அது இருண்ட காலமல்ல என்று நிறுவினார். இன்றைய களப்பிரர் குறித்த ஆய்வுகளுக்கு இதுவே துவக்கப் புள்ளியாகவும் அமைந்துள்ளது.
வேள்விக்குடிச் செப்பேடு, களப்பிரர் காலம் என்ற ஒரு வரலாற்றுத் தகவலை அளித்த சிறப்புப் பெற்ற செப்பேடு, களப்ரனென்னும் கலிஅரைசன் என்று குறிக்கிறது. இதுவே களப்பிரர் குறித்த செய்தி கிடைத்த துவக்கம். வேள்விக்குடிச் செப்பேட்டுக்குப் பிறகு தொடர்ந்து கிடைத்த தளவாய்புரச் செப்பேடு (களப்பாழர்) களப்பிரர் குறித்த தகவலை உறுதிப்படுத்தியது.
கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்படுவது பூலாங்குறிச்சிக் கல்வெட்டு. இது இது 1979 ஆண்டு தமிழக தொல்லியல் துறையினரால் புதுக்கோட்டையருகே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு. களப்பிர கோச்சேந்தன் கூற்றன் என்ற மன்னரைப்பற்றிக் குறிப்பிடுகிறது. தமிழ் பிராமி வட்டெழுத்தாக மாறும் எழுத்தமைதி கொண்ட காலத்தை இது காட்டுகிறது.
கோக்கண்டன் இரவி என்ற களப்பிர மன்னரைக் குறிக்கும் பொன்னிவாடிக் கல்வெட்டு, வெள்ளலூர் கல்வெட்டுகள் ஆகியனவும் களப்பிரர்கள் குறித்த தகவல் தருகின்றன. பள்ளன் கோயில் செப்பேடு, வேலூர் பாளையம் செப்பேடு, சின்னமனூர் செப்பேடுகள் எனக் களப்பிரர் குறித்த தகவல்கள் பல கிடைத்த வண்ணமே உள்ளன, அவையும் களப்பிரர் கால கட்டம் குறித்த புதிய செய்திகளைத் தந்த வண்ணமே உள்ளன. காசக்குடி செப்பேடு, பல்லவர் காலச் செப்பேடுகளான கூரம் செப்பேடு, வேலஞ்சேரி செப்பேடு மற்றும் பட்டத்தான் மங்கலம் செப்பேடுகள் போன்றவை பல்லவ மன்னர்கள் களப்பிர மன்னர்களை வென்றதையும் குறிக்கின்றன.
களப்பிரர்கள் என்ன ஆனார்கள்?
தொல்லியல் இலக்கியக் குறிப்புகள் மூலம் களப்பிரர்கள் 9 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செலுத்தி வந்ததும், கொங்குப் பகுதியில் பரவலாக ஆட்சி செய்ததையும், இவர்கள் தங்களை சந்திராதித்ய (சந்திரசூரிய) குலம் என்றுக் கூறிக் கொள்வதையும், வைதீக சமயத்தின் ஆதரவாளர்களாகவும் இருந்துள்ளார்களென்ற செய்திகளும் பெற முடிகிறது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகு, தக்காணப் பகுதியில் பேரரசாக இருந்த சாதவாகனர் ஆட்சிமறையும்பொழுது, தன்னாட்சி அறிவித்து அரசாளத் தலைப்பட்ட வடுக கருநாட மற்றும் வடுக வேங்கட இனத்தவர்கள் முறையே களப்பிரரும் பல்லவரும் என உருவாயினர் என்பது ஒரு பொதுவான புரிதல் (வடுகர் என்பது வடபகுதி மக்கள் என்றபொருள் தரும்.) இவர்கள் ஆரியரன்று. ஆரியத் தாக்கத்திற்குட்பட்ட தக்காண மக்கள்.
ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதி (கி.பி. 575) கடுங்கோன் களப்பிரரை வென்றான். சற்றொப்ப அதே சமயம் வடக்கில் பல்லவன் சிம்மவிஷ்ணு சோழ நிலத்தையாண்ட களப்பிர அரசனை வென்று பல்லவ ஆட்சியை நிலை நிறுத்தினான். ஆட்சியிழந்த சிற்றரசர்கள், வலுவிழந்த ஊர்த்தலைவர்கள், நிர்வாகம் செய்யும் அரசுஅதிகாரிகள் எனப் பல்வேறு நிலைகளில் தமிழருடன் தமிழராய்க் கலந்து விட்ட நிலையே களப்பிரர் நிலையாக இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது. இடைக்காலச்சோழர் காலக் கல்வெட்டுகளில் இருந்து கிருஷ்ணதேவராயர் காலத்துக் கல்வெட்டுவரை களப்பிரர் சிற்றரசர் முதல் அரசு அதிகாரிகள் என்ற நிலை வரையில் இருந்து கொடை அளித்த கல்வெட்டுச் சான்றுகள் மற்றும் இலக்கியச் சான்றுகள் கிடைத்துள்ளதும் இதனை உறுதி செய்கிறது.
நூல் குறித்த பார்வை:
நூலாக்கத்திற்கு உதவிய தொல்லியல் ஆய்வாளர் இலக்கிய ஆய்வாளர்கள் நூல்களின் பட்டியலில் மா. இராசமாணிக்கனார் கோணம் கொடுக்கப்படாதது மட்டுமல்ல, களப்பிரர் குறித்து ஆய்வு செய்து எழுதிவரும் சமகால தொல்லியல் ஆய்வாளர்களான இரா. கலைக்கோவன், ஆ. பத்மாவதி, காசியல் அறிஞர் திரு. இரா. கிருஷ்ணமூர்த்தி போன்றோர் பெயர்களைக் காணமுடியாதது சற்று ஏமாற்றமே அளிக்கிறது.
குறிப்பாக, அத்தியாயம் 27 னை, ‘களப்பிரர் காலத்து கலை வளர்ச்சி’ என்பது குறித்த செய்திகளுக்காக நூலாசிரியர் ஒதுக்கியுள்ளார். களப்பிரர்கள் “தாங்கள் ஆட்சிபுரிந்த கால அளவில் வாழ்வியலுடன் ஒட்டிய நுண்கலை வளர்ச்சிக்குப் போதிய ஊக்கம் அளித்திருக்கக்கூடும் என்பதில் ஐயமில்லை. ஆனால் ஏனைய தகவல் போலவே இதற்கும் சரியான சான்றுகள் கிடைக்கப் பெறவில்லை என்பதே வருத்தத்திற்குரிய செய்தி” (பக்கம் 204) என்று டி.கே.இரவீந்திரன் குறிப்பிடுகிறார். இந்த நூலின் முதற்பதிப்பு வெளியான காலம் மே 2016. அதே ஆண்டின் துவக்கத்தில் (ஜனவரி 2016) , “இருண்டகாலமா”, என்ற தனது நூலில், களப்பிரர் காலம் கலை இலக்கியங்களில் சிறந்த காலம் என்பதை வரலாற்று ஆய்வின் மூலம் மீட்ருவாக்கலாம் என்று கூறி இரா.கலைக்கோவன் தனது ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஒப்பாய்வு மூலம் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் இசைக்கருவிகள் எவை, பின்னர் பக்தி இயக்கம் காலத்தில் தேவாரத் திருமுறைகளில் இடம் பெரும் கருவிகள் எவையெவை, இடைப்பட்ட சங்கம் மருவிய காலத்தில் இசைக்கருவிகளின் ஏற்பட்ட மாற்றம், புதிய இசைக்கருவிகளின் பெயர் தேவாரப்பாடல்களில் இடம் பெறுவது, நரம்பிசைக்கருவியான யாழ் என்ற கருவி வீணையாக வளர்ந்தது குறித்து சுட்டிக்காட்டுவார். இது போன்ற புதிய இசைக்கருவிகள் வளர்ச்சிகள் நிகழ்ந்தது இடைப்பட்ட களப்பிரர் காலத்தில், அத்துடன் இது போன்ற மாற்றங்கள் ஒரே நாளில் ஏற்பட வாய்ப்பில்லை என்பார். இவ்வாறாக நுண்கலைகளான ஆடல் பாடல் ஆகியனவற்றுக்குச் சிலப்பதிகார இலக்கியம், சிற்பக்கலைகள் கோவில் கட்டுமானங்களை பற்றிய மீள்பார்வைக்கு பிள்ளையார்பட்டிக் குடைவரைக் கோயில் குறித்த தடயங்கள் என்று இயல் இசை நாடகம், சிற்பம் ஓவியம் கட்டிடம் என்ற கலைகள் தடையேதுமின்றியே களப்பிரர் காலத்தில் வளர்ந்தன என நிறுவுவார். நூலாசிரியர் தமது மறுபதிப்பில் களப்பிரர் காலத்துக் கலை வளர்ச்சி என்ற பகுதியில் இந்த ஆய்வுகளையும் இணைத்து விரிவாக்குவார் என்று நம்புவோம்.
நூலாசிரியர் நூல் முடிவில் குறிப்பிடுவது போல “இனிவரும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி முடிவுகளும் புதிய கண்டுபிடிப்புகளும் அந்த வரலாற்றுச் சுவடுகள் மீது வெளிச்சம் வீசுகையில் புதிய உண்மைகள் உலகிடை வீசும். அவற்றின் வழி அறியாமற்போன அவர்தம் வரலாற்றை அறிவோம்” என்ற கூறுகிறார். இது உண்மையே. டி.கே.இரவீந்திரன் களப்பிரர்களின் நாணயம் (அத்தியாயம் 21, பக்கம் 166-168) பகுதியில் உள்ள நாணயங்கள் தகவலைத் தவிர்த்து, இந்நூல் வெளியான பிறகு, மார்ச் 2017 இல் தினமலர் இரா.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்ட யானையின் படத்தை முகப்பில் கொண்ட களப்பிர நாணயமும் வெளிவந்துள்ளது. நூலாசிரியரின் கூற்றிற்கு இணங்கக் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்று கூறி வந்த வழக்கை மாற்றுவதைப் போல மேலும் ஆய்வின் முடிவுகள் வெளிவந்த வண்ணம்தான் உள்ளன.
இந்நூலின் மூலமும் பிற வரலாற்று ஆய்வாளர்களின் மூலமும் நாம் அறிவது: முன்னர் கருதியது போல ‘களப்பிரர்கள் நீண்ட காலம் தமிழகத்தில் ஆட்சி செய்யவில்லை’(இரா.கிருஷ்ணமூர்த்தி); களப்பிரர்கள் தமிழகம் முழுவதையும் கைப்பற்றி ஆளவில்லை. அவர்கள் பல இடங்களில் ஆண்டிருக்கிறார்கள் (இரா. கலைக்கோவன்); களப்பிரர்கள் ஆட்சி இந்த மண்ணின் மொழிக்கு எவ்விதத்தானும் இடையூறாக இல்லை என்பது அவ் ஆட்சிக்காலத்தே இங்குப் பொறிக்கப்பட்டிருக்கும் 30க்கும் மேற்பட்ட தமிழ்க் கல்வெட்டுகளால் விளங்கும் (பேராசிரியர் சுப்பராயலு); இக்காலகட்டத்தில் கிடைத்த ரோமாபுரி காசுகள் மூலம், களப்பிரர் காலமாகக் கருதப்படும் இருண்டகாலத்தில் வெளிநாடுகளுடனான வணிகம் செழித்திருந்தமை உணரப்படுவதோடு, அயலக அரசர்களான களப்பிரர்கள் தமிழ்நாட்டு வணிகத்திற்கு இடையூறாக இல்லை என்பதையும் அறியமுடிகிறது (இரா.கிருஷ்ணமூர்த்தி); பிற்காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட பல்துறை வளர்ச்சிக்கு வித்திட்டு சங்க கால வாழ்க்கை முறையிலிருந்து மாறி வந்த காலம்தான் களப்பிரர் காலம் (இரா. கலைக்கோவன்).
வேள்விக்குடிச் செப்பேட்டின் கண்டுபிடிப்பிற்குப் பிறகு கடந்த நூற்றாண்டிலும், குறிப்பாகக் கடந்த கால் நூற்றாண்டிலும் களப்பிரரின் இருண்ட காலம் என்ற கருத்தாக்கத்தின் மீது ஒளியேற்றும் பல ஆய்வுச் சுடர்கள் மூலம் ஒளிக்காட்டப்பட்டு உண்மைகள் வந்த வண்ணம் உள்ளன. இன்னமும் வரும். அப்பொழுது தென்பெண்ணைக்குத் தென்புற தமிழகப் பகுதியில் ஆண்ட களப்பிர மன்னர் யார் யார், எத்தனைக் காலம் எந்தெந்தப் பகுதியில் ஆண்டார்கள், தமிழகத்தில் அவர்கள் ஆட்சியின் தாக்கம் என்ன, களப்பிரர் காலத்துத் தமிழ்நாட்டில் நிலவிய கலை, பண்பாட்டுக் கூறுகள் எனப் பலவும் வெளிச்சத்திற்கு வரும்.
தமிழக வரலாற்றில் ஆர்வம் கொண்டிருக்கும் எவரும் ஒருமுறையேனும் படிக்கவேண்டிய நூலாக டி.கே.இரவீந்திரன் எழுதியுள்ள தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம் நூலைக் கருதலாம்.
நூல் குறித்து:
தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்
நூலாசிரியர்: டி.கே.இரவீந்திரன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம்
பதிப்பாண்டு: 2016
விலை: ₹ 145.00
தேமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “களப்பிரர் காலம் குறித்து இன்று நாம் அறிவது என்ன?”