மே 14, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

கழுத்தறுப்பு (கவிதை)

தவக்களை

Jul 18, 2020

siragu kaluththaruppu

 

கழுத்தை அறுப்பவனும்
கழுத்தை கடிப்பவனும்
சந்தித்தார்கள்

கழுத்துகள் தலைதெறிக்க ஓடி கொண்டிருந்தன

இருவருக்குள்ளே ஓர் விவாதம்

அறுத்தால் கடிக்க முடியாது என்பது கடிப்பவன் வாதம்
தான் அறுப்பதற்கு முன் நீ கடிக்க கூடாது என்பது அறுப்பவன் வாதம்

அறுப்பவன், அறுக்கும் முன் கடித்துவிட்டால்
என் கத்தி பிசிறு தட்டி சரியாக அறுக்காமல் போனால் அந்த பாவம் என்னை வந்து சேரும் என்றான்

கடிப்பவனோ, நீ அறுத்துவிட்டால் பின்பென் கழுத்திலிருந்து உயிர்ச்சூடு நீங்கி விடும்
நான் உறிந்தால் இரத்தம் உறைந்திருக்கும் என்றான்

அறுப்பதும்
கடிப்பதும்

இரண்டுமே கழுத்துக்கு ஒவ்வாமை
அது ஏங்கியதெல்லாம் கூந்தலை நகற்றி கொடுக்கப்படும் ஒரு முத்தத்திற்கே

ஆனால், முத்தமிடுபவனுக்கு இங்கே வேலையில்லை

பிரச்சனை அறுப்பவனுக்கும்
கடிப்பவனுக்கும்தான்

 

*************************************

 

நர்த்தனமாடும் கால்களைப் பிடித்திழுத்து சென்று நறுக்கி
மரத்தின் கிளையிணுக்கில்
பதியம்செய்து சாணியுருட்டி வைத்து இரசிக்கும் கண்களின் வழியேத் தெரியும் குரூரத்தின் சூடு வான் முழுதும் பரவி,விண்மீன்களாகி “டொப் டொப்” என்றுவெடிக்கும் தூவானமாக!

 

***************************************

 

வெயிலில் பறக்கும் நீரை

யாரும் பறவையென்றழைப்பதில்லை

 

****************************************

siragu ninaivugal1

 

 

பார்த்து கொண்டிருந்த விழிக்குள் ஊடுருவி

நினைத்து கொண்டேயிருந்தான் நினைவுகளை

 

அந்த நாளின் கடைசி நொடியிலிருந்து எப்படியோ தப்பித்திருந்தான்

பார்வையைத் தொலைத்ததால் விழிகளுக்குள் ஊடுருவ எண்ணினான்

அம்புகளால் ஏற்படும் அழிவினால் வில் உடைக்கப்படுகிறது

இரவை உருட்டி சென்று கொண்டிருந்த வண்டை சற்றே நிறுத்தினான்

அதன் விழிக்குள் நுழைந்து
அதன் வழி பயணித்தான்

இன்னொரு நாள் தன்னைத் தன் விழியில் சந்தித்தான்

நடுவில் நிகழ்ந்த எல்லாமே அவன் நினைவிலிருந்து தப்பியிருந்தன.

நினைவோ ஒரு பறவை

 


தவக்களை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கழுத்தறுப்பு (கவிதை)”

அதிகம் படித்தது