பிப்ரவரி 27, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

கவிக்குயில் (சிறுகதை)

மா.பிரபாகரன்

Sep 15, 2018

siragu kuyil1
ஒரு ஆலமரத்தில் குயில் ஒன்று வசித்து வந்தது. ஒருநாள், இரண்டு வழிப்போக்கர்கள் அந்த மரத்தடியில் அமர்ந்து இளைப்பாறினார்கள். அப்போது தற்செயலாய் அவர்கள் மரத்தில் இருந்த குயிலைப் பார்த்தார்கள். அவர்கள் இருவரின் பேச்சும் குயிலைப் பற்றித் திரும்பியது.

“தன்னோட முட்டையக் கூடக் குயில் தானே அடைகாத்துக் குஞ்சு பொறிக்குறதுல்லை! திருட்டுத்தனமாகாகத்தோட கூட்டுல முட்டைய இட்டுட்டு வந்துரும்! காகம்தான் குயிலோட முட்டையையும் சேர்த்து அடை காக்குது! குயில் சரியான சோம்பேறிப் பறவை!”–என்றார்கள் அந்த வழிப்போக்கர்கள். அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த குயிலின் முகம் வாடிவிட்டது. “என்னோட முட்டையை நான் அடை காக்குறதில்லைங்குறது உண்மைதான்! ஆனா இத எப்படி மாத்துறது? இந்த வழிப்போக்கர்கள் சொல்றமாதிரி நான் சோம்பேறிப் பறவை தானா?”–என்று குயில் வருத்தப்பட்டது. மற்ற பறவைகளைப் பற்றி மனிதர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பியது அந்த அப்பாவிக்குயில்.

அந்த மரத்தில் வந்தமர்ந்து ஆலம்பழத்தைக் கொறித்துக் கொண்டிருந்த கிளியிடம் சென்று கேட்டது. “தத்தை மொழிபேசும் கிள்ளை! கீச்சுக் கிளின்னு என்னைப்பத்தி மனுஷங்க உயர்வா பேசுறாங்க!”–என்றது கிளி. அடுத்ததாக குயில் அருகே கோவில் மண்டபத்தில் வசித்து வந்த புறாவிடம் சென்றுகேட்டது. “மாடப்புறா, அமைதிப்புறா, அழகுப்புறா, கொஞ்சும் புறா, சமாதானத் தூதுவன்னு என்னைப் பத்தி மனுஷங்க ரொம்பப் பெருமையாப் பேசுறாங்க!”–என்றது அந்தப் புறா. குயில் அடுத்ததாக ஒருமொட்டைப் பாறைமீது நின்றுகொண்டிருந்த மயிலிடம் சென்றுகேட்டது. “நான் தோகை விரித்தாடினால் காணக் கண்கோடி வேண்டும்னு மனுஷங்க என்னைப் பாராட்டிப் பேசுறாங்க!”–என்றது மயில். குயில் அடுத்தது சிட்டுக்குருவியிடம் சென்றுகேட்டது. “குருவியைப் பார்த்து தான் நாம சுறுசுறுப்பைக் கத்துக்கனும்னு மனுஷங்க எங்களப் பத்திச் சொல்றாங்க!” – என்றது குருவி.

இப்படி குயில் சந்தித்த மற்ற பறவைகள் அனைத்தும் தங்களைப் பற்றி மனிதர்கள் உயர்வாகப் பேசுவதாகத்தான் தெரிவித்தன. நான்தான் சரியில்லையோ? மற்ற பறவைகளை நன்றாகப் படைத்த கடவுள் என்னைமட்டும் நன்றாகப் படைக்காமல் விட்டுவிட்டாரோ? அந்த வழிப்போக்கர்கள் சொல்வதுபோன்று உண்மையில் நான் சோம்பேறி பறவைதானோ? இப்படி பலவாறாக யோசித்து குயில் குழம்பியது. அதற்கு அதன் மீதே ஒரு சுய பச்சாதாபம் வந்துவிட்டது. அது கண்ணீர்விட்டு அழுதபடி ஒரு ஆற்றங்கரையோரம் வந்தமர்ந்தது. சுழித்துக் கொண்டோடிய ஆற்றுநீரின் சலசலப்பைப் போன்று குயிலின் மனமும் அமைதியற்று இருந்தது.

அந்த ஆற்றில் வாசம் செய்துகொண்டிருந்த தேவதை ஒன்று குயிலிடம் வந்தது. அது குயிலை தனது மடியில் வைத்து வாஞ்சையுடன் வருடியபடி “உனக்கு என்னப் பிரச்னை?”–என்று கேட்டது. குயில் தனது வருத்தத்தைச் சொன்னது. இதைக் கேட்ட தேவதை கலகலவென்று சிரித்தது. “இதுக்காகவா வருத்தப்படுற? உன்னோட பலம் உனக்குத் தெரியலை!”–என்றது தேவதை குயில் நிமிர்ந்து பார்த்தது.

“காலநிலை அதாவது பருவங்கள் நாலுவகை! அது கார்காலம், கூதிர்காலம் கோடைகாலம், குளிர்காலம்! அதுல குளிர்காலத்தை முன்பனிகாலம், பின்பனிகாலம்னு இரண்டாப் பிரிப்பாங்க!. கோடைகாலத்தை இளவேனிற் காலம், முதுவேனிற்காலம்னு இரண்டாப் பிரிப்பாங்க!. இதுல இளவேனிற்காலம்தான் நமக்கு வசந்தகாலம்! பின்பனிகாலத்துல இலைகளை உதிர்த்தமரம் செடிகொடிலாம் வசந்த காலத்துலதான் திரும்பவும் இலைகள் துளிர்க்கும்!, பூக்கள் பூக்கும்! வசந்தகாலத்துலதான் மனத்தை வருடும் தென்றல் காற்றுவீசும்! இதமானவெயிலும் இருக்கும்! அப்படிப்பட்ட வசந்தகாலம் வந்துவிட்டதை முதன்முதலா இனிமையாக் கூவி எல்லாருக்கும் தெரிவிக்குறதே நீதான்! அப்படி நீ தெரிவிச்ச பின்னாடிதான் மற்ற பறவைகள் எல்லாம் வரப்போற மழைக்காலத்துக்குத் தேவையான உணவு சேகரிக்குறது, கூடு கட்டுறதுன்னு எல்லா முன்னேற்பாடுகளையும் செய்யுதுங்க!”–என்றது தேவதை.

தன்னைப் பற்றி தேவதை சொல்வதை குயில் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தது. தேவதை தொடர்ந்து பேசியது. “புறா குணுகுறதும் மயில் அகவுறதும் அவ்வளவு இனிமையா இருக்குறதில்ல! இருந்தாலும் அதுக அதைத் தங்களோட பலவீனமா நினைக்குறதில்லை! அது மாதிரி நீ காகத்தோட கூட்டுல முட்டைபோடுறதும் உன்னோட வாழ்க்கைமுறை! அதை நீ பலவீனமா நினைக்கக் கூடாது! உன்னோட பலம் எதுவோ அது மட்டுந்தான் உன் மனசுல இருக்கனும்! அதுதான் உன்னை எப்போதும் உற்சாகமா மகிழ்ச்சியா வைச்சுக்க உதவும்! நான் வர்றேன்!”–என்ற தேவதை அங்கிருந்து மறைந்துபோனது.

மறுநாள் அதிகாலையில் குயில் விழித்துக் கொண்டது. அது ஆலமரத்தின் கிளைகள் ஊடாக அங்குமிங்கும் சிறகடித்துப் பறந்தது. அது பருவநிலையில் ஏதோ மாற்றத்தை உணர்ந்தது. வழக்கத்திற்கு மாறாக குளிர்ச்சியானத் தென்றல் காற்று உடலைத் தழுவிச் சென்றது. சற்று எட்டத்தில் நின்றிருந்த வேம்பு நேற்றுவரை மொட்டையாக இருந்தது. இன்றோ அதில் இளம்பச்சை நிறத்தில் ஏராளம் இலைகள் துளிர்த்திருந்தன. வெள்ளை நிறப்பூக்கள் அரும்பி இருந்தன. வசந்தகாலம் வந்துவிட்டதை குயில் உணர்ந்து கொண்டது. “நான் கவிக்குயில்! வசந்தகாலப் பறவை! அனைவருக்கும் வசந்தம் வந்துவிட்டதை அறிவிக்க வேண்டும்!”– குயில் தன்முனைப்பு காட்டியது. அது மிகவும் அழகாக ‘அக்காவ்…அக்காவ்…!’ என ராகமிட்டுப் பாடி அங்கிருந்த அனைவரையும் துயில் எழுப்பியது. என்ன குழந்தைகளே! உங்கள் வீடுகளின் அருகில் உள்ள மரங்களில் வசந்தகாலத்தில் குயில் கூவுவது உங்கள் காதில் விழுகிறதுதானே?


மா.பிரபாகரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிக்குயில் (சிறுகதை)”

அதிகம் படித்தது