ஜூலை 11, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

கவிக்கோ அண்ணல்(கவிதை)

இல. பிரகாசம்

Jun 3, 2017

Siragu Kaviko

கவிக்கோவே! அண்ணலே! –உன்
கவிதையால் இவ்வுலகை “ஆலாபனை” செய்தாய்
மரபைமீறாது இலக்கணம் துணைகொண்டு
புதுமரபின் வேர்பார்த் தாய்நீ!

புதுக்கவிதை வித்தகனே!
புதுமரபின் கவிக்கோவே! –உன்
எழுத்தால் புதுஉரம் ஊட்டி
எழுச்சியை செய்தாயே!

மேடை தோறும் மணக்கும் -உன்
செந்தமிழால் புதுக்விதை படித்து
எதிர் அமர்ந்த நெஞ்சை மீட்டாய்
கவிக்கோவே! அண்ணலே!

“முத்தமிழின் முகவரி” கண்டு
முத்தெடுத்த கவியண்ணலே! –உன்
முதலெத்தை விதையாய் விதைத்து
சொல்லை விளைவித்தாயே!

எழுதுகோலை ஆறாம் விரலாய்க் கொண்டு
சிலுவையிலிருந்து இரத்தம் வடித்தாயே!
வானம்பாடிக் கவியே! –நீபாடிய
வண்ணம் யாவும் தமிழே மணக்கும்!

புதுவானம் கண்டு கவிபாட சென்றாயோ?
வானில் “பால்வீதி” செய்ய சென்றாயோ?
வண்ணத் தமிழ்பாடிப் புகழ்சேர்த் தாயேநீ!
சொல்வல்லனே! குறுநகைப் புதல்வனே!

உன்கவிக்கு ஏங்கும் “நேயர் விருப்பம்”
உன் “சுட்டு விரலால்” சுழன்றாடுவது!
என்கவிக்கோவே! அண்ணலே! –உன்புகழ்
இவ்வுலகில் வேராய் நீண்டு வாழுமாக!


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிக்கோ அண்ணல்(கவிதை)”

அதிகம் படித்தது