ஜூலை 4, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

கவிஞர் கண்ணதாசனும் அரசியல் கவிதைகளும்

இல. பிரகாசம்

Dec 17, 2016

siragu-kannadasan1

“மாற்றம் எனது மானிடத் தத்துவம்” என்று பாடிய கவிஞர் கண்ணதாசன் தன் அரசியல் வாழ்வில் பல்வேறு மாற்றங்களைக் கண்டார். அவற்றால் அவர் கொண்ட விருப்பு வெறுப்புகளும் ஏராளம். அவைகளை தன் சுயசரிதை நூல்களான மனவாசம் மற்றும் வனவாசத்தில் உரைநடையாக பதிவு செய்திருந்த போதிலும் தன் உணாச்சிகளை வீரியமிக்க கவிதைகளால் எழுதி எழுதித் தன்னை ஆற்றுப்படுத்திக் கொண்டார்.

தன் முரண்பாட்டை வெளிப்படுத்திய தன்னுணர்ச்சிக் கவிஞர்:

“மானிடரைப் பாடி அவர்
மாறியதும் ஏசுவதென்
வாடிக்கையான பதிகம்
மலையளவு தூக்கி உடன்
வலிக்கும் வரை தாக்குவதில்
மனிதரில் நான் தெய்வமிருகம்”

என்று தான் கொண்ட கருத்து முரண்பாடுகளின் உச்சநிலையை வெளிப்படுத்துகிறார். தனது தெய்வமிருகத் தன்மையைத் தன் வாழ்நாளில் போற்றியவர்களை உடன் தூற்றியும் தூற்றியவர்களை மறுநிகழ்வில் போற்றியும் வந்துள்ளதனை அவரே பதிவிடுகிறார்.

கவியரசரின் அரசியல் கருத்து முரண்கள்:

siragu-kannadasan2

பெரியாரின் திராவிடக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அரசியலில் நுழைந்தார். தந்தை பெரியார் மீதும் அறிஞர் அண்ணாவின் மீதும் மிகுந்த பற்றுடையவராய் இருந்தார்.

தி.மு.க வில் இருந்தபோது இந்தி எதிர்ப்பில் அண்ணாவின் கட்டளையை ஏற்று ஓர் அணிக்குத் தலைமையும் ஏற்றார் கவியரசர். அந்நிலையில் இந்தித் திணிப்பை கடுமையாக எதிர்த்து அவர் வீசிய வார்த்தைகள் உக்கிரமானவை.

“இந்திக்குப் பாடை கட்டி
சங்கொடும் பறைமுழக்கி
சட்டியில் கொள்ளி தூக்கி
அங்குல எழும்பு கூட
அகப்படா தழிப்போம் உண்மை”

என்று தன் கோபக் கனல்களை வரிகளால் வீசுகிறார். இந்தி எதிர்ப்பில் கைதுசெய்யப்படடு சிறையில் அடைக்கப்பட்டதில் உள்ளபடியே மிகுப்பெருமையும் கொண்டார்.

பின்னாளில் கருத்து வேறுபாடு காரணமாக தி.மு.க-வில் இருந்து விலகி ஈ.வெ.கி சம்பத்துடன் இணைந்து தம் முதல்போட்டு தமிழ்த் தேசியக் கட்சியையும் தொடங்கினார். பின்னர் அக்கட்சி காங்கிரசோடு இணைக்கப்பட்ட போது தன் கொள்கைகளில் மாற்றம் கண்டார். அதன் விளைவாக அவர் எழுதிய கவிதையே அதை உறுதிப்படுத்துகின்றன. அவ்வரிகள்

“இளகியதோர் காலையில்
புதுடில்லி ஓடுவேன்
இந்தியில் பேசி மகிழ்வேன்”

என்று தன் கொள்கை மாற்றத்தை வெளிப்படையாகவே கவிஞர் அறிவித்தார். பின்னாளில் அவர் எழுதிய “புஷ்பமாலிகா” நூலின் முன்னுரையிலேயே அவர் பின்வருமாறு தன் கருத்தை பதிவுசெய்கிறார்

“புஷ்பமாலிகா என்ற வடமொழி பெயரை விரும்பித்தான் சூட்டினேன். தனித் தமிழில் எனக்குப் பற்றுதலில்லை. மொழிக் கலப்பால் ஏற்படும் தனிச்சுவையை நான் வெறுக்கவில்லை” இவ்வாறாக தன் கருத்து மாற்றத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியவர்தான் கவிஞர் கண்ணதாசன்.

தி.மு.க வில் கவிஞர் இருந்தபோது முரசொலியில் அவர் எழுதிய கவிதை

“இளமீசை புதுமீசை
என்றாலும் தமிழ் உருவில்
வுளர்மீசை கொண்ட இவர்
வற்றாத கலைத் தம்பி
நட்பினுக் கோர் பிசிராந்தை
நம் கருணாநிதி யென்பேன்”

siragu-kannadasan3

என்று மு.கருணாநிதி மீதும் அவர் அளவு கடந்த அன்புகொண்டவராக இருந்தார். அதன் வெளிப்பாடாக கவிஞர் அவர்கள் மு.கருணாநிதி அவர்களை தம் காதலியாக பாவித்து கவிபாடி நவீன ஆழ்வாராகவும் திகழ்ந்தார்.

பின்னர் அவர் கட்சியின் கருத்து வேறுபாட்டால் அவரையும் தூற்றும் நிலைக்கு ஆட்பட்டார். அவர் மீது கடுமையான விமரிசனங்களையும் வைத்தார்.

“வெற்று முரசொலியை
விட்டுவிட்டு நாமெழுந்து
வெற்றி முரசொலிப்போம்”
என்று தன் அதிருப்தி மனநிலையையும் பதிவுசெய்தார் கவிஞர் கண்ணதாசன்.

கவிஞர் போற்றலுக்கும் தூற்றலுக்கும் அறிஞர் அண்ணாவும் இலக்கானவர்தான்.

“தனக்கொரு வாழ்வு தனக்கொரு சுகமென
நினைக்கவும் அறியா நேர்மதியாளர்
அண்ணாத் துரையெனும் அஞ்சாநெஞ்சினர்”
என்றும் தன் வரிகளில் அவர்மீது அவருக்கிருந்த மரியாதையை வெளிப்படுத்துகிறார். இவ்வாறு போற்றுகிற கவிஞரே தூற்றவும் செய்கிறார்.

“எங்கே பகைவரெனச்
சுற்றும் முற்றும் பார்த்தார்
தூங்கி வழிந்திருந்த
தம்பியைத்தான் கண்டான்
தானையினைக் காணவில்லை”
போன்ற வரிகள் மூலம் அவரைச் சற்று எள்ளி நகையாடவும் செய்கிறார்.

siragu-kannadasan4

காங்கிரசில் இணைந்த போது நேருவைப் பற்றி பாடிய கவிதையில் கடவுளாகவே உருவகிக்கிறார்.

“போதிமரப் புத்தன்
போய்விட்டான் என்றிருந்தோம்
பாதிவழி போன அவன்
பண்டிதராய்த் திரும்பி வந்தான்
ஆதி மகன் ஏசுபிரான்
ஆடங்கிவிட்டான் என்றிருந்தோம்
தாவியவன் பாரதத்தில்
ஜவகர்லால் ஆகிவந்தான்
ஏசுவார் தம்மிடையே
ஏசு எனப் போர் படைத்த
ஏசு மகனே வாழ்ந்தது போல்
பாமகன் வாழுகின்றான்”
என்று அவரைப் போற்றிப் புகழ் பா பாடுகின்றார் கவிஞர்.

தி.மு.க வில் கண்ணதாசன் இருந்த போது இந்தி திணிப்பைக் கண்டித்தும் நேருவை விமரிசனமும் செய்துள்ளார்.

“என் சொல்வேன் சுட்டதொரு
கத்திரிக்காய் என்பேனா?
கருங்குதிரை முகமென்று
சித்தரித்துச் சொலவேனா?
சப்பியபின் போட்டதர மென்றுரைப்பேனா?
பிள்ளை பறிகொடுத்த பேதையென உட்கார்ந்த
பேரறிஞர் நேருமுகம் பிறிதொன்றுக் குவமையிலை
பழம்போன வாழைத்தோல் பக்குவமே நேருவமை”

ஜவகர்லால் நேரு இறந்த போது அதற்காக மிக வருத்தமுற்று இரங்கற் பாவையும் பாடுகிறார்.

“ரோஜா மலரே ஏன் மலர்ந்தாய் -எங்கள்
ராஜா இல்லையே மார்பினில் சூட”
என்று புகழஞ்சலி பாடித் தம் கருத்து வேறுபாட்டையும் தகர்த்தெறிகின்றார்.

கவிஞர் கண்ணதாசன் அதிகமாக நேசித்ததும் எழுதியதும் காமராசரைத்தான். இந்திராகாந்தி மீது அவர் கொண்ட அவளவற்ற அன்புதான் காமராசரையும் தன் எழுத்துக்களால் தாக்கவும் செய்தார்.

“கோவிலில் ஒரு பூனைக் குஞ்சுகளும்
குட்டிகளும் சில உண்டு- தங்கள்
கோட்டையென வைத்துக் கொண்டு அவை
காவலிருந்தன கோவில் கணக்குக்கு”
என் தாக்கியும் எழுதியுள்ளார்.

தான் காங்கிரசில் இணைய முன்வந்தபோது அதற்காக அவரிடம் அனுமதி பெறவேண்டி காத்திருக்கின்றேன் என்ற தன்மையில் அவர் எழுதிய பாடல் தான்” அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி சேரும் நாள்பார்க்கச் சொல்லடி” என் திரைப்படப் பாடல் எனவும் கவிஞரது நெருங்கியவர்கள் உறுதிகூறுகின்றனர்.

siragu-kannadasan6

காமராசரின் எளிமையை கண்டு வியந்து அவர்மீதும் பற்று கொண்டார்.

“சொத்து சுகம் நாடார்! சொந்தந்தனை நாடார்!
பொன் னென்றும் நாடார்! பொருள் நாடார்!
-தான் பிறந்த
நாடென்றே நாடித் தன் நலமென்றும் நாடாத”
அவரது பொதுவாழ்வின் தியாகங்களை எண்ணி வியந்து கவிஞர் அவரைப் போற்றிக் கவிபாடுகிறார்.

“சீராட்டும் தாய் தவிரச்
சொந்தமென்று ஏதுமில்லை!
துணையிருக்கு மங்கையில்லை!
தூயமணி மண்டபங்கள்
தோட்டங்கள் ஏதுமில்லை!
ஆண்டி கையில்கூட ஓடிருக்கும்
அதுவும் உணக்கில்லையே!”
இவ்வரிகளால் அவர்மீது அவருக்கிருந்த அரசியல் தூயவரை தாம் கண்டதாகவே அவர் எண்ணிக் கொண்டார். அவர் உடல் நலம் குன்றியிருந்த நிலையில் அவரது நலம் விசாரிக்கவே அவர் எழுதிய பாடலாக “நலந்தானா? உடலும் உள்ளமும் நலந்தானா?” என்று அவரது நெருங்கியவர்கள் பதிவுசெய்துள்ளனர்.

siragu-kannadasan5

கவியரசர் தன் அரசியல் வாழ்வில் தூற்றாமல் போற்றி மட்டுமே கவிபாடியது ஒன்று பெரியாரைப் பற்றி. அவரோடு கருத்து வேறுபட்டிருந்தாலும் அவர் மீது மட்டும தன் விமரிசனத்தை வீசவில்லை. பெரியாரின் கொள்கைகளை முதலில் ஏற்றதும் பின் அவற்றிலிருந்த விலகிய போதும் அவர் மீது மதிப்போடுதான் இருந்தார்.

“சாதியெனும் நாகத்தைத் தாக்கித் தாக்கிச்
சாகடித்த பெருமை அவர் தாடிக்கே உண்டு
நாதியில்லார் நாதி பெற நாப்படைத்தார்
நாற்பத்து ஐங்கோடி மக்களுக்கும்
பேதமிலா வாழ்வுதரப் பிறந்து வந்தார்”
என்று பெரியாரின் செயல்பாடுகளை ஆதரித்தும் போற்றியும் கவி புனைகிறார் கண்ணதாசன்.

அவர் அம்மையார் இந்திராகாந்தியின் செயல்பாடுகளினால் மிகவும் கவரப்பட்டார். நெருக்கடி நிலை பிரகடனம் செய்த போது அதனை ஆதரித்துப் பேசியவர் கண்ணதாசன். அவர் மீது கண் மூடித்தனமான நம்பிக்கையை கொண்டிருந்தார். இந்திராகாந்தியாருக்காக மற்றவர்களை தாக்கிப் பேசவும் செய்தார்.

“தீக்கனல் போலவள் நின்றாள்-அட
போர்க்களம் வாருங்கள் என்றாள்- தங்கள்
பக்கத்தில் நீதியில்லாத மனிதர்கள்
பார்வையின் கோலத்தைக் கண்டார்”
என்ற வரிகளால் இந்திராகாந்தியினுடைய அதிரடிச் செயல்பாடுகளுக்கு பேராதரவினை அளித்துக் கவிபாடினார் கவிஞர் கண்ணதாசன்.

தனது அரசியல் வாழ்வில் ஏற்பட்ட சறுக்கல்களுக்கான காரணத்தை தானே விமர்சிக்கவும் தயங்கியதில்லை. எவ்வித சுயவிருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தன்னையே ஆய்ந்தறியும் பக்குவம் அவருக்கு ஏற்பட்டிருப்பதில் வியப்பேதும் இருந்திருக்க முடியாது. அரசியலில் கவிஞர் கட்சிகள் மாறியபோது அதன் கொள்கைகளில் பிடித்தமாக இருக்க வேண்டுமென எண்ணியிருக்கிறார். அது அங்கே தோல்வியடையவே அங்கிருந்து வெளியேறினார் என்பதே பொருந்தும்.

பார்வை நூல்கள்:

1.கண்ணதாசன் கவிதைகள் (ஏழு தொகுதிகள்)
2.புஷ்பமாலிகா
3.மனவாசம்- சுயசரிதை
4.வனவாசம்-சுயசரிதை


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிஞர் கண்ணதாசனும் அரசியல் கவிதைகளும்”

அதிகம் படித்தது