மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் நேர்காணல்

சிறகு நிருபர்

Dec 26, 2015

kasi aananthanகேள்வி: உங்கள் பிறப்பு, இளமைக்காலம், பூர்வீகம் பற்றி கூறுங்கள்?

பதில்: நான் தமிழீழத்தின் தென்பகுதியில் மீன்பாடும் தேன்நாடு என்று அழைக்கப்படுகின்ற மட்டக்களப்பு பகுதியில் நாவற்குடா என்னும் சிற்றூரில் பிறந்தேன். சித்திரை மாதம் 4ம் நாள் 1938ம் ஆண்டு நான் பிறந்தேன். 4.4.1938 என்னுடைய பிறந்த நாள். நாவற்குடா என்னுடைய அம்மாவினுடைய ஊர். அதே மட்டக்களப்பில் அமிர்தகலி எனது தந்தையாருடைய ஊர். அங்கேதான் நான் வளர்ந்தேன். இந்த அமிர்தகலி என்கிற சிற்றூரையும், நாவற்குடா என்கிற சிற்றூரையும் இணைப்பதுபோல, மீன்கள் பாடுவதாகச் சொல்லப்படும் அந்த அழகிய நீல உப்பேரி, 15 கல் தொலைவுக்கு நீண்டு நெடிதாகிக் கிடக்கிறது. அந்த உப்பேரி, கடலோடு தொடர்புடைய ஏரி.

kasi aananthan nerkaanal1அந்த ஏரியில் முழு நிலவு வேளையில் படகிலேறி ஊர்ந்து, அந்த ஆற்றில் படகைச் செலுத்துகிற சவல் என்று சொல்லுகிற அந்தத் துடுப்பை, தோனியிலிருந்து ஆற்றின் உள்ளே விட்டு அதன் மறுமுனையை காதிலே வைத்து கேட்டால் ஒரு வீணை இசைப்பதைப் போன்ற ஒரு இனிய ஓசை அந்த ஆற்றிலிருந்து எழும். அதைத்தான் மீன் பாடுவதாகச் சொல்லுகிறார்கள். உலகில் இப்படியான இசை வேறு எங்கோ ஒரு நாட்டில்தான் இருப்பதாகச் சொன்னார்கள். அமெரிக்க ஆய்வாளர்கள் வந்து இதை ஆய்வு செய்திருக்கிறார்கள். அது ஆழமாகக் கல்லில் இருக்கின்ற அந்த கருங்கற் பாறையில் ஒட்டியிருக்கிற பகுதியில் அலைமோதி எழுகிற இசையா அல்லது ஊறி பாடுகிற இசையா அல்லது மீன்கள்தான் எழுப்புகிற இசையா என்று இன்னும் அவர்கள் சரியாக கண்டறிய முடியவில்லை.

மட்டக்களப்பு தமிழகம் தந்த ஈடு இணையற்ற முத்தமிழ் அறிஞர் சுவாமி விபுலானந்த அடிகளார், நீரற மகளிர் என்று இந்த மீன் இசையை இசைக்கிறவர்களை அவர் உருவகப்படுத்தி நீரற மகளிர் என்று சொன்னார். மட்டக்களப்பு அழகான ஊர். அந்த தென் தமிழ் ஈழத்தில் உணவுக்கு பஞ்சமில்லை எந்த காலத்திலும். அங்கு பச்சைப்பசேல் என்ற வயல்கள், அந்த வயல்களை வளமாக வைத்திருந்த நீர் நிரம்பிய குளங்கள், அதே போன்று அழகான பண்பட்ட வளமிக்க அந்த நிலத்தில் பச்சைப்பசேலென்ற புல்தரைகளில் மேயும் ஆநிரைகள். சிங்களப் பகுதிக்குக்கூட இன்றும் தயிர், பானை பானையாக அனுப்பப்படுகிறது என்றால் அது மட்டக்களப்பிலிருந்துதான் அனுப்பப்படுகிறது. அந்த அளவிற்கு கால்நடை வளம் கொண்ட ஒரு மண் மட்டக்களப்பு தமிழகம்.

kasi aananthan nerkaanal5அதுமட்டுமல்ல நீர்நிலைகளிலும், குளங்களிலிருந்து வரும் மீனும் சரி, உப்பேரியிலிருந்து வரும் மீனும் சரி, அதேபோன்று கடலிலிருந்து பெறப்படுகிற மீனும் சரி, பல வகையான மீன்களும் விளைகிற நிலமாக மட்டக்களப்பு தமிழகம் இருக்கிறது. மட்டக்களப்பு தமிழகம் அழகான ஒரு மண் என்பது மட்டுமல்ல, வளமான ஒரு மண் என்பதையும் நான் குறிப்பிட வேண்டும். அப்படியான வளம் நிறைந்த மண்ணில் கலையும் நிரம்பி வழிந்தது. இரவு வேளைகளில் சிற்றூர்களில் களறி அமைத்து விடிய விடிய நடைபெறுகிற நாட்டுக்கூத்து, அங்கே எழும்புகின்ற சலங்கை ஒலி, சிற்றூர் மக்களின் மத்தள இசை காதைத் தொட்டு மனதைப் பறிக்கும். அந்த மண்ணில்தான் நான் பிறந்தேன்.

நான் பிறந்து, சின்ன வகுப்புகள் என்று சொல்லுகிற சிறிய குழந்தைகள் படிக்கிற வகுப்புகள் எல்லாம் அமிர்தகலி பள்ளியில். அதற்குப் பிறகு நகருக்கு வந்து மட்டக்களப்பில் அரசடி பள்ளியில் பயின்று பின்பு அங்கு ஐந்தாவது அகவையில் புலமை பரிசில் பெற்று, நான் வந்தாரு மூலை பெரிய அரசுப் பள்ளிக்குச் சென்றேன். அங்கு புலமை பரிசில் வசதியோடு நான் கல்வியைத் தொடர்ந்தேன். திரும்பவும் மட்டக்களப்புக்கு வந்து அங்கு புகழ் வாய்ந்த மத்தியக் கல்லூரி என்று சொல்லுகிற கல்லூரியில் பயின்றேன். அங்குதான் என்னுடைய பன்னிரெண்டாவது வகுப்பை முடித்துக்கொண்டு நான் தமிழ்நாட்டுக்கு வந்தேன். இங்கு பச்சையப்பன் கல்லூரியில் என்னுடைய படிப்பை காஞ்சியிலும், சென்னையிலுமாய் தொடர்ந்தேன். என்னுடைய தொடக்ககால வாழ்க்கை அந்த மட்டக்களப்பு மண்ணோடு ஒன்றிய வாழ்க்கை, அந்த அழகான மண்ணை சின்னஞ்சிறிய என்னுடைய அகவையிலேயே இன்னும் சொல்லப்போனால் என்னுடைய பத்துக்கும் பதினைந்துக்கும் இடைப்பட்ட அகவை காலத்திலேயே, அந்த மண்ணில் அப்பொழுதே தொடங்கிவிட்ட சிங்களவர்களின் மண் பறிப்பு மட்டக்களப்பையும் அதை ஒட்டிய அம்பாறை மண்ணிலும் நிகழ்ந்த தமிழர்களுடைய ஊர்களைப் பறித்து சிங்கள ஊர்களாக மாற்றிய கொடுமையான காலம்.

Fishermen cast nets on the lagoon in Batticaloa, Sri Lankaஅழகாக தோனியில் படகு செலுத்தி முழுநிலவில் மீனிசை சுவைத்து வாழ்ந்த அந்த மக்களின் அந்த உப்பேரியில் சிங்களவனின் மீன் பிடிக்கும் கொடிய படகுகள், பொரிப்படகுகள் பாய்ந்து விலங்குத்தனமாக ஊளையிட்டுச் சென்ற காலம். இவையெல்லாம் அந்த இன அழிப்பின் தொடக்கம். இவைகள் சின்ன அகவையில் நான் கண்களால் பார்த்தவை. இந்த சூழலில்தான் அந்த மண்ணில் என்னுடைய வாழ்க்கை தொடங்கிற்று. விடுதலை மீது எனக்கு இருந்த அந்த வாஞ்சை தொடங்கிற்று. இந்த மண்ணில்தான் நான் என்னுடைய மண்ணை நேசிக்கிறவனாக மட்டுமல்ல, அந்த மண்ணுக்காகப் போராட வேண்டுமென்று உறுதி கொண்டவனாக நான் உருவாகினேன், வளர்ந்தேன்.

கேள்வி: தமிழகத்தில் தமிழின் நிலை எவ்வாறு உள்ளது? இதை சீர்படுத்த உங்களின் யோசனைகள் என்ன?

nov 14th 2015 newsletter4பதில்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு மிகப்பெரிய துயரமான நிலை என்ன என்றால் தமிழ்நாட்டில் இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழினம் இருக்குமா? என்ற கேள்வி ஒரு பெரிய துயரமான நிலை. இதை தமிழ்நாட்டிலுள்ள தலைவர்களும் சரி, அறிஞர்களும் சரி, யாரும் இன்னும் உணர்ந்து விரைந்து செயல்படுவதாக எனக்குத் தெரியவில்லை. ஐ.நா மன்றத்தின் ஒரு ஆய்வுக் குழு தமிழ்மொழி அழிந்துவிடும் நிலையில் இருக்கிறது, உலகில் அழியும் நிலையில் உள்ள மொழிகளில் தமிழும் ஒன்று என்று கருத்து தெரிவித்த பின்பும், தமிழ்நாட்டிலுள்ள தலைவர்கள் சரி, அறிஞர்கள் சரி, இந்த மண்ணில் அதற்கு ஒரு தடுப்பு நடவடிக்கையாக எதையும் எடுத்ததாக எனக்குத் தெரியவில்லை, மிகப்பெரிய துன்பம். அதை நாம் இந்த மண்ணில் பார்க்கிறோம். ஒரு காலத்தில் அம்பேத்கர் அவர்கள் சொன்னார், அவரைப்போன்று பல அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள், இந்தியா முழுவதும் தமிழர்கள் வாழ்ந்தார்கள், 3500 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள்தான் வாழ்ந்தார்கள் என்று சொன்னார்கள்.

vigneshwaran urai3பாவாணர் போன்ற தமிழ் மொழியியல் அறிஞர்கள் எல்லாம் அதை உறுதி செய்தார்கள். அப்படி இந்தியா முழுவதும் தமிழ் மொழி பேசுகிற மக்கள் வாழ்ந்த காலம் ஒன்று இருந்தது. அந்த காலம் பின்பு மேற்கிலிருந்து வந்து வடக்கில் நுழைந்து வடக்கு வழியாக நுழைந்து பாய்ந்த ஆரியம், அதனுடைய பெரிய தாக்கத்தால் வடக்கிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா முழுவதும் வாழ்ந்திருந்த தமிழினம் தேய்ந்து சுருங்கிப் போயிற்று. வந்தவர்களின் வாயிலிருந்த மொழி, இந்தியா முழுவதும் வட இந்தியாவிலும் வாழ்ந்த தமிழர்களின் வாயிலிருந்த தமிழோடு நுழைந்து வட இந்திய தமிழர்களும் அவர்களும் மொழி மாறி, இனம் மாறிப் போனார்கள் என்பதுதான் உண்மை என்கிறார் பாவாணர். பாவாணர் என்ன சொல்கிறார் என்றால் தெற்கிந்தியாவில் வாழுகிற தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், தமிழர்கள் மட்டும் திராவிடர்கள் அல்ல, வடக்கில் வாழுகிற அனைத்து இந்தியர்களும் திராவிடர்கள்தான், அவர்களும் ஆரியர்களின் மொழி கலந்து அழிந்துபோன பழைய தமிழர்கள்தான், வட திராவிடர்கள். தெற்கில் இருப்பவர்கள் தென் திராவிடர்கள் என்கிறார் பாவாணர். ஆக இந்தி மொழி பேசுகிறவனாகட்டும், வங்கமொழி பேசுகிறவனாகட்டும், ஒரிசா மொழி பேசுகிறவனாகட்டும், மராத்தி மொழி பேசுகிறவனாகட்டும் அல்லது அஸ்ஸாம் மொழி பேசுகிறவனாகட்டும், பஞ்சாபி மொழி பேசுகிறவனாகட்டும் எவனாக இருந்தாலும் வடக்கில் வாழுகிற இந்தியன் பழைய தமிழன்தான் என்கிறார் பாவாணர்.

முந்தி வடக்கில் பாய்ந்த மொழி வடமொழியோடு கலந்து தங்கள் மொழியை மறந்து புதிய புதிய மொழிகளாக இனங்களாக அவர்கள் உருவாகினார்கள். காலப்போக்கில் தெற்கில் ஆரியம் பாய்ந்த பொழுது, நாம் கி.பி ஆறாம் நூற்றாண்டளவில் தெலுங்கர்களாக, கன்னடர்களாக மாறினோம். ஒரு ஐநூறு ஆண்டுகளுக்கு முன்புதான், மிக அண்மையில்தான் நாம் மலையாளிகளாக மாறினோம். சேர, சோழ, பாண்டியர் என்ற மூவேந்தர்களில் ஒரு பிரிவினராக வலிமையாக அரசு கொண்டு வாழ்ந்த நாம், சேரர்களாகிய நாம், மலையாளிகளாக ஐநூறு ஆண்டுகளுக்கு முன்புதான் மாறினோம். பாண்டியனும், சோழனும் பார்த்துக்கொண்டிருக்க சேரன் மலையாளியாக மாறிப்போனான், இது எப்படி நடந்தது. இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழினம், இன்று இந்தத் தமிழினத்தினுடைய நிலை இந்தியாவில் என்ன? இந்தியாவில் இருக்கிற 29 மாநிலங்களில் ஒரு மாநிலம் தமிழ்நாட்டில் மட்டும்தான் இன்று தமிழ் இருக்கிறது. இது ஒரு மிகப்பெரிய இனத்தின் வீழ்ச்சி என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். பண்டை பெருமை பேசிக்கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை என்று நான் மேடை தோறும் சொல்லி வருகிறேன். நீங்கள் அழிந்துபோனீர்கள், எஞ்சியிருக்கிற ஒரு மாநிலம் தமிழ்நாட்டையாவது காக்க நீங்க தவறீனீர்களானால், தமிழ் வடமொழி கலந்து இன்னொரு மொழியாய் மாறிவிடாமல் உங்களைக் காத்துக்கொள்ளவில்லை என்றால் அழிந்து போவீர்கள் என்று நான் சொல்லி வருகிறேன்.

tharkaalak kalvi murai3ஆரியமொழி என்று சொல்லுகிற பொழுது, வடமொழி என்ற சொல்லுகிற சமற்கிருத மொழி கடந்த காலங்களில் இந்தத் தமிழ் மொழியை அழித்தது. அது ஒரு கீழை ஆரிய மொழி. இந்தியாவிலிருந்த அனைத்து மொழிகளும் சமற்கிருதம் கலந்து தமிழோடு கலந்து அழிந்து போயிற்று, திராவிடமாயிற்று. ஆனால் தமிழ்நாட்டில் மேலை ஆரியமொழியான ஆங்கிலம் கலந்து தமிழ் அழிந்துகொண்டிருக்கிறது. இதுவும் ஒரு ஆரிய மொழி கலப்புதான். இதை எதிர்த்து போராடவேண்டும் என்று சொல்கிறேன். இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொல்கிறேன். என்ன வழி தமிழ்நாட்டில்? மிகக் கொடுமையாக இருக்கிறது. நடைமுறையில் பார்த்தால் மிகப்பெரிய கொடுமையாக இருக்கிறது. ஒரு சிற்றூரைச் சேர்ந்த படிப்பறிவில்லாத ஒரு பெண் இரவை Night என்றுதான், இன்று சொல்கிறார். எந்த சிற்றூருக்குப் போனாலும் இதை நீங்கள் பார்க்கலாம். இரவு மறந்து போயிற்று. வழமையான பேச்சை நான் சொல்லுகிறேன். வழமையான பேச்சில் சிற்றூர்களில்கூட உப்பு என்பதை salt என்றும், மிளகு என்பதை pepper என்றும் சொல்லுகிற சமையலறைகள் தமிழ்நாட்டில் இல்லாத வீடுகள் கிடையாது. படித்தவர்களும் சரி, படிக்காதவர்களும் சரி கூச்சப்படுகிறார்கள். தமிழில் சோறு என்று சொல்லக் கூச்சப்பட்டு rice என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் சமற்கிருதம் கலந்து தமிழை தமிழ்நாட்டில் அழித்துக்கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. மணிப்பிரவாள நடை என்று அது அழைக்கப்பட்டது. அதை எதிர்த்து மறைமலைஅடிகள் வீறுகொண்டு போராடினார். அன்றைக்கு சாதம் என்று எல்லோரும் சொன்னார்கள் வீடுகளில் சாப்பிடுவதை. அதை சோறு என்று மறைமலைஅடிகள் மாற்றினார். இடையில் கொஞ்சகாலம் எல்லோரும் சோறு என்று சொன்னார்கள். இப்பொழுது ஆங்கிலத்திற்கு தாவி rice என்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள், எல்லாமே அப்படித்தான். ஒருகாலத்தில் ஒரு கூட்டம் கூடுவதானால் அதற்கு ஒரு குழுவை அமைப்பதானால் ‘அக்கிராசரனர்’ என்று சொன்னார்கள். அதை மறைமலையடிகள் ‘தலைவர்’ என்று மாற்றினார். இன்று அக்கிராசரனர் என்ற வடமொழியை ஒழித்து தலைவர் என்று ஆக்கிய தமிழ்நாட்டில், இன்று president என்று சொன்னால்தான் விளங்கும், தலைவன் என்று சொன்னால் எவருக்கும் விளங்காது, புரியாது. ஆகவே இப்படியான ஒரு கொடுமை ஆங்கிலத்தில் தோய்ந்து, ஒரு ஐம்பது விழுக்காடுக்கு மேல் ஆங்கில மொழி கலந்து தமிழ்நாட்டில் தமிழர்கள் பேசுகிறார்கள். இந்த வேகத்தில் போனால் ஒரு ஐம்பது ஆண்டுக்குள் இவர்கள் இங்கு கன்னடர்களாக, தெலுங்கர்களாக, மலையாளிகளாக மாறியதைப்போல் தமிங்கர்களாக மாறிவிடுவார்கள் என்பது உறுதி.

அண்மையில் நான் வெளியே சென்றிருந்தேன். ஈழத்தைச் சேர்ந்த ஒரு தம்பியோடுதான் சென்றேன். அவன் எனக்கு சாட்சி. ஒரு கடை இன்றும் இருக்கிறது, நீங்களும் பார்க்கலாம். ஒரு கடையில் ஒரு பெயர் பலகை போடப்பட்டிருந்தது. உங்களுக்குத் தெரியும் பீ என்ற சொல் மலத்தைக் குறிக்கிற இழிவான சொல், நம்முடைய ஊரில் அப்படித்தான் இயல்பாக சிற்றூர்களில் அழைக்கிறார்கள். பீ என்றால் மலம். ஆனால் அவன் கடையில் மேலே பெயர் பலகை போட்டிருந்தான், இங்கே பீப் பிரியாணி கிடைக்கும் என்று போட்டிருந்தான். பீப் பிரியாணி என்றால் என்ன தெரியுமா? நாங்கள் அசந்து போனோம். Beef மாட்டிறைச்சியில் பிரியாணி கிடைக்கும் என்பதை பீப் பிரியாணி கிடைக்கும் என்று அவன் எழுதியிருந்தான். இப்படிப்பட்ட கொடுமை இந்த தமிழ்நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

kasi aananthan nerkaanal7விருத்தாசலம் என்ற ஒரு தமிழறிஞர் அண்மையில் காலமானார். மிகப்பெரிய அறிஞர், தஞ்சையைச் சேர்ந்தவர். அவர் எனக்கு ஒரு நாள் அழுதுகொண்டே சொன்னார், ‘அங்கிருந்து பேருந்தில் வருகிற பொழுது ஒரு உணவகத்திற்குப் போனேன் தம்பி, அங்கு அந்த உணவகத்தில் எழுதி வைத்திருக்கிறான் ‘இங்கே அரை சாப்பாடு அதற்கு எவ்வளவு விலை என்று போட்டு ஆப் சாப்பாடு, கீழே புல் சாப்பாடு 4ரூபாய், 10 ரூபாய்’ என்று போட்டு வைத்திருக்கிறான். புல் சாப்பாடு இங்கே கிடைக்கும் என்று போட்டு வைத்திருக்கிறான், விலையும் போட்டிருக்கிறான். புல் சாப்பாடு என்றால் என்ன தெரியுமா தம்பி, full சாப்பாடு முழு சாப்பாடு என்பதை புல் சாப்பாடு என்று, இந்த மாடுகளெல்லாம் அங்கேதான் புல் சாப்பிடப் போகின்றன’ என்று என்னிடம் சொன்னார். இப்படியான கொடுமை இன்று தமிழ்நாட்டில் இயல்பாக இருக்கிறது. நீங்கள் தமிழ்நாட்டின் நடுவில் நின்று சுற்றி இருக்கிற கடைகளின் பெயர் பலகைகளைப் பார்த்தால் நீங்கள் லண்டனில் இருப்பதாக உணர்வீர்கள். ஒரு பெயர் பலகையிலும் தமிழ் இல்லை, எங்கு பார்த்தாலும் ஆங்கில எழுத்துக்கள். இல்லையென்றால் ஆங்கில சொல்லை தமிழில் எழுதியிருப்பான் அதாவது Stores என்றால் ஸ்டோர்ஸ் என்று எழுதியிருப்பான். வெட்கமாக இருக்கிறது.

இது தமிழ்நாடு, வெள்ளைக்காரன் போய் 66 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. இங்கே மேடையிலேறி பட்டிமன்றங்களுக்கு குறைச்சல் கிடையாது தமிழ்நாட்டில். தமிழ்விழாக்களுக்கு குறைச்சல் கிடையாது தமிழ்நாட்டில். இயல்-இசை-நாடகவிழா மேடையில் வைக்கிறார்கள், இயக்கங்கள் நடத்துகின்றன, மன்றங்கள் நடத்துகின்றன, வானொலிகள் நடத்துகின்றன, தொலைக்காட்சிகள் நடத்துகின்றன என்ன பயன்? எல்லாவற்றிலும் ஆங்கிலம்.

kasi aananthan nerkaanal9உங்களுக்குத் தெரியவேண்டும், தமிழ்நாட்டில் எல்லோரும் விழுந்து விழுந்து பார்க்கிற நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, அதில் பேசுகிறவர்கள் அத்தனைபேரும் பேசுவது அறுபது விழுக்காடுக்கு மேல் ஆங்கிலம் கலந்த தமிழ். எல்லோரும் பார்க்கிறார்கள் சூப்பர் சிங்கர். நான் கேட்கிறேன் சூப்பர் சிங்கர் என்று ஒரு நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் பெயர் வைப்பது இழுக்கா இல்லையா? சொல்லுங்கள். இயல் இசை நாடகம் இவற்றில் தமிழில் ஒன்று இசை, அந்த இசையை தமிழ்நாட்டில் இசை என்று சொல்லவில்லையென்றால், இதைவிட வெட்கக்கேடு என்ன இருக்கிறது. ஏன்! ஒரு இசைமேதை நிகழ்ச்சி அல்லது இசை வல்லுனர்கள் நிகழ்ச்சி, கலைமாமணி நிகழ்ச்சி, இசைமாமணி நிகழ்ச்சி என்று ஏதாவது ஒரு பெயரை வைக்கலாம். சூப்பர் சிங்கர் என்று ஒரு நிகழச்சியை நடத்திக்கொண்டு அதற்கு மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது. ஆகவே தமிழ்நாடு, தாய்மொழியைக் காக்க முன்வராமல், அதை ஒரு பொருட்டாகக் கருதாமல் தன்னுடைய தலையில் தானே மண்ணைப்போட்டு அழிந்து கொண்டிருக்கிறது.

ஆங்கிலேயன் ஆட்சி காலத்தில் இந்த அளவு ஆங்கிலம் தமிழில் கலந்ததில்லை தமிழ்நாட்டில் மறந்துவிடாதீர்கள். ஆங்கிலேயன் ஆட்சிகாலத்தில் ஒரு திரைப்படத்திற்கும் ஆங்கிலப் பெயர் கிடையாது. இன்று ஆங்கிலப்படங்களோடு திரைப்படங்கள் வருகின்றன. அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் ஆங்கிலப்பெயரோடு ஒரு இதழ் வந்தது கிடையாது. இப்பொழுது எத்தனையோ தமிழ் வார இதழ்கள் ஆங்கிலப்பெயரோடு வருகின்றன. வெள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் பேசியவர்கள், இரவை night என்று சொன்னது கிடையாது. ஆகவே ஆங்கிலேயன் ஆட்சி காலத்தில் ஒன்று நடந்திருந்தால், அது திணிப்பு. இன்னொரு அரசு திணிக்கிறது, இன்னொரு மொழிக்காரன் திணிக்கிறான் என்று சொல்லலாம். எதுவும் கிடையாது. அல்லது இந்திய அரசு திணிக்கிறதா? ஆங்கிலத்தை என்றால் அதுவும் கிடையாது. தமிழன் தானாகத் தனது தலையில் மண்ணைப் போடுகிற ஒரு மிகக் கொடுமையான வரலாற்று நிகழ்வு இன்று தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.

mozhi2இதைத் தடுப்பதற்கு இரண்டே இரண்டு வழிகள்தான் உண்டு என்று நான் கருதுகிறேன். ஒன்று உடனடியாக தமிழைக் கல்வி மொழியாக்க வேண்டும் தமிழ்நாட்டில், அதற்கு உச்சநீதிமன்றத்திற்கு சிலர் போனார்கள், அங்கே இன்னும் தீர்ப்பு வராமல் முடங்கிக் கிடக்கிறது. எதையும் பற்றிக் கவலைப்படாமல் தூக்கி எறிந்து நாங்கள் தமிழில்தான் கல்வி கற்போம் என்று சொன்னால், சிலவேளை சட்டமன்றம் கலையும் நிலை வரலாம். ஆனால் திரும்பவும் வருகிற பொழுது அதை விட கூடுதலான மக்கள் வாக்களித்து அதை நிறைவேற்றுகிற கட்சி திரும்பவும் ஆட்சிக்கு அமையும். அது ஒரு போராட்டமாக அமையும். ஒரு போராட்ட உணர்வுள்ள ஒரு தமிழ்நாடு, போராட்ட உணர்வு தமிழ்நாட்டில் இல்லையென்று நான் சொல்லமாட்டேன். தமிழீழ விடுதலைக்காக தனது உடலில் எண்ணெய் ஊற்றி எறிந்து சாம்பலாய்ப்போன தமிழர்கள், முத்துக்குமரன் போன்றவர்கள் பிறந்த மண் இந்த மண். தமிழ்மொழிக் காப்புக்கான போராட்டம், இந்திக்கு எதிரான உணர்வுக்காக தீக்குளித்து இறந்தவன் இந்த மண்ணில் இருக்கிறான், ஆங்கிலத்திற்கு எதிராக.

இந்தி தமிழை இந்த அளவிற்கு அழித்தது கிடையாது. சமற்கிருதம் கூட இந்த அளவிற்கு அழித்தது கிடையாது. இன்று தமிழ் மிக மிக மிக மோசமாக அழிந்து கொண்டிருக்கிறது, இழிவான நிலையில் இருக்கிறது. ஏனென்றால் சமற்கிருதம் என்றைக்கும் கல்வி மொழியாக இருந்ததில்லை, ஆங்கிலம் கல்விமொழி. சமற்கிருதம் என்றைக்கும் வணிக மொழியாக இருந்ததில்லை, ஆங்கிலம் வணிக மொழி. சமற்கிருதம் என்றைக்கும் உலகம் தழுவிய தொடர்பு மொழியாக இருந்ததில்லை, ஆங்கிலம் தொடர்பு மொழி, ஊடக மொழி. ஆகவே ஆங்கிலம் முழுவீச்சில் தமிழை அழித்துக் கொண்டிருக்கிறது. இதை எதிர்த்து தடுத்து நிறுத்தவேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டு தலைவர்களுக்கும் உண்டு, அறிஞர்களுக்கும் உண்டு. அவர்கள் அதில் ஈடுபாடு கொண்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

ஆகவே 29 மாநிலங்களை இந்தியாவில் இழந்து தனிமாநிலமாக நிற்கும் தமிழன் அவனுடைய முப்பதாவது மாநிலத்தையும் இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகளில் இழந்து இந்தியாவில் தமிழினமே இருந்ததில்லை, இருந்தது ஒரு காலத்தில் இன்று இல்லை என்ற கொடுமையான வரலாறு உருவாகிக் கொண்டிருக்கிறது. இதை எண்ணி நாம் துன்பப்படுவதைத் தவிர, துயரப்படுவதைத்தவிர, துடிப்பதைத் தவிர, வெம்புவதைத் தவிர, விழிநீர் சிந்துவதைத் தவிர, நமக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. இன்னொன்று ஆங்கிலக் கல்வியை ஒழித்துக்கட்டி தமிழை கல்வி மொழியாக்கி கொண்டுவருகிற புரட்சியில் குழந்தைகள் சிறுவயதிலிருந்தே கற்று, அவர்கள் தமிழ்மொழிக்கல்வியை வீட்டுக்கும் கொண்டு சென்று அதை பரப்புவார்கள்.

vettikku vandha vedhanai8இன்றைக்கு சீனா இருக்கிறது, சீனாவில் ஆங்கிலக் கல்வி கிடையாது, அவன் அவனுடைய மொழியில் கற்கிறான். ஜப்பான் இருக்கிறது, ஜப்பானில் ஆங்கில மொழிக் கல்வி கிடையாது. ஜெர்மன் இருக்கிறது, அங்கு ஆங்கில மொழிக் கல்வி கிடையாது. பிரான்ஸ் இருக்கிறது, அங்கு ஆங்கில மொழிக் கல்வி கிடையாது. நான் சொல்லுகிற நாடெல்லாம் வளர்ச்சி பெற்ற மிகப்பெரிய நாடுகள், வல்லரசுகள். இந்தத் தமிழன் மட்டும் ஏன் இவ்வளவு தாழ்வுணர்வு கொண்டு ஆங்கிலத்தை தூக்கிப் பிடிக்கிறான் என்பதில் எனக்குத் தெரியவில்லை. அதை இழிவாக எடுத்துச் சொல்லவோ, அதை முடித்துக் கட்டவோ தலைவர்கள் வருவதாகத் தெரியவில்லை.

இன்னொன்றைச் சொல்லுகிறேன், சீனாவில் அண்மையில் ஊடகங்களில், விளம்பரங்களில், இலக்கியங்களில் ஆங்கிலம் கலந்து எழுதுவது தண்டனைக்குறிய குற்றம் என்று சட்டம் இயற்றினார்கள். அங்குள்ள வானொலியில் ஆங்கிலம் கலந்து சீனமொழியில் பேசமுடியாது, தண்டனைக்குரிய குற்றம் சீனாவில். அண்மையில்தான் அந்த சட்டத்தைக் கொண்டுவந்தார்கள்.

எனக்கு நினைவிருக்கிறது நான் படித்ததாக, ஈரானில் நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற சட்டத்தைக் கொண்டுவந்தார்கள், அங்கே ஆங்கிலம் கலக்க முடியாது, அவனுடைய பாரசீக மொழியில். அதே போன்றுதான் பிரான்சில்கூட ஆங்கிலம் கலந்து எழுதுவது தடுக்கப்பட்டிருக்கிறது, குற்றமாக்கப்பட்டிருக்கிறது. ஆகவே இப்படியான ஒரு தடைச்சட்டத்தை இங்கு ஊடகங்களில், விளம்பரங்களில், பெயர் பலகைகளில் ஆங்கிலத்தை முழுமையாக அப்புறப்படுத்துகிற ஒரு சட்டம், கடுமையான சட்டம் இந்த மண்ணில் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட வேண்டும். அது இன்று உடனடியான தேவை என்று நான் கருதுகிறேன். ஆகவே இவற்றைத்தான் முன் மொழிய விரும்புகிறேன். ஏனென்றால் என் கருத்தாக தமிழர்களுக்கு இந்த உலகில் எஞ்சியிருக்கிற தாயகங்கள் இரண்டே இரண்டு. ஒன்று தமிழ்நாடு, ஒன்று தமிழீழம். தமிழீழத்தில் நம்முடைய அந்த தேசிய இனத்தின் உண்மையான கூறுகள், முதன்மையான கூறுகளில் ஒன்றாகிய தாயகத்தை, நிலத்தை நாங்கள் இழந்து கொண்டிருக்கிறோம், அழிவின் விளிம்பில் இருக்கிறோம். தமிழ்நாட்டில் ஒரு தேசிய இனத்தின் இன்னொரு உயிர் கூறான, மிக முதன்மை உயிர் கூறான தாய்மொழியை தமிழ்நாடு இழந்துகொண்டிருக்கிறது. இரண்டு தாயகங்களிலும் நாங்கள் தேசியத்தன்மையை இழந்து அழிந்து கொண்டிருக்கிறோம். தமிழீழ மக்களைப் போலவே போராட வேண்டிய நிலையில் தமிழ்நாட்டு மக்களும் இருக்கிறார்கள் மொழிக்காப்புக்காக. அவர்கள் அந்தப் போராட்டத்தை உடனடியாக தொடங்கியாக வேண்டும்.

கேள்வி: புலம் பெயர்ந்த தமிழர்களிடையே தமிழின் நிலை என்ன? இதை மேலும் செம்மைப்படுத்த தாங்கள் கூறும் வழிமுறை என்ன?

பதில்: இதை நான் சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். அநேகமாக ஜெர்மனி, பிரான்சு, லண்டன் போன்ற இடங்களிலெல்லாம் தமிழ்ப்பள்ளிகளை, அங்கு வாழுகிற தமிழீழ மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களால் முடிந்தவரை தமிழீழ மண்ணில் இருக்கிற அந்த தமிழ் தேசிய இனத்தன்மை அழியாத குழந்தைகளாக அவர்களை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள். நான் நினைக்கிறேன், தமிழீழ விடுதலை கிடைக்கின்ற வரை உலகெங்கும் பரவி வாழ்கிற புலம்பெயர்ந்த தமிழர்களால், அந்தத் தமிழர்களை தமிழ் மக்களாக காப்பாற்றி வைத்திருக்க முடியும் என்று நான் நம்புகிறேன். அந்த மண் மீதான பற்றும், அந்த மொழியின் மீதான பற்றும் அந்த மக்களுக்கு இருக்கும்வரை, அவர்கள் அந்த மக்களைக் காப்பாற்றுவார்கள் என்று நான் நினைக்கிறேன். காரணம் அந்த உறுதிப்பாடு மிகவும் முக்கியமானது.

kaasi ananthan nerkaanal2திரும்பவும் போர்ச்சுகல் நாட்டுக்கு போகவே முடியாது என்ற நிலையில் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழத்தில் மட்டக்களப்பில் வந்து குடியமர்ந்த போர்ச்சுக்கீசியர்களின் சில குடும்பங்கள் இன்றும் மட்டக்களப்பில் வாழ்கின்றனர். இன்றைக்கும் அவர்களுடைய வீட்டில் போர்ச்சுக்கீசிய மொழிதான் பேசுகிறார்கள். வெளியில் தமிழ் பேசுகிறார்கள், ஐநூறு ஆண்டுகள். ஆனால் இந்தத் தமிழர்களிடம் ஒரு கெட்ட குணம் உண்டு, எங்கு போனாலும் அடுத்தவர்களாய் மாறிப்போகிற குணம். மொரிசியசு, பிஜி போன்ற நாடுகளிலெல்லாம் கூலிகளாகப் போன தமிழர்கள், இன்று அவர்களுக்குத் தமிழ் தெரியாது, பேச தமிழ் வராது. தென்னாப்பிரிக்காவிலும் தான். அந்தநிலை இன்று உலகில் சிதறி வாழுகிற, ஈழத்தில் சிங்கள இனவெறியர் கொடுமையால் சிதறிப்போன தமிழர்களுக்கு வரக்கூடாது, வராது என்று நான் நம்புகிறேன். அந்த மக்களைக் காப்பாற்றி விடுதலை பெற்ற தமிழீழத்திற்கு நாங்கள் என்றோ ஒரு நாள் அழைத்துச் செல்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

கேள்வி: புலம் பெயர் தமிழர்களின் அரசியல் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: புலம் பெயர் தமிழர்களின் அரசியல், அந்தந்த நாடுகளில் அவர்கள் அந்தந்த நாடுகளுக்கு அமைய வாழவேண்டியவர்களாக இருக்கிறார்கள். குடியுரிமைப் பெற்றதற்குப் பின்பு அது அவர்களுடைய கடமை, நிலைமை. ஆனால் அவர்களுடைய அரசியல் கடமை என்று வருகிற பொழுது அவர்கள் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவர்களுடைய தாயகமான தமிழீழ விடுதலையில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும், அதுதான் அவர்களுடைய அரசியலாக இருக்க வேண்டும், முழுநேர அரசியலாக இருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

இப்படித்தான் யூதர்கள் அவர்களுடைய மண்ணை விட்டு எங்கெல்லாம் சிதறி உலகமெல்லாம் அடிபட்ட நேரத்திலும், அவர்கள் பல நாடுகளிலும் இருந்திருக்கிறார்கள், அந்த ஒவ்வொரு நாடுகளிலும் அந்தந்த நாட்டுக்குரிய அரசியல் இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் தாய் மண்ணுடைய அரசியலை மறந்து வாழ்ந்ததில்லை. அதனால் திரும்பவும் அந்த மண்ணை விடுதலை செய்து, அங்கு அவர்களால் திரும்ப முடிந்தது. பாலஸ்தீனியர்கள்கூட பலநாடுகளில் சிதறி வாழ்ந்தார்கள், வாழ்ந்த காலம் இருந்தது. இன்றும் பலர் வேறு நாடுகளில் வாழ்கிறார்கள். ஆனால் அவர்களுடைய தாயகத்துக்காகப் போராடுகிற மக்களாக, அதுதான் அவர்களுடைய அரசியல் என்று அவர்கள் கொண்டிருக்கிறார்கள். அந்த அரசியல் கோலம் உலகமெங்கும் பரவி வாழ்கிற தமிழீழ மக்களுக்கு இருக்க வேண்டும்.

eezham malarum2உலகமெங்கும் பரவி வாழ்கிற தமிழ்நாட்டு மக்களும், தமிழ்நாட்டில் அழிந்து கொண்டிருக்கிற தமிழினத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வு இருக்க வேண்டும். நாங்கள் அமெரிக்காவிற்குப் போய்விட்டோம், அமெரிக்க அரசியல்தான் எங்களுக்கு என்று கருதுகிற நிலை உலகில் வாழ்கிற தமிழர்களுக்கு இருக்கக்கூடாது. ஏனென்றால் உலகில் மிக மிக பிற்காலத்தில் தோன்றிய கி.பி ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய ஆங்கிலம், இன்று உலகத்தில் அவனுக்கு இரண்டு வல்லரசுகள், ஒன்று அமெரிக்கா மற்றொன்று பிரிட்டன். உலகில் எங்கெங்கெல்லாமோ போய்விட்டான் அவன். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து எல்லாம் போய்விட்டான். ஆனால் தமிழனுடைய நிலை என்ன? அவனுக்கென்று உலகில் ஒரு அரசு கிடையாது. கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் சிங்கள மொழி, இனமெல்லாம் தோன்றுகிறது. அவனுக்கென்று உலகில் ஒரு அரசியல், நாடு, அரசு. ஆகவே நமக்கு நம்முடைய மண்ணை நினைந்த அரசியல் நமக்கென்று ஒரு வாழ்வு உலகில் எங்காவது வருகிற வரை என்றைக்கும் நம்முடைய நெஞ்சில் அந்த அரசியல் இருந்தாக வேண்டும் என்பது என்னுடைய கருத்து. ஏனென்றால் நான் இதைத்தான் சொல்லுகிறேன்.

நாம் நம்முடைய தாயகத்தை மீட்கிற பணியில், உலகெங்கும் வாழுகிற தமிழீழ மக்களுக்கு தமிழ்நாடாகவே ஒரு காலத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். தமிழீழம் விடுதலை பெற்ற நாடாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். சேர நாடு மலையாள நாடாக மாறிக்கொண்டிருந்த நேரத்தில் பார்த்துக்கொண்டிருந்த பாண்டியனைப்போல, சோழனைப்போல இருக்காமல் தமிழீழம் சிங்கள நாடாக மாறிக்கொண்டிருக்கிற இந்த காலத்தில் அதை உலகெங்கும் வாழுகிற தமிழ்நாட்டுத் தமிழர்கள்கூட அதை பொறுத்துக்கொள்ளக்கூடாது. அதற்கெதிரான மூச்சோடு தமிழீழ விடுதலைக்குப் போராடுகிற தமிழீழ மக்களுக்குத் துணையாக உலகெங்கும் பரவி வாழுகிற தமிழ்நாட்டு மக்களும் துணை நிற்கவேண்டும் என்று நான் பணிவாகக் கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி: ஈழத்தில் தற்போதைய அரசியல் நிலைமை சரியாக உள்ளதா? அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்: தமிழ் ஈழ அரசியல் நிலை என்று என்னைப் பொறுத்தவரை அந்த மண்ணில் தமிழ்தேசிய இனம் அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருப்பதைத்தான் நான் பார்க்கிறேன். இது தமிழீழ மக்களைப் பொருத்தவரை மிகக்கொடுமையான ஒரு காலம். ஒரு குறுகிய காலத்துக்குள் நாங்கள் வாழ்வோமா அல்லது வீழ்வோமா என்ற நிலைதான் இன்று ஈழத்தமிழர்களுக்குள்ள நிலை என்பதை சொல்லியாக வேண்டும். இதற்கு அடிப்படைக் காரணம் இலங்கைத் தீவு ஒரு தேசமல்ல என்பதும் இரு தேசங்கள் என்பதும் வரலாறு சொல்லுகிற பெரிய உண்மை. கிளைகன் அறிக்கையிலும் சரி, அதற்குப்பின்னால் வந்த கோல்புரூக் ஆணைக்குள்ள அறிக்கையிலும் சரி தமிழீழம் ஒரு தாயகமாக வடகிழக்கு மாகாணம் ஒரு தேசிய இனத்தின் தாயகமாக குறிக்கப்படுகிறது. The northern and eastern provinces are the traditional home lines of tamils and area wise 26, 500 square kilo meter என்று கோல்புரூக் ஆணைக்குழுவில் அது வருகிறது. ஆக 26500 சதுர கிலோ மீட்டர் கொண்டிருந்த நம்முடைய தமிழீழம் 1833ல் கோல்புரூக் அறிக்கையில் இதை அவர் சொல்கிறார்.

eezham malarum11933ல் இலங்கையில் இரண்டு நாடுகளாக அதற்கு முன்பு போர்ச்சுக்கீசியர் காலத்திலும், டச்சுக்காரர்கள் காலத்திலும் அதற்குப் பிறகு பிரிட்டிசு ஆட்சியாளர்கள் கைப்பற்றிய பின்பும் இரண்டு நிர்வாகக் கூறுகளாக இருந்த சிங்கள அரசு, தமிழ் அரசு இதை இணைப்பதற்காக 1833ல் கோல்புரூக்கை லண்டன் அரசு அனுப்புகிறது. அங்கு வருகிறார், அந்த அறிக்கையில்தான் தமிழீழ மக்கள் ஒரு தேசிய இனம் என்பதை அவர் சொல்கிறார். அவர்களுக்கென்று தாயகம் உண்டு, 26500 சதுர கிலோ மீட்டர் என்று சொல்கிறார். இதற்குப் பிறகு அதே பிரிட்டிசு ஆட்சி காலத்தில் 1901ல் சிங்களவர்கள் ஆங்கிலேயனின் உதவியைப் பெற்று, அந்த இலங்கைத் தீவு முழுவதையும் ஒன்பது மாகாணங்களாகப் பிரிக்கிறார்கள். சிங்களவனுக்கு 7 மாகாணம், தமிழனுக்கு 2 மாகாணம். வடக்கு, கிழக்கு மாகாணம் என்று இரண்டு மாகாணம். அதுதான் தமிழனுடைய தாயகம். சரி, அது எந்த அளவில் இருந்திருக்க வேண்டும்,26,500 சதுர கிலோ மீட்டராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதிலிருந்து 7500 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை எடுத்து சிங்களவனுக்குக் கொடுத்த 7 மாகாணங்களோடு அன்றே சேர்க்கிறார்கள்.

நாங்கள் எங்கள் தாயகத்தை 7500 சதுரகிலோமீட்டர் நிலப்பரப்பை 1901ல் மாகாணப்பிரிவினையின் போதே இழந்துவிடுகிறோம். அதற்குப்பிறகு வெள்ளைக்காரன் 1948ல் வெளியேறுகிறான், ஆங்கிலேயன். அன்றிலிருந்து தந்தை செல்வா இனி தமிழீழ அரசுதான், தனிஅரசுதான் என்று தீர்மானமொன்றே எட்டிய 1976வரை 27 ஆண்டுகள், 48க்கும் 76க்குமிடையில் 27 ஆண்டுகள், தந்தை செல்வா தமிழீழ மண்ணில் சிங்களவர்களைக் குடியேற்றாதீர்கள், குடியேற்றாதீர்கள் என்று ஓங்கி முழக்கமிடுகிறார் ஒவ்வொரு மேடையிலும், பாராளுமன்றத்திலும் ஓசை எழுப்புகிறார், குரல் எழுப்புகிறார். ஆனால் அவன் தொடர்ந்து குடியேற்றி அல்லை, கந்தடா, யம்பாறை, கினியாகலை, சேருவாவலை என்று பல ஊர்களின் பெயரும் மாறி, தமிழர்களுடைய நிலம் பறிக்கப்பட்டு, மேலும் 7500 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு சிங்கள மண்ணாக மாறிப்போகிறது. குடியேற்றத்தால் பறிக்கப்படுகிறது.

மாகாணப் பிரிவினையின்போது 7500 சதுர கிலோ மீட்டர், சிங்கள குடியேற்றத்தால் 7500, மொத்தம் 15000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை நாங்கள் இழந்து விடுகிறோம். 26,500 சதுர கிலோமீட்டரில் அது பாதியை விட மிஞ்சிய மேலதிகமான நிலப்பரப்பு. அதை பறிகொடுத்து 11500 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில்தான், பிரபாகரன் ஆயுதத்தோடு போராட்டத்தை 1976ம் ஆண்டு தொடங்குகிறார். பாதிக்குமேல் நிலப்பரப்பைப் பறிகொடுத்தப்பிறகு நாங்கள் ஆயுதம் ஏந்துகிறோம், தாங்கமுடியாமல் ஆயுதம் ஏந்துகிறோம், வேறு வழியில்லாமல் ஆயுதம் ஏந்துகிறோம். அப்படி அந்த மண்ணில் போராடி பிரபாகரன் போராடிய அந்த ஆயுதத்தோடு நின்ற முள்ளிவாய்க்கால் வரையிலான காலகட்டம் 33 ஆண்டுகளில், தமிழர்களுடைய தாயகத்தில் ஒரு அங்குல மண்ணை சிங்களவனால் பறிக்க முடியவில்லை.

kaasi ananthan nerkaanal6ஆனால் இன்றைக்கு முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு திட்டமிட்டு பல இடங்களில் சிங்களக்குடியேற்றம் விரைந்து நடைபெறுவதைப் பார்க்கிறோம். யாழ்குடா நாட்டுக்கு உள்ளேயே நாவற்குழியூரில் 300 சிங்களக் குடும்பங்கள் அமர்த்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். முருகண்டியில் சிங்கள குடியேற்றம், கிளிநொச்சியில் சிங்கள குடியேற்றம், கடற்கரை ஓரங்களிலும் முல்லைத்தீவு கடற்கரை ஓரங்களில் சிங்கள மீனவர்கள் குடியேற்றம், வன்னிக்காட்டில் சிங்களவர்கள் குடியேற்றம், எல்லா இடங்களிலும் சிங்களவர்களை குடியேற்றுகிறார்கள். அந்த எஞ்சியிருந்த 11500 சதுர கிலோமீட்டர் அங்குலம் அங்குலமாக பறிபோய்க் கொண்டிருக்கிறது. இதைவிட பெரிய கொடுமை என்று நாம் நினைவில் வைத்திருக்க வேண்டியது சிங்களவன் வெளியிலிருந்து மக்களைக் கொண்டுவந்து State Sponsored Colonization அரசு ஆதரவில் நடைபெறுகிற திட்டமிட்ட குடியேற்றம் என்று உலகம் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக 2 லட்சம் சிங்களப் படை வெறியர்களை வடக்கு மாகாணத்தில் கொண்டு வந்து வைத்திருக்கிறான், தமிழீழத்தில் கொண்டு வந்து வைத்திருக்கிறான்.

எண்ணிப் பாருங்கள், புதிய ஜனாதிபதியான மைத்திரி சிறிசேனாவும் சொல்கிறான் இராணுவத்தை ஒரு நாளும் எடுக்க மாட்டோம். பழைய ஜனாதிபதியாக இருந்த வெறியன், நாளைக்கும் வரலாம் என்று எதிர்பார்க்கிற வெறியன் மகிந்தவனும் சொல்கிறான் அவர்களை ஒருபோதும் தங்கள் மண்ணில் விடமாட்டேன், இந்த மண்ணிலிருந்து, யாழ்ப்பாணத்திலிருந்து மீளப்பெறமாட்டோம். ரணில் விக்கிரமசிங்க சொல்கிறான் அவர்களை ஒருபோதும் தமிழ் ஈழத்திலிருந்து நாங்கள் மீளப்பெறமாட்டோம். அப்படியானால் நிலைமை என்ன? அந்த இரண்டு லட்சம் சிங்களப்படை வெறியர்களும் தமிழீழத்தில் திட்டமிட்டு குடியேற்றப்படுகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ஐந்து பேர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று ஒரு குடும்பத்தைக் கொண்டுவந்து அவர்களை அங்கு குடியமர்த்துகிற பொழுது அது வெளியிலிருந்து வருகிறவர்கள் அல்ல, எங்களுடைய அரசு ஊழியர்கள் அவர்களுக்கான குடியிருப்புகள் இங்கு கட்டப்போகிறான். ஒரு வீட்டுக்கு ஐந்து பேர் என்றால் 10 லட்சம் சிங்களவர்கள் பத்தாண்டுகளுக்குள் வடக்கு மாகாணத்தில் குடியமற இருக்கிறார்கள், உறுதியாக குடியமற இருக்கிறார்கள்.

NYT2009042917502077Cஉங்களுக்குத் தெரியுமா?, இப்பொழுது வடமாகாணத்தில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை 10 லட்சம்தான். இன்னொரு பத்தாண்டுகளில் சிங்களவர்களுடைய எண்ணிக்கையும் யாழ்ப்பாணத்தில் 10 லட்சம். வடமாகாணத்தில் 10 லட்சம் என்றால் நம்முடைய தமிழீழத்தின் நிலை என்ன? இத்தனை படைவெறியர்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று சொல்வதற்கு உலகத்தில் நமக்கு யாருமில்லை. கடந்த காலத்தில் நடந்த சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகத்தில் நமக்கு யாருமில்லை. நமக்கு நன்றாகத் தெரியும் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவன்தான் அங்கு நிலம் வாங்கமுடியும், வெளியில் இருக்கிறவன் வாங்கமுடியாது என்று இந்தியாவில் கூட ஒரு சட்டம் இருக்கிறது. இந்தத் தீர்வுகளுக்கு வழி சொல்லும், இந்தியா கூட காஷ்மீரில் இருக்கிற இந்தச் சட்டம் இலங்கைக்கும் பொருத்தமானது, அங்கு தமிழீழத்தில் இனி எந்த சிங்களவனையும் குடியேற்ற கூடாது என்று சொல்லுகிற குரல் இந்தியாவிலும் கூட இல்லை. அவர்கள் சொல்லவேண்டும் மாந்தநேய உணர்வோடு சொல்லவேண்டும் அந்த நிலைப்பாடும் இல்லை. உலகில் எவனும் குடியேற்றத்தைத் தடு என்று சொல்கிறவனாக இல்லை. அங்கு மனித உரிமை மீறலா? சொல்லுகிறான், அங்கு போர்க் குற்றமா? சொல்லுகிறான். அங்கு திட்டமிட்டு இன அழிப்பு நடைபெறுகிறது. அதைக்கூட சொல்வதற்கு நமக்கு எவனும் இல்லை.

kaasi ananthan nerkaanal3ஆக இன்றைக்கு இருக்கிற இந்தச் சூழ்நிலையில் நான் தொடக்கத்தில் சொன்னதைப் போல அழிவின் விளிம்பில் இருக்கிறோம். தமிழீழ மக்கள் என்றுமில்லாதவாறு அழிவின் விளிம்பில் இருக்கிறோம். இன்றைக்கு உடனடியாக அந்த மண்ணில் தேவைப்படுவது போராட்டத்தின் தொடர்ச்சி என்பதை மறந்துவிடாதீர்கள். போராட்டத்தின் தொடர்ச்சி ஒன்றுதான் அந்த மண்ணில், போராட்டத்தின் தொடர்ச்சி ஒன்றுதான், நம்முடைய தமிழீழ விடுதலை நோக்கிய ஒரு பயணமாக அமையும். போராட்டத்தின் தொடர்ச்சி இன்றியமையாதது. உலகம் கைவிட்டது, ஐ.நா மன்ற வாசலில் மனித உரிமை ஆணையத்தின் முன் மனித உரிமை ஆணையம் கொண்டுவந்த தீர்மானத்தையும் முறியடித்து அந்த மண்ணில் குற்றவாளியை, கொலைகாரனை நீதிபதியாக்கி முடிந்தது ஒரு நாடகம். உலகம் கைவிட்டது, ஆனால் உலகம் கைவிட்டது என்பதற்காக தமிழீழ மக்களின் விடுதலைப்போர் எந்தக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தப்படக்கூடாது அல்லது தாமதிக்கப்படக்கூடாது, காலந்தாழ்த்தக்கூடாது அந்தப் போராட்டம்.

நான் சொல்லவருவது என்ன என்று சொன்னால் இந்தப்போராட்டத்தின் தொடர்ச்சி இன்றியமையாதது. பாலஸ்தீன மக்களை இதுவரை உலகம் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் அவர்களுக்கு விடுதலை இல்லை. அராபாத் காலத்திலும் சரி இன்று அப்பாஸ் காலத்திலும் சரி அவர்களை இன்னும் உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. உலகம் கைவிட்டமாதிரிதான். உலகம் கைவிட்டது என்பதால் பாலஸ்தீன போராளிகள் போராடாமல் இல்லை. இன்றைக்கு கத்தியால் குத்துகிறார்கள் இஸ்ரேலிய படைவெறியர்களை, கல்லெடுத்து அடிக்கிறார்கள், குழந்தைகள் இஸ்ரேலியர்களை. ஆகவே போராட்டத்தின் தொடர்ச்சி என்பது இன்றியமையாதது. அது நம்முடைய விடுதலை நோக்கிய பயணமாக இருக்கும். அது நம்முடைய விடுதலை பற்றிய நம்பிக்கையை நமக்குத் தருகிற ஒன்றாக அமையும்.

ஆகவே வரலாற்றில் அவன் வந்து காப்பாற்றுவான், இவன் வந்து காப்பாற்றுவான் என்ன நடந்தது, எவனும் வந்து காப்பாற்றவில்லை. இந்த தமிழன் இருக்கிறானே இவன் எவனையும் காப்பாற்றுவான், இவனை எவனும் காப்பாற்றியதில்லை, வரலாற்றில் கிடையாது. ஆகவே முதலில் நாம் நம்மை நம்பி நமது போரை முன்னெடுக்கிற உணர்வும் அந்த ஈடுபாடும் நமக்குத் தேவை என்பது எனது பணிவான கருத்தாகும். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது தமிழீழ மக்கள் இது வரை நாங்கள் ஒரு கணக்கு போட்டு பார்த்தோம், 68,000 விடுதலைப்புலிகள் மாவீரர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய அந்த மூச்சு, அவர்களுடைய அந்த பெரிய ஈகம், பெரிய உயிர்க்கொடை அதற்கு ஒரு பரிசு உண்டு. அதற்கு என்றோ ஒரு நாள் அதற்கு ஒரு பதில் உண்டு. ஆகவே உறுதியாக நான் சொல்லுகிறேன் தமிழீழ விடுதலை உண்டு, நம்புங்கள். அதை நோக்கி நாம் நமது போராட்டத்தின் தொடர்ச்சியை உறுதி செய்வது நமது கடமையாக இருக்கிறது. அதை நாம் செய்வோம், நம்பிக்கையோடுதான் இருக்கிறோம், நாம் தொடர்ந்து செய்யவேண்டும், அதற்கு உலகெங்கும் வாழுகிற தமிழீழ மக்கள் துணை நிற்க வேண்டும். புலம் பெயர்ந்த தமிழர்கள் துணை நிற்க வேண்டும் என்பது என்னுடைய பணிவான கருத்தாகும்.

கேள்வி: இளைய தலைமுறையினர் படிக்க நீங்கள் குறிப்பிடும் நல்ல நூல்கள் என்ன?

kaasi ananthan nerkaanaல் 9பதில்: சுருக்கமாக சொல்வதானால் வாழ்க்கை செம்மையாக அமையவேண்டுமானால் திருக்குறளை படியுங்கள். அது ஒன்றே போதும்.

கேள்வி: இறுதியாக தமிழக மக்களுக்கு தாங்கள் கூற விரும்புவது?

vigneshwaran urai5பதில்: திரும்பவும் திரும்பவும் தமிழர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் தமிழர்கள் தங்களுக்கு உலகில் இன்னமும் இவ்வளவு பெரிய கடந்த கால பேரழிவிற்குப் பின்பும் இரண்டு தாயகங்கள் இன்னும் தங்கள் கைகளில் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டு அந்த இரண்டு தாயகங்களையாவது தாங்கள் காப்பாற்றியே ஆகவேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு செயல்படவேண்டும் என்று நான் பணிவோடு வேண்டிக்கொள்கிறேன். பாவாணருடைய ஆய்வு மொழியியல் ஆய்வு, அதைத் தொடர்ந்து அவர் செய்த ஆய்வுகளில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழினம் தோன்றிய நிலப்பகுதி அது தமிழ்நாடும், தமிழீழமும் என்று அவர் சொல்கிறார். அப்பொழுது கடல் எல்லை பிரித்திருக்கவில்லை. அது பனிஒலி காலத்தில்தான் நிகழ்ந்தது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு. அவை ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில்தான் ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து வந்த அந்த ஹோமோசேப்பியன்ஸ் என்கிற மக்கள், அவர்கள் மொழிபேசுகிற உடல் கூறு பெற்று வந்து இந்த பகுதியில் தங்கிய காலத்தில்தான் தமிழ்மொழி தோன்றிற்று என்று அவர் சொல்கிறார். அதை லெவிட் போன்ற மேல்நாட்டு மொழியியல் அறிஞர்கள் எல்லாம் அதை இப்பொழுது ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே நம்முடைய மொழியின் தோற்றம் தமிழின் தோற்றம் இலங்கையில் அந்தத் தீவில் ஐம்பதாயிரம் ஆண்டுகள்.

ஆனால் கி.பி. ஆறாம் நூற்றாண்டு அளவில் எழுதிய மகாவம்சம்கூட பாலி மொழியில் எழுதப்பட்டது. அப்பொழுது அந்த அளவிற்கு சிங்களம் ஒரு எழுத்து மொழியாக வரவில்லை. ஆகவே தோன்றி மெல்ல மெல்ல வளர்ந்திருக்கலாம். ஆனால் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவில்தான் சிங்கள மொழி தோன்றுகிறது. ஆகவே அவர்களுக்கு காலம் ஒரு 1500 ஆண்டுகள்தான். 1500 ஆண்டு கால வரலாறு கொண்டவன் ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட ஒரு தேசிய இனத்தை இலங்கையில் அழித்துக் கொண்டிருக்கிறான் என்பதுதான் கொடுமை. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எவ்வளவு மிக பழைய தொன்மையான, வரலாற்றுத் தொன்மையான, வரலாற்று புகழ்மிக்க தமிழ் தேசிய இனம் இதுவரையில் வாழ்ந்த தமிழன் அதை அழிந்துவிடாமல் காத்து வந்திருக்கிறான். ஐம்பதாயிரம் ஆண்டுகளாக அதை காப்பாற்றி வந்திருக்கிறான்.

kaasi ananthan nerkaanaல் 11நம்முடைய காலத்தில் நம்முடைய கண்களுக்கு முன்னால் அந்த தேசிய இனம் அந்த தாயகம், அந்த மொழி, அந்த இனம் அழிய விடலாமா என்ன எண்ணமும் ஏக்கமும், பெருமூச்சும் உலகெங்கும் வாழுகிற தமிழர்களிடம் இருந்தாக வேண்டும். இதைத் தனியாக தமிழ்நாடு போராடட்டும் என்று விடாமல், தனியாக தமிழீழம் போராடட்டும் என்று விடாமல், உலகமெல்லாம் சிதறினோம். எங்கும் பார்க்கிறோம், இன்று உலகில் நாம் வாழாத நாடுகளே இல்லை. நமக்குத் தெரியும் தொடக்க காலத்தில் நமது பயணம் உலகை நோக்கிய பயணம் பெருமிதம் கொண்டதாக இருந்தது. மன்னர்கள் போனார்கள், மன்னர்களாகப்போனோம், படைகளோடு போனோம், சாவகம், புட்பகம் போன்ற தீவு பலவீனம் சென்றறியேன் என்று பாரதி பாடுகிறானே. எல்லா இடத்துக்கும் போனோம். மன்னர்களாகப் போனோம், வீரர்களாகப் போனோம், அதற்குப் பிறகு ஒரு காலம் வந்தது. வெள்ளைக்காரன் காலம். அவன் காலத்தில் கொஞ்சம் கீழே இறங்கி தொழிலாளர்களாகப் போனோம். அதற்கு இழிவான சொல் கூலிகள் என்று சொன்னார்கள். தொழிலாளர்களாகப் போனோம். சென்று தோட்டங்களில் அடைபட்டோம் உலக நாடுகளிளெல்லாம். அதற்குப் பிறகு இன்னும் கீழே போனோம் அகதிகளாகப் போகிறோம், ஏதிலிகளாகப் போகிறோம். ஏதிலிகள் என்பது எதுவுமே இல்லாத நிலை, அடிமைகளின் நிலை. தொழிலாளியாக வெளிநாட்டில் ஓடிய காலத்தில்கூட அவனுக்கு ஒரு நாடு இருந்தது, இனம் இருந்தது என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்த காலம். ஆனால் எதுவும் இல்லாமல் தாயகத்தை விட்டு விரட்டப்பட்டு ஓடுகிற காலம்.

தாயகத்திலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட காலம், கூலிகளின் காலம், தேயிலைத் தோட்டங்களுக்குப் போன காலம், அழைத்துச் செல்லப்பட்ட காலம். இன்று தாயகத்திலிருந்து விரட்டப்பட்டு ஓடுகிற காலம், ஏதிலிகளின் காலம். மிகக் கீழே வந்துவிட்டோம். ஆகவே இந்தக் காலத்தில் நம்முடைய பொறுப்பை உணர்ந்து உலகமெங்கும் வாழ்கிறோம். அதனால் தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள் எங்கும் நாம் இருக்கிறோம். உலகில் நாம் இல்லாத நாடுகள் இல்லை என்ற அளவிற்கு ஏதிலிகளாக புலம் பெயர்ந்து மேற்கு நாடுகள் அனைத்திலும் இன்று வாழ்கிறோம், பல லட்சக்கணக்கில் வாழ்கிறோம். ஆகவே நாம் இணைந்தால் நாம் ஒரு பெரிய வலிமை. உலகத் தமிழர்களாக நாம் இணைந்தால் அது ஒரு பெரிய வலிமை. இணைந்து நம்முடைய கையில் இன்னும் இழக்காத நிலையில் இருக்கிற நம் இரு தாயகங்களுக்காக நாம் போராடுவோம்.

kaasi ananthan nerkaanaல் 13தமிழீழ விடுதலை அதிலும் உடனடியாக நாம் கவனிக்க வேண்டிய ஒன்று. ஏனென்றால் அழிவின் மிக விளிம்பில், மிக நெருங்கிய ஒரு அழிவின் விளிம்பில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். தமிழீழத்தை உடனடியாக நாம் காக்கவில்லை என்றால் நாம் அந்த மண்ணை முழுமையாக இழந்துவிடுவோம். ஆகவே எது முதல் என்று பணியாற்ற நினைக்கின்ற பொழுது நமக்குத் தமிழீழம் கண்கள் முன்னால் தோன்றுகிறது. தமிழ்நாடும், உலகெங்கும் வாழுகிற அனைத்துத் தமிழர்களும் இணைந்து தமிழீழ விடுதலையை நாம் நிலைநாட்டுவோம் என்று பணிவோடு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

முக்கிய குறிப்பு:

உலகத்தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் அனைத்து நாடுகளிலும், தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக திரட்டப்பட்ட நிவாரண உதவியை இந்திய ஈழத்தமிழர் நட்புறவு மையத்தைச் சேர்ந்தவர்கள், தலைவர் காசி ஆனந்தன் தலைமையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று வழங்கி வருகிறார்கள்.

மீனம்பாக்கம், குளத்துமேடு, திருமுல்லைவாயில், பொழிச்சலூர் ஆகிய இடங்களில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. கடலூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் இந்த உதவிப் பணியை தொடர்ந்து வழங்க இருப்பதாக காசி ஆனந்தன் அவர்கள் கூறினார்.

சிங்கள ஆட்சியாளரால் அடித்து விரட்டப்பட்ட ஈழத்தமிழர் அகதிகளாக விரட்டப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளே இந்த வெள்ள நிவாரண உதவியை வழங்கி வருகிறார்கள். இது நொந்தவர்கள், நொந்தவர்களுக்கு வழங்கும் உதவி. கண்ணீர் சுமந்தவர்கள், கண்ணீர் சுமந்தவர்களுக்கு வழங்கும் உதவி. விம்மலோடும், பெருமூச்சோடும் வாழ்கிறவர்கள் என்று கூறினார், இந்திய ஈழத்தமிழ் நட்புறவு மையத்தின் தலைவர் காசி ஆனந்தன்

கவிஞர் காசி ஆனந்தன்
இந்திய ஈழத்தமிழர் நட்புறவு மையத் தலைவர்


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் நேர்காணல்”

அதிகம் படித்தது