சனவரி 16, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

கவிதைச் சோலை(கறுப்பு ஜூலை:தீயிடப்பட்ட புத்தரின் போதனைகள்!, தமிழர் போராடும் நேரமிது!)

தொகுப்பு

Jul 30, 2016

கறுப்பு ஜூலை:தீயிடப்பட்ட புத்தரின் போதனைகள்!

- ராஜ் குணநாயகம்

 mullivaaikkaal3

 

முள்ளிவாய்க்காலின் முன்னோட்டம்

சிங்களத்தின்

நெடுங்கால தமிழின அழிப்பு

ஊழித்தாண்டவத்தின் வெள்ளோட்டம்!
புத்தரின் அகிம்சா நெறிகள் கூறும்

மதநெறி நூல்கள்

ஒரு கையில்

தமிழரின் உயிர் குடிக்கும் கூராயுதங்கள்

இனவெறியர்களின்

மறு கையில்

புத்தரின் போதனைகள்

நூல்களில் மட்டும்…………….!
அன்று

வானமண்டலம் செயற்கையாய்

கருக்கொண்டது கரு முகில் கூட்டங்களாய்

தீயில் அழிந்த தமிழரின்

பல கோடி உடைமைகள் உமிழ்ந்த கரும்புகையால்!

களு கங்கையும்

மகாவலியாறும்

கறுப்பு சாலைகளும்

சிவந்து போனது

பல நூறு அப்பாவி தமிழரின் குருதியால்!
பல நூறு கோழை சிங்கங்கள்

வெலிக்கடை சிறையில் புகுந்து

வேட்டையாடி

கொன்று புசித்தன

வீர வேங்கைககள் ஐம்பத்து மூன்றை!
eezham-malarum2

 

 

கண்களிருந்தும்

காதுகளிருந்தும்

இரக்கமற்ற இதயம் கொண்ட

சர்வதேசம்

எதையுமே கண்டுகொள்ளவுமில்லை

எதையுமே செவிசாய்க்கவுமில்லை

சிங்களம்

பத்து நாட்கள் நடத்திய

ஊழிதாண்டவம் முடியும் வரை!
” விசாரணைகள் மேற்கொள்ளப்படும்

இனிமேல்

இதுபோல் நடைபெறாது உறுதிசெய்யப்படும்”

சர்வதேசம் கூறியது

இன்று போல்

அன்றும்……..!
புத்தரின் போதனைகள்

நூல்களில் மட்டும்……………………….!
பலவித சந்தேகங்களோடு

ஈழத்தமிழனினம்

போதி மர நிழல்களின் கீழ்

இன்று…………………………………….!
-ஈழன்-

 

தமிழர் போராடும் நேரமிது!

-இல. பிரகாசம்

Siragu-ellaam-kodukkum-tamil1

 

தீரத்தோடு போராடும் நேரமிது உணர்வீர்

தமிழ்தாய் மார்களிடம் எடுத்துரைத் திடுவீர்

தமிழரே உணர்ந் திடுவீர்!

தமிழர் நாம் எல்லோரும் ஒன்றாய்

திரண்டு நம் தமிழுக்கு வரும்

தீமையை அழித்திட வேண்டும்!

நம் முன்னோர் வாழ்வை ஒரு

நரிக் கூட்டம் ஏளனம் செய்வதனை

நாம் பொறுப்பது தகுமோ?

ஆயிரமாயிரம் போர்களில் நம் முன்னோர்கள்

ஆற்றிய வீரத்திற்கு அந்நரிக்கூட்டம் கூறும்

அவல மொழியினை பொறுப்பதுவோ?

எல்லா வளமும் பெற்ற இந்நிலத்தை

ஏதுமில்லா களர் நிலமாக்க அவன்

ஏறி வருவதனை பொறுப்போமோ?

பண்ணெடுங் காலமாய்ச் சிறுசிறு கூட்டம்

நம்மீது பொறாமை கொண்டு வருவதனை

நம்முன்னோர் வீழ்த்தி வென்றனர்.

நேருக்கு நேராய் நம்மோடு போரிடாது

நம் பண்பாட்டு கலையின்மீது இப்போது

அவன் எடுக்கும் படையை வீழ்த்தி

நம் பண்பாட்டினை காப்பது நம்கடமை!

வீரர்களே உணர்திடுவீர்! தமிழறம் கொண்டு

தமிழுக்கு வரும் பகையினை வேரறுப்போம்.

தமிழர் பெருமக்களை ஈன்ற தாய்மார்களே!

தவப்புதல் வனைஇப் போருக்கு அனுப்புக!

வெற்றித் திருமகள் தமிழுக்காக தமிழருக்காக

வெற்றி மாலையினை தொடுத்துக் கொண்டிருக்கிறாள்

வேல்வேந்தர் படையே வருக! வெல்க!

தமிழர் கலையே பண்ணெடுங் காலம் வாழ்க!

தமிழர் மரபும் வாழ்க! வாழ்க!


தொகுப்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைச் சோலை(கறுப்பு ஜூலை:தீயிடப்பட்ட புத்தரின் போதனைகள்!, தமிழர் போராடும் நேரமிது!)”

அதிகம் படித்தது