கவிதைச் சோலை (பசுமை தாயகம் அமைத்திடுவோம்!, ஆண்ட புழுக்கள்!, தமிழர் வருக! வருக!)
தொகுப்புJun 18, 2016
பசுமை தாயகம் அமைத்திடுவோம்!
எழுதியவர்: இல-பிரகாசம்
கல்லும் மண்ணும் கொண்டு கட்டுவதெல்லாம்
வாழ்வதற் கேற்ற வீடாகா
வீசுந் தென்றல் காற்றினை ஆக்கும்;
வீட்டுத் தோட்டம் அமைத்திடுதல்
வாழ்வதற் கேற்ற வீடாம்!
விளையாடுங் களங்களெல்லாம் சுற்றிலும்
நறுமணம் வீசும் மலர்க் கொடியை
நட்டி மனம் மகிழல் வேண்டும்!
பயிலுங் கூடமெல்லாம் சிறுபரப்பில்
பயன்தரு கொடிவகை யாவும் பண்படுத்தி
பசுமை கூடமாய் திகழல் வேண்டும்!
அரசோச்சும் இடங்களில் எல்லாம்
அருந்தென்றல் வீசும் மரங்களை
அமைத்து முன்னோடியாகி திகழல் வேண்டும்!
மக்கள் யாவரும் பசுமை தாயகம்
மலர்ந்திட விரும்புதல் வேண்டும்
வளமான தாயகம் பின்வரு நம்
சந்ததியருக்கு நாமளிக்கும் வரமாய்
சுகமாய் அமைந்திடல் வேண்டும்!
நகரங்கள் கிராமங்கள் எங்கும்
பசுமை தாயகம் அமைத்திட நாம்
பரப்புரை செய்திடல் வேண்டும்!
பசுமை தாயகம் அமைத்திடுவோம்
வளமான வாழ்வை அனைவரும்
விரும்பியே ஒன்றாய் ஆக்குவோம்!
ஆண்ட புழுக்கள்!!
எழுதியவர்: வழக்கறிஞர் ம.வீ. கனிமொழி
நீயும் நானும்
கைக்கோர்த்து திரிந்த
அழகான நாட்கள்
இனி கனவில் மட்டுமே
எனக்காக காத்திருக்கும் ;
நரம்புகள் அறுத்து
குருதி ஏற்ற முடியுமா?
உன் சுவாச வெப்பம்
இன்றி பொழுதுகள் இனி
நகருமா?
காதல் வாழ்வை
எண்ணியே காத்திருந்தோம்
காலம் தந்ததோ
கண்ணீர்த்துளிகளை
பூத்துக் குலுங்கிய
அன்பு இன்று
கல்லறை பூக்களாய் !!
என் மௌனமும் அழகு
என்றாய் இன்று நீயே
மௌனமாகிப்போனாய்
காதல் செய்தோம்
இன்பமாய் கதைத்தோம்
மணந்தோம் மடிசாய
மண்ணுக்குள் புதையவோ
மனிதராய் பிறந்தோம் ?
காதல் தீண்டிய மனதை
குடிமகனோ
கொலை வெறியனோ
அவன் அணைப்பில்
கசங்கி தினம் தினம்
மரணிக்கச் சொல்லும்
மலத்தை ஆண்ட புழுக்கள் ;
வரலாற்றில் மறக்கவொன்னா
காதல் மரணித்த கதைகள்
செவி வழியே
கேட்டிருந்தாலும்
மனிதனின் பரிணாமம்
பின்னோக்கி போகும்
என்ற அறிந்தேன் இல்லை
கருவில் வளர்த்த
மகளின்
ஆசை காதலனை கருவறுத்த
நொடிகள் புரிந்தது
அன்பின் வெறியது
சாதிமீது என்று
ஓடுகாலி என ஓலமிடும்
ஓநாய்கள் கண்டு
நாணவில்லை ;
உயிரை பலிகொண்டு
குலப்பெருமை காக்கும்
கயவர்களின் உதிரத்தில்
பிறந்ததால் நாணுகின்றேன் …
தமிழர் வருக! வருக!
எழுதியவர்: இல.பிரகாசம்
தடந்தோள் களிரண்டும் புடைத்திட
தமிழர் வருக! வருக!
தமிழச்செங்கோல் உயாந்திட
தமிழர் வருக வருக!
தமிழர் நிலம் செழித்திட
தமிழர் செவ்வேல் உயர்த்தி
தடமதிர வருக வருக!
தமிழ் பண்மொழி காத்திட
தமிழர் புகழ்நிலை பெற்றிட
தமிழர் வருக வருக!
தமிழர் களிப்புற் றிருந்திட
தமிழர் சமர்களம் வருக!
தமிழர் தம்திறம் கொணாந்திட
தமிழர் ஆர்ப்பரித்து வருக!
தமிழ் வீரர்அணி யணியாய்
தமிழுரம் கொண்டெழுந்து வருக!
தமிழர் தம்மார்பில் வீரவடுக்களை
தாக்கி அழியாப் புகழ்பெற்றிட
திமிரும் அயலான்கொம் பினையடக்க
திரண்ட தொடைகள் விளையாடிட
தமிழர் திரளாய் திரண்டெழுந்தே
தன்விருப்புற் றாத்து வருக!
தமிழர் வருக! வருக!
தொகுப்பு
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைச் சோலை (பசுமை தாயகம் அமைத்திடுவோம்!, ஆண்ட புழுக்கள்!, தமிழர் வருக! வருக!)”