கவிதைச் சோலை (காலம் கடந்திடும் ஞானம்!, தமிழ் மொழியால் ஒன்று சேர்வோம்!, கண்ணீர்த் துளிகள்)
தொகுப்புApr 23, 2016
காலம் கடந்திடும் ஞானம்!
எழுதியவர்: ராஜ் குணநாயகம்
புத்த சிலைகளின்மீதா
புத்த போதனைகளின்மீதா
புத்த பகவான்மீதா
இல்லை
அதன் பின் ஒளிந்திருக்கும்
சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின்மீதா?
வேர்களையும்
ஒளிந்திருக்கும் உறங்கும் வித்துக்களையும்
விட்டுவிட்டு
களைகளை நோந்துகொள்வதிலும்
அழித்திட முயற்சிப்பதுவும்
நிரந்தர தீர்வாகிடுமோ?
நீ வணங்கும் கடவுளோடு சேர்த்து
புத்த பகவானையும் வணங்கிவிட்டுப்போ
புத்த பகவான்
சிங்கள பௌத்தருக்குமட்டும் சொந்தமானவரில்லையே–
பரமசிவனோ
இயேசு பிரானோ
நபிகள் நாயகமோ வந்து
உன்னை தண்டிக்கப்போவதில்லையே!
புத்தரின் பஞ்ச சீல கொள்கை–
ஓருயிரையும் கொல்லாதே,தீங்குசெய்யாதே
அதன் மீது அன்பாயிரு
பிறர் பொருளை இச்சிக்காதே
களவும் செய்யாதே
கற்புநெறியோடு வாழ்ந்திடு
உண்மையே பேசு
மதுவை தவிர்த்திரு-என்றுதானே சொல்கிறது!
இனிமேல்
புத்தரின் பின் ஒளிந்திருந்து
மதவாதம்
இனவாதம் பேசும்
இன,மத வெறியர்கள்
ஈழத்தில் செல்லாக்காசுகளே
நம்மால் மாறிட முடிந்தால்!
மாற்றம் ஒன்று தேவை என்றால்–
மாற்றம் என்பது
முதலில் நமக்குள்தானே வரவேண்டும்!
-ஈழன்-
தமிழ் மொழியால் ஒன்று சேர்வோம்!
எழுதியவர்: இல.பிரகாசம்
தமிழ் பேசும் பெருமகனே
தமிழ் மொழியால் ஒன்று சேர்வோம்!
தமிழ் தாயின் திருமார்பில்
தமிழ் பாலுண்ட தலைமகனே
தமிழ் உறவால் ஒன்று சேர்வோம்!
தமிழ் தாயின் திருமடியில்
தமிழ் பயின்ற கலைமகனே
தமிழ் பண்பால் ஒன்று சேர்வோம்!
தமிழ் தாயின் திருஉள்ளத் தினன்பால்
தமிழ் வீரரெல்லாம் ஒன்று சேர்வோம்
தமிழ் மொழியை காக்க நாடுகடந்த
தமிழ ரெல்லாம் ஒன்று சேர்வோம்!
கண்ணீர்த் துளிகள்
எழுதியவர்: வழக்கறிஞர் ம.வீ கனிமொழி
கொண்ட பிஞ்சு கரங்கள்
கைகளில் அள்ளித் தோளில்
சூடிடும் மழலைப் பூமாலை
வெண்ணிற அரிசியில்
பக்குவமாய் சோறாக்கி
பருப்பும் நெய்யும் குழைத்து
அரும்பு வாய் திறந்து
ஊட்டிடும் இன்பப் பூஞ்சோலை …
சலசலக்கும் சலங்கையும்
மினுமினுக்கும் உடையும்
பளபளக்கும் தங்கச் சங்கிலியும்
குழலினும் யாழினும்
இனிய குழவிக்கு அணிவித்து
மகிழும் அன்னை அவள்
வறுமை இருளில் சூழ்ந்திருக்க
ஐயிரண்டு திங்கள்
ஆசைகொண்டு பெற்றெடுத்த
அழகோவிய கன்னலை
வாய் பேசி சிரித்திடும்
மலர் எழிலை
கல்வி கற்று
காலைப் பரிதியின்
ஒளி கொண்டு
தரணிப் போற்ற
தழைத்தோங்க வேண்டிய
வாழைக் குருத்தை
அடுத்த வேளை உணவிற்காய்
பரிதவித்து கல்லுடைக்க
அனுப்புகின்றாள்…
கவின் சிற்பமாம்
அந்த இளந்தளிர்
கொஞ்சும் கண்களில்
கெஞ்சும் கண்ணீரோடு
கிறங்கடிக்கும் மழலைப்
புன்னகை மறந்து
வயிற்றுப் பசிக்காய்
புசிக்க நடைப்பழகும்
தொகுப்பு
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவிதைச் சோலை (காலம் கடந்திடும் ஞானம்!, தமிழ் மொழியால் ஒன்று சேர்வோம்!, கண்ணீர்த் துளிகள்)”