சனவரி 16, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

காணாமல் போன ஆறு(கவிதை)

சொ.அருணன்

Oct 8, 2016

siragu-image3

எப்போதும் அங்குதான்

இருந்ததாம் ஆறு.

தாத்தா காலத்தில்

தண்ணீர் ஓடிற்றாம்.

தந்தையின் காலத்தில்

மணலாவது இருந்ததாம்.

எனது கண்களுக்கு

எந்த அடையாளமுமே இல்லை.

என்பிள்ளை கேட்டால்

என்ன சொல்ல?

தண்ணீரென்பது அவனுக்குக்

குழாயில் வருமென்றும்

லாரியில் வருமென்றும்

அறிந்ததன் பின்னே

ஆற்றை (இல்லை இல்லை)

வறண்டு கிடக்கும்

பொட்டல் வெளியை,

தண்ணீர்ப் பரப்போடிய

ஆற்றின் தடமென்று

எப்படி நான்

அறிமுகப்படுத்த?

தொலைந்தவற்றின் வரிசையிலே

வாழ்க்கையும் போய்விடுமோ

என்கின்ற ஐயத்தின் அடையாளம்

ஆற்றைக் காணோம் என்பது

அறிவீர்களா மனிதர்களே…

ஆறு தனிச்சொத்து இல்லை.

அது அரசாங்கச் சொத்தும் இல்லை.

பொதுச்சொத்தும் இல்லை.

உயிர்ச்சொத்து.

உயிர்களின் சொத்து.

மண்ணுக்கும் அதன்மீது

உரிமை உண்டு.

ஒவ்வொரு ஆற்றுக்கும்

ஒவ்வொரு கதையுண்டே.

ஆற்றின் கரைகளில்

தோன்றியதுதானே

நாகரிக உலகம்.

ஆற்றைத் தொலைத்து விட்டு

நாகரிகம் எங்கே?

அழுக்கு நிறைந்த

சாக்கடைக் கழிவு

சத்தியமாய் ஆறு இல்லை.

ஆற்றின் பெயர்கூறி

அதை அழைக்காதீர்கள்…

விலங்குகள் கூட

வேடிக்கை பார்த்துக்

கேலி செய்ய

மானங்கெட்ட ஜென்மங்களாய்

மனிதர்கள் நாமானபின்னே

வாழ்வதற்கு இப்பூமியில்

என்ன அருகதை இருக்கிறது?

புனிதம் கிடக்கட்டும்

மனிதமாவது வேண்டாமா?

ஆறு அவ்விரண்டின்

அடையாளமுமாய் விளங்கிற்றே

தாய்முலை அறுத்துக்

குருதிகுடிக்கும் நாம்

அரக்கர்களானோமா?

காணாமல் போனால்

கண்டுபிடித்து விடலாம்.

தொலைந்து விட்டால்

தேடியெடுத்துக் கொள்ளலாம்

மறைந்து போனதை

மரித்துப் போனதை

உயிர்ப்பிப்பது எப்படி?

‘ஆறா’வது அறிவென்று

அறியாத மக்களுக்கு

ஆறாவது அறிவு

இருந்தென்ன பயன்?

உப்புநீரால் கடல்

தப்பிப் பிழைத்தது.

சந்தேகமாய் இருக்கிறது.

அதுவும் ஒருநாள்

காணாமல் போய்விடுமோ என்று…

எங்குபோய்ப் புகார் சொல்ல?

யாரிடம் சொன்னால்

காரியம் நடக்கும்?

யாராவது சொல்லுங்களேன்…..


சொ.அருணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காணாமல் போன ஆறு(கவிதை)”

அதிகம் படித்தது