செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

காணாமல் போன தலைவன் (சிறுகதை)

முனைவர் ஆ.சந்திரன்

Nov 17, 2018

siragu kaanaamal pona1

அன்று அந்த ஊரில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ய ஆரம்பித்தது.  பொதுவாக மழைக்கு முன்பு லேசாக விழும் ஐஸ் கட்டிகள் அன்று அதிகமாக விழ ஆரம்பித்தன. அப்போது சூரியன் பல்லிளித்துக் கொண்டிருந்தான். பகல் வேளையில் சூரியக் கதிர்கள் பிரகாசமாக இருக்கும் நேரத்தில் பெய்த அதிசயமான மழையை அவன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.அவன் பெயர் பாலசுப்பிரமணியன். அவனை எல்லோரும் பாலு என்றுதான் அழைப்பார்கள். அவனுக்கும் அப்பெயர்தான் பிடித்திருந்தது. விசித்திரமாகப் பெய்யும் அப்படிப்பட்ட மழையை அவன் அதற்கு முன்பு ஒரு முறை பார்த்திருக்கிறான். அப்போது அவனுக்கு வயது ஐந்து. சிறுவனாக இருந்ததால், அப்போது பார்த்த காட்சிகள் அவன் நினைவில் ஆழமாகப் பதிந்திருந்தன.

அப்போது,“காட்டில் குள்ளநரிக்குக் கல்யாணம் நடக்கும் அதான் இப்படி மழை பெய்கிறது” என்ற செய்தி அவ்வூரில் இருந்த சிறுவர்கள் மத்தியில் பிரபலமாகப் பரவியிருந்தது.

“வானில் தேவர்களுக்குக் கல்யாணம் நடந்துகொண்டிருக்கிறது. அந்தக் கல்யாணத்தில் கலந்துகொண்ட தேவர்கள் மணமக்களின் மேல் அர்ச்சனை தூவிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தூவும்  மலர்கள்தான் இவ்வாறு வந்து விழுகின்றன” என்றும் சிலர் கூறினார்கள். அதையெல்லாம் உண்மை என்று நம்பினான் அவன். அவனுக்கு அப்போது அறியாத வயசு அதனால். ஆனால் இப்போது அப்படி இல்லை.

அத்துடன் இப்போது பெய்துகொண்டிருந்த மழை நாள் கணக்கில் ஓயாமல் பெய்யும் போல்  அவனுக்குத் தோன்றியது.

மாலை ஆறுமணி இருக்கும். அப்போது, அவனுடைய ஊரின் தலைவனைக் காணவில்லை என்ற ஊர் முழுவதும் பரவியிருந்த செய்தி மெதுவாக அவனுடைய காதுகளுக்கு எட்டியது.

வெளியூர் சென்றிருந்த அவன் அன்றுதான் ஊருக்குத் திரும்பியிருந்தான். அதனால்தான் அவனுக்கு அந்தச் செய்தி மிகவும் காலதாமதமாகத் தெரியவந்தது.

“தலைவன் காணாமல் போன செய்தி அவனுடைய மனைவிக்குக் கூட கொஞ்ச நேரம் கழித்துதான் தெரிய வந்ததாம். அவன் காணாமல் போன செய்தியை முதலில் அறிந்தவர் அவனுடைய வீட்டு வேலைக்காரன் தானாம்” இது அந்த ஊரில் மளிகை கடை வைத்திருந்தவர் பாலாவுக்குச் சொன்ன செய்தி.

பேய் தலைவனை எங்குத் தூக்கிச் சென்றதோ? தலைவன் உயிருடன் இருக்கிறாரோ? இல்லையோ? இனி அவர் திரும்பி வரமாட்டாரா? நம்ம ஊரை இனி யார் பாதுகாக்கப்போகிறார்கள் அவரைப் போல? என்று அடுக்கடுக்கான சங்தேகங்கள் எழுந்துகொண்டிருந்தன அந்த ஊரில் இருந்த டீ கடையில்.

“நம்ம தலைவரைத் தூக்கிப் போனப் பேய் ஹல்லிஸ் மலையின் உச்சில் போட்டு விட்டு பயந்து ஓடிவிட்டது நம்ம இளசுகளைக் கண்டு. அவர் பத்திரமாக இருக்கிறாராம்! யாரும் கவலைப்படாதீங்க” என்று அடித்துக் கூறினான் டீ குடிக்க வந்த கந்தசாமி.

பிறகு அவன் “தலைவர் பத்தரமாகத் திரும்பி வந்தால் யானைக்கும் பூனைக்கும் கல்யாணம் செய்து வைக்கிறேன் என்று வேண்டிக்கொண்டேன். அதை நிறைவேற்றப் போய்க் கொண்டிருக்கிறேன்” என்று புறப்பட்டுப் போனான்.

அவருடைய பேச்சிலிருந்த நம்பிக்கையைப் பார்த்துப் பரிதாபப்பட்டான் பாலா.

அந்த ஊரின் தலைவனைப் பேய் தூக்கிப்போவது இது ஒன்றும் புதுசில்லை. இதற்கு முன்பு பல தலைவர்களைப் பேய் தூக்கிக்கொண்டுபோய் இருக்கிறது.

இந்தத் தலைவர் பூந்தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போதும் அப்படித்தான் நடந்தது.

“கன்னியம்மாள் வீட்டு நிகழ்ச்சியை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த தலைவரைத் திடீரென ஒரு இரத்தக் காட்டேறி தூக்கிக் கொண்டு போனது. அதைத் துரத்திக் கொண்டு நம்ம ஊரின் இளவட்டங்கள் எல்லாம் ஓடினார்கள். ஏதோ ஒரு மலைக்கு அவரைத் தூக்கிப்போனது. அம்மலை மீது நம்ம இளசுகள் தைரியமாக ஏறினார்கள். அவர்களைப் பார்த்த உடனே தலைவரைத் தூக்கிக்கொண்டு பறந்து போனது. எங்குப் போனது என்று யாருக்கும் தெரியவில்லை. அதனால் ஊரே அலங்கோலபட்டது. அப்புறம் கொஞ்ச நாள் கழித்து தலைவரின் உடல் அதோ தெரியுதே அந்த மலை மேல இருந்து கண்டுபிடித்து தூக்கிட்டு வந்தார்கள். அவருடைய உடலில் இருந்த இரத்தத்தை உறிஞ்சி குடித்துவிட்டு உடலை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டு போய் இருந்தது அந்தப் பேய். அவருடைய உயிர் உடலைவிட்டுப் பிரியவில்லை. இரத்தம் ஏற்றினால் பிழைத்துக் கொள்வார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் எங்கள் நம்பிக்கை சுக்கு நூறாகச் சிதறிப்போனது. அப்போது மழைக்காலம் என்பதால் நம்ம ஊர் கட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஊரே செழித்திருந்ததால் அவரை எறிக்க விறகுகூட கிடைக்க வில்லை. அதனால் அவரை ஆற்றங்கரையோரம் புதைத்துவிடலாம் என்று எல்லாரும் சேர்ந்து முடிவெடுத்தோம். அவருடைய மரணத்தைப் பார்த்து சூரியனும் எங்கள் ஊருக்கு அன்று லீவு எடுத்துக் கொண்டதால் லாந்தர் விளக்கின் ஒளியில் அவருடைய இறுதிச் சடங்கு நடைபெற்றது” என்று அந்த ஊரின் முன்னாள் தலைவரைப் பற்றி ஒரு முதியவர் புலம்பிக்கொண்டிருந்தார்.

அந்தத் தலைவரை இப்போது பலருக்கு நினைவில் இல்லை. பாலா அப்போது சிறுவனாக இருந்தான். அந்த ஊர்வலத்தில் அவனும் கலந்துகொண்டிருந்தான். அப்போது அவனுக்கு ஐந்து வயது. அவருடைய நினைவு அவன் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.

“அவர் செய்த உதவியால் தான் அவனால் வெளியூர் சென்று படிக்க முடிந்தது” என்பதை அவன் மனம் அசைப் போட்டுக் கொண்டிருந்தது.

அப்போது ஒரு கழுதையை  மணக்கோலத்தில் அலங்காரம் செய்து அழைத்துக்கொண்டு ஒரு பெண் அழுதுகொண்டே போய்க் கொண்டிருந்தாள்.

ஏம்மா? இந்த கழுதையை எங்கம்மா ஓட்டிக்கொண்டு போகிறாய்? என்று  கேட்டார் டீ கடைக்காரர்.

அதற்கு அவள், “கழுதைக்கும் மனிதனுக்கும் கல்யாணம் செய்து வைத்தால் விடாமல் பெய்யும் இந்த அடை மழை நின்று விடுமாம். நம்ம சோதிடர் சொன்னார்” என்று முந்தானையை எடுத்து முகத்தில் வழிந்தோடும் தண்ணீரைத் துடைத்துக் கொண்டே போனாள்.

விரைவில் மழை நின்று விடும் என்ற நம்பிக்கை அங்கு பிறந்தது. டீ கடையில் மகிழ்ச்சி ததும்பியது.

பாலாவுக்கும் சிரிப்பு வந்தது. அதை அடக்க அவனால் முடியவில்லை. கையில் வைத்திருந்த குடையுடன் வீட்டிற்குப் போனான்.

அவனுடைய உடலில் ஒரு சொட்டு மழைத்துளியும் விழவில்லை!


முனைவர் ஆ.சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காணாமல் போன தலைவன் (சிறுகதை)”

அதிகம் படித்தது