செப்டம்பர் 18, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

காதலும் – பிரிவும் – ஆணவக் கொலைகளும் !!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jan 19, 2019

siragu aanavakolai1

உலகில் உயிர் தோன்றக் காரணமாய் அமையும் உணர்ச்சி காதல்!! இயற்கையின் பேரன்பு உயிர்களிடத்தில் காதலாய் மலர்கின்றது. மனிதனைத் தவிர அனைத்து உயிரினங்களும் காதலில் இயல்பாய் எந்த குறுக்கீடும் இல்லாமல் ஒன்றினையும் நல்வாய்ப்பு பெற்றது. மனிதனுக்கு மட்டுமே காதல் பாலின தகுதி தவிர்த்து பணத்தகுதியும், நம் நாட்டை பொறுத்தவரையில் மதமும், சாதியும் தகுதிகளாக வைக்கப்படுகின்றன.

நாம் அறிந்த காதல் கதைகள் எல்லாம் இரு இணைகள் பிரிவில் மட்டுமே இன்று வரை காதலின் ஆழத்தையும் – காதலின் உன்னதத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டிற்கு அனார்கலி – சலீம், லைலா – மஜ்னு, அம்பிகாபதி- அமராவதி போன்ற கற்பனைக் காதல் கதைகளில் கூட காதல் இணையர்கள் வாழ்க்கையில் சேர்வதில்லை. ஷேக்ஸ்பியர் எழுதிய ரோமியோ – ஜூலியட் வரை அதுதான் நிலை. சிறந்த காதல் காவியங்கள் என மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை அனைத்தும் கற்பனையானது, சோக முடிவு கொண்டது. அந்த வகையில் நம் நடைமுறை வாழ்க்கையிலும் கூட அதன் பிரதிபலிப்பை உணர முடியும்.

சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ennu ninte moideen என்ற மலையாளப் படம் நிறைவேறாத காதலின் உண்மை கதை. 1960-1970 களில் கேரளாவில் இசுலாமிய குடும்பத்தைச் சேர்ந்த மொய்தீனுக்கும், இந்து நிலவுடைமையாளரின் மகள் காஞ்சன மாலாவிற்கும் அரும்பிய அழகிய காதல் உணர்வு 22 வருடங்கள் அவர்கள் காத்திருந்தும் திருமணத்தில் முடிவடையவில்லை. பின் ஒரு வெள்ளத்தில் சிக்கி மொய்தீன் உயிரிழக்கின்றார். மொய்தீன் மறைந்த பின்னும் இன்றும் மொய்தீனின் நினைவுகளோடு வாழும் காஞ்சன மாலாவை நம்மால் மறக்க முடியாது. அந்த காதல் உணர்வின் ஆழத்தை புரிந்து கொள்ளவும் முடியாது.

அதே போன்று இந்தி திரைப்பட உலகில் நடிகர் தேவ் ஆனந்த் -சுராய்யா(Suraiya) காதல் வாழ்க்கையினை நம்மால் கடந்து விட இயலாத துன்பம் தரும் உணர்வு.

siragu aanavakolai3

தேவ் ஆனந்த்- சுராய்யா இணைந்து ஏழு படங்கள் நடித்திருந்தனர். தேவ் ஆனந்திற்கு அது பட உலகில் முதல் கட்டம். சுராய்யா இந்தி பட உலகில் முன்னேறிய நடிகையாக பாடகியாக அப்போது மிளிர்ந்து கொண்டிருந்த தருணம். அவர்களின் காதல் 1948 ஆம் ஆண்டு வித்யா எனும் இந்தி படத்தில் இருவரும் நடித்த போது அரும்பியது. சுராய்யா இசுலாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் தாய்வழி பாட்டி, இவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் அவர்கள் இணைந்து நடிக்கும் படங்களில் உள்ள காதல் காட்சிகளுக்கு இயக்குநரிடம் ஆட்சேபம் தெரிவிக்கத் தொடங்கியதால் அவர்கள் இருவரும் இணைந்து நடிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டது. இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். அதனை விரும்பாத ஒரு நண்பர் சுராய்யாவின் வீட்டிற்கு தகவல் தர அவர்களால் திருமணத்தில் இணைய முடியாமல் போனது. சில ஆண்டுகளுக்குப் பின் தேவ் ஆனந்த் மற்றொரு சக நடிகையை திருமணம் செய்து கொண்டார். அனால் சுராய்யா இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் மறைந்தார். இவர்கள் காதலில் மதம் ஒரு முக்கியத் தடையாக இருந்த போதும் மிகப் பெரிய இசுலாமிய கூட்டுக் குடும்பத்தில் அதிக வருவாய் ஈட்டுபவராக சுராய்யா இருந்ததும் ஒரு காரணமாக சொல்லப்படுகின்றது. தன்னுடைய சுயவரலாற்றை எழுதிய நடிகர் தேவ் ஆனந்த் சுராய்யாவுடனான காதல் பற்றி வெளிப்படையாக எழுதி இருப்பார்.

இந்த கட்டுரையின் முன் பகுதியில் குறிப்பிட்டது போல பிரிந்த காதல் கதைகளே மக்களால் அதிகமாக நினைந்து போற்றப்படுகின்றது. காதலை பிரிக்கும் இப்படிப்பட்ட செயற்கை தடைகளைப் பற்றி இச்சமூகம் பெரிதாக விவாதிப்பது இல்லை. வெறும் அனுதாபப்படுவதால் காதல் எனும் உணர்வால் இணைந்தவர்களை பிரிப்பதை, கொன்று போடுவதை கடந்து விட முடியாது.

Siragu pirappokkum1

தமிழ் நாட்டினைப் பொறுத்தவரையில் ஆணவக் கொலைகள் தொடர் நிகழ்வாக உள்ளது. ஊருக்கு நடுவில் நஞ்சு உண்ண கட்டாயப்படுத்தப்பட்டு பிணங்களான கண்ணகி- முருகேசன் கொலைகளுக்கு பிறகு, திவ்யா- இளவரசன் காதலின் பிரிவும் அதைத் தொடர்ந்து இளவரசனின் கொலையும் – அதைத் தொடர்ந்து நடந்த விவாதங்களும் மிக முக்கியம் வாய்ந்தவை. நடு சாலையில் வெட்டிக் கொல்லப்பட்ட சங்கர் – கௌசல்யா, தொடர்ந்து கவுசல்யாவின் போராட்டம் என அனைத்தையும் இந்தச் சமூகம் பேசு பொருளாக பேசி வந்தாலும் இன்றும் இந்தக் கொலைகளை ஆதரிப்போர் இச்சமூகத்தில் நிறைந்து இருப்பது தான் நாம் அறிவார்ந்த சமூகம் இல்லை என்பதற்கான எடுத்துக்காட்டு.

தெலுங்கானாவில் கொல்லப்பட்ட பிரனயை நம்மால் மறக்க முடியாது. அம்ருதாவின் கண்களில் இருந்த காதல் நிரம்பிய ஒளிப்படங்கள் காலத்திற்கும் இந்தச் சாதிய சமூகத்தின் கோர முகத்தை உணர்த்திக்கொண்டே இருக்கும்.

காதலும் பிரிவும் என்ற நிலையினைத் தாண்டி, இன்று காதலும் ஆணவ கொலைகளும் என்ற அவலமான நிலையில் இருக்கின்றோம். காதல் சரியா? தவறா? என பெற்றோர் பக்கம் உள்ள நியாயங்களை பக்கம் பக்கமாக எழுதுகின்றவர்கள் எதற்கும் கொலை தீர்வல்ல என்பதை கள்ள மௌனத்தோடு கடந்து செல்வதில்தான் இந்த சாதிய சமூகம் உயிர்ப்போடு உள்ளது.

இந்த அவலங்கள் ஒருபுறம் இருக்க, காதலுக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படும் சங்க இலக்கியப் பாடல்,

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.
என்ற பாடலின் சொற்சுவையிலும் – பொருட்சுவையிலும் லயித்து பேசுவது வெறும் சடங்காகவே உள்ளது.

எத்தனை எடுத்துக்காட்டுகளை வரலாற்றிலிருந்தும், இலக்கியத்திலிருந்தும் கூறினாலும் புரிந்து கொள்ள முடியாத மக்கள் இன்றைய நடைமுறை அறிவியலிருந்தாவது பாடம் கற்கலாம். சாதியும் மதமும் விஞ்ஞான முறையில் நிரூபிக்க முடியாத வெறும் வெற்று நம்பிக்கைகள். ஒரு நிமிடத்தில் 72 தடவை துடிக்கும் இதயம், குருதியின் நிறம், வியர்வையின் சுவை இவைதான் அனைத்து மாந்தர்களுக்கும் ஆன ஒற்றுமை. தோற்றத்தில் பின்பற்றும் பழக்க வழக்கங்களில் வேறுபாடுகள் இருப்பினும் இவற்றின் பெயரால் பேதம் கற்பிக்கும் அறிவீனத்தை இந்த நூற்றாண்டிலாவது அழிக்க முன் வர வேண்டும்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காதலும் – பிரிவும் – ஆணவக் கொலைகளும் !!”

அதிகம் படித்தது