நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

காந்தியடிகளும் பெண்மையும்

முனைவர் மு.பழனியப்பன்

May 2, 2020

 siragu agimsai1

காந்தியடிகள் பெண்களையும் ஆண்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கிறார். ஆணும் பெண்ணும் அடிப்படையில் ஒன்றே. அவர்களின் ஆன்மாவும் ஒன்றே. இருவரும் அதே வகையான உணர்வுகளுடனும் ஒரே மாதிரியான வாழ்க்கையைத்தான் நடத்துகிறார்கள். ஒருவர் மற்றொருவரை நிறைவு செய்கின்றனர். ஒருவர் மற்றொருவரின் சுறுசுறுப்பான வாழ்க்கையின்றி வாழ்வதற்கில்லை.

பெண்கள் தாய்மை என்ற கடமையை ஏற்கின்றனர். இது ஆண்களைவிட அதிகமான கடமைகளுக்கு வழி வைக்கின்றது.  பெண் அகிம்சையின் அவதாரம். குழந்தையைப் பத்து மாதம் சுமப்பது, கருவுக்கு உணவூட்டி வளர்ப்பது, போன்றன அவளின் கடமைகள், துன்பங்கள். இவற்றில் அவள் இன்பம் காண்கிறாள். பிரசவ வேதனைக்கு ஒப்பான வேதனை வேறு எதுவும் உண்டா. ஆனால் ஓர் உயிரைப் படைப்பதினால் உண்டாகும் ஆனந்தத்தில் அவள் அந்த அவஸ்தைகளையெல்லாம் மறந்து விடுகிறாள்.

அதன்பின் குழந்தையை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்க்கிறாள். அன்போடு வளர்க்கிறாள். அந்தக் குழந்தைகள் அன்பினை உலகிற்குத் தரட்டும்.

பெண்  ஒருவனின் அன்னையாக அவனை உருவாக்கியவளாக, அவனை வழிநடத்திச் செல்லும் முதல்வியாக வையகம் பூராவின் உள்ளுர வேட்கையாம் உலகச் சாந்தி எனும் அமிர்தத்தைப் போட்டி பூசல்களில் ஆழ்ந்துள்ள இவ்வுலகம் பெற்றுப் பருகுவதற்கான சமாதானக் கலையை உலகிற்குக் கற்பிப்பதே பெண் ஜன்மத்தின் கடமையாகும்.

சத்தியாகிரகத்திற்குத் தலைமை தாங்கக் கூடிய தகுதி பெண்ணுக்கே அதிகம். அதற்குப் புத்தக அறிவு தேவையில்லை. வேதனையை ஏற்கும் அவளது பொறுமையும் உறுதி நம்பிக்கையும் உண்டாக்கும் நெஞ்சுரமே அதற்குப் போதுமானது.

siragu penniyam2

ஒரு முறை காந்தியாரின் அனுபவத்தில் ஒரு நிகழ்ச்சியை அவர் நேரில் கண்ணுற்றான். ஒரு பெண் அறுவை சிகிச்சைக்குத் தயாராகிறாள். அவ்வாறு அறுவைசிகிச்சை செய்யும்போது மயக்க மருந்து உட்செலுத்துவது வழக்கம். இருப்பினும் இந்தப் பெண்ணின் நிலையில் சற்றுக் குழப்பம் ஏற்பட்டது.

அவள் கர்ப்பிணியாக இருந்தாள். கர்ப்பிணியான அவளுக்கு மயக்க மருந்து செலுத்தி அறுவைச் சிகிச்சை செய்வது நல்லதல்ல. அவளின் குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் கருதினர். இதன் காரணமாக அறுவைச் சிகிச்சை செய்வது என்பது குழப்பமாக இருந்தது.

அந்தப் பெண் மயக்கமருந்து செலுத்தாமல் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளுங்கள் என்றாள். அவள் மயக்கமருந்து இல்லாமலேயே அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு அதன் வலியைத் தாங்கினாள். குழந்தையும் நலம் அவளும் நலம். இந்நிலையில் பெண்மையின் மகத்துவம் பெருமைக்குரியது என்று காந்தியடிகள் கருதுகிறார்.

காந்தியடிகளின் பெண்கள் பற்றிய சிந்தனைகள் எண்ணிப்பார்க்கத்தக்கன.

(மாதர்களே!) மனம் போன போக்கிற்கோ, சபலத்திற்கோ, ஆண்களுக்கு அடிமையாவதை மறுத்துவிடுங்கள். உங்களை அலங்கரித்துக்கொள்ளவும் மறுத்துவிடுங்கள். வாசனைத் திரவியங்களையும் நறுமண நீர்மங்களையும் நாடாதீர்கள். உங்கள் இதயத்திலிருந்து எழும் அன்பற்றுப் பெருக்கே மணங்கமழும் வாசமாம். அதன்பிறகு நீங்கள் மனிதனை வசப்படுத்துவதை விடுத்து, மனிதச் சமுதாயத்தையே உளங்கவர்ந்து விடுவீர்கள். அது உங்கள் பிறப்புரிமை பெண்ணிலிருந்தே மனிதன் தோன்றுகிறான். அவன் அவளது சதையின் சதையாக, எலும்பின் எலும்பாக இருக்கிறான். பெண்மையின் முழுமையை உணர்ந்து. வாழ்வின் வழிகாட்டிகளாகத் திரும்பவும் திகழுங்கள்.

ஆணின் போகப் பொருளாகத் தன்னைத்தானே கருதிக் கொள்வதைக் கைவிட வேண்டும். அதற்கான நிவாரணம் ஆண்களைவிடப் பெண்களின் கையிலேதான் உள்ளது ஆணுடன் சரிநிகரான பங்காளியாகப் பெண் இருக்க வேண்டுமாயின் கணவன் உட்பட ஆண்களுக்காகத் தன்மை அலங்கரித்துக் கொள்ள மறுத்துவிட வேண்டும் தனது உடலழகால் ராமனைத் திருப்திப்படுத்தச் சீதை ஒரு கணமேனும் வீணடிப்பதென்பதை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.

தன் கடமையை அறிந்து அதனைப் பூர்த்தி செய்கின்ற பெண் தனது மதிப்பு வாய்ந்த அந்தஸ்தை உணர்கிறாள். வீட்டுத் தலைவியான அவள் தனது இல்லத்து அரசி, அடிமை அல்ல

மகளிரை உயர்வாக நினைக்காத சமுதாயத்தையோ நாட்டையோ நாகரீகமானதாகக் கருதமுடியாது. பெண்களுக்குத் தகுந்த இடம் அளிக்க மனிதன் கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு  பெண்களை உயர்வுபடுத்தும் சமுதாயத்தை வாழ்த்துகிறார் காந்தியடிகள். இவர் பெண்கள் மீது பெரும் நம்பிக்கை கொண்டு இருந்துள்ளார்.

அகிம்சையை மிகச் சிறப்பாகவும் உன்னதமாகவும் வெளிப்படுத்துவதே மகளிர்க்கான இறையருள் கட்டளைப் பணி என்று நான் நம்புகிறேன். அகிம்சையை முற்றாய்ந்து உறுதியான முடிவுகள் எடுக்க ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகத் தகுதி வாய்ந்தவர்கள் என்பதே இதன் காரணம்…..தியாகங்கள் புரிவதில் ஆண்களைவிடப் பெண்களே உயர்வானவர்கள். ஆணின் வீரமோ மிருகப் பலத்தின் முரட்டுத்தனத்திற்கே ஒப்பானது.

இவ்வாறு பெண்களை அகிம்சையின் வடிவங்களாகக் காண்கிறார் காந்தியடிகள். ஆம் பெண்கள் நாட்டின் கண்கள். அவர்களே இன்றியமையாத இந்தியாவின் வழிகாட்டிகள்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காந்தியடிகளும் பெண்மையும்”

அதிகம் படித்தது