மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காலையில் வெறும் வயிற்றில் என்ன குடிக்கலாம்?

முனைவர். ந. அரவிந்த்

Apr 9, 2022

siragu thanneer kudiththal1

பல் துலக்கிய பின்னர், காலையில் வெறும் வயிற்றில் சாதாரண தண்ணீர் அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது. குளிர் அல்லது மழை காலத்தில், மிதமான சூட்டில் நீர் அருந்தலாம். சூடான நீர் அருந்தினால் மலச்சிக்கல் நீங்கும். காஃபி அல்லது டீ குடிப்பது நல்லது கிடையாது. காஃபிக்கு சுத்த தமிழில் ‘கொட்டை வடிநீர்’ என்று பெயர். இதனை ‘பிராமண சாராயம்’ என்றும் கூறுவார்கள். இதனை தொடர்ந்து குடிப்பவர்கள் அதனை விட முடியாது என்பதால் இந்த பெயர் வந்தது.

ஆற்று நீர் குடிப்பதற்கு மிகவும் உகந்தது. ஆறு அல்லது நதி நீர் சுத்தமாக இல்லையென்றால் நதி அருகே தோண்டினால் கிடைக்கும் ஊற்று நீரை எடுத்து வீட்டில் வைத்து பருகலாம். செயற்கையாக சுத்திகரிக்கப்பட்ட நீரில் இயற்கையான சத்துக்கள் இருக்காது. செயற்கையாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வருடக்கணக்கில் தொடர்ந்து பருகி வந்தால் நம் உடலில் சத்துக் குறைபாடு ஏற்படும். இவ்வகை நீரை குடிப்பதை தவிருங்கள். சில இடங்களில், உதாரணமாக நகர்ப்புறங்களில் சுத்தமான குடிநீர் கிடைப்பது கடினம். அந்த சமயத்தில் மட்டும் தற்காலிகமாக நெகிழி குவளையில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை அருந்துங்கள்.

இவை எல்லாவற்றையும் விட நல்ல சத்துள்ள குடிநீர் எதுவென்றால் மழை நீர்தான். மழைநீரில் ஊட்டச்சத்து பி12 நிறைந்துள்ளது. இது நரம்புகளுக்கு தேவையான சத்தாகும். முதல் மழை தவிர மற்ற சமயத்தில் மழை நீரை பிடித்து குடிப்பதற்கும் சமையலுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் நமக்கு தேவையான சமயத்தில் எல்லாம் மழை பெய்வதில்லை. அந்த சமயத்தில் ஆற்று நீரை பயன்படுத்தலாம்.

சில பகுதிகளில் அரசாங்கமே நீரை எடுத்து சுத்திகரித்து குழாய்கள் மூலம் தெருக்களுக்கு மற்றும் வீடுகளுக்கு விநியோகிக்கிறார்கள். இந்த நீரும் நல்ல நீர்தான். சில சமயங்களில் இந்த நீரில் குளோரின் அதிகமாக இருக்கும். இதனை இரண்டு அல்லது மூன்று நாட்கள் சென்றபின் பருகினால் குளோரின் வாடை இராது. தண்ணீரை நெகிழி குடங்களில் தேக்கி வைப்பதற்கு பதிலாக செம்பு அல்லது மண் பானைகளில் வைத்து பயன்படுத்தலாம்.

தெரு குழாய்களில் வரும் குடி நீரில் அழுக்கு மற்றும் துரு இருந்தால் வெள்ளை நிற பருத்தி துணியால் வடிகட்டி பருகலாம். அப்படியும் அழுக்கு போகவில்லையென்றால் பானையின் உட்புறம் தேத்தான் கொட்டையை தேய்த்து அதில் தண்ணீரை ஊற்றி வைத்தால் 12 மணி நேரத்தில் அழுக்குகள் பானையின் அடியில் படிந்துவிடும். அதற்கு பிறகு மேலே உள்ள நீரை எடுத்து பயன்படுத்தலாம்.

உடலில் சத்து குறைபாடு உள்ளவர்கள் இரவு நேரத்தில் தோல் சீவிய இஞ்சியை மெல்லிய அகன்ற துண்டுகளாக நறுக்கி அதனை தேனில் ஊற வைத்து, காலையில் பாத்திரத்தின் அடியில் தங்கியிருக்கும் வெள்ளை நிற படிவுகளை தவிர்த்து மேலே உள்ள நீரில் நல்ல நீரை கலந்து பருகினால் நல்லது. இவ்வாறு அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

தண்ணீர் குடித்து சுமார் அரைமணி நேரம் கழித்து நெல்லிக்காய், கறிவேப்பிலை, மாதுளை, கேரட், பீட்ரூட் மற்றும் வெள்ளரி போன்றவற்றை தனியாகவோ அல்லது ஒன்றாக சாறு எடுத்து பருகலாம்.


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காலையில் வெறும் வயிற்றில் என்ன குடிக்கலாம்?”

அதிகம் படித்தது