ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

கால்பந்து தமிழச்சி!

சா.சின்னதுரை

Feb 13, 2016

kaalpandhu1

தமிழகத்தின் முதல் சர்வதேச கால்பந்து பெண் நடுவராகத் தேர்வாகியுள்ளார் ரூபாதேவி. அவருடன் ஒரு நேர்காணல்..

உங்களைப்பற்றி?

ரூபாதேவி: திண்டுக்கல் மாவட்டம் ஒய்.எம்.ஆர்.பட்டி கிராமம்தான் எனது சொந்தஊர். அப்பா குருசாமி ஒரு மில் தொழிலாளி. அம்மா சென்னம்மாள். இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்கள். ஒரு அக்கா, ஒரு அண்ணன் இருக்கிறார்கள். அக்காள் விஜயலட்சுமியின் பராமரிப்பில் படித்து வளர்ந்தேன். திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில் பி.எஸ்.ஸி., வேதியியல் மற்றும் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் சுகாதார ஆய்வாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பு முடித்துள்ளேன். ஆரம்பத்தில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன். சம்பளம் குறைவு, போட்டிகளுக்குச் செல்ல அனுமதி இல்லை போன்ற காரணங்களால் வேலையை விட்டுவிட்டேன்.

கால்பந்து போட்டி ஆர்வம் எங்கிருந்து வந்தது?

ரூபாதேவி: திண்டுக்கல் செயின்ட் ஜோசப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும்போது மூத்த மாணவர்கள் விளையாடுவதைப் பார்த்துத்தான் எனக்கு கால்பந்தில் ஆர்வம் வந்தது. அப்போது நடந்த போட்டி ஒன்றில் வெற்றி பெற்றது ஆர்வத்தை அதிகமாக்கியது. என் பயிற்சியாளர் ஜஸ்டின் ஆரோக்கியராஜ் என்னை ஊக்கப்படுத்தி நிறைய பயிற்சிகள் கொடுத்தார். பள்ளியில் படிக்கும்போது திண்டுக்கல் அணி சார்பாக மாவட்டப்போட்டிகளில் விளையாட ஆரம்பித்தேன்.

திண்டுக்கல் ஜி.டி.என் கல்லூரியில் படிக்கும்போது நிறைய போட்டிகளில் கலந்து கொண்டேன். மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி மற்றும் திண்டுக்கல் கால்பந்துக்கழக அணிக்காக விளையாடினேன். பின்னர் மாநில மற்றும் தேசிய அணிகளுக்குத் தேர்வாகி பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தேன். திண்டுக்கல் மாவட்ட கால்பந்தாட்ட கழக தலைவர் சண்முகம் போட்டிகளுக்குச் செல்வதற்கான உதவிகளைச் செய்துவந்தார்.

kaalpandhu2

நடுவர் பிரிவுக்கு எவ்வாறு நுழைந்தீர்கள்?

ரூபாதேவி: 2006–07–ம் ஆண்டு நடுவர்களுக்கான தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். 2002-ல் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் துணைநடுவராகப் பணியாற்றிய சென்னையைச் சேர்ந்த கோமலேஸ்வரன் சங்கர்தான் அப்போது எனக்கு தேர்வு கண்காணிப்பாளராக வந்தார். தேர்வுக்கு வந்தவர்களில் நான் மட்டுமே பெண் என்பதால், அவர் எனக்கு நிறைய ஊக்கமும் நம்பிக்கையும் கொடுத்தார்.

இலங்கையில் நடந்த 14 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான போட்டியில் நடுவராகப் பணியாற்றினேன். இதுவே நான் வெளிநாட்டில் நடுவராகப் பணியாற்றிய முதல்அனுபவம். அது முடிந்ததும் கத்தார் நாட்டில் நடைபெற்ற மேற்காசிய போட்டிகளில் நடுவராகப் பணியாற்றினேன். அடுத்து பஹ்ரைன், மலேசியா, நேபாளம், மாலத்தீவு போன்ற நாடுகளில் நடுவராகப் பணியாற்றியிருக்கிறேன். தேசிய அளவிலான கால்பந்துபோட்டி, சில ஆசிய போட்டிகளுக்கு நடுவராக என் பணி தொடர்ந்தது. 2013-ல் இருந்து இந்தியா முழுவதும் நடந்த பல்வேறு போட்டிகளில் நடுவராகப் பணியாற்றினேன்.

2012-ல்‘ Project Future’ என்ற ஒரு திட்டம், ஆசிய கால்பந்து சம்மேளனம் மூலமாகக் கொண்டுவரப்பட்டது. 25 வயதுக்குக் கீழ் இருக்கும் ஆண்-பெண்களுக்கு நடுவர் பயிற்சி அளித்து போட்டிகளுக்கு அனுப்பும் அந்தத் திட்டத்தில், இந்தியா முழுவதிலும் இருந்து தேர்வான 140 பேரில் நானும், மேற்குவங்கத்தைச் சேர்ந்த மோனிகாவும் மட்டுமே பெண்கள். இருவருமே இப்போது சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராகப் பணியாற்றுகிறோம்.

சர்வதேசப் போட்டிகளுக்கான நடுவராக எவ்வாறு தேர்வானீர்கள்?

kaalpandhu3

ரூபாதேவி: ஆசியப்போட்டிகளில் எனது தீவிரமான ஈடுபாட்டைப் பார்த்த இந்திய மற்றும் ஆசிய அளவிலான கால்பந்துக்கழகங்கள் என்னை சர்வதேச நடுவராக செயல்பட சர்வதேச கால்பந்து சம்மேளனத்துக்கு (FIFA) பரிந்துரைத்தன. அதற்கான எழுத்து மற்றும் உடல்திறன் தேர்வுகளில் வெற்றிபெற்றேன். இந்நிலையில், சர்வதேச நடுவராக எனக்கு வாய்ப்பளித்து FIFA அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தென் இந்தியாவில், முதல் சர்வதேச பெண் நடுவராகத் தேர்வானது பெருமையாக உள்ளது. என்னுடன் மேற்குவங்காளத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் சர்வதேச நடுவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிப்ரவரி மாதம் மேகாலயா மாநிலத்தில் தொடங்கவுள்ள, தெற்காசிய கால்பந்து போட்டிகளில் ‘FIFA Referee’ என்ற அடையாளத்துடன் களமிறங்குகிறேன்.

அடுத்த இலக்கு?

ரூபாதேவி: இது எனது நீண்ட முயற்சிக்குக் கிடைத்த உயர்ந்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். இதில் சிறப்பாக செயல்பட்டு, அடுத்து ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் உலகக் கால்பந்து போட்டிகளில் நடுவராகப் பங்கேற்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்.

இந்தத் தருணத்தில் எனது நலன் விரும்பிகளுக்கும், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


சா.சின்னதுரை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கால்பந்து தமிழச்சி!”

அதிகம் படித்தது