ஆகஸ்டு 1, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

காவிரிக்கு உரியவர் யார்?

தேமொழி

Apr 13, 2019

siragu kaavirikku2

காவிரிக்கு உரியவர் யார்? என்ற கேள்வி இக்காலத்தில் மாநில அரசுகளுக்கிடையில் நிகழும் காவிரிநீர் பங்கீடு பற்றியஉரிமைப் போராட்டம் குறித்து எழுந்த கேள்வியல்ல. மாறாக, காவிரி யாருக்குரியவள் என்று தமிழிலக்கியப் பாடலும், வடமொழி கல்வெட்டுப்பாடல் ஒன்றும் குறிப்பிடும் செய்தியை மீள்பார்வை செய்யும் முயற்சி.

 திங்கள் மாலை வெண்குடையான்,

  சென்னி,செங்கோல் அது ஓச்சி,

கங்கை தன்னைப் புணர்ந்தாலும்,

  புலவாய்; வாழி, காவேரி!

கங்கை தன்னைப் புணர்ந்தாலும்,

  புலவாதொழிதல், கயல் கண்ணாய்!

மங்கை மாதர் பெரும் கற்பு என்று

  அறிந்தேன்; வாழி, காவேரி! [புகார்க் காண்டம்: 7. கானல் வரி; 21-28]

 உரை:

மாலையால் அலங்கரிக்கப்பட்ட முழுமதி போன்ற அழகிய வெண்கொற்றக் குடையைக் கொண்ட சோழன், தனது செங்கோல் ஆட்சியின் கீழ் கொணர்ந்த கங்கையுடன் கூடினாலும், காவேரி பெண்ணே நீ அவனை வெறுக்க மாட்டாய், உன் பண்பு வாழ்க. அவ்வாறு வெறுப்பதை ஒழித்தது, கயல் கண்கள் கொண்டவளே, உனது தலைவன் மீது நீ கொண்ட காதலால் விளைந்த கற்பு என அறிந்தேன், நீ வாழ்க.

மன்னும் மாலை வெண்குடையான்

  வளையாச் செங்கோல்-அது ஓச்சி,

கன்னி-தன்னைப் புணர்ந்தாலும்,

  புலவாய்; வாழி, காவேரி!

கன்னி-தன்னைப் புணர்ந்தாலும்,

  புலவாதொழிதல், கயல் கண்ணாய்!

மன்னும் மாதர் பெரும் கற்பு என்று

  அறிந்தேன்; வாழி, காவேரி! [புகார்க் காண்டம்: 7. கானல் வரி; 29-36]

உரை:

சிறப்புமிக்க மாலையால் அலங்கரிக்கப்பட்ட அழகிய வெண்கொற்றக் குடையைக் கொண்ட சோழன், நேர்மையிலிருந்து வளையாத தனது செங்கோல் ஆட்சியின் கீழுள்ள குமரியாற்றுடன் கூடினாலும், காவேரி பெண்ணே நீ அவனை வெறுக்க மாட்டாய், உன் பண்பு வாழ்க.அவ்வாறு நீ பிணக்கு கொள்வதை ஒழித்தது, கயல் கண்கள் கொண்டவளே, மகளிரின் சிறப்புமிக்க கற்பின் நிலை என அறிந்தேன், நீ வாழ்க.

இப்பாடல்கள் சிலப்பதிகாரத்தில் கோவலனும் மாதவியும் கடற்கரைக்குச் செல்லும்பொழுது கோவலன் பாடும் கானல் வரி பாடல்களாக இளங்கோவடிகளால் எழுதப்பட்டுள்ளது. சோழ மன்னன்கங்கைகுமரி ஆறுகளுடன்  கூடினாலும் காவிரி சோழனுடன் ஊடல் கொள்ள மாட்டாள், அது அவளது செம்மையான கற்பின் அறிகுறி எனப் பொருள்படும்படி கோவலன் பாடுகிறான். இது அக்காப்பியத்தின் திருப்புமுனைக் காட்சி.கோவலனின் இப்பாடலுக்கு மறுமொழியாக மாதவி பாடும் பாடலினால் கருத்து பேதம் தோன்ற, கோவலன் மாதவியைக் கைவிட்டு தனது மனைவி கண்ணகியிடம் திரும்பிவிடுகிறான். இதுவே மாதவியும் கோவலனும் இணைந்திருக்கும் இறுதிக் காட்சி. பிறகு செல்வம் ஈட்டுவதன் பொருட்டு கண்ணகியின் சிலம்புடன் அவர்கள் மதுரை செல்கிறார்கள், கோவலன் கொலையுறுகிறான். வெகுண்டெழும் கண்ணகி நீதி கேட்டு மதுரையைத் தீக்கிரையாக்குகிறாள் என்பது நாமறிந்த சிலம்பின் கதை.

சிலப்பதிகாரம் கலைஞரின் கைவண்ணத்தில்”பூம்புகார்” திரைப்படமாக உருவெடுத்தபொழுது, திரைப்படத்தில் இடம்பெறும் இந்த கானல் வரி காட்சிக்கான “காவிரிப் பெண்ணே வாழ்க” என்ற பாடலை எழுதிய கண்ணதாசன்,

“காவிரிப் பெண்ணே வாழ்க

உந்தன் காதலன் சோழ வேந்தனும் வாழ்க

காவிரிப் பெண்ணே வாழ்க

நீ வாழ்க … பெண்ணே வாழ்க” … எனக் காவிரியை வாழ்த்தி, இளங்கோ தந்த சிலம்பின் மேற்காட்டிய இரு பாடல்களின் (வரிகள் 21- 36) கருத்தையும்மிக அழகாகச் சுருக்கமாகக் கீழ்வரும் நான்கு வரிகளில் அமைத்திருப்பார்.

“உன்னரும் கணவன் கங்கையை அணைத்தே

கன்னி குமரியையும் தன்னுடன் இணைத்தான்

ஆயினும் உன் நெஞ்சில் பகை ஏதும் இல்லை

அதுவே மங்கையரின் கற்புக்கோர் எல்லை”

சுமார்1500 ஆண்டுகளுக்கும் மேலானஇடைவெளியில் பாடப்பெற்ற இரு பாடல்களின் வரிகளும் கவிநயத்தில் ஒன்றுக்கொன்று சளைத்ததாக இல்லை என்பது வியப்பளிப்பது. இப்பாடல்களில் காவிரி சோழனுக்குரியவள் என்று காட்டப்படுவது போல, காவிரி மற்றொரு பேரரசனுக்கு உரியவள் என்று காட்டும் கல்வெட்டுத் தகவலும் உண்டு.

திருச்சிராப்பள்ளிமலைக்கோட்டையில், தாயுமானவர் ஆலயத்தைக் கடந்து மலையின் உச்சிக்கு ஏறும் வழியில் உள்ள ‘இலளிதாங்குர பல்லவேஸ்வர கிருகம்’ என்ற முதலாம் மகேந்திரவர்மர்(கி.பி. 615-630) எழுப்பிய குடைவரையில் காவிரி தனக்குரியவள் என்று கவிநயத்துடன் குறிப்பிட்டுள்ளார் மகேந்திரவர்ம பல்லவர்.

இக்குடைவரையில் சிவன் கங்காதரராகத் தனது சடையில் கங்கையை ஏற்கும் காட்சி வடிக்கப்பட்ட சிற்பம் உள்ளது.பல்லவ கிரந்தத்தில் வெட்டப்பட்டுள்ள முதலாம் மகேந்திரவர்மரின்வடமொழிப்பாடல்கல்வெட்டுகள் இச்சிற்பத்தின் இருபுறமும் உள்ளன.சிலையின் இடப்புறம் உள்ள கல்வெட்டுப் பாடல் ஒன்றில், குணபரன்என்ற மன்னனால் (குணபரன் என்பதுமகேந்திரவர்மரின்பட்டப்பெயர்களில் ஒன்று) இக்கோயில் சிவனுக்காகத் தோற்றுவிக்கப்பட்டது.நதிப்பிரியரான சிவன் காவிரியின் அழகைப்பார்த்து காவிரியின் மீது காதல்கொண்டு விடுவார் என்று அஞ்சிய மலைமகள் உமை, சிவனைவிட்டு அகலாமல் அருகிலிருந்தவண்ணம், இந்தக் காவிரியானவள் பல்லவனுக்கு உரியவள் என்று சிவனுக்கு நினைவுபடுத்துகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்பாடல் மூலம் காவிரி பாயும் சோழவளநாடு பல்லவனின் உரிமையாகிவிட்டது என்று குறிப்பிடப்படுவதையும், குணபரர் ஆகிய முதலாம் மகேந்திரவர்மரின் கவியுள்ளக் கற்பனையையும் ஒருங்கே அறியலாம். (மேலும் ஒரு சுவையான ஒரு தகவல்; இப்பாடலுக்கு அடுத்து வரும்பாடலின் வரிகளில்தான் மகேந்திரவர்மர்தான் எதிர்ச்சிந்தனை கொண்ட சமயத்திலிருந்து லிங்கத்தை வழிபடும் சமயநெறிக்கு மாறிவிட்டதை “குணபர அரசன் லிங்கத்தைப் பூசிப்பவன் ஆதலின், இதற்கு எதிர்முறையில் இருந்து திரும்பிவந்த அவனது அறிவு (இக்கோவிலில் அவன் வைத்த) லிங்கத்தால் உலகெலாம் பரவட்டும்” எனக் குறிப்பிடுகிறார்). கல்வெட்டு ஆய்வாளர் ஹூல்ஷ் (E. Hultzsch) 19 ஆம் நூற்றாண்டில் படித்து வெளியிட்ட இக் கல்வெட்டின் பாடம் கீழே.

siragu kaavirikku1

மகேந்திரவர்மன் சமஸ்கிரதத்தில் எழுதி கல்லில் வெட்டிய பாடல்களின் தமிழாக்கத்தைக் கல்வெட்டு ஆய்வாளர்கள் முனைவர் மு. நளினி மற்றும் முனைவர்முனைவர் இரா. கலைக்கோவன் தங்களின் “மகேந்திரர் குடைவரைகள்” என்ற நூலில் அளித்துள்ளார்கள். அது இங்கு கொடுக்கப்படுகிறது.

கல்வெட்டுப்பாடல் 5: [SII 1:33]

“நதி விரும்பியான சிவபெருமான், கண்ணுக்குக் குளுமையூட்டும்நீர்ப்பரப்பும், தோட்டங்களை மாலையாக அணிந்த நிலையும், நேசிப்பிற்குரிய பண்புகளையும் பெற்ற காவிரியால் கவரப்பட்டு காதல் கொண்டுவிடுவாரோ என்று அஞ்சித் தன தந்தையின் குடும்பத்தை நீங்கி இம்மலையில் நிரந்தரமாகத் தங்க வந்துள்ள மலைமகள், காவிரியைப் பல்லவ அரசரின் அன்பிற்குரியவளாக அறிவிக்கிறார்.” [மகேந்திரர் குடைவரைகள்; முனைவர் மு. நளினி, முனைவர் இரா. கலைக்கோவன். பக்கம்: 183]

‘பல்லவாசிய தைதமேத்தம்’ (Pallavasya Dayitametam) என்று பார்வதி சிவனிடம் கூறுவதாகப் பாடலில் இடம்பெறும் குறிப்பின்மூலம் மகேந்திரவர்மர் காவிரி தனக்குரியவள் என உரிமை கொண்டாடுவது தெளிவாகிறது.

சிலப்பதிகாரத்தில்தமிழகத்தில் பல்லவர் ஆட்சி குறித்தஎந்த ஒரு குறிப்பும் இடம்பெறவில்லை. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் மகேந்திரவர்மனின் தந்தை சிம்மவிஷ்ணு காலத்தில் சோழ அரசு பல்லவர்ஆட்சியின் கீழ்வருகிறது. இதனால் இளங்கோவின் சிலப்பதிகாரம் இக்காலத்திற்கும் முற்பட்டது எனக் கொள்ளலாம். காவிரி சோழனுக்குரியவள் என்று இளங்கோ கூறிய பாடல் வரிகளின் தாக்கம் அடுத்து சோழ ஆட்சியைக் கைப்பற்றிய பல்லவர் மகேந்திரவர்மனின் பாடலில் உள்ளது எனவும் கொள்ளலாம்.

அரசுகள் மாறலாம், ஆட்சியாளர்களும் மாறலாம்.ஆட்சிக்கு வரும் எவரும் தனது நாட்டில் பாயும் ஆறு தன்னுடையது என உரிமையும் கொண்டாடலாம்; ஆனால் எந்த ஒரு ஆறும் அதனால் பயன்பெறும் நிலத்தின் மக்களுக்கு உரியது என்பதுதான் இயற்கை வழங்கிடும் தீர்ப்பு.

நன்றி:

தகவல்கள் தந்துதவிய ‘பொன்னியில் செல்வன் சரித்திரப் பேரவையாளர் சுந்தர் பாரத்வாஜ்’ அவர்களுக்கு

சான்றாதாரங்கள்:

1. சிலப்பதிகாரம்: இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் மூலமும் நாவலர் பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும்

பதிப்பு: தமிழ் இணையக் கல்விக்கழகம் – http://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=9

2. மகேந்திரர் குடைவரைகள்; முனைவர் மு. நளினி, முனைவர் இரா. கலைக்கோவன். பக்கம்: 183

சேகர் பதிப்பகம், 2012

3. பல்லவர் வரலாறு, டாக்டர் மா. இராசமாணிக்கனார், அத்யாயம் 9. மகேந்திரவர்மன்.

4. SII 1:33; South Indian inscriptions vol.1, The Archaeological Survey of India, Editor- E. Hultzsch, Publication – 1991, Pages 29-30

https://archive.org/details/in.gov.ignca.79590/page/n43

5. A Pallava king’s poetic expedition, Suganthy Krishnamachari, February 22, 2018, The Hindu

https://www.thehindu.com/society/history-and-culture/the-story-behind-a-sculpture/article22825367.ece


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காவிரிக்கு உரியவர் யார்?”

அதிகம் படித்தது