ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

காவிரி நாடன்ன கழனிநாடு

முனைவர் மு.பழனியப்பன்

Jun 18, 2016

Siragu-kaveri-naadanna6காவிரி பாயும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள தேரெழுந்தூர் என்ற ஊர் கம்பர் பிறந்த ஊராகும். மயிலாடுதுறையில் ஓடும் காவிரி தூலா தீர்த்தம் என்று இக்காலத்தில் மக்களால் அழைக்கப்படுகின்றது. இதில் ஐப்பசி மாதத்தில் முழுகுவதன் வாயிலாக பாவங்கள் தீரும் என்றும் இந்த ஆறு கங்கை நதிக்கு ஒப்பானது என்றும் மக்கள் கருதிவருகின்றனர். கம்பர் காலத்திலும் காவிரி ஆறு கங்கைக்கு ஒப்பானது என்ற கருத்து இருந்துள்ளது. அவர் தம் காப்பியத்தில் கங்கையை நினைவு கூரும்போதெல்லாம் காவிரியையும் நினைவு கூருகின்றார். மேலும் காண்டங்கள்தோறும் காவிரியாற்றை நினைவு கூர்ந்து தன் சோழநாட்டுப் பற்றினைக் கம்பர் வெளிப்படுத்தியுள்ளார். சுந்தர காண்டத்தில் மட்டும்தான் வெளிப்படையாக காவிரி ஆறு பற்றிய குறிப்பு இல்லை. ஆனால் அனுமன் பொழிலை இறுத்தபோது ஆற்றில் ஆச்சாள் மரங்கள் வீசப்பட்டன என்று கம்பர் குறிப்பிடுகிறார். அந்த ஆறு காவிரியாகக் கொள்ளத்தக்கது என்று உரையாசிரியர்கள் கருதுகின்றனர். ‘‘வண்டு அலம்பு நல் ஆற்றின் மராமரம், வண்டல் அம்புனல் ஆற்றில் பாய்ந்தன’’ (சுந்தர காண்டம், பொழில் இறுத்த படலம், பா.எ. 32) என்ற பாடலடியில் காவிரியாறு சுட்டப்படுவதாக உரையாசிரியர்கள் கருதுகின்றனர்.

காவிரியும் கங்கையும் ஒன்று எனக் கருதுவதன் வாயிலாக அதன் புண்ணியத் தன்மை ஒற்றுமைப்படுகிறது என்பதை விட இரு ஆறுகளும் இயற்கையோடு செயற்கைக் கலப்பின்றி மாசின்றி இருந்துள்ளன என்பதும் அறியத்தக்கதாகும். கங்கைக் கரைக் கதை வால்மீகி இராமாயணம் என்றால் காவிரிக் கரைக் கதை கம்பராமாயணம் ஆகின்றது. கங்கையும் காவிரியும் இரு இணைகள். வால்மீகியும் கம்பரும் இரு இணைகள். இந்த இரு இரு இணைகளும் நடையில் நின்று உயர் இராமன் என்ற ஒற்றை மையத்தை நோக்கிப் பயணிக்கின்றன என்பது குறிக்கத்தக்கது.

பால பருவத்தில் இராமனும் இலக்குவனும் மிதிலைக்குச் செல்லும் வழியில் கங்கைக்கரைக்கு வருகின்றனர். இச்சூழலுக்குப் பின் கங்கைக் கரை என்பது கம்பராமாயணக் காப்பியத்தின் முக்கியமான திருப்புமுனைகளுக்கு உரிய பகுதியாக விளங்கி நிற்கிறது.

       ‘‘அங்கு நின்று எழுந்து அயன் முதல் மூவரும் அனையார்

     செங்கண் ஏற்றவன் செறிசடைப் பழுவத்தில் நிறைதேன்

       பொங்கு கொன்றை ஈர்த்து ஒழுகலால் பொன்னியைப் பொருவும்

       கங்கை என்னும் அக்கரை பொருதிருநதி கண்டனர்’’

                                  (பாலகாண்டம், அகலிகைப்படலம், பா.எ. 5)

என்ற இந்தப் பாடலில் முக்கடவுளர்களைப் போன்று விளங்கும் இராமன், இலக்குவன், விசுவாமித்திரன் ஆகிய மூவரும் கங்கை என்னும் திருநதியைக் கண்டனர் என்று குறிக்கப்படுகிறது. முக்கடவுளர்களில் சிவபெருமான் தன் தலையில் புண்ணிய நதியாம் கங்கையைச் சுமந்து இருப்பவர் ஆவார். மேலும் அவர் தலையில் கொன்றை மலர்களும் இருக்கும். இக்கொன்றை மலர்கள் கங்கையாற்றில் விழுந்து உலகம் முழுவதும் பரவுகின்றன என்பது கம்பரின் கற்பனை.

Siragu-kaveri-naadanna5கங்கையில் பொன்னிறமான கொன்றை மலர்கள் வீழ்ந்து, கங்கை ஆற்றையே பொன்னிறமாக்கி விடுகின்றதாம். அவ்வாற்றினைக் காணும்போது பொன்னிறமுடைய காவிரியைப் போன்று அது காணப்படுகிறதாம் என்று கம்பர் குறிப்பிடுகிறார். கங்கை காவிரியாகாது. ஏனெனில் அதில் கொன்றை மலர்கள் கலக்க வாய்ப்பில்லை. ஆனால் காவிரி கங்கையாகும். ஏனெனில் அதில் கொன்றை மலரும் இருக்கின்றது. புனிதத்தன்மையும் இருக்கின்றது. இப்பாடலில் கங்கையின் பெருமையைக் காட்டி, காவிரியின் இயற்கை வளத்தைக் காட்டிவிடுகிறார் கம்பர்.

மேலும் மேற்சுட்டிய மூவரின் பயணம் மிதிலை நகரில் தொடருகின்றது. இம்மூவரும் மிதிலை கடைவீதிகளில் நடந்து வருகின்றனர். மிதிலைக் கடைவீதியைப் பார்த்தால் அவ்வீதி காவிரி ஆறு போல் கிடக்கிறதாம்.

       ‘‘வரப்புஅறு மணியும் பொன்னும் ஆரமும் கவரிவாலும்

       சுரத்திடை அகிலும் மஞ்ஞைத் தோகையும் தும்பிக் கொம்பும்

       குரப்புஅணை நிரப்பும் மள்ளர் குவிப்புற கரைகள் தோறும்

       பரப்பிய பொன்னி அனை ஆவணம் பலவும் கண்டார்’’

                             (பாலகாண்டம்,மிதிலைக் காட்சிப் படலம், பா.எ. 10)

என்ற பாடலில் காவிரி ஆற்றின் இருகரையோரங்களிலும் காவிரியாற்றால் அடித்துவரப்பெற்ற பெரும் பொருட்கள் கிடக்கின்றன என்று கம்பர் குறிக்கிறார். பல பொருட்கள் குழுமிய காவிரியாற்றின் இரு கரை போல வணிக மையங்கள் அமைந்திருக்க, நடுவில் ஆறுபோல வீதி அமைந்திருந்ததாகக் காவிரியை மிதிலை நகர வீதியுடன் ஒருங்கு வைத்துப் பார்க்கிறார் கம்பர்.

Siragu kaveri naadanna2காவிரியாற்றால் அடித்து வரப்பெற்று கரை ஒதுங்கிய பொருட்களின் பட்டியலைக் கம்பர் தருகிறார். இப்பட்டியல் காவிரியாற்றின் இயற்கைத் தன்மைக்குச் சான்றாகும். ‘‘அளவில்லாத இரத்தினங்கள், பொன், முத்து, கவரிவால், அகில், மயில் பீலி, யானைத் தந்தங்கள் ஆகிய பொருட்கள் காவிரியாற்றால் அடித்துவரப்பெறுகின்றன. அவற்றை உழவர்கள் கட்டுக் கட்டாகக் கட்டி கரையோரத்தில் வைத்துள்ளனர். அதுபோன்று மிதிலை நகரத்தில் வணிகப் பொருட்கள் கட்டுக்கட்டாகக் கட்டி வைக்கப்பெற்றிருந்தன என்று கம்பர் காவிரியாற்றையும், மிதிலை நகர வணிக வீதியையும் ஒப்பு நோக்குகின்றார். காவரி ஆறு இயற்கை வளத்தோடுத் தமிழகத்திற்கு ஓடிவருகிறது என்பது கம்பர் தரும் பதிவாகும்.

சீதையைத் திருமணம் முடிக்கும் முக்கியத் திருப்புமுனை இக்கங்கையாற்றின் காட்சிக்குப் பின்னர் காப்பியத்தில் இடம்பெறுகிறது. இதுபோன்று பரதன் அண்ணன் இராமனைத் தேடிவரும் நிலையிலும் கங்கையாற்றின் கரை முக்கிய இடம் பெறுகிறது. அப்போதும் காவிரியை நினைவு கொள்கிறார் கம்பர்.

பரதன் அயோத்தியை விட்டு அண்ணனைத் தேடிக் காட்டிற்கு வருகிறான். இதனைக் கம்பர் காவிரி பாய்ந்து வளம் பெருகும் தமிழ்நாட்டைப் போன்ற கோசல நாட்டை விட்டு நீங்கினான் என்று குறிப்பிடுகிறார். அவரின் நாட்டுப்பற்று மிக்குயரந்து நிற்கும் இடம் இதுவாகும்.

       பூவிரி பொலன் கழல் பொருஇல் தானையான்

       காவிரி நாடு அன்ன கழனிநாடு ஒரீஇத்

       தாவர சங்கமம் என்னும் தன்மைய

       யாவையும் இரங்கிடக் கங்கை எய்தினான்

                           (அயோத்தியா காண்டம், கங்கைகாண்படலம், பா. எ. 60)

இப்பாடலில் காவிரிநாடு என்றால் கழனிகள் உடைய நாடுதான் என்று தமிழகத்தை விவசாயம் சார்ந்த தொழில் நாடாகக் கம்பர் நோக்குகின்றார். மேலும் மரவுரி தரித்துப் பரதன் செல்வதைப் பார்த்து எல்லா உயிரும் இரங்கி அழுதன என்பது இப்பாடலின் பொருளாகும். இதில் கம்பர் இருவகை உயிரின வகைகளை இரு பிரிவாக்கிக் காட்டுகின்றார். அவை பின்வருமாறு. 1. தாவர 2. சங்கமம் என்பனவாகும்.

அதாவது ஓரே இடத்தில் நிலையாக இருக்கும் நிலைத்திணைகளாகிய மரம், செடி, கொடி போன்றன தாவர நிலைப்பாடுடையன.

இடம்விட்டு இடம் பெயர்ந்து செல்லும் தன்மை படைத்தனவான ஊர்வன, பறப்பன, விலங்கு போன்றன இயங்கு திணை வகைப்பட்ட சங்கம நிலைப்பாடுடையன.

இதையே இன்றைக்குச் சூழலியலாளர்கள் சுற்றுச்சூழல் என்பதே தாவரம், சங்கமம் ஆகிய இரண்டை உட்படுத்திய அறிவியல் என்று கருதுகின்றனர். கம்பரும் சுற்றுச்சூழல் என்ற நிலையில் இவ்விரண்டையும் பகுத்துள்ளது கருதத்தக்கது. பரதன் என்ற மனிதனின் நிலை கண்டு இயற்கைச் சூழல் இரங்குவதாகக் கம்பன் படைத்துள்ளார்.

காவிரியின் போக்கைக் குறிக்கும் கம்பர் அதன் பிறப்பு பற்றியும் அறிவிக்கிறார். அகத்தியரின் கமண்டலத்தில் அடங்கிய, தோன்றிய ஆறு காவிரி என்பது ஒரு புராணக்கதை ஆகும். இதையையும் கம்பர் காட்டுகின்றார்.

       ‘‘கண்டனன் இராமனை வரக் கருணை கூரப்

       புண்டரிக வாள்நயனம் நீர் பொழிய நின்றான்

       எண்திசையும் ஏழ் உலகும் எவ்வுயிரும் உய்ய

       குண்டிகையினில் பொரு இல் காவிரி கொணர்ந்தான்’’

                     (ஆரணிய காண்டம், அகத்தியப்படலம், பா.எ. 46)

என்ற இப்பாடலில் அகத்தியரும் இராமனும் சந்தித்துக் கொள்கின்றனர். அப்போது இவ்விருவரின் உணர்வு வெள்ளம் பெருகுகிறது. ஆனாலும் அடங்கி நிற்கிறது. அது எது போல அடங்கி நிற்கிறது என்றால், காவிரி கமண்டலத்தில் அடங்கியதுபோல அடங்கி நிற்கிறதாம். காவிரியைக் கமண்டலத்தில் இருந்து வழியச் செய்தால் அது பெருகி ஓடும். இராமனும் அகத்தியரும் சந்தித்த உணர்வு வெள்ளமும் அடங்கி நிற்கிறது. அதனை வெளிப்படுத்தினால் பரந்து ஓடிவிடும் என்பதைக் காட்ட கமண்டல அடக்கத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார் கம்பர்.

அகத்தியர்.. கமண்டலத்தில் அடங்கியிருக்கும் காவிரி வெளிவந்தால் இதன் காரணமாக எண்திசை வளம் பெறும். ஏழ் உலகு வளம் பெறும். பல்லுயிரும் வளம் பெறும். பெறவேண்டும் என்பது கம்பரின் ஆவல். இவ்வாறு காவிரியின் பிறப்பினையும் கவிதையாக்கிவிடுகிறார் கம்பர்.

Siragu kaveri naadanna3கங்கை திருநதி என்று முன்னர் குறிப்பிடப்பெற்றது. அதனை விட காவிரியை உயர்த்தவேண்டும் என்று எண்ணிய கம்பர் தெய்வத்திருநதி என்று காவிரியைக் காட்டுகின்றார். ‘‘அதன்பின்னை நளீநீர்ப் பொன்னிச் சேடு உறு தண்புனல் தெய்வத்திருநதியின் இரு கரையும் தெரிதிர் மாதோ’’ (கிட்கிந்தா காண்டம், நாடவிட்டப் படலம், பா.எ. 29) என்று சுக்ரீவன் வானரங்களுக்குத் தமிழ்நாட்டிற்குச் சென்று தேடும் இடங்களை, வழியைக் காட்டுகின்றான். உயர் தன்மை பொருந்திய குளிர்ச்சி பொருந்திய ஆறு காவிரியாறு என்பது இப்பாடலடி வழியாகப் பெறப்படும் காவிரியாற்று நீரின் தன்மையாகும். இத்தோடு நில்லாமல் பலமுறையும் காவிரி பாய்ந்து வளம் கொழிக்கும் நாடாகச் சோழநாடு விளங்குவதாகக் கம்பர் குறிக்கிறார். அவை ஒன்றன்பின் ஒன்றாக இங்கு அடுக்கிச் சொல்லப்படுகின்றன.

‘‘துறைகெழு நீர்ச் சோணாடு’’ (கிட்கிந்தா காண்டம், நாடவிட்டபடலம், பா. எ.30) என்று நீர்வளம் பொருந்திய நாடாகச் சோழநாடு மற்றொரு இடத்தில் கம்பரால் காட்டப்பெறுகிறது.

இதுவரை காவிரியாற்றை உவமையாகவும், மறைமுகமாகவும் சொல்லிவந்த கம்பருக்கு வெளிப்படையாகக் காவிரியாற்றைக் குறிப்பிட ஒரு வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. அதை நன்கு பயன்படுத்திக்கொள்கிறார் கம்பர். வானரப்படைகள் காவிரியாற்றின் கரையைக் கடந்து இலங்கை செல்லுகின்றன. அப்போது கம்பர் பாடும் பாடல் பின்வருமாறு.

       ‘‘அன்னதண்டகநாடுகடந்துஅகன்

       பொன்னிநாடுபொருஇலர்எய்தினார்

       செந்நெலும்கரும்பும்கமுகும்செறிந்து

       இன்னல்செய்யும்நெறிஅரிதுஏகுவார்’’

                           (கிட்கிந்தா காண்டம், சம்பாதிப்படலம், பா.எ. 46)

இப்பாடல் காவிரி ஆற்றுவளம் பாடும் கம்பராமாயணப் பாடலாகும். காவிரியாறு பாய்வதால் சோழநாடு வளமுடையதாக விளங்குகின்றது. காவிரியாற்றால் செந்நெல், செழித்து நெருங்கி வளருகின்றது. கரும்பு தோட்டங்கள் நிறைந்து வளர்ந்துச் செழித்து நிற்கின்றன. இதற்கு அடுத்து நிலையில் தென்னை பாக்கு மரங்கள் நிறைந்து வளர்ந்துள்ளன. சோழநாட்டின் வழிகள் தோறும் இத்தாவரங்களின் பெருக்கம் இருப்பதால் வழிச்செல்வோருக்கு வழியைக் கண்டுபிடித்துச் செல்வது கடினமாகும். இவ்வழியில் வானரங்கள் தட்டுத் தடுமாறிச் செல்கின்றன.

இவ்வகையில் அடர்த்தியான இயற்கை வளம் மிக்க பொன்னிநாடாகத் தமிழ்நாடு இருந்த நிலையைக் கம்பர் காட்டுகின்றார்.

காவிரிப்பூம்பட்டிணக் கடலில் காவிரி கலக்கின்றது. கருங்கடலில் பொன் போன்ற பொன்னிநதி கலக்கும்போது ஏற்படும் நிற, தன்மை மாற்றங்களைக் கம்பர் எடுத்துக்கொண்டு கவிதை செய்கிறார்.

இருபுறமும் கடல். நடுவே வானரங்கள் கட்டிய பாலம். இப்பாலம் புதியதாக பொன்னாக மின்னுகிறது. இது எவ்வாறு உள்ளது என்றால் காவரியாறானது கருங்கடலில் கலக்கும்போது ஏற்படும் தோற்றம் போல இருக்கிறது என்கிறார் கம்பர். ‘‘உயர்ந்த கரை ஊடே கருங்கடல் புகப் பெருகு காவிரி கடுப்ப’’ (யுத்த காண்டம், ஒற்றுக் கேள்விப்படலம், பா.எ. 6) என்ற பாடலடிகளில் இவ்வண்ண மாற்றம் எடுத்துக்காட்டப்பெறுகின்றது.

கம்பர் காவரியாற்றைப் பிறந்த இடம் முதல் கடலில் கலக்கும் இடம் வரை பாடி காவிரிக்கு ஒரு புராணமே பாடியுள்ளார் என்பது இங்கு எண்ணத்தக்கது. மேலும் காவரியாறானது மணிகளையும் ஆரங்களையும் புரட்டிச் செல்லும் படியான போக்கினை உடையது என்பதும் இப்பாடல் வழி அறியப்பெறும் செய்தியாகும்.

தாங்கள் கட்டிய பாலத்தில் வானரப்படைகள் மகிழ்வோடு சென்றன. அவ்வாறு செல்வது என்பது காவிரியாறு கடலில் கலக்கும்போது ஏற்படும் விரைவு போல மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது என்று கம்பர் கருதுகிறார்.

       ‘‘ஓதிய குறிஞ்சி முதலாய நிலன் உள்ள

       கோதுஇல அருந்துவன கொள்ளையின் முகந்துற்று

       யாதும் ஒழியா வகை சுமந்து கடல் எய்தப்

       போதலினும் அன்ன படை பொன்னி எனல் ஆகும்’’

                           (யுத்தகாண்டம், ஒற்றுக் கேள்விப்படலம், பா. எ. 7)

Siragu kaveri naadanna1என்று காவிரியாற்றின் போக்கினைப் பாடுகிறார் கம்பர். காவிரியாறு குறிஞ்சியில் தொடங்கி, முல்லையில் நடைபெற்று, மருதத்தில் விளைச்சலைத் தந்து நெய்தலில் கலந்து பாலையை இல்லாததாக ஆக்குகின்றது. இவ்வகையில் முன் குறிப்பிட்டதைப் போல காவிரியாறு தமிழ்ப் பண்பாட்டின் அடையாளமாகக் கம்பரால் கொள்ளப்பெற்றுள்ளது என்பது உறுதியாகும். இந்நான்கு நிலங்களில் விளையும் உணவுப் பொருள்களைத் தமக்குள் சுமந்து கொண்டுப் பயணிக்கிறது காவிரியாறு. அதுபோல வானரப் படையும் செல்லுகின்றது என்று காவிரிப் பெருக்கைக் காட்டி வானரங்கள் சென்ற காட்சியைக் கம்பர் காட்டுகின்றார்.

சோழநாட்டையும், அதனை ஆண்டுவரும் சோழ அரசனையும், காவிரியையும் இணைத்துக் கம்பர் மற்றொரு பாடலைச் செய்கிறார்.

   வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன், மலரின் மேலான்,

   கன்னி நாள் திருவைச் சேரும் கண்ணனும், ஆளும் காணி,

   சென்னி நாள் தெரியல் வீரன், தியாக மா விநோதன்

   தெய்வப் பொன்னிநாட்டு உவமை வைப்பை புலன்கொள நோக்கிப் போனான்

                                  (யுத்தகாண்டம், மருத்துமலைப்படலம், பா.எ. 68)

என்ற பாடலில் காவிரிபாயும் பொன்னிநாட்டை உத்தரகுரு என்ற கந்தர்வ பூமியுடன் ஒப்பு நோக்குகிறார் கம்பர். முக்கடவுளரும் ஆட்சி செய்யும் பூமி உத்தரகுரு என்ற போகபூமியாகும். அப்போக பூமியை ஒத்தது பொன்னிநாடு என்பது கம்பரின் முடிவு.

நாள்தோறும் மணக்கும் மாலையைச் சூடும் தியாகமாவிநோதன் அதாவது முதற் குலோத்துங்கன் ஆளும் பெருமை உடையது பொன்னிநாடு. இவ்வாறு அரசனையும், காவிரியையும் மேற்பாடலில் போற்றி நிற்கிறார் கம்பர். இதன் வழி காவிரி சோழ அரசனின் ஆணைச் சக்கரத்திற்கு உட்பட்ட ஆறாக விளங்கியுள்ளது என்பது தெளிவாகின்றது.

இவ்வாறு காவரியாற்றின் பெருமையைக் காண்டங்கள்தோறும் பிறப்பு முதல் கலப்பு வரைப் பாடிக் காட்டுகிறார் கம்பர். மேலும் காவிரியாறு இயற்கைவளமும், வளமும் கொண்ட ஆறு என்று காட்டுகிறார். அதில் இயற்கை வளப்பொருட்கள் கலந்து வருகின்றன என்பதும் கம்பரின் பதிவாக உள்ளது. காவிரி ஆறு வெள்ளப் பெருக்கமும் தெய்வ அருளும் கொண்டது என்பது கம்பரின் வாக்கு. காவிரியும் கங்கையும் ஒன்றே என்பதும் அவர் கருத்து. இயற்கை மணம் வீசும் ஆறு காவிரி என்பது உறுதியாகின்றது. அதனை அவ்வாறே காப்பது நம் அனைவரது கடமையாகும்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காவிரி நாடன்ன கழனிநாடு”

அதிகம் படித்தது