ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

காஷ்மீர்-370 பிரிவு நீக்கம் ஒரு பிரச்சினையே அல்ல?

வெங்கட் நடராஜன்

Aug 31, 2019

siragu-pirivu-370-2

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கி இந்திய அரசு அண்மையில் சட்டம் பிறப்பித்தது. இதற்கு சில எதிர்க்கட்சிகள் உட்பட சீனாவும் பாகிஸ்தானும் கடும் அதிருப்தி தெரிவித்தன. இக்காஷ்மீர் விவகாரம் சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை ஈர்த்தது. இது உண்மையிலேயே ஒரு பிரச்சினையா?

1947-ல் சுதந்திரம் அடைந்தபோது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனாவை எல்லைகளாகக் கொண்டு காஷ்மீர் தனி நாடு உதயமானது. அதுவரை எந்த சர்ச்சையும் இல்லை. காஷ்மீரில் முஸ்லீம்கள் அதிகம் இருந்ததால், தன்னுடன் இணைத்துக்கொள்ள பாகிஸ்தான் துடித்தது. இதுவே சர்ச்சையின் முதல் காரணி.இராணுவ உதவியுடன் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து சுமார் 35% நிலப்பரப்பை ஆக்கிரமித்தது. இதனால் அதிர்ந்து போன காஷ்மீரை ஆண்ட இந்து மன்னர் இந்தியாவுடன் இணைத்தார். இருந்தாலும் முறையாக மக்களின் ஆதரவைப் பெறுவதற்கும், சர்வதேச விதிமுறைகளை மதிப்பதற்காகவும், ஒரு தற்காலிக கருவியாக 370 சட்டப்பிரிவு 1949-ல் அமல்படுத்தப்பட்டது.

ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை விலக்காததால், கடைசிவரை பொது வாக்கெடுப்பை நடத்தவே முடியாமல் போனது. இதற்கிடையில் சீனா தன் பங்கிற்கு பவுத்தர்கள் அதிகம் வாழும் சுமார் 20% நிலப்பரப்பை ஆக்கிரமித்து சாலையும் போட்டுவிட்டது.எனவே இனியும் 370-ஐ தொங்கிக்கொண்டிருப்பதில் எந்த பிரயோஜனமும் இல்லையென முடிவு செய்த இந்தியா அதை நீக்கியது. இதை 50-களிலே செய்திருக்கவேண்டும். ஆனால் முஸ்லீம்களுக்கு துணைபோன அப்போதைய காங்கிரசு அரசு அதைப் பற்றி கவலையே படவில்லை. காலம் தாழ்த்த முடிவு என்றாலும் இப்போதாவது, 370 நீக்கப்பட்டது நிம்மதி.

இதனால் ஆத்திரமடைந்த பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை முறித்துக்கொண்டது, இதனால் இழப்பு பாகிஸ்தானுக்கே தவிர இந்தியாவிற்கு அல்ல. சீனாவும் பாகிஸ்தானும் ஐ.நா-வுடன் முறையிட்டும் எந்த ஆதரவும் கிட்டவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், அந்த நாடுகள் முறையற்று ஆக்கிரமித்த சுமார் 55% நிலப்பரப்பை பற்றி வாய் திறப்பதில்லை. ஆனால் முறையாக இந்தியாவுடன் இணைக்கப்பட்ட காஷ்மீர் அவர்களுக்கு கவலை அளிக்கிறதாம். சட்டபடி காஷ்மீரிகள் இந்திய குடிமக்கள், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்திய அரசாங்கத்தின் ஓர் அங்கம். இந்த முடிவு அவர்களும் சேர்ந்து எடுத்ததே. எனவே இது முழுக்க முழுக்க உள்நாட்டு விவகாரம், இதில் தலையிட சீனாவிற்கும் பாகிஸ்தானிற்கும் வெட்கமாக இல்லை? இதுவாவது பரவாயில்லை, நம் நாட்டிலேயே உள்ள காங்கிரசு உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளும் எதிர்க்கிறார்கள். இவர்களை தேச துரோகிகள் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? இவ்வளவு கூப்பாடு போடும் எதிர்க்கட்சிகள் ஏன் பாகிஸ்தான் மற்றும் சீன ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க போராடக்கூடாது?

இத்தோடு இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு பாகிஸ்தானும் அதை தூண்டிவிடும் சீனாவும் அந்நாட்டு மக்கள் நலனில் கவனத்தை செலுத்தலாம். அதைவிடுத்து அணுகுண்டு மிரட்டல் விடுக்கும் பாகிஸ்தான் நிலை, தூங்கும் சிங்கத்தை தட்டியெழுப்பும் சுண்டெலி போல் கோமாளித்தனமானது.

அணு ஆயுதப்போர் அடுத்த 50 ஆண்டுகளில் வருவதற்கான வாய்ப்பு வெகு குறைவே. ஆனால் அடுத்த 100 ஆண்டுகளில் நிச்சயம் வரும். அதுகூட அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளே அதை தொடங்கி வைக்க வாய்ப்பு அதிகம்.


வெங்கட் நடராஜன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காஷ்மீர்-370 பிரிவு நீக்கம் ஒரு பிரச்சினையே அல்ல?”

அதிகம் படித்தது