டிசம்பர் 15, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

கிரேக்கத்திலிருந்து தமிழகத்திற்கு ஒரு பாடம்

ஆச்சாரி

Dec 1, 2011

அறுபதுகளில் வந்த பாமா விஜயம் படத்தில் “வரவு எட்டணா!  செலவு பத்தணா! கடைசியில் துந்தனா! ” என்ற ஒரு அற்புதமான பாடல் வரும். குடும்ப வாழ்க்கையில் சிக்கனம் இல்லாவிட்டால் என்ன நடக்கும் என அழகாக சொல்லி எல்லோர் மனதிலும் பதிய வைத்த பாடல் அது. குடும்பம் அளவுக்கு மீறி செலவு செய்தால் அக்குடும்பம் தலையில் துண்டை போடும் என்பதை அந்தப் பாடல் அவ்வளவு அழகாக விளக்கி இருக்கும். குடும்பத்துக்கு பதில் ஒரு நாடே அப்படி செய்தால் என்ன நடக்கும்?. இந்தக் கேள்விக்கு பதிலாகத் தான் கிரேக்க நாட்டில் இன்று நடக்கும் நிகழ்ச்சிகள் நம் கண் முன்னே விரிகின்றன. மற்றவர்களை விட தமிழகத்  தமிழர்கள் கிரேக்க நாட்டில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம். ஏனென்றால் தமிழ்நாடு கிட்டத்தட்ட கிரேக்க நாடு செல்லும் அதே பாதையில் செல்கிறது.

முதலில் கிரேக்க பொருளாதாரத்தை பற்றி பார்ப்போம். கிரேக்க நாடு அப்படி ஒன்றும் பொருளாதாரத்தில் நோஞ்சான் அல்ல. உலகின் முப்பத்து மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட கிரேக்க நாடு, வாழ்க்கைத் தரத்தில் சிறந்து விளங்குகிறது. சுற்றுலாத்துறை விவசாயம், கடல் வாணிபம், ஆடை உற்பத்தி, மீன்பிடி தொழில், சேவைத் துறை போன்றவை கிரேக்கப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகிக்கின்றன. 2000  வது வருடத்தில் கிரேக்க நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது.

இப்போது கிரேக்கம் எப்படி இந்த நிலைக்கு வந்தது எனப் பார்ப்போம். கடந்த பத்தாண்டுகளில் கிரேக்கம் தனது வருமானத்திற்கு அதிகமாக கடன்களை வாங்கிக் குவித்தது. இந்தக் கடன்கள் ஊதாரித்தனமாக செலவு செய்யப்பட்டன. ஒவ்வொரு வருடமும் நாட்டின் வருமானத்திற்கு மேல் செலவு அதிகமான போது அந்த நாட்டின் அரசியல்வாதிகள் செலவைக் குறைப்பதற்கு பதிலாக செலவை வெளி உலகத்திற்கு தெரியாமல் மறைக்க உலகின் முன்னணி பொருளாதார நிறுவனங்களுடன் சேர்ந்து கணக்கை புதுமையான முறைகளில் மாற்றி கடன் அளவை குறைத்து வெளியிட்டனர். இதில் அமெரிக்காவின் கோல்ட்மன் சாக்ஸ் ஒரு முக்கிய பங்கை வகித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கே கிரேக்கம் பொருளாதாரத்தை பற்றி தவறான தகவல்களை கொடுத்து சேர்ந்ததாக ஒரு புகார் எழுந்தது. செலவை எப்படி இந்த நிறுவனங்கள் மறைத்தன என கேள்வி எழலாம். அதற்கு இந்த நிறுவனங்கள் பல புதுமையான முறைகளை கையாண்டன. ஒரு உதாரணத்திற்கு கிரேக்கம் ஒரு வங்கியிடம் 100  கோடி கடன் வாங்குகிறது என வைத்து கொள்வோம். அந்தக் கடனுக்கு பதிலாக கிரேக்கம் தனது விமான நிலையத்தில் வரி வசூல் செய்யும் உரிமையை அந்த நிறுவனத்திற்கு கொடுத்து விடும். கணக்கு பார்க்கும் நிறுவனம் இந்தக் கடனை கணக்கில் காட்டாது.

ஒவ்வொரு வருடமும் இது தொடர்கதையானது. கிரேக்க அரசியல்வாதிகள் கடன்களை தொடர்ந்து வாங்கிக் குவித்தனர். இனி கிரேக்க நாடு தனது கடன்களை கட்ட முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இதனால் கிரேக்க நாடு தான் புதிதாக வாங்கும் கடன்களுக்கு அதிக வட்டி கொடுக்க வேண்டி இருந்தது. இது அந்த நாட்டின் மீது மேலும் சுமையை கூட்டியது. இந்த வருடம் இந்த சுமை வளர்ந்து கிரேக்க நாடு புதிதாக கடன் வாங்கா விட்டால் (பொருளாதாரம்) முறிந்து போகும் என்ற சூழ்நிலையை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த இடத்தில் ஒரு சங்கதியை குறிப்பிட வேண்டும். உலகில் கிரேக்க நாட்டை விட கடன் சுமை அதிகமாக உள்ள நாடுகள் நிறைய இருக்கின்றன.அமெரிக்காவின் கடன் சுமையில் ஒரு துளி கூட கிரேக்க நாட்டிற்கு இல்லை. ஆனால் கிரேக்க நாடு மட்டும் முறியும் நிலைக்கு தள்ளப்படுவதற்கு முக்கிய காரணம் உலகின் முக்கிய பொருளாதார மதிப்பீட்டு நிறுவனங்கள். யார் இந்த மதிப்பீட்டு நிறுவனங்கள்?. அவர்களுக்கு அவ்வளவு பெரிய சக்தியா?  பல மதிப்பீட்டு நிறுவனங்கள் இருந்தாலும் உலகில் மிகப்பெரிய மதிப்பீட்டு நிறுவனங்களாகிய  பிட்ச், ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் மற்றும் மூடி என்ற மூன்று நிறுவனங்களுமே நாடுகளின் பொருளாதரத்திற்கு மதிப்பு கொடுக்கின்றன. இந்த மதிப்பைப் பொறுத்து இந்த நாடுகள் கடன் வாங்கும் போது வட்டி கொடுக்க வேண்டி இருக்கும். இந்த நிறுவனங்கள் கிரேக்க நாட்டின் பொருளாதார மதிப்பீட்டை தொடர்ச்சியாக குறைத்தனர். இது கிரேக்க நாடு தன்னுடைய கடனுக்கு கொடுக்க வேண்டிய வட்டியின் அளவை அதிகரித்தது. அது அந்த நாட்டின் வீழ்ச்சியை விரைவு படுத்தியது.

கிரேக்க நாட்டில் ஐரோ நாணயம் புழக்கத்தில் இருப்பதால் , கிரேக்க நாட்டின் பிரச்சினைகள் ( போர்சுகல், ஸ்பெயின் மற்றும் இத்தாலி யும் இதே பிரச்சினையில் தான் இருக்கின்றன ) அந்த நாணயத்தின் மதிப்பு சரியத் தொடங்கியது. ஐரோ நாணயத்தின் மதிப்பை குறைக்கத்தான் இந்த மதிப்பீட்டு நிறுவனங்கள் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன என ஒரு பேச்சு எழுந்தது. இதை உண்மை என நிரூபிப்பது போல ஐரோப்பிய யூனியன் தலைவர் இந்த நிறுவனங்கள் மதிப்பீடு செய்யும் முறையை தொடர்ச்சியாக குறை கூற ஆரம்பித்தார். எது எப்படி இருந்தாலும் ஒரு நாடு கடன் வாங்கும் வட்டியின் அளவை தனியார் நிறுவனங்கள் முடிவு செய்வது எந்த அளவு ஆபத்தானது என்று பாருங்கள்.

கிரேக்க நாடு முறிந்து போனால் கிரேக்க நாட்டிற்கு கடன் கொடுத்த பெரிய வங்கிகள் பெரும் சரிவை சந்திக்கும் நிலை உருவானது. இதனால் உலக அளவில் பொருளாதார நெருக்கடி உருவாகும் நிலை வந்தது. இதத் தடுக்க ஐரோப்பிய ஒன்றியம் கிரேக்க நாட்டிடம் ஒரு ஒப்பந்தத்தை போட்டது. அதன்படி கிரேக்கத்தின் கடனை பாதியாக குறைக்க வங்கிகள் ஒத்து கொண்டன. ஆனால் கிரேக்க நாட்டின் மீது பல கடுமையான நிபந்தனைகளை அந்த வங்கிகளும், உலக வங்கியும் விதித்தன. அரசு ஊழியர்கள் , மற்றும் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த பல சலுகைகள் பறிக்கப்பட்டன. இது கிரேக்க நாட்டில் கடுமையான போராட்டங்களை உருவாக்கியது. ஆனால் அனைத்தையும் மீறி இந்த விதிமுறைகள் கிரேக்க நாட்டின் மக்களின் மீது திணிக்கப்பட்டன. ஒரு நாடு தனது வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்தால் எப்படி அடுத்தவருக்கு அடிமையாக மாறும் என்பதற்கு கிரேக்க நாடு ஒரு அருமையான உதாரணம். அதே நேரம் அரசுகள் தேவை இல்லாமல் வாங்கும் கடனுக்கு மக்கள் எப்படி பலி ஆகிறார்கள் என்பதற்கும் கிரேக்கம் ஒரு நல்ல உதாரணம்.

தமிழ்நாட்டில் இலவச  தொலைகாட்சி போன்றவை கடந்த ஆட்சிக்காலத்தில்  கொடுக்கப்பட்டதை நினைவு கூறுங்கள். தற்போது இலவச மடிக்கணினி, ஆடு மாடு என கூறப்படுவதையும் எண்ணிப் பாருங்கள்.  நம் மீது எவ்வளவு கொடுமைகள் பாயக் காத்து இருக்கின்றன  என்பது உங்களுக்கு புரியும். பொருளாதார ரீதியாக வரவு எட்டணா செலவு பத்தணா என ஒரு நாடு வாழ்வது, அடிமைத்தனத்தின் முதல் விதை. அதுவே நமக்கு கிரேக்கம் காட்டும் பாடம்.  சிறிது சிறிதாக பன்னாட்டு நிறுவனங்கள் நமது வளங்களை எடுத்து கொண்டு மூச்சு விடுவதற்கு கூட பணம் கொடுக்கும் சூழலை இங்கு உருவாக்குவதற்கு வெகு தொலைவு இல்லை.

The verbs indicated may, for example, be used in the stem of assignment questions record examine reproduce arrange define outline state present describe identify show http://eduessayhelper.org/ quote comprehension this covers learners ability to convey what they understand

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “கிரேக்கத்திலிருந்து தமிழகத்திற்கு ஒரு பாடம்”
  1. vibarajan says:

    மிக அருமையான கட்டுரை. நன்றி!

  2. kasi visvanathan says:

    அளவறிந்து வாழாதான் வாழ்வு இருப்பது போல் இருந்து கெடும். இது த்மிழ் முது மொழி. உணராத தமிழர்களுக்கும் நம் வழித்தோன்றல்களுக்கும் காத்திருக்கும் இக்கட்டினை, இக்கட்டுரை சொல்கிறது. கட்டுரை ஆசிரியருக்கு நன்றி.

  3. kondrai venthan says:

    உலகின் இரண்டு தொன்மை வாய்ந்த சமுதாயங்களின் இன்றைய இழி நிலையினை ஒப்பாய்வு செய்து வந்திருக்கும் கட்டுரை. இது நாம் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டிய சிலவற்றை தமிழக மக்களுக்கு எளிமையாக விவரிக்கின்றது. மிக்க நன்றி.

அதிகம் படித்தது