ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

கீழ் நிலைத் தொழில்கள்

இராமியா

Jun 11, 2021

அனைத்து வகுப்பு (முற்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு, தாழ்த்தப்பட்ட வகுப்பு, பழங்குடியினர், மத சிறுபான்மையினர்) மக்களிலும் அனைத்து நிலைத் திறமை உடையவர்களும் இருந்தார்கள் / இருக்கிறார்கள் / இருப்பார்கள் என்பது மாற்ற முடியாத இயற்கை நியதி. இந்த இயற்கை நியதியின் படி சமூகம் இயங்கினால் பொதுப் போட்டி முறையில் அனைத்து வகுப்பு மக்களிலும் உள்ள திறமைசாலிகள் (நாட்டின் செல்வ வளம், நிதி வளம், மனித வளம் ஆகிவற்றை யாருக்காக, எப்படி, எப்பொழுது, எங்கே, ஏன், பயன்படுத்த வேண்டும் என்று முடிவு எடுக்கும்) உயர் நிலை வேலைகளிலும், திறமைக் குறைவானவர்கள் அடுத்த நிலை வேலைகளிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் / தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் இந்திய நாட்டில் மனு அதர்மம் வெளிப்படையாக ஆட்சி செய்த பழைய காலங்களிலும், மறைமுகமாக ஆட்சி செய்யும் இக்காலத்திலும் உயர் நிலைகளில் பார்ப்பனர்கள் கொடூரமான அளவில் ஆக்கிரமித்துக் கொண்டார்கள் / ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள் / ஆக்கிரமித்துக் கொள்ள முடிகிறது. மற்றவர்கள் அடுத்த நிலைகளிலேயே இருக்க நேரிட்டது  / நேரிடுகிறது. இவ்வாறு ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் உள்ள திறமைசாலிகள் கீழ்  நிலை வேலைகளைச் செய்ய நேரிடுவதானது மனித வளம் வீணாய்ப் போகவும் நிர்வாகம் சீரழியவும் வழி கோலுகிறது. இது நடைமுறையில் தெளிவாக வெளிப்பட்டு இருக்கிறது.

siragu keelnilai tholilgal1

எப்படி என்றால்:

இட ஒதுக்கீடு முறையாகச் செயல்பட்டு ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் அதிகார மையத்திற்குள் ஓரளவு செல்ல முடிந்து இருக்கும் தமிழ் நாடு (இட ஒதுக்கீடு முறையாகச் செயல்படாததால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் அதிகார மையத்திற்குள் நுழைய முடியாத) நாட்டின் பிற மாநிலங்களை விட அனைத்துத் துறைகளிலும் முன்னேறி இருக்கிறது. நாட்டின் வரி வருவாய் அளிப்பதில் தமிழ் நாடே முன்னணியில் நிற்கிறது, அது மட்டும் அல்ல; மருத்துவத் துறை இதற்கு ஒரு கலங்கரை விளக்கம் போல் உலகம் எல்லாம் பறை சாற்றிக் கொண்டு இருக்கிறது. இந்தியாவில் தமிழ் நாட்டில் தான் (இட ஒதுக்கீடு முறையாகச் செயல்படுத்தப்பட்டதால்) மிகப் பெரும் அளவில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் மருத்துவர்களாக இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு முறைாகச் செயல்படுத்தப்படாத, நாட்டின் பிற மாநிலங்களில் பெரும்பாலும் பார்ப்பனர்களும் பிற உயர் சாதிக் கும்பலினருமே மருத்துவர்களாக உள்ளனர். இன்று நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்து மட்டும் அல்லாமல், உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் (ஒடுக்கப்பட்ட வகுப்பு மருத்துவர்கள் நிறைந்து இருப்பதால்) மருத்துவத் துறையில் முன்னேறி உள்ள தமிழ் நாட்டை நோக்கித் தான் சிகிச்சை பெற வருகிறார்களே ஒழிய, (மருத்துவர்களாகப் பார்ப்பனர்களே மிகப் பெரும் அளவில் நிரம்பி உள்ள) வட மாநிலங்களை நோக்கிச் செல்வது இல்லை.

இந்நிகழ்வுகள் இக்கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப்பட்டு உள்ள கூற்றை ஐயம் திரிபற மெய்ப்பிக்கின்றன. ஆகவே விகிதாச்சாரப் பங்கீடு மூலமாகத் தான் சமூகத்தை உராய்வு இன்றி இயக்க முடியும் என்ற முடிவுக்கு வர, சராசரி அறிவுக்கும் மிகக் குறைவான அறிவே போதும். ஆனால் நம் நாட்டின் செல்வ வளத்தை, நிதி வளத்தை, மனித வளத்தை யாருக்காக, எப்படி, எங்கே, ஏன், எப்போது பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யும் இடத்தைக் கொடூமான அளவில் ஆக்கிரமித்துக் கொண்டு உள்ள “அறிவாளிகளுக்கு” இது இன்னும் விளங்கவே இல்லை.

இதை விளக்கும் விதமாக அனைத்து வகுப்பு மக்களும் அனைத்துத் துறைகளிலும், அனைத்து நிலை வேலைகளிலும், இருக்க வேண்டும் என்று கதைகள், கட்டுரைகள், பதிவுகள் போட்டால் அதைக் கண்டு கொள்ளாமல் எளிதாகக் கடந்து போய் விடுகிறார்கள். இதே செய்தியை விளக்கமாக விவரித்தால், அதாவது அவ்வாறு நடக்க வேண்டிய நிலை வரும் போது, இன்று கையால் மலம் அள்ளும் வேலை செய்யும் தோழர்களின் அறிவுத் திறனுக்கு இணையான அல்லது அதற்கும் குறைவான அறிவுத் திறன் கொண்ட பார்ப்பனர்கள் கையால் மலம் அள்ளும் வேலையைச் செய்ய வேண்டி வரும் என்று சுட்டிக் காட்டினால் மட்டும் பார்ப்பனர்கள் மட்டும் அல்லாது பார்ப்பனர்கள் அல்லாதவர்களுக்கும் கோபம் பொங்கிப் பொங்கி வருகிறது. இதில் எல்லா விதச் சுரண்டல்களையும் எதிர்க்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகளும் அடக்கம்.

ஆனால் இவர்கள் யாருக்கும், குறிப்பிட்ட சாதியினர் அவ்வேலைகளைச் செய்ய நிர்பந்திக்கப்பட்டு இருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லையே ஏன்? எண்ணம் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் முடியவில்லை என்று யாராவது சொன்னால் அது கொடூரமான அயோக்கியத்தனமே ஆகும். ஏனெனில் இந்தியாவை விட, செல்வ வளமும் தொழில் நுட்ப அறிவும் குறைந்த நாடுகளே கூட இப்பிரச்சினையில் தீர்வு கண்டு உள்ள போது இங்கு மட்டும் எப்படி முடியாமல் போகிறது?

 நாட்டின் செல்வ வளம், நிதி வளம், மனித வளம் ஆகியவற்றை யாருக்காக, எப்படி, எப்பொழுது, எங்கே, ஏன், பயன்படுத்த வேண்டும் என்று முடிவு எடுக்கும் இடங்களில் உள்ளோர் மனது வைத்தால் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காமல் போய் விடுமா? அப்படிப்பட்ட இடங்களைக் கொடூரமான அளவில் ஆக்கிரமித்து உள்ளவர்கள் பார்ப்பனர்கள் தானே? கையால் மலம் அள்ளும் கொடுமை இன்றும் உயிர்ப்புடன் இருப்பதற்கு, (நாட்டின் செல்வ வளம், நிதி வளம், மனித வளம் ஆகியவற்றை யாருக்காக, எப்படி, எப்பொழுது, எங்கே, ஏன், பயன்படுத்த வேண்டும் என்று முடிவு எடுக்கும் இடங்களில் கொடூரமான அளவில் ஆக்கிரமித்து உள்ள) பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரைக் குற்றம் சொல்ல முடியும்?


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கீழ் நிலைத் தொழில்கள்”

அதிகம் படித்தது