குடிமைப்பண்பு
T.K.அகிலன்Oct 25, 2014
“அதப்பாருங்க சார், அவ்வளவு காஸ்ட்லியான கார் வச்சிருக்கிறாரு. சொசைட்டியில பெரிய ஆளுன்னு காட்டத்தானே? அவரு எவ்வளவு சின்னத்தனமா ட்ராஃபிக் கியூவ மதிக்காம நடுவுல புகுந்து போறாரு. ஓரு Civic Sense இல்லாம, எதிரே வாற ட்ராஃபிக்கையும் நிறுத்த போறாரு’.
இவ்வாறு கூறியவர் மற்றொரு விலை உயர்ந்த வாகனத்தில் போகிறார். சற்று தொலைவில், ஒரு குளிர்பானம் அருந்திய பிளாஸ்டிக் காலி புட்டியை சாலை ஓரத்தில் வீசி எறிந்து விட்டு செல்கிறார். அவரும் படித்தவர்தான். சமூகத்தில் பொறுப்பான நிலையில் உள்ளவர்தான்.
ஆம், இந்தியர்களாகிய நமக்கு Civic Sense எனப்படும் குடிமைப்பண்பு, நாம் அடைந்துள்ள அல்லது அடைந்ததாக பாவனை செய்யும் நாகரீகத்தின் அளவுக்கு இன்னும் வந்து விடவில்லை. ஆனால், நாகரீகம் நிலைத்திருக்க, சமூகம் குடிமைப்பண்பை அடைந்தாக வேண்டும். குடிமை உணர்வே சமூக அங்கத்தினர்களுக்கிடையேயான அற உணர்வாகும். சில அடிப்படை மானுட அறங்களைத்தவிர மற்றவை எல்லாம், வாழும் காலத்திற்கேற்ப, பின்பற்றும் நாகரீகத்திற்கேற்ப மாறும் இயல்புடையது. நாகரீக மாற்றத்திற்கேற்ப நம் அற உணர்வுகளையும் மறுமதிப்பீடு செய்தாக வேண்டும். அற உணர்வுகளும் குடிமைப்பண்புகளும், வாழும் சூழலுக்கேற்ப மறு மதிப்பீடு செய்யப்படாவிட்டால், சமூகம் அதன் அடிப்படை கட்டுமானத்தை இழந்து விட நேரிடலாம்.
சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை நம் சமூகத்தில், மனிதர்களுக்கிடையேயான தொடர்புகள் ஒரு குறுகியவட்டத்தில் மட்டுமே இருந்துள்ளது. இதற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். மக்கள் வாழ்க்கைக்கு தேவையானவை, அவர்கள் வாழும் குறுகிய வட்டத்திற்குள்ளாகவே கிடைத்திருக்கலாம். வெளியுலக தொடர்புக்கான வசதிகள் அவர்களிடம் இல்லாமல் போயிருக்கலாம்.
இன்றைய நிலைமை முற்றிலும் வேறானவை. எந்த சமூகத்தினரும் ஒரு குறுகிய வட்டத்தினுள் அடைந்து விடுவதில்லை. ஒருவேளை அவர்களால் அந்த வட்டத்தை விட்டு வெளியேற முடியாவிட்டாலும், வெளியுலகம் அவர்களை தேடி வந்து கொண்டே இருக்கும். கூடவே வெளியுலக நாகரீகமும். ஆனால், அந்த புதிய உலகத்தையும் நாகரீகத்தையும் எதிர் கொள்ளவதற்கு, அந்த சமூகம் தயாராக இருக்காது. இதனால், சமூகத்தினுள் முரண்பாடு உருவாகி விடுகிறது. இந்த முரண்பாட்டை இல்லாமல் செய்வதற்கு நம்மிடம் இருப்பவை இரண்டே வழிகள்தான். முதலாவது, அந்த சமூகத்தை, அது இருக்கும் தளத்திலே தொடர்ந்து இருக்கச் செய்வது. இது, உண்மையில் ஏற்றுக்கொள்ளவும் செயல்படுத்தவும் முடியாத ஒன்று. ஒரு சமூகத்தையே அதன் முன் உள்ள வாய்ப்புகளிலிருந்து தள்ளி வைப்பது. இரண்டாவது வழி, மாறும் சூழலுக்கேற்ப, வந்து சேரும் வாய்ப்புகளுக்கேற்ப, சமூகத்தின் மன அமைப்பை மாறுதலுக்குள்ளாக்குவது. ஆனால், அந்த மாற்றம் சமூகத்தின் அடிப்படை அறங்களையும் உணர்வுகளையும் மாற்றாமல் இருக்க வேண்டும். ஒருவேளை அவையும் மாறினால், ஒரு சமூகமே முற்றிலும் அழிந்து வேறோன்றாக மாறிவிடும். நம் கண்ணெதிரே பல உதாரணங்களும் இதற்கும் உள்ளன. அந்த மாற்றத்துடன், அந்த சமூகம் அதுவரை அடைந்த அறிவும் அழிந்து விடும். இத்தகைய அழிவு, சமூகத்தின் ஆழ் மன அளவில் முரண்பாடுகளை கொண்டு வரக்கூடும்.
நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் உலகம் நம்மை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது. உலகம் அதன் பொருளாதார தேவைகளுக்காக நம்மை நோக்கி வந்தாக வேண்டும். அவை உருவாக்கும் பொருட்களையும், அப்பொருட்களை ஏற்க வைக்கும் கோட்பாடுகளையும் ஓயாமல் நம்மை நோக்கி நகர்த்திக் கொண்டே இருக்கும். நாமும் அவற்றை எதிர்கொண்டாக வேண்டும். இதைத் தவிர நமக்கு, ஒரு சமூகமாக, வேறு வழியே இல்லை. முரண்நகையாக, உலகம் அவை நம்மிடம் அளிக்கும் நாகரீகத்தை ஏற்றுக்கொள்ளும் விதமாக நாம் மாறியிருக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறது. ஆனால் அந்த மாற்றத்திற்கான எத்தகைய விழிப்புணர்வையும் அவை உருவாக்குவதில்லை. ஒருவேளை, உலகத்துக்கு அது தேவை இல்லையோ? ஆனால் ஒரு சமூகமாக நிலைத்திருக்க, அந்த மாற்றத்தை நாம் தழுவியாக வேண்டும். மாற்றத்தை ஏற்றுக்கொண்டவர்கள், சமூகத்தினுள் அந்த மாற்றத்திற்கான விதைகளை விதைத்தாக வேண்டும். நம் அடிப்படை அற உணர்வுகளை இழக்காமலே, புதிய உலகை எதிர்கொள்ள தேவையான மன அமைப்பை, ஒரு சமூகமாக, உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
நாம் ஏற்றுக்கொள்ளும் நாகரீகத்திற்கேற்ப, உலகம் வழங்கும் வசதிகளுக்கேற்ப, நம் குடிமைப்பண்புகளையும் மாற்றத்துக்குள்ளாக்கியாக வேண்டும். சில பத்தாண்டுகளுக்கு முன்னால், நாம் செல்லும் இடங்களில், இத்தனை கூட்டமாக மக்கள் திரளை கண்டிருக்கவில்லை. சேவைக்காக காத்திருக்கும் இடங்களில், பெரும்பாலும் வரிசை என்ற ஒன்று தேவைப்பட்டிருக்கவில்லை. சாலைகளில் இத்தனை வாகனங்கள் இல்லை. அல்லது சாலை விதிகளை கடைபிடிக்க, நம்மிடம் ஒரு வாகனம் இருந்திருக்கவில்லை. ஒருவேளை வாகனம் இருந்திருந்தாலும், செல்வதற்கு தடையாக எங்கும் மக்கள் திரள் இருந்திருக்கவில்லை. அன்று நமக்கு தேவையான பொருட்கள் மிகவும் குறைந்த பட்சமானவையே. நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தேவையும், அதன் புறவினையாக, கழிவுகளை உருவாக்கவில்லை. அவ்வாறே கழிவுகள் உருவாக்கப்பட்டாலும் தேவைகள் குறைவாக இருந்ததால், அந்த குறைந்த பட்ச கழிவுகள் மற்றவர்களுக்கு தொல்லையாக இருந்திருக்கவில்லை. இன்னும் இது போன்ற பல இல்லைகள்!
குடிமைப்பண்பின் அடிப்படை விதி, நாம் மற்றவர்களிடமிருந்து எத்தகைய நாகரீகத்தை எதிர்பார்க்கிறோமோ, அத்தகைய நாகரீகத்துடன், பிறருடனான நம் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது. ஆனால் அது அத்தனை எளிமையானது அல்ல. காரணம், மனதினுள் நாம் ஏற்றுக்கொண்டிருக்கும் சட்டகம். மனதினுள், நமது செயல்பாடுகளை மதிப்பிட ஒரு சட்டகமும், பிறர் செயல்பாடுகளை மதிப்பிட இன்னொரு சட்டகமும் அமைந்திருக்கும். நம் மன இயக்கத்தை கவனித்து, இரு சட்டகங்களிலும் உள்ள முரண்பாட்டை அறியாதவரைக்கும், நம் செயல்களையும், பிறர் செயல்களையும் ஒரே சட்டகத்தின் வழியாக நோக்குவது முடியததாகும். இது சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல, சிந்தனைவாதிகள் என கூறிக்கொள்பவர்களுக்கும் எளிதானதல்ல.
ஓருவேளை, ஒரு சமூகமாக, நமக்கு இன்னொரு மனசட்டகம் தேவைப்படலாம் – நம் தற்போதைய புழங்கு தளத்தில் குடிமைப்பண்புகளுக்கான மனச்சட்டகம். நம் சமூகத்தில் குடிமைப்பண்பு இல்லை என கூறபவர்கள் எவருமே கூட, உண்மையில் இன்னும் தேவையான அளவுக்கு குடிமைப்பண்புகளுடன் இல்லை என்பதே நிதர்சனம். அதாவது ஒவ்வொருவரும், மற்றவர்கள் பார்வையில், சில பல குடிமைப்பண்புகளை வெளிப்படுத்துவதில்லை. காரணம், அவர்கள் பார்வையின் வெவ்வேறு மனசட்டகங்களாக இருக்கக்கூடும்.
ஒரு சமூகமாக, குடிமை உணர்வு கொண்டவர்களாக வேண்டிய காலம் வந்து விட்டது. நாம் மாறியாக வேண்டும். இல்லையெனில், நம்மிடம் வந்து சேர்ந்த நாகரீகம், நம்மை உணவாக உண்டு, நம் சமூகத்தை கடந்து செல்ல நேரிடலாம். சட்டங்களும் கட்டுப்பாடுகளும், குடிமைப்பண்புகளுக்கான வழிகாட்டியாக இருக்கலாம். ஆனால் அவற்றால், நம் மனச்சட்டங்களை முழுவதும் மாற்றியமைக்க முடியாது. ஆக நமக்கு தற்போதைய அவசர தேவை, குடிமைப்பண்புகளுக்கான மனச்சட்டகங்களை நமக்குள் அமைத்துக்கொள்ள உதவும் விழிப்புணர்வு இயங்கங்களே.
யார் அந்த விழிப்புணர்வை சமூகத்தினுள் உருவாக்குவது? கல்வி அமைப்புகள் அவற்றை கொண்டு வர வேண்டும். ஆனால் நம் கல்வி அமைப்பின் லட்சியம் குமாஸ்தாக்களை உருவாக்குவது மட்டுமே. வெளி நாகரீகத்தை வரவேற்று நமக்களிக்கும் அரசாங்கம் எப்போதோ இதற்கான பணிகளை தொடங்கி, முழுமையை அடைந்திருக்க வேண்டும். இப்போதுதான் ‘தூய்மை இந்தியா’ இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
எஞ்சியிருப்பது நீங்களும் நானும்தான். ஆம், நாம் தான் அந்த விழிப்புணர்வை சமூகத்தினுள் பரப்ப வேண்டும். நாமே பரப்பும்போது, நமது மனச்சட்டகமும், குடிமைப்பண்புகளை நோக்கி சற்றே மாற்றமுறலாம். நம் பணி, நம்மால் முடிந்த தளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது. நம் இயல்பு அதற்கு தேவையான தீவிரமான களப்பணிக்கு அனுமதியளிக்காவிடில், நாம் அறிந்த தளங்களில், குடிமைப்பண்புகளை வெளிப்படுத்துவது – அங்கு புழங்கும் மற்றவர்களிடம் அப்பண்புகள் இல்லாவிடிலும். எல்லா சமூக மாற்றங்களும், வெகு சிலராலேயே முன்னெடுக்கப்பட்டு, சமூகத்தினுள் அந்த மாற்றங்கள் நிலைநிறுத்தப்படும். குடிமைப்பண்புகளும் அவ்வாறே நிகழலாம். மாற்றத்தை உருவாக்கும் அந்த வெகு சிலராக, நாம் ஏன் நம்மை முன்னிறுத்தக் கூடாது? அதற்கு தேவையான குறைந்த பட்ச களப்பணியுடன் – பொது வெளியில் நம் குடிமைப்பண்புகளை வெளிப்படுத்துவதன் மூலம்! பிறர் வெளிப்படுத்தும் குடிமைப்பண்புகளை, நம் இயல்பில் ஏற்றுக்கொள்வதன் மூலம்!
T.K.அகிலன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “குடிமைப்பண்பு”