செப்டம்பர் 26, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

குடி பெயர்க்கப்படுவோருக்கு அளிக்கப்படும் இழப்பீடு குறித்து சோழர்காலக் கல்வெட்டுச் செய்திகள்

தேமொழி

Jan 18, 2020

வளர்ந்து வரும் நகர்கள் எதிர் கொள்வது நகர விரிவாக்கம், அதனால் மக்களில் சிலருக்குப் பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. அதுமட்டுமின்றி புதிய திட்டங்கள் தீட்டப்படுகையிலும் அப்பகுதியில் வாழும் மக்கள் ஏதோ ஒரு வகையில் இழப்பை எதிர் கொள்வது தவிர்க்க முடியாததாகிறது.

siragu Chennai-Metro1

சென்னை பெருநகர் மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம் காரணமாக, மெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்தப்பட உள்ள நிலம் குறித்து அந்த இடங்களில் வாழும் பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றபொழுது நிகழ்ந்ததைச் செய்தித்தாள் வழங்கிய செய்தியின் மூலம் அறியலாம். ‘‘கூட்டத்தில் நில அளவையர் பேசும்போது, ‘‘ஏற்கனவே மெட்ரோ ரயில் அமைக்கும் வழித்தடம் முடிவு செய்யப்பட்டு விட்டது. அதில், ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டவர்கள், தங்களது நிலத்தைத் தானாகவே வழங்கிட வேண்டும். அதற்குரிய இழப்பீடு அவர்களுக்கு வழங்கப்படும். அப்படி இல்லையென்றால் அரசே கையகப்படுத்தக்கூடிய நிலை ஏற்படும்’’ என்றார். இதற்குக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘‘கருத்துக் கேட்புக் கூட்டம் என வரவழைத்து விட்டு எங்களை மிரட்டும் தொனியில் பேசுவது நியாயமா? நீங்களே ஒரு முடிவு எடுத்து விட்டு அதை எங்கள் மீது திணிக்கலாமா’’ எனக் கூறி, கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதனால் கூட்டம் பாதியில் முடிவடைந்தது’’ என்பது நாளிதழ் கூறும் செய்தி.

இது போன்றே, சேலம் – சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், இந்த திட்டத்துக்காக அரசு கையகப்படுத்திய நிலங்களையும் விரைவில் திருப்பி ஒப்படைக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர், அத்துடன் மக்களிடம் முறையாகக் கருத்துக் கேட்கப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டினர்.

இத்தகைய நிகழ்வுகள் போக்குவரத்து பெருகிவரும் இக்கால சூழ்நிலையின் விளைவுகள் என நாம் அறிவோம். விரிவாக்கத் திட்டமிடப்படும் பகுதியில் வாழும் மக்களிடம் கருத்துக் கேட்பு, பாதிக்கப்படும் மக்கள் முறையிட நீதிமன்றம், அவர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு போன்றவை இந்நாட்களில் உள்ளன. ஆனால், இது போன்று ஒரு சாலை விரிவாக்கம், அதனால் வீடுகளை இழக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்ட மக்கள், அவர்கள் வைத்த முறையீடு, பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போன்றவற்றை 800 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள் இரண்டு பதிவு செய்துள்ளன.

ஒருங்கிணைந்த அன்றைய தஞ்சை மாவட்டத்தின் நன்னிலம் வட்டத்தில் உள்ள அச்சுதமங்கலம் என்ற ஊரில் அமைந்திருக்கும் சோமனாதசுவாமி கோயில் முதல் பிரகாரக் கிழக்குச் சுவரில் வெட்டப்பட்டுள்ள இரு கல்வெட்டுக்கள் தரும் செய்திகள் மூலம் இதனை அறிய முடிகிறது. இக்கல்வெட்டுக்கள் மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178-1218 ஆட்சிக்காலத்தில்) சோழ மன்னரின் 21-ஆவது ஆட்சி ஆண்டில் (கி.பி. 1199) வெட்டுவிக்கப்பட்ட கல்வெட்டுக்கள். அந்நாளில் சோமனாதசுவாமி கோயில் உள்ள அச்சுதமங்கலம் என்ற ஊர், குலோத்துங்க சோழவளநாட்டு, பனையூர் நாட்டின் கீழ் சோமனாதமங்கலம் என்ற ஊராக அமைந்திருந்திருக்கிறது என்பதைக் கல்வெட்டுச் செய்தி மூலம் அறிய முடிகிறது.

கல்வெட்டுக்கள் தரும் செய்திகள்:

திரிபுவன சக்ரவர்த்தி குலோத்துங்க சோழ தேவரின் 21 ஆம் ஆட்சி யாண்டு சோமநாத தேவமங்கலத்து உடையார் சோமநாத தேவர் கோயில் திருப்பணிக்குழுவினர் தெரிவிப்பது; சோமநாத தேவர் திருவுலா செல்லும் குறுகிய தெருவில் வீடுகள் நெருக்கமின்றி இருப்பதால், தேவையான இடம் தூர்க்கப்பட்டு வீதி அகலப்படுத்தப் படவுள்ளது. இங்குள்ள குடிமக்களும் வியாபாரிகளும் இரண்டாம் திருவீதியில் குடியேற்றப் பட்டு இடம் தூர்க்கப்படும். இதனால் இழப்பு ஏற்படுவோருக்கு அதே மதிப்புள்ள சண்டேஸ்வர விலையில் (கடவுள் நிர்ணயிக்கும் விலை) தலைமாறாக வீடுகள் (மாற்று இல்லங்கள்) கொடுக்கப்படும். முன்னர் வரி செலுத்தி இருந்த காணிகளுக்கும் வீடுகளுக்கும் தலைமாறாக இந்த ஆண்டு அளிக்கப்படும் வீடுகள் வரியின்றி கிரயம் செய்து தரப்படும். தங்களுக்கு இழப்பு ஏற்படும் என்று பாதிக்கப்படுவோர் எங்களிடம் முறையிட்ட காரணத்தால் இந்த ஏற்பாட்டைக் கோயில் திருப்பணிக் குழுவினரான (ஸ்தானத்தார்) நாங்கள் செய்கின்றோம். சூரிய சந்திரர் உள்ளவரை இதை அனுபவிப்பார்களாக. இப்படிக்குத் திருப்பணிக் குழுவினராகிய அழகிய மணவாளன் அம்மை அப்பன், பேராயிரமுடையான், சிவமாதரித்தான், சோமநாதபட்டன், கண்டதேவபட்டன், விஸ்வேஸ்வர பட்டன், தூவூருடையான், ஜய துங்க ப்ரம்மாதிராஜன் ஆகியோர் ஒப்பமிடுகிறோம் (தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை: தொடர் எண் : 269 | 1978).

திரிபுவன சக்ரவர்த்தி குலோத்துங்க சோழ தேவரின் 21 ஆம் ஆட்சியாண்டில் குலோத்துங்க சோழ வளநாட்டுச் சோமநாத மங்கலத்து உடையார் சோமநாத தேவர் கோயில் திருவீதியிலிருந்து தலைமாறாகக் கொடுக்கப்பட்ட மனைகளைக் கொண்ட இரண்டாம் திருவீதியாகச் செய்கையில், மனைகளைத் தானமாகப் பெற்றோர் தானம் கொடுத்தோர் நிச்சயித்த சண்டேஸ்வரப் பெருவிலையில் அம்மனைகளை விற்கவும், பிற மாற்றங்கள் செய்யவும் உரிமைகளும் அளிக்கப்படுகின்றன என கவிச்சக்கரவத்தி, ஆனத்தூருடையான், ஞானசிவன், சீகண்ட தேவ மூவேந்த வேளான், குழலூருடையான், சோமநாத மூவேந்த வேளாள் ஆகிய நாங்கள் தெரிவிக்கிறோம் (தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை: தொடர் எண் : 268 | 1978).

கல்வெட்டுக்கள் தரும் செய்தியைச் சுருக்கமாக நூல் தரும் கல்வெட்டுக் குறிப்புரைகள் மூலமும் அறிந்து கொள்ளலாம். சுருக்கமாக; திருவீதியிலிருந்து இடம் பெயர்வோருக்கு இழப்பு ஏற்படாதவாறு செய்யப்பட இந்த ஏற்பாட்டினால் பதிலுக்குப் பெறுகின்ற மனைகளுக்குரிய வரியும், விலையும் மாறாது இருக்கும். அதுமட்டுமின்றி, பிறமனைகள் வாங்குவதாயின் புதிதாக நிச்சயிக்கப்பட்ட விலைக்கு விற்கவும் செய்யலாம் என்பன போன்ற விதிகள் இக்கல்வெட்டுக்களில் (தொடர் எண் : 269 | 1978 மற்றும் 268 | 1978) குறிக்கப்படுகின்றன.

இக்கல்வெட்டுக்களின் முழு வரிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது . . .

கல்வெட்டு வரிகள்:

siragu Chennai-Metro2

(தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை: தொடர் எண் : 269 | 1978*)

“ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்ரவத்திகள் மதுரையும் கருவூரும் ஈழமும் பாண்டியன் முடித்தலையுங் கொண்டருளிய ஸ்ரீகுலோத் துங்க சோழ தேவர்க்கு யாண்டு ௨௰௧ ஆவது மகர (நாயற்று) . . . திங்கள் கிழமையும் பெற்ற பூசத்து நாள் குலோத்துங்க (சோ)ழவளநாட்டுப் பனையூர் நாட்டுச் சோமநாத தேவமங்கலத்து உடையார் சோமநாத தேவர் கோயில் ஆதிசண்டேஸ்வர தேவர் திருவருளால் இக்கோயில் ஸ்ரீகாரியஞ் செய்வானும் ஸ்ரீமாஹேஸ்வரக் கண்காணி செய்வார்களுந் தேவர்கன்மி . . . உள்ளிட்ட இஸ்தானத்தோம் ஒலை இன் நாயனார் . . . நிலத்துத்தி . . . களில் மனைகள் முன்பு சண்டேஸ்வர விலைகொண்டுடைய வியாபாரிகள் பள்ளி . . . மக்களும் இவ்வாண்டு கொள்கிற குடிமக்களுங் கண்டு இந்நாயனார் எழுந்தருளுகிற திருவீதியாட்டில்லாமை குடி நெருக்கம் இன்றியே இருந்தமையில் திருவீதியில் . . . ரத்து இரண்டாந் திருவீதி ஆகக் கண்டு குடி ஏறவேணுமென்று இப்படி செய்யுமிடத்துத் தூர்க்க வேண்டுமிடம் ஸ்ரீபண்டாரத்திலே வேண்டுவதிட்டுத் தூர்த்து குடுக்கவும் இத்திருவீதிகளில் மனைகளில் முன்பு விலைகொண்டுடைய வியாபாரிகள் உள்ளிட்டார்க்குத் தலைமாறு இடு(கிற)மனைக(ளும்) . . . ப்படி இவ்விலையாய் நிற்கவும் அல்லாத மனைகள் நிச்சயித்த (காணி)க்கு சண்டேஸ்வர விலையாகக் கொள்ளவும் இம்மனைகள் தாங்களே . . . து விழாமல் நோக்கி இருக்கும் இடத்து முன்பு காணியாகக் கொண்டு இறை இறுத்து வந்தமனைகளுக்குத் தலைமாறு பெற்ற மனைகளும் இவ்வாண்டு விலைகொள்கிற மனை(க்கு இறை)யிலி (இறுத்த) வர்த்த தானதமன விக்கிரையங்கள் செல்லக் கடவதாகவும் இப்படிக்கு கல்வெட்டவும் முன்பிலாண்டுகள் காணி கொண்டார் மனைகள் இடித்து இப்படி நிற்க வேண்டுகையில் இவ்வாண்டுகளில் மனை எடுக்க ஸ்ரீபண்டாரத்து இட்ட காசும் நெல்லும் பண்டங்களும் இழக்கவும் பெற வேணுமென்று நாங்கள் இத்தேவர்க(ன்மிகளுக்கு விண்ணப்)பஞ் செய்தமையில் இப்படி செய்கவென்று தேவர் ப்ரஸாதஞ் செய்தருளின திருமுகந் தந்தமையில் இத்தரமிலி நிலத்துத் திருவீதிகளிலும் மனைகளில் வியாபாரி உள்ளிட்டார் முன்பு சண்டேஸ்வர விலை கொண்டுடையராய் இருந்த மனைகளுக்குத் தலைமாறு பெற்ற மனைகளும் இவ்வாண்டு விலை கொண்டு மனைகளுந் தா . . . வி . . . யழாமல் நோக்கி இருக்கக் கடவார்களாகவும் இம்மனைகளில் மேனோக்கின மரமும் கீணோக்கிய கிணறும் பாகாஸ்ரீயங்களும் அகப்பட இவ்வாண்டு . . . முதல் இறையிலி வர்த்ததான தமன விக்கரையங்கள் செல்லக் கடவதாகவும் இப்படி சந்திராதித்தவரை அனுபவிக்கக் கடவார்களாகவும் முன்பிலாண்டுகளில் . . . ண்டதா மனைகள் எடுக்க ஸ்ரீபண்டாரத்து . . . க்கக் கடவுதாகவுஞ் சொன்னோம் இப்படி . . . இப்படிக்கு இவை . . . க்குச் சருப்பேதி உடையான் அழகிய மணவாளன் அம்மை அப்பன் எழுத்து இப்படிக்கு இவை கோயில் கண்காணி . . . பேராயிரமுடையான் சிவமாதரித்தான் எழுத்து . . . காணி உடைய தேவர்கன்மி கௌதமந் . . . சோமநாத தேவனான சோமநாதபட்டன் எழுத்து இப்படிக்கு இவை இக்கோயில் சிவப்பிராம்மணக் கண்காணி உடைய பராசரன் திருச்சிற்றம்பல . . . கண்டதேவபட்டன் எழுத்து இப்படி அறிவேன் பராசரன் திருச்சிற்றம்பலமுடையான் விஸ்வேஸ் வர பட்டன் எழுத்து இவை இக்கோயில் கண்காணிக் கணக்கு தூவூருடையான் எழுத்து இப்படிக்கு இவை ஸ்ரீமாஹேஸ்வர கண்காணி சோமநாத(தேவர் கோயில்) ஸ்ரீகாரியம் ஜய துங்க ப்ரம்மாதிராஜ . . . எழுத்து உ”

(தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை: தொடர் எண் : 268 | 1978)

“ஸ்வஸ்தி ஸ்ரீ உடையார் அருளிச் செய்யக் குலோத்துங்க சோழ வளநாட்டுச் சோமநாத மங்கலத்து உடையார் சோமநாத தேவர் காணி சிவ . . . ப்ரவண தராசாக . . . ஆண்டார் சோமநாத (மங்கலத்து உடையார் சோமநாத தேவர் தரமிலி நிலத்து வி . . . களும் மற்றும் பல் . . . காணியாகக் கொண்டும் மனை எடுத்து இருந்த திருவீதி முன்பு நின்றபடி பேர்த்து இரண்டாந்திருவீதியாகச் செய்கையில் இத . . . வதியி . . . படநி . . . ம்பழ . . . ன் இத்தாய முன்பு . . . கள் உள்ளிட்டார் மனைகள் பழம்படியே இவர்களுக்கு காணியாக விட்ட பின்பு கொள்வார்க்கு . . . னை சண்டேஸ்வரப் பெருவிலையாக தானத்தார் நிச்சைத்த காசுக்கு விற்கவும் இம்மனைகளும் முன்பு விலைகொண்ட . . . யாமாகக் . . . ண்ணிட்ட ஒரு மனைகளும் இம்மனைகள் . . . தா . . . ஆகக்கடவதாகவும் இப்படிக்கு தான நியோகம் குடுக்கவும் இப்படி பேசி கல்வெ வெட்டியபடி இறையிலி இருபத்தொன்பதாவது பசான முதலாகவும் சொன்னோம் இப்படி செய்க கவிச்சக்கரவத்தி எழுத்து யாண்டு ௨௰௧ ன் வரை . . . ஆனத்தூருடையான் எழுத்து இவை ஞானசிவன் எழுத்து இவை சீகண்ட தேவ மூவேந்த வேளான் எழுத்து இவை முதற்கணக்கு குழலூருடையான் எழுத்து இவை முதற்கணக்கு சோமநாத மூவேந்த வேளாள் எழுத்து.”

குறிப்பு:

* நூலின் தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை: தொடர் எண் : 269 | 1978 கல்வெட்டுக் குறிப்பில் வரலாற்று ஆண்டு – ‘கி. பி. 1237′ என்று நூல் குறிப்பிட்டிருப்பது பிழையானது; கி. பி. 1218 வரை மட்டுமே மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சி செய்தார் என்பதுதான் வரலாறு.
மூன்றாம் குலோத்துங்கனின் 21-ஆவது ஆட்சி ஆண்டு என்பது அதே ஆண்டில் வெட்டப்பட்ட மற்றொரு கல்வெட்டான – தொடர் எண் : 269 | 1978 கல்வெட்டுக் குறிப்பிடுவது போன்று கி.பி. 1199 என இருக்க வேண்டும்).

பார்வைநூல்:

நன்னிலம் கல்வெட்டுக்கள்-இரண்டாம் தொகுதி
முதற் பதிப்பு : 1980 – தொ. பொ. ஆ. துறை, எண், 67
தொகுப்பாளர் ஆ. பத்மாவதி
தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை

மற்றும்:

மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம் பற்றிய கருத்துக்கேட்பு கூட்டத்தைப் புறக்கணித்து பாதியில் வெளியேறினர் பொதுமக்கள்
dinakaran.com/News_Detail.asp?Nid=195874

சேலம் – சென்னை எட்டுவழிச் சாலை: ஐகோர்ட் தடை

https://www.dinamalar.com/news_detail.asp?id=2251266

———


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குடி பெயர்க்கப்படுவோருக்கு அளிக்கப்படும் இழப்பீடு குறித்து சோழர்காலக் கல்வெட்டுச் செய்திகள்”

அதிகம் படித்தது