செப்டம்பர் 19, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

குமரகுருபரரின் தன் வயப்படும் நிலை

முனைவர் மு.பழனியப்பன்

Mar 7, 2020

siragu kumarakrubarar2

சைவ இலக்கிய படைப்பாளர்களின் வரிசையில் தனித்த இடம் பெறுபவர் குமரகுருபரர். அவர் தமிழையும் சைவத்தையும் இருகண்களெனக் கொண்டு காசியில் மடம் நிறுவிய பெருமையர். அவரின் படைப்புகள் அனைத்தும் சைவத்தின், சிவத்தின் பெருமையைக் காட்டுவன. குமரகுருபரர் எத்தலத்திற்குச் செல்கிறாரோ அத்தலத்தைப் பற்றிய படைப்பினை அத்தலச் செய்திகளுடன் நேரில் காணும் வண்ணம் படைத்துத் தரும் பாங்கினை உடையவர். இவரின் படைப்புகளில் தன்வயமாகும் பண்பு பெரிதும் காணப்படுகிறது.

திருவாரூர் தலத்திற்குச் செல்லும் குமரகுருபரர் அத்தலத்து இறைவனைப் பற்றி திருவாரூர் நான்மணிமாலை என்ற சிற்றிலக்கியத்தைப் பாடுகிறார். இச்சிற்றிலக்கியத்தில் திருவாரூரின் அனைத்து பெருமைகளையும், அத்தலத்து இறைவனின் சிறப்புகளையும், அத்தல அமைப்பு பற்றிய செய்திகளையும், இவற்றைத் தாண்டி தான் அனுபவித்த இறைஅனுபவங்களையும் அவர் வெளிப்படுத்தி நிற்கிறார். இவரின் பாடல்களில் காணப்படும் சிறப்புக் கூறு தன் வயமாதல் ஆகும். எங்கு சென்றாலும் அங்குள்ள இறைவனுடன், ஊருடன் தன்வயமாகி இவர் நின்று கலந்து நிற்பார். இத்தன்வயமாகும் பண்பு இறைவனுக்கு உரியது. இந்தத் தன்வயப்பண்பே இறையடியாரான குமரகுருபரருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆண்டவனின் அடியார் அவனைப் போலவே தன்வயத்தனாகும் பண்பினையும் பெறுவர் என்பதற்குக் குமரகுருபர சுவாமிகள் ஓர் எடுத்துக்காட்டு.

இறைவனின் எட்டு குணங்களில் முதல் குணமாக தன்வயத்தன் ஆதல் என்பதைப் பரிமேலழகர் காட்டுகிறார். குமரகுருபரர் திருவாரூரையே தன் தலமாகக் கருதி அதனுடன் கலந்தவராகத் தன்னைத் திருவாரூர் நான்மணிமாலையில் அமைத்துக் கொள்கிறார். இரண்டறக் கலந்து அத்தலத்தின் தன்மையோடு தன்னை ஒருமித்துப் பாடும் அவரின் இப்பண்பு சிறப்பானதாகும்.

திருவாரூர் நான்மணி மாலை என்பது வெண்பா, கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா போன்ற நான்கு வகைப்பாக்களைக் கொண்டு திருவாரூர் இறைவனுக்கு அளிக்கப்படும் மாலையாகும். இம்மாலை வாடா மாலையாக சைவ இலக்கியப் பெரும் பரப்பில் விளங்குகின்றது.

குமரகுருபரர் தன் குருவான தருமரபுர ஆதீனக் குருமுதல்வரைக் காண வரும் நிலையில் தருமபுரத்தைச் சுற்றி உள்ள தலங்களைச் சென்று தரிசிக்கிறார். அவ்வகையில் அவர் திருவாரூருக்கு வந்து சேர்கிறார். திருவாரூரில் இருந்து ஆண்டவனை தரிசிக்கிறார். அவ்வனுபவமே திருவாரூர் நான்மணிமாலையாகின்றது. இதனுள் தலைவி ஒருத்தி திருவாரூர் இறைவனுக்காக காதலால் ஏங்கும் நிலையிலும் அகப் பொருள் சார்ந்த பாடல்களும் உள்ளன. மிகு சுவையுடையதாக அதே நேரத்தில் சைவ சமயப் பற்றானது ஆழமாக அமையும் நிலையில் இப்பனுவல் பாடப்பெற்றுள்ளது.

siragu kumarakrubarar1திருவாரூர் நகர் அழகு

திருவாரூர் நகரில் பல மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் விளங்குகின்றன. அவற்றின் உச்சியில் கொடிகள் பறக்கின்றன. அக்கொடிகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளன. இதன் காரணமாக அவை வெண்ணிலவை உடைத்து நிலவின் குளிர்ச்சியான ஒளியை  உலகுக்கு அளிக்கின்றன. இதனால் சூரியனால் ஏற்படுத்தப்பட்ட வெப்பம் குறைகிறது என்று நகர்நலம் பாடுகிறார் குமரகுருபரர்.

மனிதர்கள் தீமை செய்வோர் ஒருபுறம் இருக்கிறார்கள். மற்றொருபுறம் அத்தீமையைப் பொறுத்துக்கொண்டு அவர்க்கும் நன்மை செய்வோரும் இருக்கிறார்கள். இவ்வகையில் திருவாரூர்  வெய்யோனின் வெயில் கொடுமையால் வருந்தும் நிலையில்,   அவ்வருத்தத்தை உயரமான கொடிகள் போக்கி குளிர்மை செய்கின்றன என்று தற்குறிப்பு ஏற்றித் திருவாரூர்ப் பெருமையைப் பாடுகிறார் குமரகுருபரர். இந்நகரில் உள்ள இறைவன் ஒருபுறத்தில் பிச்சை ஏற்பவனாகவும் மறுபுறத்தில் பிச்சை அளிப்பவனாகவும் இருப்பது ஆச்சரியமாக உள்ளது என்றும் பாடுகிறார். “ஒன்றே இடப்பால் முப்பத்து இரண்டறம் வளர்ப்ப, வலப்பால் இரத்தல் மாநிலத்தின்றே” (7) என்று இறைவனின் விநோதப் பண்பினையும் எடுத்துரைக்கிறார் குமரகுருபரர். இறைவனின் இடப்பாகத்தில் உள்ள உமையவள் முப்பத்து இரண்டு அறங்கள் வளர்க்கிறாள். வலப்பாக இறைவன் பிச்சை தேடி அலைகிறார். இந்த விநோதம் இந்த உலகத்தில் இவருக்கு அன்றி வேறு யாருக்கு உண்டு என்று குமரகுருபரர் காட்டுகிறார்.

திருவாரூர் திருவேணி சங்கமம் போல உள்ளதாம். மங்கையர்கள் தன் மாளிகைகளில் பொதித்து வைத்த வைரம் கங்கையாறாகிறது. அதனுடன் இணைந்து நிற்கும் நீலமணிகள் யமுனை ஆறு போலத் தெரிகின்றது. இவற்றோடு இணையும் மாணிக்கங்கள் சரசுவதி ஆறாகிறது. ஆக மொத்தத்தில் திரிவேணி சங்கமமமாகத் திருவாரூர் விளங்குகிறது என்கிறார் குமரகுருபரர். (13)

எருமை மாடுகள் குவளை மலர்களைத் தின்று, இதன் காரணமாக அவற்றின் மடியில் பால் சுரக்க, அப்பாலமுது பெருகி பொய்கையின் கரையை மோதும் அளவிற்கு வளம் பெற்றது திருவாரூர். இப்பொய்கையில் அன்னப் பறவை சரசுவதி போல அமர்ந்திருக்கிறது. இந்த வளமுடைய திருவாரூரில் மேருமலை போன்று ப10ங்கோயில் உள்ளது. அங்கு இறைவன் வீற்றிருக்கிறான் என்று நகர்வளம் பாடுகிறார் குமரகுருபரர் (17)

திருவாரூரை இவ்வாறு பக்தி மயமாகக் காண்பதில் பேரானந்தம் அடைந்திருக்கிறார் குமரகுரபரர்.

நாமம் பல

திருவாரூர் இறைவனை பல நாமங்கள் சொல்லி அழைக்கிறார் குமரகுருபரர். கமலேசர் என்றும், தியாகேசர் என்றும். கமலை ஈசன் என்றும் பற்பல பெயர் சொல்லி குமரகுரபரர் அழைக்கிறார். தியாகங்கள் செய்ததால் திருவாரூர் இறைவன் தியாகேசர் எனப்படுகிறாராம்.

வையம் முழுதும் உழுது உண்ண வல்லாற்கு அளித்த நவநிதியும்

கையில் ஒருவற்கு அறித்து எமக்கே கதிவீடு அளித்தோர் கன்னிகைக்கு

மெய்யில் ஒரு கூறு அளித்தனரால் விமலர் கமலைத் தியாகர் என்பது

ஐயர் இவர்க்கே தகும் முகமன் அன்று புகழும் அன்றாமே” (24)

என்ற பாடலில் நிலம், நிதி, வீடு, உடம்பின் ஒரு பாகம் போன்றன  அளித்த தியாகச் செல்வர் தியாகேசர் என்கிறார் குமரகுருபரர். இவை முறையே திருமால், குபேரன், அடியவர், உமையவள் போன்றோருக்கு வழங்கப்பெற்றுள்ளன. தனக்கென ஒன்றும் கொள்ளாது அனைத்தையும் வழங்கும் தியாகர் தியாகேசர் ஆவார்.

எக்காலத்திலும் இறைவன் நாமத்தை ஓதுவதே உயிர்களுக்குத் துணை என்று திருவாரூர் நான்மணி மாலை சுட்டுகிறது. “ஆவி அம் போர் உகந்து ஆயிரம் கூற்றுடன்றாலும் அஞ்சேல் நா இயம்பு ஓருக நன்நெஞ்சமே அவர் நாமங்களே” (11) என்று ஆயிரம் கூற்று வந்து நின்றபோதிலும் ஆண்டவனின் பெயர் என்று ஒரு கூற்று துணை நின்று நலங்கள் நல்கும் என்கிறார் குமரகுருபரர்.

திருவாரூர் இறைவனைப் பல நிலைகளில் காண்கிறார் குமரகுருபரர். திருவாரூர் இறைவன் திருமால், நான்முகன், இந்திரன் போன்ற தேவாதி தேவர்களால் வணங்கப்படுபவன். அவர்களின் நிலையை மாற்றவும், வலிமை கூட்டவும் அவரால் இயலும். மேலும் அவர் பரசுநர் பரச, பணிபவர் பணிய அரசு வீற்றிருப்பவர். அவன் இல்லறத்தாருக்கு இல்லறத்தான்.  யோகிகளுக்கு யோகி. அவன் உமையவளுடன் ஊடியும் கூடியும் திரிபவன். யோகியாக சின்முத்திரை கொண்டு மௌனமாய் யோகமும் கொள்வான். அவன் நிற்பது இந்நிலை எனும் நியமம் இல்லாதவன் (25) என்றெல்லாம் இறைவன் பெருமை பேசுகிறார் குமரகுருபரர்.

திருவாரூரில் இறைவன் சோமாஸ்கந்தராக விளங்கும் உருவம் குமரகுருபரருக்கு மிகவும் பிடித்ததாக இருந்துள்ளது.

“சிங்கம் சுமந்த செழுமணித் தவிசில்

 கங்குலும் பகலும் கலந்து இனிது இருந்தாங்கு

 இடம் வலம் பொலிந்த இறைவியும் நீயும்

 நடுவண் வைகு நாகிளங் குழவியை

 ஒருவிரின் ஒருவர் உள்ள நெக்குருக

 இருவிருந் தனித்தனி ஏந்தினிர் தழீஇ

 முச்சுடர் குளிர்ப்ப முறை முறை நோக்கி

 உச்சி மோந்தும், அப்பச்சிளங் குழவி

 நாறு செங்குமுதத் தேறலோடொழுகும்

 எழுதாக் கிளவியின் ஏழிசை பழுத்த

 இழுமென் குரல் மழலைத் தீஞ்சொற்

 சுவையமுதுண்ணும் செவிகளுக்கு ஐய என்

 பொருளில் புன்மொழி போக்கி

 அருள் பெற அமைந்ததோர் அற்புதம் உடைத்தே” (5)

என்ற பாடலில் அப்பனும், அம்மையும், முருகக் குழந்தையும் இணைந்திருக்கும் அருட்காட்சியை மிகச் சிறப்புடன் குமரகுருபரர் காட்டுகிறார். இப்பாடலடிகளின் நிறைவில் தன் கவிமொழியைப் புன்மொழி என்று தன் மொழிகளை இழித்து உரைக்கிறார் குமரகுரபரர். இருப்பினும் அருள் தந்து என்னை நல்வழிப்படுத்தினாய் என்று நம்பிக்கையும் கொள்கிறார் குமரகுருபரர். இங்குதான் அவரின் தனவயமாகும் நிலை மெல்ல வெளிப்படுகிறது. இறைவனின் குடும்பத்துள் தன்னையும் ஒருங்கிணைக்கும் தன் வயமாகும் நிலைக்கு இப்பாடல் ஒரு காட்டு.

தூண்டிலில் கட்டப்பட்ட மிதப்பு அமிழ்ந்ததும் மீன் பிடிப்பவன் மீன் பட்டது என்று தூண்டிலை வெளி இழுப்பதுபோல  எமன் இவ்வுலக உயிர்களை இழுத்துச் செல்கிறான். எல்லா மீன்களும் இப்படி அவன் பக்கம் சென்றுவிடுவதில்லை. சில மீன்கள் அவன் தூண்டில் படாமல் சிவபெருமானே உன் கடைக்கண்ணால் பெருவாழ்வு பெறும்.

“அருட்பெருங்கடலின் அவ்வாருயிர் மீனம்

கருக்குழி கழியப் பாய்ந்து தெரிப்பரும்

பரமானந்தத்திரையொடும் உலாவி

எய்தரும் பெருமிதம் எய்த ஐயநின் கடைக்கண் அருளுதி எனவே” (13)

என்று இப்பாடலில் எம்பெருமான் கடைக்கண்ணால் கண்டால் பிறவி அழியும் என்று குமரகுருபரர் சுட்டுகிறார். இந்நிலை தனக்கு ஏற்பட வேண்டும் என்பது அவரின் ஆசை.

படித்தும் உணர்ந்தும் ஓதியும் இன்னமும் இறைவன் தனக்கு அருள் செய்யாததற்கு என்ன காரணம் என்று எண்ணிப்பார்க்கிறார் குமரகுருபரர்.

மூவர் அகண்ட மூர்த்தி என்று ஏத்தும்

தேவ ரகண்ட தெய்வ நாயக!

நின் னடித் தொழும்பின் நிலமையின் றேனும்நின்

தன்னடித் தொழும்பர் சார்புபெற்று உய்தலின்

சிறிய என் விழுமம் தீர்ப்பது கடன் என

அறியாய் அல்லே அறிந்துவைத் திருந்தும்

தீரா வஞ்சத் தீப்பிறப்பு அலேப்பச்

சோரா கின்ற என் துயர் ஒழித் தருள்கிலை

புறக்கணித் திருந்ததை யன்றே குறித்திடின்

கோள்வாய் முனிவர் சாபம்நீர்ப் பிறந்த

தீவாய் வல்வினைத் தீப்பயன் கொண்மார்

உடல் சுமந்து உழலும் அக் கடவுளர்க்கு அல்லதை

பிறவியின் துயரநினக்கு அறிவரிது ஆகலின்

அருளாது ஒழிந்தனை போலும்

கருணையில் பொலிந்த கண்ணுத லோயே!”(17)

என்ற பாடலில் அவரின் தன்வயம் ஆகும் தன்மை பெரிதும் வெளிப்படுகிறது. தன்னை ஆண்டவன் வெறுப்பதற்கான காரணமும் தெளிவுபட எடுத்துரைக்கப்பெறுகிறது.

உன் திருவடியில் நிலை பெறுவது எனக்கு இயலாதது என்றாலும் அடியவர் கூட்டத்துள் ஒருவனாக யான் உள்ளேன். என்னை நீ புறக்கணிக்கிறாய். பல பிறவிகள் எடுக்கவேண்டும் என்று சாபம் பெற்ற நான்முகனாலேயே பிறவியை ஒழிக்க இயலாதபோது என்னுடைய நிலை இன்னும் கீழானதுதானே. நீ இதனால் என்னை கைவிட்டுவிட்டாய் போலும் என்று இரங்கிப் பாடுகிறார் குமரகுருபரர்.

மேலும் இவர் திசை தெரியாத பயணி ஒருவனையும் தனக்கு உவமையாக்குகிறார்.

“தன்னுடைய மயக்கம் திசை மயங்கிற்று என

மொழிகுவது ஏய்ப்ப முதுகுறை இன்மையின்

பழமறை மயங்கிற்று என்னா முழுவதும்

எய்யாது இசைக்குதும் போலும்

ஐய நின் தன்மை அளப்பரிது எமக்கே” (29)

என்ற நிலையில் குமரகுருபரர் திசை மாறிச்சென்றவன், திசை மீது குற்றம் சொல்வது போல பழமறைகளின் மீது குற்றம் சொல்லி யான் தப்பிக்கிறேன். என்னை ஆட்கொள்ளும் நின் தன்மை பெரியது, அளப்பரியது என்கிறார் குமரகுருபர சுவாமிகள்.

நாற்பது பாடல்கள்தான் இம்மாலை என்றாலும் சிவபெருமானின் தூய வடிவத்தை, அவனின் இயல்பினை, அவனின் தன்மையினை அறிவித்து நிற்கும் பாடற்பகுதியாக திருவாரூர் நான்மணி மாலை விளங்குகிறது. இலக்கிய இன்பமும் தன்னிரக்கமும் இதனுள் மலிந்து கிடக்கின்றன. இதனைக் கற்போர் தன்னையும் ஒரு பொருளாக்கிய ஆண்டவனின் நன்னலம் போற்றுவர். தலைக்கணம் இல்லாது தாழ்வர். குமரகுருபரரே தன்னைத் தாழ்த்திக்கொண்டுப் பாடும் நிலையில் மற்ற உயிர்கள் இன்னும் எவ்வளவு தாழ்வானவை என்பது எண்ணத்தக்கது.

பதினேழாம் நூற்றாண்டில் சைவப் பெருமையை நிலைநாட்டியவர் குமரகுருபரர். அவரால் வைகுண்டம் முதல் காசி வரை சைவம் தழைத்தது. காசி குமாரசாமி மடம் கண்டது. அவரின் அருள் செயல்கள், பனுவல்கள் என்றைக்கும் சைவத்திற்கு உறுதிப் பொருள் ஆகி நிற்பவை.அவர் தன்மயமாகி ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு ஆண்டவனித்தும் தன்னை ஒப்படைக்கும் பாங்கு சிறப்பானது. இதனை இக்கட்டுரை விளக்கி நிற்கிறது.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குமரகுருபரரின் தன் வயப்படும் நிலை”

அதிகம் படித்தது