செப்டம்பர் 26, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

குமாருக்கு மட்டும் தெரிந்த அவளுடைய கண்ணீர் (சிறுகதை)

முனைவர் ஆ.சந்திரன்

Dec 1, 2018

siragu small story2

வழக்கமாக நான்கு மணிக்கு படுக்கையிலிருந்து எழும் பழக்கமுடைய குமார் அன்று பொழுது விடிந்ததுகூட தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தான். இரவு படுக்கப்போகும் போதே சொல்லி இருந்ததால் அவனை எழுப்பாமல் தன்னுடைய வழக்கமான வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள் விமலா.

வீட்டிற்கு வெளியில் ஏதோ வண்டியின் ஆரன் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தவன் கதவைத் திறந்தபோது அவனுக்கு அங்கு இன்ப அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அவன் எதிர்பார்த்தவன் ஆனால் எதிர்பார்க்காத நேரத்தில் வந்திருந்தான். அவனை மகிழ்ச்சியுடன் வரவேற்க முற்பட்டாலும், எனக்கு நேரமில்லை, பஸ் வந்திடுச்சி. ஏழு ஏழரைக்கெல்லாம் புறப்படும், கிளம்பி வந்து விடுங்க! என்று இருசக்கர வண்டியில் இருந்து இறங்ககூட நேரமில்லாத அவனது நண்பனான சங்கர் சொல்லிவிட்டு கிளம்பினான்.

அப்போது அவனது மனைவி விமலா, ‘போகாமல் இருந்துவிடலாம் என்று தானே! இருந்தீங்க, அதனால்தானே என்னை காலையில் எழுப்ப வேண்டாமென்று சொன்னீங்க!’ என்றாள்.

“போம்மா! ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள்தான் விடுமுறை கிடைக்குது. அன்னைக்குன்னுப் பார்த்து இந்தமாதிரி ஏதாவது நிகழ்ச்சி வந்திடுது” என்று அவன் சலிப்போடு சொன்னாலும் அவனது சலிப்பிற்கான காரணம் சோம்பேறித்தனம் அல்ல என்பது அவனுக்கு மட்டும்தான் தெரியும்.

நான்கு நாட்களுக்கு முன்பு அவனுடைய மாமா வீட்டிற்கு வந்திருந்தார். அவர் தூரத்துச் சொந்தக்காரர் என்றாலும் அவனை மாப்பிள்ளை என்றுதான் வாய்நிறைய அழைப்பார். அவர் மட்டுமல்ல அவருடைய மகனும் குமாரின் நண்பனுமான சங்கரும் அவனை அப்படித்தான் கூப்பிடுவான்.

“வருகிற ஞாயிற்றுக்கழமை பாப்பாவுக்குச் சீமந்தம் வச்சிருக்கோம்மா! நீயும் மாப்பிள்ளையும் கண்டிப்பா வந்திடனும்” என்று சொல்லிக்கொண்டிருந்த போது அவன் அலுவலகத்திற்குப் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தான். அந்த அவசரத்தில் இருந்தவன் அவருக்கு ‘சரி இரண்டுபேரும் கண்டிப்பா வருகிறோம்!’ என்று உறுதியளித்தான். அவர் சென்ற பின்னர் குழந்தையைக் கூட்டிகிட்டு நீ மட்டும் போய்ட்டு வந்திடும்மா! என்று தன் மனைவியின் மேல் தன் பாரத்தை இறக்கி வைத்துவிட்ட திருப்தியில் வேலைக்குப் போனான்.

ஆனால் இன்று எல்லாம் தலைகீழாய்ப் போனது. அவனுடைய மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் நீண்டதூரப் பேருந்து பயணம் செய்யக்கூடாது என்று மருத்துவர் கூறிவிட்டார். அதனால் யாரும் போக வேண்டாமென்ன்று அவன் முடிவெடுத்திருந்தான்.

ஆனால் தன் நண்பனே காலையில் வந்து மீண்டும் நினைவூட்டிச் சென்றதால் போகாமல் இருக்கமுடியாது என்று அவனுக்குத் தோன்றியது. மனைவியும் அதையே சொன்னாள். ஒரு முறைக்கு இருமுறை வந்து கூப்பிட்டிருக்கிறார்கள் போகவில்லை என்றால் நன்றாக இருக்காதென்று நினைத்தான்.

தன்னுடைய இருசக்கர வண்டியில் பேருந்து நின்றிருந்த இடத்தை அடைந்தபோது சரியாக மணி ஏழே முக்கால். புறப்படத் தயாராக இருந்த அந்தப் பேருந்தில் ஒரு சிலர் அமர்ந்திருப்பதை பார்த்துக் கொண்டே போனான்.

அப்போது அவனுக்குக் கல்லூரிப் படிக்கும் காலத்தில் தன்னுடைய அந்த சைக்கிளை நிறுத்தி வைக்கும் அந்த இடம் காலியாக இருப்பதாகத் தோன்றியது. அவன் அங்குப் பல நேரம் காரணமே இல்லாமல் போய்ப் பொழுதைக் கழித்திருக்கிறான். சில நேரத்தில் தன்னுடைய நண்பனை அங்குப் பார்த்ததுண்டு.

சரவணன் தன்னுடைய தங்கையை பேருந்தில் ஏற்றிவிட வரும் போதுதான் அந்த சந்திப்பு பெரும்பாலும் நிகழும். அந்த நினைவுகளுடனே நண்பனின் வீட்டிற்குப் போனான்.

வண்டியை நிறுத்திவிட்டு முன்னாடி அமர்ந்திருந்த தன்னுடைய குழந்தையை இறக்கிக்கொண்டிருக்கும் போது சத்தம் கேட்டு உள்ளே இருந்த குமாரின் நண்பன் வெளியே வந்து எட்டிப்பார்த்து வா! மாப்பிள்ளை! என்று உரிமையுடன் அழைத்தான் வழக்கம் போல.

அப்போது உள்ளே அமர்ந்திருந்த ஒரு வயதான பாட்டி யாரப்பா? என்றதற்கு என்னோட மாப்பள்ளை என்று ஏதோ சொல்லத் தொடங்கினான். ஆனால் அதற்குமேல் தன்னைப் பற்றிச் சொன்ன எதையும் குமார் காதில் வாங்கவில்லை. தெருவில் வந்துகொண்டிருந்த மாமாவின் குரலைக்கேட்டுத் திரும்பினான் அதனால்.

எட்டு மணிக்கு பேருந்து புறப்பட்டது.

வழக்கமாகச் செய்யும் சேட்டைகளைச் செய்யாமல் சன்னல் ஓரத்தில் அமைதியாக அமர்ந்து கொண்டிருந்த தன்னுடைய மகளிடம் பேசிக்கொண்டு வந்த குமார் தான் வேலை செய்யும் அலுவலகத்தை அவளுக்குக் காட்டினான். அந்த அலுவலகத்தைப் பார்த்து அவனது மகளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. துள்ளிகுதித்தாள். அப்போது பேருந்து கடைகள் நிறைந்த பகுதியைக் கடந்துகொண்டிருந்தது. அக்கடைகளில் பார்த்தப் பொருட்களை எல்லாம் வாங்கித் தருமாறு ஏற்கனவே போட்டு வைத்திருந்த நீண்ட பட்டியலை ஒப்பித்துக் கொண்டிருந்தாள் அவள். அவற்றையெல்லாம் பேருந்து நின்றதும் வாங்கித் தருவதாகக் கூறி மகளை சமாதானம் செய்யும் முயற்சி வெற்றியடையும் தருவாயில் பிரதான சாலையில் இருந்து ஒரு குறுகலான பாதையில் திரும்பியது பேருந்து. சுமார் பத்து நிமிடம் போக்குவரத்து என்பது இல்லாத அந்த குறுகலானப் பாதையில் சென்று ஒரு பெரிய வீட்டின் முன்பு நின்றது.

அந்த வீட்டைச் சுற்றி தென்னை மரங்கள் இருந்தன. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஒரு சில வீடுகள் மட்டுமே அங்கு இருந்தன. அவற்றைப் பார்த்து இந்தக் காட்டில் எப்படித்தான் இவர்கள் எல்லாம் இருக்கிறார்களோ? என்று பேருந்திலிருந்து இறங்கியவர்கள் பேசிக்கொண்டார்கள். அப்போது குமாரின் மனம் வேறு எதையோ அசைபோட்டுக் கொண்டிருந்தது.

பேருந்து நின்ற கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அங்கு வளைகாப்பு நிகழ்ச்சி ஆரம்பமானது. பிரமாண்டமான அந்த வீட்டின் முன்பு அழகாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வரிசையாகப் போட்டிருந்த நாற்காலிகளில் கடைசி வரிசையில் அமர்ந்தான் குமார்.

ஆடம்பரமாக நடந்துகொண்டிருந்த அந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த போது அவனுடைய மனம் மட்டும் நான்காண்டுகளுக்கு முன்பு தன்னுடைய வீட்டில் நடந்த மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியோடு ஒப்பிட்டுக்கொண்டிருந்தது. அப்போது மகள், யார் அப்பா அது? என்ற கேள்வியை எழுப்பினாள். வளைகாப்பு நடந்துகொண்டிருந்த பெண்ணைக் கைக்காட்டி. பதில் சொல்லக் கொஞ்சம் தயங்கியவன் நிதானித்து சங்கர் மாமாவோட தங்கச்சி என்றான்.

அவளைக் கடைசியாக சங்கரின் திருமணத்தின் போது பார்த்ததாக அவனுக்கு நினைவு. அப்போது இருந்த அந்தப் பொலிவு இப்போது இல்லாதது போல் அவன் உணர்ந்தான். அவளுடைய கண்களில் ஏதோ ஒரு கலக்கம் ஒளிந்திப்பதாகத் தோன்றியது. நிகழ்ச்சி முடிந்த பிறகு ஏதேதோ நினைவுகள் அவனுடைய மனதில் வந்து போயின. அவற்றில் அதிகமான பாதிப்பைத் தந்தது, அப்பா தன்னை தன்னுடைய போக்கில் வாழ அனுமதித்தது. அப்போது நினைத்தான் இதை நான்காண்டுகளுக்கு முன்னர் அப்பா செய்திருந்தால் என்ன? என்று.

பேருந்து புறப்பட்ட இடத்தில் வந்து சேர்ந்த போது மணி ஐந்து. மூன்று மணிக்கெல்லாம் வந்து விடும் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் இரண்டு மணிநேரம் கூடுதலாக ஆனது. அது ஒன்றும் அவனுக்கு பெரிய வருத்தத்தைக் தரவில்லை.

பேருந்திலிருந்து இறங்கிவுடன் குமாரின் வண்டி நேராக ஒரு கடைக்குச் சென்றது. அவனுடைய மகள் இரண்டு சாக்கோபார் ஐஸ்கிரீமை வாங்கி மாறி மாறி சுவைத்துக் கொண்டிருந்தாள் மகிழ்ச்சியாக.

மகளுடைய ஆசைக்காக அவனும் ஒரு ஐஸ்கிரீமை வாங்கி சாப்பிட்டான்.

மனைவியிடம் பேருந்தில் புறப்பட்டதிலிருந்து அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொல்லிக்கொண்டிருந்தான். அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த விமலா தன்னுடைய சீமந்த நிகழ்வில் மூழ்கினாள்.


முனைவர் ஆ.சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குமாருக்கு மட்டும் தெரிந்த அவளுடைய கண்ணீர் (சிறுகதை)”

அதிகம் படித்தது