ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

குருட்டாட்டம்

இராமியா

Aug 3, 2019

siragu kuruttaattam1

பெரியார் பொதுவாழ்வில் நுழைந்தபோது, இந்நாட்டை ஆங்கிலேயர்கள் ஆட்சிசெய்து கொண்டு இருந்தார்கள். ஆனால் அவர்களை வழிநடத்தும் அதிகார பீடங்களில் பார்ப்பனர்களே ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தார்கள். ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டின் நலன்களுக்காக இந்தியமக்களைச் சுரண்ட வேண்டுமானால் பார்ப்பனர்களின் வழிகாட்டுதலிலும், ஒத்துழைப்பிலும்தான் செய்யமுடிந்தது. ஏனெனில் அதிகாரக்கல்வி முழுவதும் பார்ப்பனர்களின் வசமே இருந்தது. ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உழைப்புக்கல்வியையும், தொண்டுக்கல்வியையும் மட்டுமே பெறமுடிந்தது. பெறமுடிந்தது என்பதைவிட, பெற்றேதீர வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள்.

இந்நிலையில் கிறித்துவ சமயப்பரப்பாளர்கள் சாதிவேறுபாடு பாராமல் அனைத்து மக்களுக்கும், அனைத்து வகைக்கல்வியையும் அளித்தனர். அவர்களின்

அறிவுரைகளைக்கேட்டு ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்தியாவில் அதிகாரக்கல்வியும், அதிகார வேலைகளும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு மறுக்கப்படுவதை எதிர்த்து நடவடிக்கைகளை எடுக்க முயன்றனர். ஆனால் ஆட்சியாளர்களின் ஆணைகளை நடைமுறைப்படுத்தும் இடங்களில் எல்லாம் பார்ப்பனர்களே இருந்ததால் இம்முயற்சியில் முழுவெற்றி அடையமுடியவில்லை. இது இந்தியமக்களுக்கு ஆங்கில ஆட்சியாளர்களைவிட, பார்ப்பனர்கள் மிகவும் மோசமானவர்கள், ஆபத்தானவர்கள் என்பதைக்காட்டியது.

இந்நிலையில்தான் பெரியார் சூறாவளியைப்போல் சுழன்று, தமிழ்நாடு முழுக்கப் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார். பெரியாரின் பகுத்தறிவுப் பிரச்சாரம் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் உரிமைப் போராட்டங்களுக்கு ஒரு வலுவான கருத்தியல் (தத்துவ) அடித்தளத்தை அமைத்தது. ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார், காமராசர் போன்ற அரசியல் தலைவர்கள் ஒடுக்கப்பட்ட வகுப்புமக்களின் உரிமைகளுக்கான திட்டங்களைச் செயல்படுத்த, பெரியாரின் கருத்தியல் வலுவான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

siragu periyar1

பெரியாரின் மறைவுக்குப்பின், ஆனைமுத்து அய்யா பெரியாரின் கொள்கைகளை, இந்தியில் மொழிபெயர்த்து, தலைநகர் தில்லியிலும், வடமாநிலங்களிலும் பிரச்சாரம் செய்தார். அதன் பயனாக, பார்ப்பன, பனியாக்கள் மட்டுமே அரசியலில் தலைமை வகிக்க முடியும் என்ற நிலைமாறி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்புத் தலைவர்களும் அரசியலில் வலுப்பெறத் தொடங்கினர். ஆனைமுத்து அய்யா அவர்களுக்கு நிதி வசதி கிடையாது. அவர் பேருந்துகளிலும் தொடர்வண்டிகளில் இரண்டாம் வகுப்பிலுமே பயணம் செய்தார். மேலும் அவருக்குத் துணையாக ஆள் பலமும் இல்லை. இரண்டு அல்லது மூன்று தோழர்களின் துணையுடன் மட்டுமே வடமாநிலங்களுக்குச் சென்று அம்மக்களிடையே பெரியாரியத்தைப் பற்றிப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்.

மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது அவருடன் வாதாடி மண்டல் குழுவை அமைக்க வழி வகுத்தார். அதன்பின் மண்டலுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கி அக்குழுவின் அறிக்கை சிறப்பாக வெளிவர உதவினார். அதுமட்டும் அல்லாமல் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் உள்துறை அமைச்சராகவும், குடியரசுத் தலைவராகவும் இருந்த கியானி ஜெயில்சிங் அவர்களின் யோசனையின்படி செயல்பட்டு மண்டல் குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைப்பதற்காகப் போராடி வெற்றியும் பெற்றார்.

மண்டல்குழுவையும், அதன் அறிக்கையையும் இருட்டடிப்பு செய்வதே ஆதிக்கசாதிகளுக்கு நல்லது என்று நினைத்த ஊடகங்கள் அவ்வாறே இருட்டடிப்பு செய்தன. அத்துடன் சேர்ந்து ஆனை முத்துவும் இருட்டடிப்பு செய்யப்பட்டார். வி.பி.சிங் மண்டல் குழு அறிக்கையின் ஒரு சிறுபகுதியைச் செயல்படுத்த ஆணையிட்டபின் இனியும் மண்டல் குழுவை இருட்டடிப்பு செய்யமுடியாது என்றாகி விட்டது. இதனால் பார்ப்பனர்களின் வலுவான தத்துவார்த்த எதிரியான ஆனைமுத்துவும் வெளிச்சத்திற்கு வந்துவிடுவாரோ என்று அஞ்சிய துக்ளக் ஆசிரியர் சோ. தெளிவாக அவரது பெயரைச் சுட்டிக்காட்டி அந்த விதமான “தவறை” ஊடகங்கள் செய்துவிடக்கூடாது என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். இவ்வளவு இருட்டடிப்புக்கு உள்ளானாலும் அவர் சிறிதும் மனம் தளராமல் தன் பணியைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்.

இன்று காவிகள் ஆட்சியைக் கைப்பற்றியபின், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் உரிமைகளுக்கான கருத்தியலை முடக்கி வைப்பதிலும், அவாளின் ஆதிக்கத்திற்கான கருத்தியலை வலுப்படுத்துவதிலும் அளவு கடந்த முனைப்பைக் காட்டிவருகின்றனர். இதற்கு எதிராக ஒரு சரியான கருத்தியலை மக்களிடையே கொண்டுசெல்ல, பொதுவுடைமைக் கட்சிகளும், மற்ற பெரியாரியக் கட்சிகளும் முயலவில்லை. இன்றைய தேவை ஒடுக்கப்பட்ட / உழைக்கும் மக்களின் விடுதலைக்கான கருத்தியலை முறையாகக் கற்றுக்கொள்வதே நமக்கு வலிமைதரும் என்பதை உணர்ந்து உள்ள அவர் அதற்கான பயிற்சி வகுப்புகளை வடிவமைத்து நடத்தினார். வழக்கம்போல் நிதி வசதிஇன்மையும், ஆள் பலக்குறைவும் இவர் பாதையில் பெரும் இடர்களாக உள்ளன.

பெரியாரியத்தை மக்களிடையே கொண்டுசெல்ல ஆனைமுத்து அய்யா அளித்த / அளித்துக் கொண்டு இருக்கும் உழைப்பில் ஆயிரத்தில் ஒரு பங்கைப் பெரும் நிதிவசதியும், ஆள்பல வசதியும் படைத்த, தி.மு.க.வோ, அ.இ.அ.தி.மு.க.வோ அல்லது மற்ற பெரியாரியக் கட்சிகளோ அளித்து இருந்தால், பெரியாரியம் வட மாநிலங்களில் நன்கு வேர்விட்டு இருந்திருக்கும். இன்று காவிகள் தமிழ்நாட்டில் நுழைய முடியாமல் தவிப்பதுபோல வடமாநிலங்களிலும் கால்பாவவே முடியாமல் கருவிலேயே கரைந்து போய் இருப்பார்கள். அதுமட்டும் அல்ல. காங்கிரஸ் கட்சியிலும், பொதுவுடைமைக் கட்சிகளிலும் பார்ப்பனர்களின் ஆதிக்கப் பிடி தளர்ந்து போய் இருக்கும். நிதிவசதியும், ஆள்பல வசதியும் படைத்த “பெரியவர்கள்” பெரியாரியத்தை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு எந்த முயற்சியும் செய்யாததால் இன்று காவிகளின் கோரப் பிடியில் சிக்கி, தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் உறுதியான குரல் கொடுக்க முடியாமல் அழுந்தப்படுகிறார்கள். காவிகளுக்கு அடிமைச் சேவகம் செய்தால் அன்றி நிலைத்து இருக்கமுடியாது என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்

குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி

குருடும் குருடும் குழிவிழுமாறே

என்பது திருமூலரின் திருமந்திரம். பெரியார் மறைந்தபின் பெரியாரியத்தை முழுமையாகவும், சரியாகவும் புரிந்து கொண்டு குருட்டினை நீக்கும் குருவாக நின்றவர் / நிற்கின்றவர் ஆனைமுத்து அவர்கள். அவரை ஏற்றுக்கொள்ளாமல், குருட்டினை நீக்காக் குருக்களை ஏற்றுக்கொண்டு குருட்டாட்டம் ஆடியவர்கள் தாங்கள் குழியில் விழுந்தது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டையும்– தமிழ்நாட்டை என்ன இந்தியா முழுவதையும்– குழியில் விழவைத்து விட்டார்கள். இனியேனும் குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்வார்களா அந்தப் “பெரியவர்கள்”?


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குருட்டாட்டம்”

அதிகம் படித்தது