மார்ச் 28, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

குறிஞ்சி நிலத் தாவரங்கள்

முனைவர் ஆ.பாண்டி

May 4, 2019

siragu kurinji nilam1
கருவில் இருக்கும் குழந்தை நோயோடு மண்ணிற்கு வருகின்ற சூழலில் நமது வாழ்க்கை முறையுள்ளது. நம் ஆதிப்பண்பாட்டின் அழித்தொழிப்பினால், ஐம்பது வயதைக் கடந்து செல்வது இன்று அரிதாகிவிட்டது. கல்வியில் தொடங்கி உண்ணும் உணவு வரை வெள்ளையினப் பண்பாடே நம்மை ஆட்கொண்டுள்ளது. இந்தியக் கண்டத்தை ஐரோப்பியர்கள் தங்களுக்குரியதாகத் தகவமைத்துக் கொண்டதன் விளைவு சொந்த மண்ணில் சுகமற்று வாழ்ந்து வருகிறோம். உலகிற்கு நோய் நொடியின்றி நூறாண்டு காலம் வாழ்வதற்கான விதிகளைக் கற்றுக் கொடுத்த தமிழினம் சுகாதாரமற்ற விளிம்பிற்குச் சென்றுகொண்டிருக்கிற அவலநிலையின் வெளிப்பாடுதான் இயற்கையைப் புறந்தள்ளுதலின் அறியாமை. இரண்டாயிரம் ஆண்டுக்காலத் தொன்மையுடைய தமிழர்களின் சூழலியல் சார்ந்த வாழ்வியல் முறைகள் குறித்து சங்கத் திணைக்கவிதைகள் வழி அறியமுடிகின்றன. எனவேதான், இச்சங்க காலத்தை ‘இயற்கை நெறிக்காலம்’ என வரையறை செய்துள்ளனர். ஐவகை நிலப்பகுப்பும் நிலத்திற்கானச் சூழல் தகவமைவும், சூழல் சார்ந்த மாந்தர் வாழ்வியலும் சார்ந்த திணைமவியல் கோட்பாட்டுச் சூழல் கட்டமைப்பில்தான் தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். இந்நிலம் தவிர்த்து பிறதேசத்து செல்வாக்கினை தமிழர்கள் வாழவிரும்பாத காலம்தான் திணைமவியல்காலம்.

தமிழ் நிலத்தை வரையறை செய்துள்ள கருத்தைத் தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரம் “வடவேங்கடம் தென்குமரி ஆஇடைத் தமிழ் கூறும் நல் உலகத்து” வழி அறியலாகிறது. “ஓர் இனத்தின் வாழ்க்கைமுறையும் நம்பிக்கைகளும், குணநலன்களும், பண்பாட்டுக்கூறுகளும், அந்த இனம் சார்ந்திருக்கும் நிலத்தன்மை, தட்பவெட்பநிலை ஆகியவற்றின் பின்னணியில்தான் அமையும் என குரோஸ் ஹோட்ஜ் எனும் நிலவியல் அறிஞர் கூறுகிறார். தமிழர்களுக்கு இக்கருத்து பொருத்தமாக அமைந்துள்ளது. திணைமவியல் சூழலில் பயிர்விக்கப்பட்ட உணவுப் பயிர்கள், உழவுமுறைகள், பயிர்அறுவடை, பயிர்க்காவல் முறை ஆகியன குறித்த பதிவுகள் திணைக்கவிதைகளில் காணக்கிடைக்கின்றன. திணைக்கட்டமைப்பில் முதன்மையாக அமைந்த குறிஞ்சி நிலமே வேளாண்மையின் தோற்றுவாயாக இருந்திருக்க முடியும். நாகரிக வளர்ச்சியின் விளைவாக நீர் மேலாண்மை உருவாக்கத்தில் மருதம் உதயமாயிருக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு நிலவியல் சூழலும் மாந்தரின் தேவைக்கிணங்கவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தவகையில், குறிஞ்சி நிலமானது இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்கில், அரபிக்கடலைச் சார்ந்து அமைந்திருக்கும் பகுதி. இம்மலைப் பகுதியே இன்று ‘மேற்கு மலைத்தொடர்’ என்று அழைக்கப்படுகிறது. இம்மலை மராட்டிய மாநிலத்தில் தபதி ஆற்றங்கரையில் தொடங்கி, குஜராத், கோவா, கர்நாடாக, கேரளா இறுதியாகத் தமிழகத்தின் கன்னியாகுமரியில் முடிவடைகிறது. சுமார் 1600 கி.மீ நீளமும் 900 -2400 வரையிலான உயரமும் கொண்ட இம்மலை, இமயமலைக்கும் மூத்த மலையாக விளங்குகிறது. இப்பெருமலையைத் தமிழர்கள் ‘மலையும் மலைசார்ந்த’ குறிஞ்சி நிலமாக வரையறை செய்திருக்கிறார்கள். கிழக்குத் தொடர்ச்சி மலை கிழக்குக் கடற்கரையை ஒட்டியமைந்துள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைபோல் ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் பகுதி பகுதியாக அமைந்துள்ளது.

siragu kurinji nilam2

தமிழகத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளாக, கொல்லிமலை, பச்சைமலை, கல்வராயன்மலை, சவ்வாதுமலை, சேர்வராயன் மலை, சிறுமலை, கரந்தமலை ஆகியன உள்ளன. கிழக்குத் தொடர்ச்சி மலை நீலகிரியில் முடிவடைகிறது. இம்மலைநிலங்களும் குறிஞ்சி நிலமாகவே கருதப்படுகின்றன. கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த ஆட்சி செழுத்திய மலைப்பகுதிகள் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளாகும். மேற்குத் தொடர்ச்சி மலைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் தமிழகத்தின் பாதுகாப்பு அரண்களாக விளங்குவதைக் காணமுடிகிறது. கர்நாடகம் தொடங்கி, கன்னியாகுமரி வரையிலான மலைப் பகுதிகளையே தமிழர்கள் பயன்படுத்தியிருக்க முடியும். இம்மலைப்பரப்பில் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றாதாரங்களை பழனிமலை, தாண்டிக்குடி, பொருந்தல், கொடைக்கானல், பெருமாள்மலை, அடுக்கம், பன்றிமலை, அலைக்கல்லு, தட்டக்குடி  போன்ற பகுதிகளில் கண்டறியப்பட்ட அகழ்வாய்வுகளின் அறியமுடிகின்றன. சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்ற திணைப்பாடல்களில் பொருந்தல், கொடைக்கானல், தாண்டிக்குடி ஆகிய ஊர்களில் ஆட்சி செழுத்திய குறுநில மன்னர்கள் குறித்த பதிவுகளைப் பின்வருமாறு காணலாம். பெருந்தலைச் சாத்தனார் பாடிய புறநானூற்றுப் பாடல் 205 இல், கோடைப் பொருநன் என்று குறுநில மன்னன் குறித்து பதிவு இடம்பெற்றுள்ளது. சான்று:

“முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே:
விறற் சினம் தணிந்த விரை பரிப் புரவி
உறுவர் செல் சார்வு ஆவி, செறுவர்
தாள் உளம் தபுத்த வாள் மிகு தாளை
வெள் வீ வேலிக் கோடை பொருந!”.

கோடை என்னும் பெயர் கொண்ட குறிஞ்சி நில குறுநில மன்னன் மூவேந்தர்களுக்கு இணையாக வாழ்ந்திருப்பதை இக்கவிதை உணர்த்துகிறது. கோடை என்னும் பெயர் பிற்காலத்தில் கொடை என்பதாக மருவி இன்று கொடைக்கானல் என்று நிலைத்துவிட்டது. அந்தவகையில், கோடை என்ற குறிஞ்சி நில மன்னன் ஆண்ட மலைப்பகுதியே இன்றைய கொடைக்கானல் மலை. அகநானூற்றுப் பாடல் 13 இல் இக்கோடைக்குத் தலைவனாகத் தென்னவன் பாண்டியன் குறிப்பிடப்படுகின்றான். இப்பதிவு குறிஞ்சி நிலத்தின் குறுநில மன்னனாக விளங்கிய கோடையை வீழ்த்தி பாண்டியன் ஆட்சி செழுத்தியதன் வெளிப்பாடாகக் கருத இடமுள்ளது. மேலும், குறிஞ்சி நிலக் குறவர்கள் முருகனுக்குப் பூசை செய்து கொண்டு வந்த சந்தனத்தைப் பெற்றுள்ளான். பாண்டியன் என்பதிலிருந்து குறிஞ்சிக் குறுநிலவேந்தன் கோடை ஆட்சி செய்த மலைப்பிரதேசம் தென்னவன் பாண்டியனால் வெற்றி கொள்ளப்பட்டு திரை செலுத்தும் நிலமாகிப் போனதன் அடையாளமாகவும் இக்கவிதை விளங்குகிறது. சான்று,

“தன் கடற் பிறந்த முத்தின் ஆரமும்
முனை திறை கொடுக்கும் துப்பின், தன் மலைத்
தெறல் அரு மரபின் கடவுட் பேணி,
குறவர் தந்த சந்தின் ஆரமும்
வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும்
வள் வாய் அம்பின், கோடைப் பொருநன்”

இதுபோல், பழனிமலைக்கு அருகில் உள்ள தாண்டிக்குடியை ஆட்சி செய்த குறுநில வேந்தனைக் குறித்த பதிவினை புறநானூற்றுப்பாடல் 399 இல் அறியமுடிகிறது. ஐயூர்முடவனார் பாடிய இப்பாடல் தாண்டிக்குடியை “வான்தோய் உயர்சிமைத் தோன்றிக்கோவே” என்று குறிப்பிடுகிறது. பொருந்தில் இளஞ்சேரலிரும்பொறை குறித்த பதிவு பொருந்தல் எனும் மலைப்பகுதியை ஆண்ட சேரமன்னனைக் குறித்து இடம்பெற்றுள்ளது.  மேற்கு மலைப் பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்துள்ளதுபோல் கிழக்கு மலை நிலப்பரப்புகளிலும் கடையேழுவள்ளல்களான ஓரி, பழையன், தித்தன், அழிசி, மலையமான், பெரியன், ஆயண்டிரன், அன்னி, பாரி  எனும் குறுநில மன்னர்கள் வாழ்ந்து ஆட்சி செலுத்தியதற்கான சங்கத் திணைப்பாடல்கள் வழி அறியமுடிகின்றன. பறம்பு மலையை ஆட்சி செய்த குறுநில மன்னன் பாரியைக் குறித்து கபிலரின் பாடல் வரிகள் பறைசாற்றுகின்றன. “ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்”. இதுபோல், நவிரம் எனும் மலைப்பகுதியை  ஆய்அண்டிரன் என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்தததை அகநானூற்றுப்பாடல் 198) எடுத்துரைக்கிறது. சான்று:

 “தெனாஅது, ஆஅய் நன்னாட் டணங்குடைச் சிலம்பிற்
கவிரம் பெயரிய உருகெழு கவாஅன்”
இதுபோல், ஒய்மா நாட்டு நல்லியக்கோடனின் சிறப்புகளைக் குறித்து சிறுபாணாற்றுப் படையில் காணமுடிவதோடு கடையேழு வள்ளல்களுக்குப் பின்னால் நல்லியக்கோடன் வழங்கும் கொடைச் சிறப்பினையும் அறியமுடிவதில் இருந்து கிழக்குத் தொடர்ச்சி மலையாண்ட குறுஞ்சி நில வேளிர்களும், மேற்கு மலைத் தொடர்ச்சி குறுஞ்சி நில பொருப்பன்களும் சமவெளிப்பகுதியில் வாழ்ந்த மூவேந்தர்களால் அழித்தொழிக்கப்பட்ட செய்தியை மேற்குறித்த சான்றுகள் வழி அறியமுடிகின்றன. இன்று, மேற்கு மலைத் தொடர்ச்சி நிலப்பரப்பில் அகழ்வாய்வு நிகழ்த்திய கே.ராஜன், மற்றும் அதியமான் குழு சங்க காலத் தமிழர்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் பொருட்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கே.ராஜன் எழுதிய என்ற நூல் இரும்புக் காலத்திற்கு முன்னதான தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும், வேளாண்மைச் செயல்பாடுகளையும், சமவெளிப்பகுதிகளில் வாழ்ந்த மக்களோடு கொண்டிருந்த வாணிப முறைகளையும், கிரேக்கரோடு கொண்டிருந்த வாணிபத்தையும் எடுத்துரைக்கிறது.

siragu tamiliyai4.jpg

பொருந்தல் பகுதியில் இறந்தவர் தாழிக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு படி நெல் கி.மு.490 ஆண்டினைச் சார்ததாகவும், இயற்கையில் விளையாமல், பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல் என்பதை அமெரிக்க ஆய்வியல் கூடம் வெளிப்படுத்தியுள்ளது. தமிழர்கள் பன்னெடுங்காலமாக வேளாண்மை உற்பத்தியில் ஈடுபட்டிருதனர் என்பதற்கு நல்லதொரு சான்றாக உள்ளது. மேலும், புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண்ணாலான புரிமனையில் தமிழ் பிராமியில் எழுதப்பட்ட ‘வயிர’ என்ற சொல் வயிரம் உறுதி என்ற அர்த்தம் தருவதோடு, தென்னிந்தியப் பகுதியில் அமைந்துள்ள நாவலந்தீவில் வைரங்கள் வெட்டிஎடுக்கப்பட்ட வரலாற்றினையும் இது உணர்த்துகிறது. இவை, அசோகன் காலத்திற்கு முன்னதாகவே தமிழர்கள் தமிழ் பிராமி எழுத்து வடிவங்களையும், நாகரிக வாழ்வையும் மேற்கொண்டதற்கான வரலாற்றுச் சான்றாக விளங்குவதாக அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் பிற்காலத்திலும் குறிஞ்சி நிலத்தை ஆட்சி செய்தவர்கள் பற்றிய குறிப்புகளைக் கல்வெட்டில் காணமுடிகிறது. உதாரணமாக, 12, 13, 16 நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுக்களில் சமநிலத்தில் வாழ்ந்த மக்களைக் குடியேற்றிய மன்னர்களின் செயல்பாடுகளையும், அவர்களின் அதிகாரங்களையும் அறியமுடிகின்றன.

குலசேகரப் பாண்டியன் கல்வெட்டில் தான்றிக்குடி என்று இடம்பெற்றுள்ளது. தேரையூர் என்ற ஊரில் 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு  ஒன்றை தொல்லியல் அறிஞர் வெ.வேதாச்சலம்  கண்டுபிடித்துள்ளார். வண்ணான்குடி என்ற ஊரில் தங்கிய மன்னன் இவ்வூருக்கு நிலக்கொடை வழங்கியுள்ளான். களிங்கராயர், வேணாடு உடையார், தொண்டைமானார், செந்தமிழ்ப்பிள்ளை ஆகியோர் இதில் கையெழுத்து இட்டுள்ளனர். இதுபோல், தொல்லியலர் அறிஞர். சி.சாந்தலிங்கம் போலூர் கிராமத்து விநாயகர் கோயிலில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டைக் கண்டறிந்துள்ளார். கல்வெட்டின் இறுதியில் பாம்பு, யானை, காளை ஆகியவற்றின் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாகப் படைக்கப்பட்டுள்ளன. மன்னனின் தூண்டுதலால் புதிய குடியிருப்பு ஒன்று இப்பகுதியில் நிறுவப்பட்டதை இக்கல்வெட்டால் அறியமுடிகிறது. மன்னனுக்கு நன்றியுடன் நடந்துகொள்வதாக இவ்வூரார் உறுதிமொழி அளித்துள்ளனர். மேலும், அடர்ந்த காட்டுப்பகுதியில் ஏற்கனவே வாழ்ந்த குடியிருப்பாளர்களுக்கும் புதிதாக அங்குக் குடியேறிவர்களுக்கும் இடையிலான முரண்பாட்டை மன்னன் தீர்த்து வைத்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. அடர்ந்த காட்டுப்  பகுதியில் புதிய குடியிருப்பு உருவாக்குவதில் மன்னன் காட்டிய ஆர்வத்தை அறியமுடிகிறது.

கொடைக்கானலில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ள கீழாவரையில் புதிய குடியிருப்பு ஒன்றை மன்னன் உருவாக்கியதைக் குறிப்பிடும் கல்வெட்டில் ‘மன்னனுக்கு எதிராக நடந்தால் அவன் தம்மை வெட்டிப்போடலாம். என்றும், மன்னனுக்கு எதிராக நடப்போரை தாமே பிடித்து வெட்டுவதாகவும் புதியதாகக் குடியேறியவர்கள் உறுதியளிதுள்ளனர்” இவற்றிலிருந்து குறிஞ்சி நிலம் ஆதி முதல் ஐரோப்பியர் வரை வேட்டையாடப்பட்ட நிலமாகவே இருந்துள்ளதைத் தெள்ளத் தெளிவாக அறியமுடிகிறது. இன்றும் செம்மாந்து நிற்கும் இக்குறிஞ்சி நிலம் தன்னகத்தே பல்வேறு சிறப்புகளையும் கொண்டு திகழ்கிறது. அதாவது, உலகின் வளம்மிகுந்த 32 இடங்களில் மேற்குமலைத் தொடரும் ஒன்றாகும். மேலும் பல்லுயிர்களங்கள் 8 இல் ஒன்றாகவும் உள்ளது. இவற்றில் 50 அணைக்கட்டுகளும், 126 முக்கிய ஆறுகளும், 29 நீர்வீழ்ச்சிகளும் உள்ளன. இவைமட்டுமின்றி, முள்புதர்கள், காடுகள், புல்வெளிப்பிரதேசம், சோலைக்காடுகள் என வியாபித்து தென்னிந்தியாவின் அரணாக விளங்கும் இதன் நிலப்பரப்பில், 7,402 பூக்கும் தாவரங்கள், 1814 பூக்காத தாவரங்கள், மற்றும் மூலிகைச் செடிகள், 10 வகையான காட்டுத் தேனீக்கள், 6,000 வகை பூச்சியினங்கள், 508 பறவையினங்கள், 179 நீர், நில வாழ்விகள், 14 தேசியப் பூங்காக்கள், 44 வன உயிரினச் சரணாலயங்கள், 11 புலிகள் காப்பகம், இந்தியாவில் யானைகள் அதிகமாக வாழும் மலைப்பகுதி, 35 சிகரங்கள் கொண்ட இம்மலைப் பிரதேசத்தினை  2012 ஆம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் ‘பாரம்பரியக் களம்’ என்று பெருமைப்படுத்தியுள்ளது.

சங்க காலம் தொடங்கி இன்றைய நூற்றாண்டு வரை குறிஞ்சி நிலத்தின் மீது நவீனத் தாக்குதல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழர்களின் அரணாக விளங்கம் இம்மாபெரும் மலைப்பகுதி அழிந்தால் தமிழர்களின் குறைந்தபட்ச சுகாதாரமான வாழ்க்கை முறை அழியும், இந்தியாவின் தலைநகரான டெல்லியைப் போல் அனைத்து மாசுபாடுகளும் ஏற்படும் என்பதில் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

இத்துணைச் சிறப்பு வாய்ந்த குறிஞ்சி நிலத்தில்தான் தமிழன் வேளாண்மை செய்து பயிர்களை விளைவித்திருக்கின்றான். ஆனால், இன்று பயிரிடப்படவில்லை. அவை பயிரிடப்பட்டதற்கு இலக்கியங்கள் மட்டும் ஆதாரமாக உள்ளன. நவீன உலகியல் சூழலில், புதிய பொருளாதாரக் கொள்கையில், உலகமயமாதலின் பின்னணியில் வாழ்கின்ற நமக்கு ஐரோப்பியர்கள் விட்டுச் சென்ற வேளாண்மையைக் கட்டிக்காப்பதில் மெனக்கெடுகிறோமோ தவிர தமிழர்களின் பாரம்பரிய பயிர்களான தினை, சாமை, வரகு, பனிவரகு, கேழ்வரகு, குதிரைவாலி, கம்பு, சோளம், ஐவனநெல் போன்ற பயிர்களை வேளாண்மை செய்வதில் முயற்சி மேற்கொள்வதில்லை. இவைகளை சிறுதானியங்கள் என்று சொல்லி அதன் தரத்தைக் கூட சுருக்கிக் குறிப்பிடுகிற அவலநிலையைக் காணமுடிகிறது. இவை சிறுதானியாங்கள் அல்ல, தமிழர்கள் பயன்படுத்திய பெருந்தானியங்களே. அந்த வகையில் சங்ககாலத்தில் தமிழர்கள் குறிஞ்சி நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள், உழவுமுறைகள், நீர்ப்பாசனமுறைகள், போன்ற குறிப்புகளைப் பல்வேறு சங்;கப் பிரதிகளில் அறியமுடிகிறது. அவை ஒவ்வொன்றாகப் பின்வருமாறு எடுத்துரைக்கலாம்.

உலகில் எங்கும் காணப்படாத இருநூற்றி நாற்பத்தெட்டு அரியவகைத் தாவரங்கள்  குறிஞ்சி நிலத்தில் மட்டும் உள்ளன. அத்தகையச் சிறப்புடைய குறிஞ்சி நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்களில் முதன்மையாக விளங்குவது, தினையாகும். ஆங்கிலத்தில்; ‘ஃபாக்ஸ்டெயில் மில்லட்’ என்றழைக்கப்படும்., இதன் தாவரவியல் பெயர் ‘எலுசின் கொரகான’ என்பதாகும். தினைக்கு இறடி, ஏனல், இருவி போன்ற பிற பெயர்களும் உள்ளன. குறிஞ்சி நிலம் குறித்து அதிகமான பாடல்கள் பாடியுள்ள கபிலர் தினைப்பயிர் குறித்து அதிகமான பாடல்கள் பாடியுள்ளார். சங்க கால மக்களால் தினை உணவில் முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது. சங்கப் பாக்களில் தினை 73 இடங்களில் பதிவாகியுள்ளது. தினையும், தினைப்பயிரும் தலைவிக்கான குறியீடுகளாக வந்துள்ளன. எப்பொழுதும் குளிர்காற்றும், மழைப்பொழிவும் சதம்பல் நிலமாக விளங்கும் குறிஞ்சி நிலத்தில் வேளாண்மை செய்வதன் பொருட்டு குறிப்பிட்ட காடுகள் அழிக்கப்பட்டு தினைப் பயிரிடப்பட்டன. வேளாண்மையில் ஏர் பயன்படுத்தப்படவில்லை. வேளாண்மைக்கு என்று உருவாக்கப்பட்ட பகுதியைப் ‘புரிய புனம்’ என்றழைத்தனர்.  சான்று(குறுந்:5) குறிஞ்சி நிலத்தில் வன்புலம் என்பது அடர்ந்த சோலையைக் குறிக்கும். அடர்ந்த இச்சோலைகள் அழிக்கப்பட்டு குறிஞ்சி நில மக்கள் வாழும் நாடாக மாற்றியதற்குச் சான்றுகளாக, “வன்புலக் காட்டுநாட்டதுவே”(நற்:59), “வன்புல நாடன் வயமான் பிட்டன்”(புறம்:172) ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேற்குறித்த கருத்துக்களுக்குச் சான்றாகப்  பிரதிகள் பின்வருமாறு இடம்பெறுகின்றன.

உழப்படாத வேளாண்மை

siragu kurinji nilam3

உலகில் கலப்பை பயன்படுத்தப்படாமல் வேளாண்மை செய்த இனம் தமிழினமாகத்தான் இருக்க முடியும் என்பதை புறநானூற்றுப் பாடல் (163) வழி அறியமுடிகிறது. சான்றாக,
“வாழ்தல் வேண்டிப்
பொய்கூறேன் மெய்கூறுவல்
ஓடாப் பூட்கை யுரவோர் மருக
உயர்சிமைய வுழாஅ நாஞ்சிற் பொருந”

உழவு செய்யாமல் தினை விதைக்கப்பட்டது. இப்பாடல் வேளாண்மையின் தொடக்கமாகவும் கருத இடமுள்ளது. அதேபோது, கானவர்கள் மரங்களை வெட்டிக் களைகளை நீக்கி, விளைநிலமாக ஆக்குவர். அந்நிலத்தில் கருந்தினை விதைக்கப் பெறும், அதன் கதிர்களைக் குறமகளிர் காவல் புரிந்த செய்தியினைக் குறுந்தொகைப் பாடல் 214 வழியாக அறியமுடிகிறது. சான்றாக.

“மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
பிறங்கு குரல் இறடி காக்கும், புறம் தாழ்
அம் சில் ஓதி, அசை இயல் கொடிச்சி
திருந்து இழை அல்குற்குப் பெருந்தழை உதவி”

இதுபோல்,  குறமகளிர் தினைப்புனம் காவல் காத்து நின்ற செயல்பாட்டினைக் குறித்து, நற்றிணைப் பாடல்: 393. புறநானூற்றுப்பாடல் :28-13. மற்றும் அகநானூற்றுப்பாடல் :102 இல் இடம்பெற்றுள்ளன. குறிஞ்சி நிலத்தில் கிளிகடியும் குறமகளின் இன்குரலை “இசையின் இசையா இன்பாணித்தே, கிளியவள் விளியென எழல் ஒல்லாவே” என்ற குறுந்தொகை(241) வரிகள் குறமகளின் குரலின் இனிமையைப் புலப்படுத்துவதாக அமைந்துள்ளன. மேலும், கானவர் காட்டினை அழித்து வேளாண்மை செய்தது குறித்து, கலித்தொகை:பாடல் எண் 108. குறுந்தொகை: 198,59,312. மலைபடுகடாம் :169, 107 .அகநானூறு: 126, 302, 209, நற்றிணை: 121, 206. ஐங்குநுறூறு:298, ஆகிய பாடல்கள் வழியாக அறியமுடிகின்றன.

உழவு வேளாண்மை:

குறவன் தனது கொல்லையில் உழுது விதைத்த தினை மகசூழல் அதிகம் கண்டதை, நற்றிணைப்பாடல் (209) வெளிப்படுத்துகிறது. சான்றாக,

“மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
தளி பதம் பெற்ற கான்உழு குறவர்
சில வித்து அகல இட்டென, பல விளைந்து
இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்”

இப்பதிவு வேளாண்மையில், ஏரின் பயன்பாட்டின் வெளிப்பாடாகக் கொள்ள இடமுள்ளது. தினைகள் வெயிலில் காயவைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட செய்தியை புறநானூற்றுப் பாடல் 333 இல் அறியலாகிறது. வேளாண்மை செய்தற்கு நீர் மிகவும் அவசியம். நீரின் இன்றியமையாமையைக் குறித்து, நற்றிணைப்பாடல் 1 இல் “நீர் இன்று அமையா உலகம் போல” என்ற கருத்து குறிப்பிடத்தக்கது. குறிஞ்சி நிலமக்கள் வேளாண்மை செய்தற்பொருட்டு மழைவேண்டி கடவுளிடம் வேண்டுகிற காட்சிகளும் பதிவாகியுள்ளன. கபிலர் இயற்றிய ஐங்குறுநூற்றுப்பாடல் 251 இல் குன்றக் குறவரர்கள் மழைவேண்டும் காட்சிப் பதிவாக,

“குன்றக் குறவன் ஆர்ப்பின்
எழிலி நுண்பல் ஆழி துளி பொழியும்
நாட நெடுவரைப் படப்பை நும் ஊர்க
கடுவரல் அருவி காணிணும் அழுமே”
என்ற வரிகள் அமைந்துள்ளன. இந்தவகையில், தினைப்பயிரிடுதல் முறை குறிஞ்சி நிலத்தில் பெரும்பான்மையாகப் வேளாண்மை செய்யப்பட்டதை அறியலாம். இன்றைய நவீன வேளாண்மையில் குறிப்பாக மேற்குமலைத் தொடராகிய குறிஞ்சி நிலத்தில் இன்று பயிரிடப்படவில்லை. அன்றாட உணவில் தினை சேர்க்கப்பட்டால் உடல் ஆரோக்கியம் பெருவதற்கு அவற்றில்  புரதம், வைட்டமின் பி, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து, இரும்புச் சத்து, நார்ச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ளன. மேலும், தினையை உணவில் பயன்படுத்துவதன் மூலம் குடல்புண், ரத்தசோகை, ஆகிய நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளமுடியும்.

மலைநெல் அல்லது ஐவனநெல்

siragu kurinji nilam4

குறிஞ்சி நிலத்தின் நீராதாரமாக விளங்குவது சுனைநீரும், அருவியும் ஆகும். இவ்விரு நீராதாரங்களைக் குறித்து சங்கப்பனுவல்களில் காணமுடிகின்றன. அகநானூற்றில் களிற்றுயானை நிரையில் சுனைகள் பற்றிய குறிப்பினை எட்டு இடங்களில் காணமுடிகின்றன. இதுபோக, கலித்தொகைப்பாடல் எண் 55, மற்றும் புறநானூற்றுப் பாடல் 109,  ஆகியவற்றிலும் சுனைகள்  பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சுனைநீரைப் பயன்படுத்தி மலைநெல்லை குறவர்கள் விளைவித்த செய்தியினைக்; காணமுடிகின்றன. குறிஞ்சி நிலத்தில் ஐவனம் என்னும் மலை நெல்லும், மூங்கில் அரிசியும் விளைவிக்கப்பட்டன. தினைக்கு அடுத்தபடியாக இவ்விரு நெல்வகைகளே குறிஞ்சி நில மக்களின் முக்கிய உணவுப் பொருளாக இடம்பெற்றுள்ளன.

மருதநிலத்தில் பல்வகையான நெல்வகைகள் வேளாண்மை செய்யப்பட்டதற்குத் தமிழர்களின் நாகரிகம் முக்கிய வினையாற்றியுள்ளது. மேலும், நெல் விளைவதற்கு தண்ணீர் அதிகம் தேவையென்பதால், ஆற்றங்கரையில் தோன்றிய மருதநிலத்தில் நெல்வகைகள் பல்கிப்பெருகுவதற்கு ஏற்றதொரு களமாகவும் அமைந்தது எனலாம். (பழனிக்கு அருகில் உள்ள பொருந்தில் என்ற இடத்தில் கண்டறியப்பட்ட நெல் கி.மு 490 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்ற மேற்குறித்தக் கருத்தும் இவ்விடம் எண்ணத்தக்கது.) அருவிநீரைப் பயன்படுத்தி வேளாண்மை செய்தது குறித்து ஆய்விற்குரியது, ஆனால், அருவி குறித்த பதிவுகள் சங்கப் பனுவல்களில் இடம்பெற்றுள்ளன. அகநானூற்றுப் பாடல் 202 இல், “வயங்குவெள் அருவிய குன்றத்துக் கவாஅன்” என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. நெல்லைக் குறிக்க ‘நெல், ஐவன், தோரை, அரி போன்ற சொற்கள் சங்கப் பனுல்களில் பயின்று வந்துள்ளன. சான்றாக, ‘கழைவளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து’ என்ற வரிகள் மலைபடுகடாத்தில் 188 இடம்பெற்றுள்ளது போல், மதுரைக்காஞ்சியில் (288) ‘ஐவன வெண்ணெலொடு அரில் கொண்டிநீடி’ என்ற தொடர் அமைந்துள்ளது.

அரி என்ற சொல் பிற்காலத்தில் அரிசி என்று மருவியிருக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக புறநானூற்றுப் பாடல் 24 இல் ‘அரி’ என்ற சொல்  பதிவாகியுள்ளது. ‘ஒரைசா சாட்டைவம் இண்டிகா’ என்பது இந்திய நெல்வகையைக் குறிக்கும் தாவரவியல் பெயராகும். பொருந்தில் கிடைத்த நெல்வகையும் இந்திய நெல்வகையைச் சார்ந்தது. அரிசி என்பது ஒரு புல்வகையைச் சார்ந்தது. இது தென்கிழக்காசியாவினைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும், இந்திய நெல்வகையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நன்செய் நிலத்தில் விளையும் நெல்லை வெண்ணெல் என்றும், புன்செய் நிலத்தில் வானம் பார்த்த பயிராக விளைந்த நெல் ஐவன வெண்ணெல் என்றும் மேற்குறிப்பிட்ட பாடல்கள் வழி அறியமுடிகிறது. குறிஞ்சி நிலத்தில் மூங்கில் நெல் விளைவிக்கப்பட்டதை கலித்தொகை 41 ஆம் பாடல் பதிவு செய்துள்ளது. “ஆடுகழை நெல்லை அரையுரலுட் பெய்திருவாம்”. என்பதாகும். வெண்மையான நெல் அரிசிச் சோறுடன் ஆட்டிறைச்சியும் நெய்யும் கலந்த உணவினைக் குன்றக் குறவர்கள் தருவதாக நற்றிணைப்பாடல் (83) ஒன்றில் “மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்” என்ற குறிப்பு உள்ளதை அறியமுடிகிறது. மேலும், குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்த கானகர் எனப்பட்ட வேடுவர் வீட்டில் இறைச்சி வகைகளோடு புளி சேர்த்து மூங்கில் அரிசிச் சோறு படைக்கப்பட்டதை கூத்தராற்றுப் படை வரிகள் வெளிப்படுத்துகின்றன. சான்றாக,

“வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை
முழவுமாத் தொலைச்சியபைந்நிணப் பிளவை
பிணவுநாய் முடுக்கிய தடியொடுவிரைஇ
வெண்புடைக் கொண்ட துய்தலைப் பழனின்
இன்புளிக் கலந்து மாமோ ராகக்
கழைவளர் நெல்லின் அரியுலை ஊழ்த்து”

siragu kurinji nilam5

சிறுதானிய உணவு வகைகளையும் தேவைக்கேற்ப அரிசிச் சோறையும் உண்டு வந்த தமிழர்களின் உணவுப் பழக்க முறையில் இன்று அரிசிச் சோறுதான் தமிழர்களின் முதன்மையான உணவாக மாறியுள்ளது. தமிழர்கள் விளைவித்த அரிசி சுகாதாரமானது, பெரும்பாலும் பல வண்ணங்களில் வெளிப்பட்டிருக்கும் தன்மையுடைத்து. தெற்காசியாவில் இருந்து, ஐரோப்பியர்கள் வழி வந்த புதிய ரக அரிசியினால், வயிற்றுப் பசியைப் போக்குமே தவிர நலமான வாழ்விற்கு உகந்தது அல்ல என்பதை மருத்துவ அறிவியல் கண்டறிந்துள்ளது. குறிப்பாக பெருநோயாகக் கருதப்படும் நீரிழிவு நோய் வருவதற்கு அரிசிச் சோறுதான் முதன்மைக் காரணியாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். குறிஞ்சி நிலத்தில் இயற்கையோடு வாழ்ந்திருந்த தமிழினம் அந்நிலத்தில் இருந்த அனைத்தையும் பயன்படுத்தி நல்வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

தாவரங்களில் இருந்து, காய் கனி, மருத்துவப் பொருட்கள் என ஏராளமானவற்றை அன்றாட வாழ்வில் பயன்படுத்தினர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் குறிஞ்சி நிலத்தில் இருக்கும் மருத்துவத் தாவரங்கள் பற்றிய அறிவின்மையோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஐரோப்பியர்கள் தங்களின் வசதிக்காக குறிஞ்சி நிலம் எங்கும் தேயிலைத் தோட்டங்களையும், காப்பித் தோட்டங்களையும் அமைத்துக் கொண்டதோடு, அவர்களது கலாச்சார உணவுப் பயிர்களான, கேரட், முள்ளங்கி, டர்னிப், முட்டைக்கோஷ், உருளைக்கிழங்கு ப்ராக்கோலி, காலிப்ப்ளவர், போன்ற உணவுப் பயிர்களையும், ஆரஞ்சு, பிளம்ஸ், பிட்சீஸ், பட்டர்பபுருட், கனிவகைகளும் யூகலிப்டஸ், சின்கோன போன்ற மரவகைகளையும் நட்டுவைத்து குறிஞ்சி நிலத்தை அவர்களுக்குரியதாக மாற்றிவிட்டனர். தமிழர்கள் தங்களின் உணவுப் பயிர்களையும் மரவகைகளையும், உணவு முறைகளையும் மறந்து ஐரோப்பியர்கள் பயிரிட்ட வேளாண்மையை நமக்குரியதாக எண்ணிக் கொண்டு மேற்குறிப்பிட்ட ஐரோப்பிய உணவுப் பயிர்வகைகளைக் குறிஞ்சி நிலமெங்கும் பயிர்செய்து வருகின்றோம். தமிழர்களின் பாரம்பரிய உணவுப் பயிர்களை அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை.

மேலும் தமிழர்களின் உணவுப் பயிர்களான, தினை, வரகு, சாமை, குதிரைவாலி, சோளம், பனிவரகு, மலைநெல் ஆகியன இயற்கையாக விளையக்கூடியவை. அவற்றிற்கு எந்தவிதமான பூச்சிக் கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை: ஏனெனில் இவ்வகைப் பயிர்கள் இம்மண்ணிற்கும், தட்பவெடப் சூழ்நிலைக்கும் ஏற்றவைகள். மேலும் நமது உணவுப் பயிர்களுக்கு காய், கனி என்ற பெயர் கொண்டு முடியும், காலத்திற்கு ஏற்ற வகையில்தான் நம் உணவுப் பயிர்களைப் பயிர் செய்யமுயும். இதுவே தமிழ் உணவுப் பயிர்களின் சிறப்பாகும்.  ஆனால், ஐரோப்பிய உணவுப் பயிர்கள் மேற்கத்திய மண்ணிற்கு மட்டும் உகந்தவைகள். மென்மையானவைகள், எந்தக் காலத்திலும் வேளாண்மை செய்யலாம். தமிழர்களின் மருதம், முல்லை நிலங்களில்  பயிரிடப்பட்ட பயிர்கள் பின்வருமாறு.

குதிரைவாலி

குதரைவாலி நார்ச்சத்து, மாவு, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்றவை நிறைந்து ஆண்டி ஆக்சிடன்ட் ஆகவும் வேலை செய்கிறது. கோதுமையைவிட ஆறுமடங்கு அதிகளவு நார்ச்சத்து கொண்ட குதிரைவாலியின் சிறப்பு நீரிழிவு நோய் வரவிடாமல் தடுப்பதும் குறைப்பதும் ஆகும்.

வரகு

வரகுப் பயிர் முல்லைநிலத்தில் பயிரிடப்பட்டதற்கு சான்றாக நற்றிணைப்பாடல் நூற்றி இருபத்தொன்றாவது பாடல் அமைந்துள்ளது. வரகு சிறுதானியங்களில் முக்கியமானதாகும். இவற்றில், மாவுச்சத்து மிகவும் குறைவாக இருப்பதால், விரைவில் செறிமானம் அடையக்கூடியதாகும். உடலுக்குச் சக்தியைக் கொடுக்கக்கூடியதாகவும் உள்ளது. மேலும், புரதச்சத்து, தாது உப்புகளைக் கொண்டிருப்பதால், மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய்ப் பிரச்சனையில் இருந்து விடுபடாலம். இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு, குறைக்கவும் செய்கிறது. மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாகவும் பய்னபடுகிறது.

சாமை

நெல்லரிசியைக் காட்டிலும் ஏழுமடங்கு நார்ச்சத்து கொண்ட உணவுப் பயிர் சாமையாகும். இரத்தசோகை, நீரிழிவு நோய் கட்டுப்பாடு, நோய்களுக்கெல்லாம் மூலமாக அமைந்திருக்கும் மலச்சிக்கல், வயிற்றுக்கோளாறு, போன்ற பல்வேறு பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் சாமையை இளம்பெண்கள் அதிகமாக எடுத்துக் கொண்டால் குழந்தைப்பேறு, கற்பபையின் வலிமை அதிகரித்தல் போன்றவைகளைப் பெறலாம். மேலும், மிகுதியான தாதுப் பொருட்களைப் பெற்றுள்ள சாமையை உணவில் சேர்க்கின்றபோது, உயிரணுக்களின் எண்ணிக்கை உயர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சோளம்

சோளம் பலவகைப்படும். புரதம், கொழுப்பு, கால்சியம், இரும்பு, பி.கரோட்டின். 47 மி.கி. தயமின், ரிபோப்ளோவின், நியாசின் போன்ற தாதுப்பொருட்கள் அடங்கியுள்ள சோளமானது, நமது உணவில் பயன்படுத்தப்பட்டால், இரத்தசோகை, சிறுநீரை அதிகப்படுத்தல், கண்குறைபாடு ஆகியன நீங்கும்.

பனிவரகு

பனிவரகு என்பது வரகின் மற்றொரு வகையாகும். இவற்றில், கார்ப்போஹைட்ரேட், நார்., கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பி.காம்ளக்ஸ், நியாசின், கோலின், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம், குரோமியம், சல்பர் குளோரைடு போன்ற வேதிப்பொருள் தாதுக்கள் அடங்கியுள்ளன. இவை உணவாகப் பயன்படுத்தும் போது, நரம்பு மண்டலம் பாதுகாக்கப்படுவதோடு சுறுசுறுப்பு அடையும். உடலின் தோல் மினுமினுப்பைப் பெறுவதோடு எலும்பு அடர்த்தி பெறும். இதயம் பலமாகும், நீரிழிவு கட்டுப்படுத்தப்படும், மரபணு குறைபாடு நீக்கப்படும். அலர்ஜி கட்டுப்படுத்துவதோடு நோய் எதிர்ப்பாற்றலைத் தரும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் பெரியோர்களின் ஞாபக மறதிக்கும் சிறந்ததொரு உணவாகும். தமிழர்கள் உணவையே மருந்தாக உட்கொண்டதற்குச் சான்றாக மேற்குறிப்பிட்ட தமிழினப் பயிர்கள் அடையாளமாக உள்ளன. இப்பயிர் வகை உணவுகளை நாம் மீண்டும் பயிரிட்டு தமிழர்களின் உணவுமுறையே சாலச்சிறந்து என்பதை உலகறியச் செய்யவேண்டும்.  இதனைத்தான் வள்ளுவப் பெருந்தகை மருந்து எனும் அதிகாரத்தில் உணவையே மருந்தாகக் கொண்டு வாழ்ந்த தமிழனின் அறிவினைப் பதிவு செய்கின்றார்.

“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்”. (குறள் -942).
மேலும், நமது சூழலியல் சார்ந்த உணவுப்பொருட்களைத் தவிர்த்து பிறதேசத்து உணவுப் பொருட்களை மிகுதியாக உட்கொண்டால் உயிருக்கு ஆபத்து உண்டாகும் என்பதை,
“மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு”.(குறள்:945)
என்று குறிப்பிடுகிறது. இக்குறள் குறிஞ்சி நிலப் பயிர்கள் அழித்தொழிக்கப்பட்டு, இன்று பயிரிடப்படும் ஐரோப்பிய நிலப் பயிர்களின் பக்கவிளைவிற்குச் சரியாகப் பொருந்தும். கி.பி.13 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் நுழைந்த கேரட்டின் பிறப்பிடம் துருக்கியாகும். கேரட் பல நிறங்களில் இன்று மரபணு சோதனையில் மாற்றம் பெற்றுள்ளது. மலைகளின் இளவரசியாக விளங்கும் கொடைக்கானல், நீலகிரி, குன்னூர் போன்ற குறிஞ்சி நிலப்பகுதிகளில் கேரட் வேளாண்மை செய்யப்படுகிறது.

உருளைக் கிழங்கு

மாவுப் பொருளாக விளங்கும் உருளைக் கிழங்கின் பிறப்பிடம் ஸ்பெயின் நாடாகும். அமெரிக்க ஆப்பிரிக்க நாடுகள் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த உருளைக் கிழங்கு வடஇந்தியர்களின் முக்கிய உணவுப் பொருளாக மாறியுள்ளது. குறிஞ்சி நிலப்பகுதியான, கொடைக்கானல், தாண்டிக்குடி, பெருமாள்மலை, கிளாவரை, பூம்பாறை ஊட்டி, குன்னூர் போன்ற பகுதிகளில் அதிமான அளவிற்கு விளைவிக்கப்படுகிறது. இதனை அதிகமாக உட்கொண்டால், வாயு தொந்தரவு ஏற்படுவதோடு, தலைவலி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, தாகம், சோர்வின்மை, ஆகிய உபாதைகள் தோன்றும். உருளைக் கிழங்கிற்குப் பதிலாக குறிஞ்சி நிலத்தில் விளைகின்ற கிழங்கு வகைகளை உட்கொள்ளலாம். குறிப்பாக மரவள்ளிக்கிழங்கு, சேம்பைக்கிழங்கு, கருணைக் கிழங்கு ஆகியவை உடல் சூட்டையும், மலச்சிக்கலையும் தீர்க்கக் கூடியனவாகும்.

முட்டைக்கோஸ்

ஐரோப்பியத்தைத் தாயகமாகக் கொண்ட முட்டைக்கோஸ் ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாகவே ஐரோப்பிய நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. முட்டைக்கோஸ் குறிஞ்சி நிலம் தாண்டி இன்று மருதநிலங்களில் பயிரிடப்படுகின்ற அவலநிலையைக் காணமுடிகிறது. முட்டைக் கோஸ் அதிகமாகவும் தொடர்ச்சியாகவும் உட்கொண்டால், வாயு தொல்லை ஏற்படுவதோடு, புற்றுநோய், இருதய சம்பந்தமான நோய்கள் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. முட்டைக்கோஸிற்குப் பதிலாக, நமது உணவுப் பொருட்களான, பீர்க்கங்காய், அதலைக்காய், வெண்டைக்காய், பூசணிக்காய், கொத்தவரங்காய், புடலங்காய், ஆகியவற்றை உணவில் மிகுதியாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

ஃப்ரோக்கோளி

கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட ஃப்ரோக்கோளி காலிப்ப்ளவரின் மற்றொரு வகையாகும். இதனை அதிகமாக உட்கொள்ளும்போது, உடலில் எரிச்சல் ஏற்படுகிறது.

டர்னிப்

டர்னிப் எனப்படும் கிழங்கு வகை கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டதாகும். இவற்றைச் சாதரணமாகப் பயன்படுத்தினால் கூட பல்வேறு நோய்களைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இக்கிழங்கு வகை நமது குறிஞ்சி நிலப்பகுதிகளில் தாராளமாகவே பயிரிடப்படுகிறது.

காலிப்ப்ளவர்    

வடஆசியப் பகுதியைத் தாயகமாகக் கொண்ட காலிப்ப்ளவர் குறிஞ்சி நிலத்திலும், சமவெளிப்பகுதிகளான ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் பகுதிகளிலும் பயிர்செய்யப்படுகிறது. மேற்குறிப்பிட்ட ஐரோப்பிய நிலப் பயிர்களினால் பல்வேறு தீமைகளும், பக்க விளைவுகளும் உண்டாவதை அறியமுடிந்தன.

மரங்கள் அழிப்பு

குறிஞ்சி நிலப்பரப்பில் வானுயர்ந்த மரங்கள் பற்றிய குறிப்புகளைச் சங்கப் பனுவல்களில் காணமுடிகின்றன. ஆனால், அம்மரங்கள் அரிதாகி வருவதோடு அழிந்துபட்டன.  ஆங்கிலேயர்களும், சேசு சபையினரும் கொண்டு வந்த வாட்டில், பைன். கோனிபீர், யூக்களிப்டஸ், சின்கோன போன்ற ஐரோப்பிய மரங்களே நம் குறிஞ்சி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வானுயர வளர்ந்து வருகின்றன. இவ்ஐரோப்பிய நில மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி மண்ணின் வளத்தைக் குன்றச் செய்துள்ளன. குறிஞ்சி நில மரங்களான வேங்கை, மலவேம்பு, தேக்கு, சந்தனம் போன்ற மரங்கள் குறைந்துபோனதற்கு யூக்களிப்டஸ் மரங்களின் அதீத வளர்ச்சியே காரணமாகும்.

வாசனைத் திரவியங்கள்

குறிஞ்சி நிலத்தில் விளைந்த வாசனைத் திரவியங்களான, ஏலம், மிளகு மற்றும் மருந்துச் செடிகள் அருகிப்போய்விட்டன. இவைகளுக்குப் பதிலாக குறிஞ்சி நிலப்பகுதியில் காப்பியும், தேயிலையும் பயிரிடப்படுகிறது. மிளகு குறித்த பதிவுகள் சங்கப் பனுல்களில் காணக்கிடைக்கின்றன. மிளகுக் கொடியின் பிறப்பிடம் குறிஞ்சி மலையாகும். மிளகு பலவகைப்படும் அவை,கருமிளகு, வெண்மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு. அகநானூற்றுப் பாடல் எண் 149 இல் இடம்பெற்றுள்ள வரிகள் மிளகின் சிறப்பினை எடுத்துரைக்கின்றன. அவை,
“சுள்ளி அம் பேரியாற்று வெண் நுரை கலங்க
யவனர் தந்த வினை மாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியோடு பெயரும்
வளம் கெழு முசிறி”
கிரேக்கர்களையும், ரோமானியர்களையும் யவனர் என்ற பெயரிட்டு அழைத்துள்ளனர் தமிழர்கள். குறுஞ்சி நில மிளகினைப் பெற்றுச் செல்வதற்கு மாற்றுப் பொருளாக யவனர்கள் கப்பல்களில் பொன்னைக் கொண்டுவந்துள்ள செய்தியில் இருந்து தமிழர்களின் வாணிபத்தை அறிதலோடு, மிளகின் சிறப்பினை அறியமுடியும். ஐங்குறுநூற்றில் இடம்பெறும் தாமன் ஆட்சி செய்த தான்றிக்குடி மலையே முசிறி துறைமுகத்திற்கும் கொற்கைத் துறைமுகத்திற்கும் வழிப்பாதையாக இருந்துள்ளதை அறியமுடிகிறது. இம்மலைப்பகுதியில் இருந்துதான் இவ்விரு துறைமுகங்களுக்கும் குறிஞ்சி நிலப் பொருட்களின் வாணிபம் நடந்திருக்க வேண்டும். இன்றும் தாண்டிக்குடிக்கு இரண்டு வழிப்பாதைகள் உள்ளன. ஒன்று அடுக்கம் வழியாக முசிறிக்குச் செல்லும் பாதை, பண்ணைக்காடு மற்றும் பட்டிவீரன்பட்டி பன்றிமலை வழியாக கொற்கைக்குச் செல்லும் பாதை. இவ்விரு பாதைகளும் இன்றுபயன்பாட்டில் உள்ளன. இந்தவகையில், சேயோன் குடியிருக்கும் குறிஞ்சி நிலத்தில் தமிழரின் பாரம்பரிய உணவுப் பயிர்களும், மரங்களும், அழித்தொழிக்கப்பட்டு குறிஞ்சி நிலப் பயிர்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. ஐரோப்பியர்களின் பயிர்களும் மரங்களும் குறிஞ்சி நிலத்தில் வளர்ச்சி பெற்றுள்ளன.

முடிவுகள்

சங்கப் பனுவல்களை வாசிப்பிற்கு உட்படுத்தி குறிஞ்சி நிலம் போன்று மருதம், முல்லை, நெய்தல் நிலங்களில் பயிரிடப்பட்ட தமிழர்களின் உணவுப் பயிர்களைக் கண்டறிந்து, அவற்றை வேளாண்மை செய்வதற்கு அரசு எந்திரங்கள் முன்வரவேண்டும்.

தமிழர்களின் பாரம்பரியமிக்க உணவுப் பயிர்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் கல்வி ரீதியாகப் பாடங்களாக்க முனையவேண்டும்.

தமிழர்களுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கும் குறிஞ்சி நிலப்பகுதிகள் சுற்றுலாத் தலங்கள் என்ற பெயரில், உயரமான அடுக்கு மாடிக் குடியிருப்புகளும், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதற்கான சொகுசு அறைகளும் (ரிசார்ட்) கட்டப்படுவதற்கு விளைநிலங்களும், சோலைகளும், அரிய வகையான தாவரங்களும் அழிந்து கொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்துவதற்குக் கருத்தரங்குகள், கட்டுரைகள், மாநாடுகள் வழியாக மக்களை விழிப்படையச் செய்யவேண்டும்.
வனஉயிர்க்கோளமாக விளங்கும் குறிஞ்சி நிலம் இன்று வறட்சி கண்டு வருவதற்கு மக்களின் புதிய குடியேற்றத்தைத் தடைசெய்யவேண்டும்.

மேற்குமலைத் தொடரைப் போன்று கிழக்குத் தொடர்ச்சி மலைகளையும், அவற்றில் உள்ள தாவரங்களையும், உணவுப் பயிர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு தமிழர்களின் நலம் காத்தல் வேண்டும்.

தமிழர்களின் உணவுப் பயிர்களின் எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லை. இன்று குறிஞ்சி நிலப்பகுதியில் பயிரிடப்படும் அனைத்து வகையான ஐரோப்பிய உணவுப் பயிர்களில் விஷமே கலந்துள்ளதை அறியமுடிகிறது.

தமிழர்களின் பாரம்பரியமிக்க பயிர்வகைகளை இலக்கியங்களில் இருந்து எடுத்தாண்டு, வேளாண்மை செய்தவற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

குறிஞ்சி நிலத்தைப் போன்றே மருதம், முல்லை, நெய்தல் நிலங்களிலும் நமது பாரம்பரியம் மிக்க தாவரங்களும், நெல்வகைகளும், மாடுகளும், மீன்வகைகளும் இன்று அழிந்து கொண்டு வருகின்றன. இவ்வகையான அழித்தொழிப்பு ஐரோப்பியர்களின் உலகமயமதாலின் வெளிப்பாட்டுச் சூழலாகவே கருதமுடிகிறது.

ஐரோப்பியர்கள் தமிழரின் நிலத்தையும், தமிழரை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் இன்றளவும் மறைமுகமாக ஆட்சி செய்து கொண்டிருப்பதன் வெளிப்பாடுதான் மரபணு மாற்றத்தில் விளைவிக்கப்படும் உணவுப் பயிர்கள் என்பதை மறுக்கவியலாது. காலனியவாதிகளின் ஆதிக்கம் உலகமாயமாதல் என்ற போர்வையில் நடந்துகொண்டிருப்பதை எதிர்த்து நிற்பதற்குத் தமிழரின் பண்பாட்டையும், சூழலியலையும் பேணவேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

துணைநின்ற நூற்கள்:
1.    அகநானூறு,
2.    புறநானூறு,
3.    ஐங்குறுநூறு,
4.    கலித்தொகை,
5.    நற்றிணை,
6.    குறுந்தொகை,
7.    தொல்காப்பியம்.
8.    திருக்குறள் உரை
9.    பதிற்றுப் பத்து


முனைவர் ஆ.பாண்டி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குறிஞ்சி நிலத் தாவரங்கள்”

அதிகம் படித்தது