குறிஞ்சி நில மகளிரின் பொருளீட்டலும்,பொறுப்புணர்வும்
முனைவர் பூ.மு.அன்புசிவாJun 17, 2017
மானுடத் தோற்றத்திற்கு அடிப்படையாய் விளங்குவது பெண்மையே. பொறுமை, ஆற்றல் ஆகியவற்றின் உருவகமாகவும் சக்தியின் பிரதிபலிப்பாகவும் போற்றப்பட்டு வருவதும் பெண்மையே. இத்தகைய மகளிரின் பண்பு நலன்கள் குறித்துப் பல்வேறு அறிஞர்களும் தமது கருத்துக்களை எடுத்துரைத்துள்ளனர். “வினையே ஆடவர்க்கு உயிரென” வினைமேற்கொள்ளல் ஆடவரின் தலையாய கடமையாகக் கூறப்பட்டாலும், மகளிர் கணவனது வாழ்க்கைக்குத் துணையாய் நின்று அன்பினால் ஒன்றி வாழ்ந்து, இல்லத்தில் கணவரையும் குழந்தைகளையும் பேணிக்காத்து, வரவுக்குத் தக்கபடி குடும்பம் நடத்தி, விருந்தினரைப் போற்றியும் வாழ்ந்ததால் “மனைக்கு விளக்கம் மடவார்” என சிறப்பிக்கப் பெற்றனர். தன் வாழ்க்கைக்கு தன் குடும்பத்திற்கு ஏற்றவகையில் கலைத்திறத்தால் மனை வாழ்க்கையைச் செம்மைபடுத்தும் வகையில், அட்டில்தொழில், மாலை தொடுத்தல், ஒவியம் வரைதல் போன்றவற்றையும் கற்று அதன் மூலம் பொருளீட்டலில் ஆர்வமும் பொறுப்புணர்வும் கொண்டு வாழ்ந்துள்ளனர் என்பதை சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.
குறிஞ்சி நிலமக்கள்:
இல்லறம் நல்லறமாக, மங்கல விளக்காகத் திகழ்பவள் பெண்ணே. ஒரு இல்லறம் சிறப்பான முறையில் இயங்குவதற்கு பெண்மையின் பேரறிவு பெரிதும் துணை புரிகின்றது. அதனால்தான் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்பும் ஒரு பெண் இருக்கின்றாள் என்ற தொடர் உருவானது. எனவே, இல்லற வாழ்க்கையில் நடைபெறுகின்ற நன்மைகளுக்கும், தீமைகளின் அழிவிற்கும் பெண்ணே காரணமாகின்றாள் என்பதை உணர்ந்தே, “ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே” என்ற முதுமொழியை முன்னோர் உருவாக்கியுள்ளனர். மலையும் மலை சார்ந்த இடமாகிய குறிஞ்சி நிலத்தின் முக்கிய விளைபொருள் தினையாகும். தினைக்கதிர்கள் முற்றி அறுவடைக்குத் தயாராகும் சமயத்தில் பறவைகள் உண்ணவரும் நேரத்தில் அவற்றை காக்கும் பணியில் மகளிர் ஈடுபட்டுள்ளனர் என்பதை சங்க இலக்கியங்கள் கூறுகின்றனர்.
“சிறுதினைச் செவ்வாய்ப் பாசினங் கடீய்யர் கொடிக்கி அவ்வாய்த் தட்டையொடவனை யாகெ” (நற்:134) என்பதில் மலையிடத்தில் உள்ள சிறிய தினைப்புனத்தை நாடிவரும் சிவந்த வாயையுடைய பசுங்கிளிகளின் கூட்டத்தை ஓட்டும் பொருட்டு, தலைவியின் அன்னையை தலைவியே கிளிகடி கருவியாகிய தட்டையை எடுத்துச் செல்க என்று கூறுகிறாள்.
முல்லை நிலமகள்:
முல்லைநில மகள் விடியற்காலையில் நன்றாக உறைந்திருந்த தயிரைக் காந்தள் மென்விரலால் கரைத்துக் கடைந்து வெண்ணெய்யைத் திரட்டி வேறு பாத்திரத்தில் வைத்து விட்டு, மோர்பானையை சும்மாட்டின் மீது வைத்து தலையில் சுமந்து சென்று அருகிலுள்ள ஊர்களில் அன்றாடம் விற்கிறாள் என்பதை,
“நள்ளிருள் விடியல் புள் எழப் போகிப்
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி” (பெரும் : 155:60)
நெய் விற்கும் மற்றொரு பெண் நெய்க்கு ஈடாகப் பொன் பெறாமல், நன்கு பால் கொடுக்கும் பசுக்களையும், எருமைகளையும் வாங்கி தனது பால் பண்ணையைப் பெருக்கினால் என்பதை,
“நெல்விலைக் கட்டி பசும்பொன் கொள்ளாள்
எருமை நல்லான் கருநாகு பெறூஉம்” (பெரும்:169:70)
என்ற அடிகள் சுட்டும். முல்லை நிலமகள் பொருளீட்டல் மட்டுமன்றி, பண்டமாற்று வணிகத்திலும் சிறந்து விளங்கினாள்.
மருதநில மகள்:
பருவத்திற்கேற்ப கிடைக்கும் மலர்களை வட்டிகளில் ஏந்தி தெருக்கள் தோறும் திரிந்து இளமகளிர் விற்றதால் அவர்கள் பூவிலை மடந்தை என்றழைக்கப்பட்டனர்.
“வாவிதழ் அலரி வண்டுபட ஏந்திப்
புதுமலர் தெருவுதொறும் நுவலும்
நொதும லாட்டிக்கு” (நற் -118 9-11)
என்கிறது. மற்றொரு பெண் கார் காலத்தில் குறுக்கத்தி, சிறுசண்பகம் முதலிய மலர்களைக் கடகப்பெட்டியில் வைத்து கையிலெடுத்துக் கொண்டு விலைக்குக் கொள்ளீரோ எனக்கூறிச் செல்கிறாள்.
நெய்தல் நிலமகள்:
கடலும் கடல் சார்ந்த நிலத்தைச் சார்ந்த நிலமக்கள் மீன் பிடித்தலைத் தொழிலாகக் கொண்டவர்கள். கடலினுள் சென்று பரதவர் பிடித்து வரும் மீன்களை பரதவக்குலப் பெண்டிர் ஊருக்குள் எடுத்துச்சென்று விற்றுவிட்டு தமக்குத் தேவையான பிற பொருளைப் பெற்றனர்.
“ஒங்குதிரைப் பரப்பின் வாங்குவிசை கொளீ,
திமிலோன தந்த கடுங்கண் வயமீன்” (அகம் – 320:1-4) என்கிறது.
அது மட்டுமல்லாது மிதமுள்ள மீன்களைத் துண்டங்களாகச் செய்து உப்பிட்டு, வெண்மணலில் பரப்பி வெயிலில் உலர்த்தும் பணியையும் செய்தாள் என்பதை,
“உரவுக்கடல் உழந்த பெருவலைப் பரதவர்
மிகுமீன் உணக்கிய புதுமணல் ஆங்கண்” (நற் 63-1- 2) என்கிறது.
நெய்தல் நிலமகளிரின் மற்றொரு தொழில் உப்பு விற்றல், உப்பினை வண்டியில் ஏற்றிச் சென்று விற்பர் என்பதை,
“நெல்லும் உப்பும் நேரே ஊரீர்
கொள்ளீரோவெனச் சேரிதொறும் நுவலும்” (அகம் 390:810)
என்னும் அடிகள் சுட்டுகிறது.
பாலைநில மகள்:
பாலை நிலமகள் எயிற்றியர் எனப்பட்டாள். நிலத்தில் குத்தி எடுத்த புல்லரிசியை, விளைமரங்களின் நிழலையுடைய தம் வீட்டு முற்றத்தில் தோண்டப்பட்ட நிலவுரலில் இட்டு சிறிய உலக்கையால் குத்தி எடுத்தனர் என்பதை,
“இருநிலக் கரம்பை படுநீறாடி
நுண்புல் அடங்கிய வெண்பல் எயிற்றியர்” ( பெரும் 90:9-10)
என்பதில் அறியலாம்.
அரசியல் பெண்டிர்
கள்ளை காய்ச்சி விற்கும் பெண்டிர் அரியல் பெண்டிர் எனப்பட்டனர் கள் விற்கும் பெண் தன் இடையில் கள்பானையைச் சுமந்து வந்து போர்ப்படைவீரர்களுக்கு கொடுத்தாள் என்பதை,
“அரியல் பெண்டிர் அல்குற் கொண்ட
பருவாய்ப் பானைச் குவிமுனை சுரந்த
வரி நிறக் கலுழி ஆர மாந்திச்” (அகம் 157:1-4)
புலைத்தி
சங்க கால மக்கள் தூய்மையான ஆடை உடுத்த காரணமாக இருந்தவள் புலைத்தி, இப்புலைத்திப் பெண்கள் தினமும் களர் நிலத்தில் அமைந்த கிணற்றைத் தோண்டி அங்கு கிடைக்கும் நீரால் ஆடைகளை வெளுப்பர்.
“களர்படு கூவற் றோண்டி நாளும்
புலைத்தி கழீ இய தூவெள் ளறுவை” ( புறம் 311)
ஏவன் மகளிர்
அரசரிடம் வரும் விருந்தினரை உபசரிக்கும் பணி செய்பவர் ஏவன் மகளிர் என்றழைப்பட்டனர். வரும் விருந்தினருக்கு குற்றமற்ற பொன்னாற் செய்த வட்டில் நிறையும்படி கள்ளினைப் பலமுறை வார்த்துத் தருவர்.
“இழையணி வனப்பின் இன்னகை மகளிர்
போக்கில் பொலங்கல நிறையப் பல்கால்
வாக்குபு தரத்தர” (பொருந 84-87)
அடுமகள்
சங்க மகளிர் விருந்தோம்பும் பண்பு மிக்கவராய் இருந்தனர். சமையல் கலையைச் செய்தொழிலாகச் செய்த மகளிர் அடுமகள் என்றழைக்கப்பட்டாள். இதனைப் பின்வரும் புறநானூற்றுப்பாடல் வழி அறியலாம்.
“அடுமகள் முகந்த வளவா வெண்நெல்” (புறம் 399:1-9)
இதில் வெண்ணெல்லைக் குற்றி எடுத்த அரிசியை உலையில் இட்டு சோறாக்கினாள் என்று உள்ளது.
விரிச்சிப் பெண்டிர்
விரிச்சி கேட்டல் என்பது நற்சொல் கேட்டல் என்பதாகும். முல்லைப்பாட்டில் பெருமுது பெண்டிர்,
“அருங்கடி மூதூர் மருங்கிற் போகி
யாழிசை இனவண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறுவீ முல்லை” (முல்லை7-10)
அரிய காவலை உடைய ஊர்ப்பக்கத்தே போய் யாழினது ஒசையையுடைய இனமான வண்டுகள்
ஆரவாரிக்கும்படி நெல்லினோடே நாழியினிடத்தே கொண்ட நறிய பூக்களையுடைய முல்லையின் அரும்புகளில் அப்பொழுது மலர்வனவாகிய புதிய பூக்களைச் சிதறித் தெய்வத்தைக் கையாலே தொழுது, பெரிதும் முதிர்ந்த பெண்டிர் நற்சொல் கேட்டு நிற்பர் என்பதாகும்.
முடிவுரை
சங்க மகளிர் மனையறத்தில் சிறந்தவர்களாக மட்டுமல்லாமல், குடும்ப பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றியுள்ளனர் என்பது திண்ணம்.
முனைவர் பூ.மு.அன்புசிவா
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “குறிஞ்சி நில மகளிரின் பொருளீட்டலும்,பொறுப்புணர்வும்”