மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குறுந்தொகையின் நான்காவது பாடல்

பேரா. ருக்மணி

Nov 8, 2014

kurundhogai1தலைவனைப் பற்றிக் குறை கூறுகின்ற தோழியின் சொல்லைப் பொறுக்கமுடியாத ஒரு தலைவியைத்தான் இந்தப் பாடலில் பார்க்கப் போகின்றோம். பொதுவாக பெண்கள், தாம் எவ்வளவு வேண்டுமாலும் கணவரைக் குறைகூறுவார்கள். ஆனால், மற்றவர்கள் கணவரைக் குறைகூறுவதைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அது அந்தக் காலத்திலும் அப்படித்தான் இருந்திருக்கிறது என்பதற்கு இந்தப் பாடலே சான்று.. இதோ பாடல்…

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே;
இமை தீய்ப்புஅன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே.(குறுந்தொகை.4)

இந்தப்பாடலை இயற்றியவர் காமஞ்சேர் குளத்தார்.
நெய்தல் திணைப்பாடல், குறுந்தொகையில் அமைந்த நான்காவது பாடல்.

தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் வருத்தத்தை நினைந்து கவலையுற்ற தோழிக்குத் தலைவி கூறியதாக அமைந்த பாடல் இது. தலைவி தோழியிடம்,“அவர் பிரிந்து சென்ற வருத்தத்தைவிட அவரைப் பற்றி நீ கூறிய வார்த்தைகளால் என் நெஞ்சமானது வருந்துகின்றது” என்கின்றாள்.

கருத்துரை:

என் நெஞ்சமானது வருந்துகின்றது , என் நெஞ்சமானது வருந்துகின்றது, இமைகளைத் தீய்ப்பது போல வெம்மையான என் கண்ணீரைத் தடுத்து துடைப்பவராய் நமக்கே அமைந்தவராய் நம்மோடு பொருந்தியிருந்த நம் காதலர், இப்போது நம்மோடு பொருந்துதல் இல்லாதவர் என்று நின்னால் ஆகுதலை நினைந்து, என் நெஞ்சமானது வருந்துகின்றது!

kurundhogai1சொற்பொருள் விளக்கம்:

நோம் என் நெஞ்சே- வருந்தும் என் நெஞ்சே, இமை தீய்ப்பன்ன –இமைகளைச் சுட்டுக் கருக்குவதுபோல, கண்ணீர் தாங்கி- கண்ணீரைத் தடுத்துத் துடைத்து, அமைதற்கு அமைந்த- நமக்கென அமைந்தவராய் பொருந்தியிருந்த, நம்காதலர்- நம்முடைய காதலர், அமைவிலர் ஆகுதல்- பொருந்துதல் இல்லாதவராய் (உன்னால்) ஆகுதல், நோம் என் நெஞ்சே- வருந்தும் என் நெஞ்சே.

தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கின்றான். அந்த வேளையில், தோழி தலைவனைப் பற்றி குறை கூறுகின்றாள். பொறுப்பாளா தலைவி! தலைவி பேசுகின்ற வார்த்தைகளில்தான் எத்தனை அழுத்தம்! எத்துணை தெளிவு! அளவில்லாத பேரன்பு! நாலுவரிப் பாடல்தான், என்றாலும் அதில் உறைந்துள்ள பொருளுக்கு எல்லையில்லை. அவன் என்னைப் பிரிந்து சென்றான். அவ்வாறு பிரிதலை அவன் என்னிடம் சொன்ன அளவிலே நான் கண்ணீர் வடிக்க, என் கண்ணீரைத் துடைத்தான். அப்படி என்னோடு பொருந்தி இருந்த என் தலைவனை ”அமைவிலர்” என்று நீ சொன்ன வார்த்தையால்தான் என் நெஞ்சம் வருந்துகின்றது..

“அமைதல்” என்ற சொல்லை, நாம் பொதுவாக, தானாக அமைவது, அதுவாக இயற்கையாக, எதேச்சையாக அமைவது என்றுதானே பயன்படுத்துவோம். எனக்கும் அவருக்குமான உறவு தானாக அமைந்தது. அவன் என்னைப் பிரிந்து செல்கின்றான் என்றவுடன் என் கண்களில் வழிந்த நீரும் இயல்பு. அந்தக் கண்ணீரைத் துடைத்த அவன் கைகளும் அன்புடையவை. என்னுடைய வருத்தமும் வருத்தத்தைத் தாங்காத அவனின் இயல்பும் தானாக அமைந்தது என்கின்றாள் தலைவி!

அப்படியிருக்க, உன் வாயால், அவரை எனக்குப் பொருத்தமில்லாதவர் என்று கூறிவிட்டாயே தோழி! என்ற தலைவியின் உள்ளத்து ஆதங்கமே பேச்சில் தொனிக்கிறது. “அமைவிலர் ஆகுதல்” என்பதில் எவ்வளவு அர்த்தம்‘! அவரின் செயல்கூட என்னை பாதிக்கவில்லை. ஆனால், அவரை “எனக்குப் பொருந்தாதவர்” என்று நீ சொன்ன சொல்தான் என்னை வருத்துகின்றது என்கின்றாள் தலைவி. நாலுவரிப் பாட்டுக்குள்ளே, உள்ளத்து உணர்வின் உண்மைநிலையினை எடுத்துரைக்கும் பண்டைத்தமிழ்ப் புலவனின் பாட்டுத்திறனை என்னென்பது?.


பேரா. ருக்மணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குறுந்தொகையின் நான்காவது பாடல்”

அதிகம் படித்தது