ஏப்ரல் 4, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

குறுந்தொகையும் சூழலியலும்

முனைவர் சொ.சேதுபதி

May 18, 2019

siragu kurundhogai1நவீன அறிவியல் யுகத்தில் இன்று பரவலாகப் பேசப்பெறும் ஒரு துறை சூழலியலாகும். “சுற்றுச்சூழல் (Environment) என்னும் சொல்லுக்கு நேரடிப்பொருள் சுற்றுப்புறம் (Surroundings). 1960க்கு முன் வரை, இச்சொல்லானது, வெப்பம், ஒளி, போன்ற இயற்பியல் காரணிகள் உள்ளிட்ட உயிரிகளின் சூழலைக் குறித்தது. பின்னரோ, அபரிமிதமான வளர்ச்சிப்போக்கில் விரிந்த தொழில்பெருக்கம், வேளாண்மை விரிவு, சூழல்மாசுகள், மக்கட்பெருக்கம் இவை தொடர்பான பிரச்சினைகளால் அச்சொல் மறுபரிசீலனைக்கு உள்ளானது.”

இத்தகு கருத்தாக்கங்கள் எழுவதற்கு முன்பே தோன்றிய பழந்தமிழ் இலக்கியங்களில், சூழலியல் சிந்தனைகள் குறித்துத் தேடுவது அவ்வளவு பொருத்தமற்றதுபோலத் தோன்றினாலும், இன்றைய சூழலியல் கருத்தாக்கத்திற்கான வேர்களையும் விழுமியங்களையும் அவை கொண்டிருக்கின்றன என்பதை மறுக்க இயலாது.

நிலப்பாகுபாடும் திணைக்கோட்பாடும் வரையறுத்தளித்த வாழ்வியற் சிந்தனைகள் தமிழிலக்கணத்தின் பொருள் இலக்கணமாகத் துலங்குவது குறிப்பிடத்தக்கது என்றே கொள்ளலாம்.

வளமிகு வாழ்விற்குப் புறப்பொருள் தேடுதலின் காரணமாகக் தொலைத்த அகப் பொருளின் ஆழத்தையும் பொருளையும் தெளிவுற விளக்கி, அறத்தின்வழியே பொருளுணர்த்தி இன்பம் நல்க விழைந்த தமிழ் இலக்கிய, இலக்கண நோக்குகள் என்றும் போற்றத்தக்கவை. அவை சூழலியற் கருத்துக்களின் அடிப்படைக் கூறுகளைக் கொண்டு திகழ்வதைக் கண்கூடாகக் காணலாம். அந்த அடிப்படையில் குறுந்தொகையும் சூழலியலும் என்கிற பொருண்மையில் சில கருத்துக்களை, இக்கட்டுரையில் காணலாம்.

சுருங்கச்சொல்லி விளங்கவைப்பது தமிழ் இலக்கிய மரபு, அதில், நெடிதாகவும் இன்றி, மிகக்குறுகியதாகவும் அல்லாமல், நடுவினதாகவும் அன்றி ஓரளவு குறுகிய அளவில் அகப்பொருள் விளக்கும் பழந்தமிழ் இலக்கியம், குறுந்தொகை.

அன்பின் ஐந்திணையை உள்ளமைத்து எழுதப்பட்ட 401 பாடல்களின் உட்கிடக்கை இந்நூல்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நான்கு வகையான நிலங்களின் அடிப்படையில் நானிலம் என்று போற்றப்பெற்றது, தமிழகம். இதன் முதற் பொருளும் கருப்பொருளும் சூழலியல் கூறுகளுக்குச் சிறப்பாகப் பொருந்துவன. தன்னளவில் உள்ளதைக் கரவாமல் பிறர்க்கு ஈயும் மலையும் காடும் எப்பொழுதும் ஒரேமாதிரி இருப்பன அல்ல. மழைவளம் இருப்பின் தன்வளம் சுரக்க அருளும். வறண்ட காலத்துப் பாலையாய்த் திரியும். முல்லையும், குறிஞ்சியும் முறைமையில் திரிந்தமையால், தோன்றிய நிலம் பாலை.

நிலத்தின் ஈரம் குறைந்த நிலையில், அகத்தின் ஈரமான அன்பும் வற்றிப்போகும் போலும். அது அகவறுமை என்றால், புற வறுமை, பொருளின்மை. அதனைப் போக்கப் புலம்பெயர்கிறான் தலைவன். அவ்வாறு, தலைவியையும், தன் நிலத்தையும் விட்டுப் பொருள்வயிற்பிரியும் தலைவன், இத்தகு சுரத்திடைப் பயணம் மேற்கொள்ளும்போது பற்பல அவலநிலைகளுக்கு ஆளாவதைப் பாலைப் பாடல்கள் சுட்டுகின்றன.

அதேவேளையில், அந்தப் பாலைநிலத்திலும் பரிவும் அன்பும் மிக்கதாய் மானுடர் தவிர்த்த ஏனைய உயிர்கள், அதாவது உயர்திணை ஒழிந்த அஃறிணை உயிர்கள் விளங்குவதை மிக அழகாகச் சித்திரிக்கின்றன, குறுந்தொகைப்பாடல்கள்.

சூழலியல் மரபில், உணவுச் சங்கிலியின் முறைமை மாறாத தன்மை இத்திணைப் பாடல்களின் ஊடே, ஆங்காங்கு சித்திரமாகின்றன. அதாவது, புல்லைத்தின்னும் புழு. புழுவைத்தின்னும், மீன். மீனைத்தின்னும் பறவை. பறவையைத் தின்னும் மிருகம். முன்னர்ச்சுட்டிய அனைத்தையும் வேட்டையாடித் தன்வசப்படுத்தும் மனிதம் என்னும் தன்மையைப் பல பாடல்கள் ஆங்காங்கே சுட்டுகின்றன.

உணவுக்கு வேட்டையாடி உண்ணும் மிருக வர்க்கத்தை ஒத்து இருந்த மனிதன், பின்னர் பொருளாசை கொண்டு உயிர்கொன்று பொருள் கொள்ளும் வெறியுடையோனாக மாறுகிறான். கொள்வதற்குப் பொருள் இல்லாவிடினும், வறிதே அம்பு போட்டு அகன்றுவிடுகிற ஆறலைகள்வர்களைப் பாலை நிலப் பாடல்கள் காட்டுகின்றன. ஆறலை கள்வர்கள் ஏன் தோன்றுகிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால், அதற்குப் பின்புலமாக ஓரளவு இருப்பது சூழலியற்சீர்கேடு என்பது புலனாகும். அக்காலத்தில், அது இயற்கையின் இரக்கமின்மையால் நிகழ்ந்தது எனலாம். ஆயினும் அறமற்ற தன்மையால், அத்தகு அவலம் தோன்றுகிறது என்று உள உணர்வை ஒழுங்குபடுத்த முனைகிறது பண்டைத் தமிழ் இலக்கியம். அப்போது அறநூல்கள் பிறப்பெடுக்கின்றன. அவற்றுள் தலையாயதான திருக்குறள்,

அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரந் துளிர்த்தற்று

என்கிறது. இது, அகத்தில் அன்பாகிய ஈரமில்லாவிடில், புறத்து வாழ்க்கை பாலை தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. அதேசமயம், புறத்துப் பாலைநிலத்தில் ஈரமில்லாவிடினும் அகத்தின் ஈரமான அன்பினால், அவற்றை எதிர்கொள்ள முடியும் என்பதை நுட்பமாக உணர்த்துகின்றன குறுந்தொகைப்பாடல்கள்.

தன்னுயிர்போல் பிறிதுயிரையும் கருதிப்பேணும் உயிரிரக்கப்பண்பு, அனைத்து உயிர்களிடமும் இருப்பதைச் சங்கப்பாடற்சித்திரங்கள் புலப்படுத்துகின்றன. மனிதநேயம் என்று தற்காலத்தில் மிகப்பரந்த அளவில் பேசப்படும் இப்பாங்கு பண்டைக்காலத்தில் அஃறிணை உயிர்களிடத்தில் இருந்தே உயர்திணை உயிர்களாகிய மனிதர்களுக்கு வந்து வாய்த்திருக்கின்றன என்பதற்குக் குறுந் தொகைப்பாடல்கள் பல சான்றுகளாக அறியக்கிடைக்கின்றன.

நிழலற்று நீளும் பாலைநிலத்தில். தன் கன்றொடு நடக்கும் கலைமான், பருத்த பெருமரப்பட்டைகளைத் தன் கன்றுக்கு ஈந்து பசிப்பிணி போக்கும். உண்டபின் தோன்றும் களைப்பைப்போக்க நிழல் இல்லாக் காரணத்தால், தன் நிழலையே அளிக்கும் என்கிறார் கச்சிப்பேட்டுக் காஞ்சிக்கொற்றவன். தன்னுடைய குறுந்தொகைப்பாடலில்.

…….ஞெரேரெனக்

கவைத்தலை முதுகலை காலின் ஒற்றிப்

பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉம்பெருந் ததரல்

ஒழியின் உண்டு வழுவி னெஞ்சிற்

றெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி

நின்றுவெயில் கழிக்கு மென்பநம்

இன்றுயில் முனிநர் சென்ற வாறே, (குறுந்.213)

தலைவியைப் பிரிந்து தலைவன் சென்ற பாலைநிலத்தின் இயல்பு கூறும் தோழி, தன் கடமை கருதிக் காதலை அடக்கிக்கொண்டு பொருள்தேடப்போன பான்மை யை விளக்குவதாக இப்பாடலைப் பாடுகிறாள்.

இவ்வாறு உள்ளுறையாகவும், இறைச்சியாகவும் சொல்லப்பட்ட செய்திகளூடே சூழலியற்சிந்தனைகள் ஆங்காங்கே தென்படக் காணலாம்.

நிலம், நீர்,நெருப்பு, விண், காற்று என்னும் ஐம்பெரும்பொருட்களின் சேர்க்கை இந்தவுலகு என்பதைப் பண்டைத்தமிழ் இலக்கியங்கள் இனிதுணர்த்துகின்றன. அறிவியல் உணர்த்துவதும் இதுவேயாம். வான் மழையின்றி வாழுலகில்லை. நீரும் காற்றும், ஒளியுமிழ் வெப்பமும் இயற்கையின் பெருங்கொடை. காதலும் அப்படிப்பட்டதே என்பது இலக்கியத்துணிபு. அன்பை மையமாகக் கொண்ட, எதிர்பார்ப்புக் கடந்த இயற்கையின் உன்னதம் காதல் வழிப் பிறந்த நட்பு. எனவே, ஐம்பெரும்பொருட்களிலும் நுண்பொருளாகக் காதல் சிறந்த பெற்றியை அழகாக உணர்த்துகிறது, தேவகுலத்தாரின் குறுந்தொகைப்பாடல்.

உலகம் பெரிது. வானம் உயர்ந்தது. நீர்நிறை பெருங்கடல் ஆழம் உடையது. அகலமும் உயரமும் விரிவும் உடைய இந்தப் பிரபஞ்சத்தின் பெருமையை, உள்வைத்து, அதனினும் பரந்து விரிந்து உயர்ந்தது, தன் தலைவனுடனான நட்பு என்று பேசுகிறாள் குறிஞ்சிநிலத்தலைவி.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று

நீரினும் ஆரள வின்றே சாரல்

கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. (குறு.3)

என்பது அப்பாடல். இதில், குறிஞ்சிப்பூவின் தேன் சுட்டப்படுகிறது.

பன்னீராண்டுகட்கு ஒருமுறை மலர்வது குறிஞ்சி. அதனை ஒட்டியே, தமது வயதினை கணக்கிடுகிற வழக்கம், நீலகிரியில் உள்ள தொதுவர் என்னும் மலை வாழ்மக்களின் மரபாக இருக்கிறது.

குறிஞ்சி மலரிலிருந்து தேனீக்களால் பெறப்படும் தேன் மிகுந்த சுவையுடையது. அது மட்டுமன்றி, அப்பருவத்தில் தேன் எடுக்கும் தேனீக்கள் வேறு மலர்களை நாடாது என்றும் குறிப்பிடுவர். குறிஞ்சிப்பூவோ, மலைச்சாரலில், சிறிய கரிய செடியில் மலர்வது. அதன்வழி பெற்ற தேனைச் சேகரித்து மலைத்தேனீ கட்டும் தேனடையோ மிகப்பெரிது. மலைக்க வைக்கும் மலைத்தேனின் சுவையும் அது பேணப்படும் தேனடையும் அளவிற்பெரியது. காதலும் அத்தகையதுதான். இங்கே மலரும் மங்கையும் ஒருநிறை கொள்வதை உணரலாம். அவளை விரும்பிய தலைவன் அவளன்றி வேறு யாரையும் நாடான். காரணம், அவன், கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடன். பெருந்தேன், இழைக்கும் என்ற கவிச்சொற்களில் அன்பின் பெருக்கமும், அன்பில் ஒன்றிய அகங்களின் நெருக்கமும் அழகாகத் துலக்கமாகக் காணலாம்.

இது குறிஞ்சித்திணைக்குரிய பாடல். இது ஐவகை நிலங்களுள் உயர்ந்தது. வானின்று இறங்கும் மழை அருவியாகிப் பின்னர் ஆறாகி, காடு பெருக்கி, கழனியை விளைவித்து, இறுதியில் கடல் சேர்கிறது. அவ்வாறு சேர்ந்தால்தான், சூழல் சமநிலையோடு இயங்க வாய்ப்பு. காதலும் அப்படிப்பட்டதுதான். முல்லை யும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பழிந்த பாலைநிலத்திற்கும் பரிவுமிகு காதல் உண்டு.

தன்னுயிரினும் பெரிதாகக் கருதிக் காதலிக்கும் இன்னுயிரான பெண்ணிணையின்பால் ஆணுயிர்கள் கொண்ட அன்பின் பெருமையைப் பறவையினத்திலும் விலங்குகள் இனத்திலும் மிகுதியாகக் காணமுடிகிறது. இயற்கைச்சூழலில் வறண்டது பாலைநிலம். இதில் இன்பத்திற்கு அப்பால் விரிகிறது உயிர்களின் அன்பு. சான்றுக்கு இரண்டனைக் காணலாம்.

வறண்ட பாலை. பிடியொடு அலமரும் களிறு, யாமரப்பட்டைகளைத் தன் துதிக்கையால் உரித்து, அதன் நீரைத் தன் இணைக்குத் தருகிற காட்சியைச் சித்திரப்படுத்துகிறார், பாலை பாடிய பெருங்கடுங்கோ.

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும் (குறுந்.37)

பின்னும் ஓரிடத்தில் பிடிகளைத் தழுவிய களிறுகள் வருகின்றன. இதுவும் பாலைநிலம்தான்.

நீர் இல்லாது வறண்ட குளத்தைத் துழாவிய களிறுகள், தந்தம் நீண்ட தன் துதிக்கைகளால், தம் காதற்பிடிகளைத் தழுவியபடி இருக்கின்றன. காரணம், காதல் மிகுதியன்று. காப்பே நோக்கம். எந்த நேரத்திலும் வன்புலிகளின் தாக்குதல் களுக்குத் தன்னிணைகள் ஆளாகிவிடக்கூடாது என்ற அன்பின் பெருக்கம்தான். இந்தக் காரணத்தைக் கண்டு பின்வரும் பாடல்வழி காட்டுபவர், மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்.

               …………….நீர்இல்

வறுங்கயம் துழைஇய இலங்குமருப்பு யானை

குறும்பொறை மருங்கின் அமர்துணை தழீஇக்

கொடுவரி இரும்புலி காக்கும்

நெடுவரை மருங்கின் சுரன் (குறுந்.215)

என்பதே அப்பாடல் அடிகள்.

இவையனைத்தும் மழைவளம் இன்றி மலைப்பகுதி வறண்டதால் எழுந்த குறிஞ்சியது பாலை.

மெய்யாகவே, செழிப்பு மிக்க குறிஞ்சியிலும் தன் உயிர்ப்புமிக்க இரக்கப்பண்பை இழந்துவிடவில்லை யானையினம்.

வளமிகு குறிஞ்சித்திணையின் யானை, பரணரின் குறுந்தொகைப்பாடலில் துஞ்சுகிறது. (குறுந்.36) பக்கத்தில் துறுகல் (உருண்டைக்கல்) கிடக்கிறது. அதன் அருகில் உள்ள மாணைக்கொடி, இந்தத் துறுகலைவிட்டுவிட்டு, துயிலும் யானையின் மேனியில் படரத்தொடங்குகிறது. யானையும் அக்கொடிக்குத் தன்னையே தந்து அமைதிகொண்டிருப்பது அழகு. இது எவ்வளவு நேரம் நீடித்ததோ, அறியோம். ஆனால், ஓரறிவுடைய அவ்வுயிரின் நலன் கெடலாகாது என, ஐந்தறிவுடைய யானை அமைதிகாத்தது சிறப்பல்லவா? அந்த நிலத்திற்கே உரிய பறம்புமலையாண்ட பாரி, தனது தேரை முல்லைக்கு ஈந்ததையும் இங்கே ஒப்புநோக்கலாம்.

பொருள்வயிற்பிரிந்த தலைவன், சொல்லியவண்ணம் கார்காலத்தில் திரும்ப வருகிறான். அவனது தேர் வரும் ஒலி கேட்ட தோழி, தலைவியிடம் சொல்லுகிறாள்.

முல்லை ஊர்ந்த கல்உயர்பு ஏறிக்

கண்டனம் வருகம், சென்மோ தோழி (குறுந்.275)

என்று.

முல்லைக்கொடி படர்ந்த உயர்ந்த கல்லின்மீது ஏறித் தன் தலைவன் வருந்தேரைக் காண வருக என்று, ஒக்கூர் மாசாத்தியார் காட்டுகிற முல்லைநிலத்தோழி உரைக்கிறாள். இவ்வாறு குறிஞ்சிநிலத்து யானையும், முல்லைநிலத்துக் கல்லும் மாணைக்கொடிக்கும் முல்லைக்கொடிக்கும் பற்றிப்படரத் தன்னேயே கொடுத்த தரத்தைச் சொல்லுகின்றன குறுந்தொகைப்பாடல்கள்.

இவற்றை வள்ளல் பாரிக்கு முன்னோடி எனக் கொள்ளல் தகும்.

இவ்வாறு இயற்கைவளம் குன்றினாலும் நிறைந்தாலும் தன் அன்புவளம் வற்றாமல் அரவணைக்கும் உயிர்களின் செயல்களால், சூழல் இயல்பாகப் பேணப் பட்டது கண்கூடு.

இவ்வாறு உயிரினங்களின் உணர்வுவழி, தன் அறிவையும் ஆற்றலையும் பெருக்கிக்கொண்ட மானுடம் தனது காதல் உணர்வையும் பிரபஞ்ச அளவிற்கு வைத்துப் பேணுகிற பாங்கையும் குறுந்தொகை உணர்த்துகிறது. இப்பாங்கு, தாய்மை ஒளிரும் பெண்மையிடம் தான் சிறந்து விளங்குகிறது என்பதையும் சிறப்புறக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இன்றைக்கு, நுகர்வுவெறியால் சூழலைச் சிதைப்போர் அடுத்துச் சிதைப்பது பெண்மையைத் தான். இந்த அவலத்தையும் அவ்வப்போது, சுட்டிக்காட்டத்தவறவில்லை, குறுந்தொகைப்பாடல்கள்.

காமநுகர்ச்சி இயல்புமீறிய வெறியாக, அறம்பேணத் தேடிய பொருள் வரம்பிகந்து சேர்த்துவைத்துக் கொள்ளும் பொருளாசையாக, மனிதகுலம் ஏனைய உயிரினங்களின் இயல்பிலிருந்து தனித்துவப்படத்தொடங்குகின்றது.

பேதமற்று வளர்ந்த ஆணையும் பெண்ணையும் இந்தப் பொருள் தேடும் வினை வேறுபடுத்திவிடுகின்றது.

இப்போது வினை ஆடவர்க்கு உயிராகின்றது. ஆடவர் மனையுறை மகளிர்க்கு உயிராகின்றார். (பாலைபாடிய பெருங்கடுங்கோ, குறுந்.135)

பெண், மனைக்குள் சிறைப்படுத்தப்படுகிறாள். இற்செறிவூட்டல் இயல்பாகி விடுகிறது. விரும்பிய வண்ணம் தலைவனைச் சந்திக்கவோ, தன் உணர்வுகளைப் புலப்படுத்திக்கொள்ளவோ அவள் அனுமதிக்கப்படவில்லை. அதனால்தான்,

முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்

ஓரேன் யானும் ஓர் பெற்றிமேலிட்டு

ஆஅ ஒல் எனக்கூவுவேன்கொல் (குறுந்.28)

என்று பைத்தியம்போல் தனக்குற்ற உயவுநோய் அறியாது துஞ்சும் ஊருக்கு எடுத்துணர்த்த முடியாமல் துடிக்கிறாள் ஔவையார் காட்டும் குறுந்தொகைத் தலைவி.

இத்தகு காவலையும் மீறிக் காதலன்பால் தன்னைக்கொடுத்த குறிஞ்சித் தலைவிக்கு நேர்ந்த அவலம் இன்றைக்கும் பொருத்தப்பாடுடையது.

யாரும் இல்லை தானே கள்வன்

தான்அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ?

தினைத்தாள் அன்ன சிறுபசுங்கால

ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்

குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே (குறுந்.25)

என்ற கபிலரின் தலைவியது உள்ளம் இன்றைக்கு நீதிமன்றங்களில் வெவ்வேறு பரிமாணங்களில் ஒலிக்கக் கேட்கலாம்.

மண் வளம் சுரண்டித் தன்னலம் பெருக்கிவரும் மருதநிலத்தலைவன் பெண்ணல மும் சுரண்டுகிற போக்கை விரிவாகவே பேசுகின்றன சங்க இலக்கியங்கள். இங்கே மருதநிலத்தின் மாண்பையும் நாம் கருதிப்பார்க்க இடம் வைக்கிறது குறுந்தொகை.

“கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்

பழன வாளை கதூஉம் ஊரன் (குறுந்.8)

என்ற ஆலங்குடி வங்கனார், நுட்பமாக ஓர் உண்மையைச் சித்திரப்படுத்துகிறார். மருதநிலத்து நீர்நிலையில் உள்ள வாளை மீன், தான் வாழும் நீருக்குள் கிட்டும் உணவைவிட்டு அல்லது உண்டு உண்டு அலுத்துப்போய், வயல் வரப்பிலே உள்ள மாமரத்தில் விளைந்து தானே வீழும் கனியைப் பற்றி உண்கிறது. இது வரம்பு மீறிய நுகர்விற்கான வாசல் திறப்பு. தேவகுலத்தாரின் பாடலில் இடம் பெறும் குறிஞ்சித்தேனீயையும், ஆலங்குடி வங்கனாரின் மருத வாளையை யும் ஒப்பு நோக்கினால், உயிரியல்பான நுகர்வின் உயர்வு, வரம்பிகந்த வெறியாகப் பரிணமிப்பதைக் காண முடியும்.

இயற்கையில் மலையும் காடும் உள்ளது உள்ளவாறே ஒளிக்காது வழங்கக் கூடியவை. இல்லாது வறண்ட காலத்திலும் இருக்கிற அளவிற் தண்மை பேணும் தன்மையன. ஆனால், மனித உழைப்போடு கூடிய மருதநிலத்தில் உற்பத்திப் பெருக்கம் ஏற்படுகிறது. பண்பாடு நாகரிகமாகப் பரிணமிக்கத் தொடங்குகிறது.

 இத்தகு “நாகரிகத்தின் தொடக்கத்திலேயே, மனிதனின் தலையீடு, சுற்றுச் சூழலுக்கு நிகழ்ந்தது. வாழ்வதற்குக் கட்டைகளைப் பயன்படுத்தி இருப்பிடத் தையும், காட்டை அழித்து விளைநிலத்தையும், பசிக்கு விலங்கினங்களையும் சார்ந்து வாழ்ந்த அக்கால மனிதனின் வாழ்க்கை கற்காலத்திலேயே சுற்றுச் சூழலில் மனிதனின் தலையீட்டைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இன்றைய அறிவியல் புரட்சியின் காரணமாக, மனிதன் தான் பெற்ற அறிவால், மற்ற உயிரினங்களைப் போலன்றி அவனது உடனடித் தேவைகளுக்கேற்பப் பொருத்த மாகச் சுற்றுச்சூழலை மாற்றி அமைக்கிறான். இது மனித வாழ்க்கையோடு ஒன்றிணைந்தது என்றாலும், இயற்கைக்கு முரணானதாகும்” என்பர் சூழலிய லாளர். (முனைவர் எஸ்.ஜான்பிரிட்டோ, சூழல் அறிவியல், ப.221)

இப்போக்கு மனிதகுலத்தின் அகத்திலும் புறத்திலும் பெரியதொரு மாற்றத்தை உண்டுபண்ணிவிடுகின்றது. புறவாழ்க்கைக்காகப் பொருள் தேடும் வேகத்தில் அகவாழ்க்கைக்கான பொருளை இழந்துவிடக்கூடாது என்கிற அக்கறையில் எழுந்த குறுந்தொகைப்பாடல்கள் திரும்பத்திரும்ப வலியுறுத்துவது அன்பைத்தான். அது இயற்கையில் கார்காலத்து மலரெனப் பூத்துச் சிரிக்கிறது. வான் மழையென வரமளிக்கிறது. வருவேன் என்ற தலைவன் வாராத வேளையில் காலம் காரெனக் கூறினும் யான் அது ஏற்க மாட்டேன் என்று வீம்புகொண்டுநிற்கும் பெண்மையில் அன்பு பிரபஞ்சத்தை மீறி வளர்கிறது, விரிகிறது. உடைமை வர்க்கம் வளர வளர உரிமையிழக்கும் பெண், மருதநிலத்து ஆண்களிடத்தில் தன்னையிழந்து பரத்தையாகிறாள்.

பொய்யும் களவும் பையப்பையத் தலையெடுக்கத் தொடங்குவதைத் தடுக்க வழி யின்றித் தவிக்கிறது பெண்மை. இந்த உண்மை உணர்ந்து தவிக்கும் ஆண்களும் குறுந்தொகையில் வலம் வருகிறார்கள். தெய்வம் நிகர்த்த பெண்மையைப் போற்றுகிற, அவர்களின் காதலை உணர்ந்து சிலிர்க்கிற ஆடவர்கள் உள்ளங்கள் குறுந்தொகைப்பாடல்களில் ஒளிர்த்தான் செய்கின்றன.

ஆயினும் அறம் கடந்த ஆசைக்கு ஆளாகிய ஆண்கள், அவர்கள் வசப்பட்ட பெண்கள், இருவரும் பிறந்த மழலைகள் என்று வாழையடி வாழையென வளர்ந்து பெருகிய மனிதவர்க்கத்தின் அறிவு, ஆற்றல், அறிவியல் வளர்ச்சி அனைத்தும் கூடி, சூழலைத் தமக்கு அடிமையாக் கொண்டன. அதனால் ஏற்படும் சாதக பாதகங்களை அனுபவிக்கிறவர்களாக இந்தத் தலைமுறை இருக்கிறது. இனி வரும் தலைமுறை என்னாகுமோ என்ற கவலையும் பிறக்கிறது.

இந்த நேரத்தில், பெண்ணாசை, பொருளாசை, பின்னர் நிலங்களை அபகரிக்கும் மண்ணாசை என்று வளர்ந்து இப்போது விண்ணாசையாகவும் வெறிகொண்டு எழுகிற காலத்தில், இவையனைத்தையும் விட உயர்ந்தது நட்பெனப் பேசும் தேவகுலத்தாரின் குறுந்தொகைப்பாடல்தான் உலகமாந்தருக்கு உண்மையை உணர்த்தும் நன்மொழி என்று கருத வேண்டியிருக்கிறது.

மொழியும் இசையும் கலந்து வெளிப்படும் லயத்துக்கேற்பத் தவிலும், பொறையும் பின்னொலிக்கின்றன. ஓங்கி ஓங்கி ஒலிக்கிறது கொகாலு. (அது இருளர்களுக்கான இசைக்கருவி.) இருளர்களின் மூச்சுக்காற்றோடு கொகாலுக்குள் செருகிய புல் மணக்கிறது. கோழி இறகு படபடக்கிறது. பொண்றீக (பெண்கள்) ஆடும் ஊட்டாட்டமும், ஆண்களும் ஆடுகிற கூட்டாட்டமும் நம் மனக்கண்முன் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

சபையில் மூப்பன் மூப்பத்தியோடு அமர்ந்திருக்கிறான். அவன்தான் இருளர்பதியின் தலைவன். ஊரைப் பதி என்று குறிப்பது இவர்தம் மரபு. அவனது வலதுகரமாய்ச் செயல்படும் வண்டாரி, இருளர்குழுவுக்குள் மூப்பனுக்கு அடுத்த பொறுப்பு வகிக்கும் குறுதலையும் இருக்க, வீணர்களும் வீணிகளுமாக (மணமுடித்த திருவாளர்கள், திருமதிகள்) கூடிய பெருங்கூட்டத்தினுள் நம்மையும் லட்சுமணன் அழைத்துப்போகிறார்.

தலைவீணனும் தலைவீணியும் அவர்கள் பாரம்பரிய முறைப்படி வளைந்த மூங்கில் குச்சியைக் கையில் கொடுத்து வரவேற்கிறார்கள். காட்டுப்பூக்களால் பின்னப்பட்ட ஒரு மாலையைப்போட்டு பச்சைச் சந்தனத்தையும் பூசுகிறார்கள். கொகலும் பொறையும் தவிலும் முழங்கிக் காடுகளில் எதிரொலிக்கிறது. (ப.117) அவர்களோடு நாமும் ஐக்கியமாகிறோம்.

தேனெடுத்தல், கிழங்ககழ்தல், கானுயிர்களை வேட்டையாடித் தீயிட்டுக் கருக்கியுண்ணல் எனும் பழந்தமிழ் மரபின் ஒழுங்கு குலையாமல் வாழும் அவர்களோடு நாமும் இணைகிறோம்.பெசாதுகளைக் கும்பிட்டு, கோலன் (கொம்புத்தேன்) எடுக்கப்போகும் பீமன் நம்மையும் கூட்டிப்போகிறான். ஓலைக் காரனும் கொடுக்கனும் நம்மோடுதான் நடக்கிறார்கள். வெரையன்- மலைத்தேன். தொடுதி- அடுக்குத்தேன், குசுவ- கொசுத்தேன், போன்ற தேன்வகைகளையும், மாசி, பங்குனியில் தேன் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல’ என்பன போன்ற தகவல் களையும் அவர்களது உரையாடல்களில் இருந்து தெரிந்து கொள்கிறோம். ஆனைத்துளசியைப் பிடுங்கிப் பிழிந்து அதன் சாற்றைத் தன் மேனிகளில் பூசிக் கொள்கிற பீமன் நம்மீதும் தடவுகிறான். தேனீக்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்கும் மருந்துபோலும்.

இதோ, இடுப்பில் கயிறு கட்டிக்கொண்டு தேனெடுக்க இறங்குகிறான் பீமன். பாறையின் இடுக்கில் கட்டியிருந்த ராட்டுகளை எடுக்கக் கூடையும் இறக்கி யாயிற்று. ‘க்கூகோய்..’ என்று பீமனிடமிருந்து வந்த ஓசையைக் கேட்டுக் கூடையையும், கயிற்றையும் இழுக்கத் தொடங்குகின்றனர், மற்ற இருவரும். ஈக்களுக்கு விட்டுவிட்டுத் தேவையான தேனடைகளை மட்டும் எடுத்துக் கொண்டுமேல் வருகிறான் பீமன்.(ப.263) அதளபாதாளம் நோக்கிச் சொட்டிக் கொண்டிருக்கும் தேன்துளிகளைச் சுவைக்க எந்த உயிரிகளுக்குக் கொடுத்துவைத்திருக்கிறதோ என்று எண்ணும்போது நாக்கில் நீர் ஊறுகிறது.

உழைத்த பங்குக்கு உரிய தேனை ஈக்களுக்கு விட்டுவிடும் கானகதர்மம் இவர்களுக்கு எப்போதும் உண்டு. தேனீக்களிடம் மட்டுமல்ல, கன்றுகளைப் பட்டினிபோட்டுப் பாலை ஒட்டக்கறுக்கும் சுரண்டல் பிழைப்பு அவர்களிடம் ஒரு போதும் இருந்ததில்லை.

கண்ணுகுட்டி

துள்ளிக்கெடாக்கூ

பாலே கறந்து

சொசேட்டிக்கு ஊத்துங்கா

கொங்கே

அத்து பாலு

அத்துக் குட்டீக்கு

பால் போசிக்குள்ளே

பாம்பும் கண்டே (ஒடியன், ப.22)

பாலைக் கறந்து சொசைட்டிக்கு ஊற்றச் சொல்கிறான் கொங்கன், அதாவது நகரில் இருந்து வந்து இவர்களை ஆக்கிரமித்தவன். அதன் பால் அதன் கன்றுக்கு என்று நியாயம் பேசும், இருளர்களுக்குப் பாம்பையும், கெங்கனையும் காண்பது கெட்ட சகுனம்.அந்த அறிகுறியைச் சுட்டும் கவிதை இது. அதுமட்டுமல்ல,, மீன்பிடிக்கும் போதும் இந்த மரபைத் தான் கடைப்பிடிக்கிறார்கள். கொக்குமரப் பட்டையைக் கசக்கி நீரில் போடுகிறார்கள். உடனே மீன்கள் மயங்கி நீரில் மிதக்கின்றன. இவர்கள் பெரிய மீன்களை மட்டும் பிடித்துக் கொண்டு சின்ன மீன்களை விட்டுவிடுகிறார்கள்.கொஞ்ச நேரத்தில் மயக்கம் தெளிந்த சின்னமீன்கள் மீண்டும் நீந்தத் தொடங்கிவிடும். ஒட்டுமொத்தமாய்ப் பிளாஸ்டிக் வலைவிரித்துப் பற்றி இழுத்து வந்து கரையில் போட்டுச் சாக அடிப்பதோ, வெடிவைத்து அனைத்தையும் கொன்று அள்ளுவதோ அவர்களுக்கு உடன்பாடானதல்ல, அதனை எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களும் கூட.

வேங்கே மடுவிலே

வெடி போடும் வலையா

நா

வௌஞ்சே கெண்டே

நல்லா திந்து

ஆடி மூஞ்சாச்சு

ஏங்குஞ்சும் சாகேடா

குட்டீயே கொல்லுகாதில்லே

செனமான் கத்துதுன்னா

முச்சூடும் சொரண்டும் பழக்கோ

முடுகனுக்குமில்லே

ரெக்கே திங்கா பக்கி (ஒடியன், ப.25)

என்று சபிக்கிறான்.‘இறகைத் தின்னும் குருவியே’ என்று அத்தகையோரை எள்ளுகிறான். .

‘சினைமான் கத்தினால் கொல்லுவதில்லை’ என்பது ஒரு குறியீடு. வேட்டை யாடுவதுதான் அவர்கள் தொழில் எனினும் குட்டிகளையும் சூல் கொண்ட மிருகங்களையும் கொல்வது அவர்களின் பண்பாடல்ல. அம்புபட்டுத் துடித்தலறிப் பள்ளத்தில் வீழ்ந்துகிடக்கும் கடமானைக் கறிக்காக எடுக்கப்போகிறான் சடையன். கூடப்போகிறார்கள், கொன்னானும், கோயனும், சுள்ளானும் இன்னும் இருவரும்.நாமும் கூடப்போகிறோம்.

சட்டென்று நின்ற சடையன், மூக்கை உறிஞ்சிவிட்டு, முணுமுணுப்பதுபோலச் சொல்லுகிறான்: “ராஜா ஈங்குதான் ஏங்கியோ கடாக்கான்.” சொல்லிமுடித்ததும் பிளிறலில் காடு அதிர்ந்தது. ‘காட்டுக்கு ராஜா சிங்கம் என்று கதையில் படித்தது பொய். உண்மையில் காட்டுக்கு ராஜா களிறுதான் என்பது இருளர்கள் காட்டும் மெய்.

‘சத்தம் வந்த திசைநோக்கி முன்னேறும் சடையன் ஏறவே முடியாத பள்ளத்துக்குள் இறங்குகிறான். சத்தம் அதனுள் இருந்துதான் வந்துகொண்டிருக்கிறது. புதர்களை விலக்கி உள்ளே இறங்கினால், ‘தொட்டில் கட்டிதே இழுக்கோனு; கயிறு வரட்டு’ என்கிறான். கயிறு இறக்கப்பட்டது.

“ஊரே திந்தாலூ தீருகாதுல சடையா” என்று உற்சாகத்தோடு கூவுகிறான் கோடன். மேலேறிவந்த தொட்டிலில் அவ்வளவு பெரியமான்; கடமான். இரண்டாம் முறை கயிறு உள்ளிறங்குகிறது. இப்போது அது அப்போது ஈன்ற குட்டியும் வருகிறது. ஒன்றுக்கு இரண்டு இலாபம் என்று துள்ளிக்குதிக்கவில்லை அவர்கள். “கால்களின் காயத்துக்கும் குத்தீட்டிக் காயத்துக்கும் சுள்ளான் இருமுளிச் சாற்றைப் பிழிந்து சாக்கைக் கிழித்துக் கட்டினான். தண்ணீரைக் கொண்டுவந்து கடமனின் வாயில் கொஞ்சம் கொஞ்சமாய் ஊற்றினான் கோடன். கோக்கடையும் அவனது மகன்களும் இழைதழைகளை முறித்துவந்து அதற்கு ஊட்டிவிட்டார்கள். அதற்குள் கோயனும் சடையனும் மேலே வந்துவிட்டார்கள். இப்போது அதன் கண்களில் மரணபயம் சுத்தமாக இல்லாமல் போயிருந்தது. அது எழுந்து நிற்பதற்கு வசதியாக அடிப்பகுதியில் கொடியைப் போட்டு எல்லோரும் சேர்ந்து மேலே உந்திக் கொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் எழுந்துவிட்ட கடமன், குட்டியை மூக்கில் தள்ளித்தள்ளி கால்களை உதறியபடி துள்ளத்தொடங்கியது. “நீ போய்.. நல்லா… பொழத்தா போதும்” – சடையன் சொன்னதைக் கேட்டு உடனிருந்தவர்கள் ஆ..ஆ’போட்டு ஆமோதிக்கிறார்கள். நாமும்தான். எத்தனை பெரிய தாயுள்ளம் அவர்களுக்கு. (சப்பெ கொகாலு, ப.188)

உணவு போனாலும் பரவாயில்லை. உயிரே போகும் ஆபத்து வந்தாலும் அதன் உயிர்களைக் கொல்லாமல் விட்டுவிடுகிற கருணை இவர்களுக்கு உண்டு. சேர மன்னனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வேறு வழியேயில்லாமல் அவனுக்கு வேண்டிய யானைகளைப் பிடித்துக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு. ஆழக்குழி தோண்டி, அதனுள் ஒரு யானையையும் வீழ்த்தியாயிற்று. இச்செய்தி அரசனுக்கும் போயிற்று. படை பரிவாரங்களோடு அவன் புறப்பட்டுவருகிறான். அதற்குள் குழிக்குள் இருந்து யானையை எடுத்து அவனிடம் ஒப்படைக்க வேண்டும். தானே வெளியேறி ஓடி விட ஆனமட்டும் முயற்சி செய்து சோர்ந்து குழிக்குள் கிடந்த யானையை அவினன் சுற்றிச்சுற்றிவந்து பார்க்கிறான். அது பிடி. வயிறு பார்த்து, ‘மாசமாக் கெடாக்குல’ என்று சொல்லிச் சோர்ந்துபோய் உட்கார்ந்துவிட்டான். ‘ராஜா வர்க்காக்குள்ளே இதே வெளியேடுக்கணுமே” அவினன் சொல்லுக்குக் கட்டுப்பட்ட பதியர்கள் நாளெல்லாம் தோண்டி, குழியைத் தட்டி மேடுறுத்தி அதன் ஆழத்தைக் குறைத்தார்கள். முன்னங்கால்களைத் தூக்கி மேட்டின் மேல் வைத்து தும்பிக்கையால் மண்ணை அழுத்திப் பிடித்துக்கொண்டு உடலை மேலே இழுத்தது.தயங்கித் தயங்கிப் பின் வேகம் கூட்டி ஒரே உந்தில் மேடேறியது. மக்கள் ஒதுங்கி வணங்கிநின்றனர். கூட்டத்தை ஒருமுறை பார்த்துவிட்டு மிதமாக பிறிளி நன்றிப்பெருக்கோடு தும்பிக்கையைத்தாழ்த்தி வணக்கம் வைத்தது. பின் திரும்பித்திரும்பிப் பார்த்துக் கொண்டே நடக்கத்தொடங்கி காடுகளுக்குள் மறைந்து போனது. அரசன் காட்டை எட்டியிருந்தான். யானைக்கொப்பம் காலியாக இருந்தது. அதிர்ச்சியடைந்தான். மன்னன் படைகளுக்குக் கட்டளையிட்டான். படைகள் மூப்பனைத் தேடியது. அவினன்பதியே காலியாக இருந்தது. பதியர்கள் மேற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். (மேலது, ப.232)

கதையாக இருந்தால் இத்தோடு முடிந்துபோயிருக்கும்.லட்சுமணன் களத்தில் உய்த்துணர்ந்த வரலாற்றை அல்லவா புனைந்து சொல்கிறார். காடு கொன்று நாடாக்கி, வனங்களை அழித்து வயலாக்கி வெள்ளாமை போடவந்தவர்களை எதிர்த்துத் தங்கள் சொல்லாலும் செயலாலும் காலங்காலமாகப் போராடிக் கொண்டே இருக்கிறார்கள் இன்றளவும், இன்றளவும்.

“இந்த வனம் எனக்குச் சொந்தமானதில்லை. அது கோணமாகாளிக்குச் சொந்தமானது. இங்கிருக்கும் நரிகளும், உடும்புகளும், மான்களும், சிறுத்தை களும், பாம்புகளும், புலிகளும், ஏன் நாங்களும்கூட அவளுடைய குழந்தைகள் தான். எங்கள் அத்தனை பேருக்கும் படியளக்கும் அவள் சம்மதம் இல்லாமல், இதைச் செய்ய முடியாது. அப்படிச் செய்தால், நானும் வாழமுடியாது; நீங்களும் ஆபத்தில்லாமல் இருக்க முடியாது” மூச்சுவிடாமல் கோவன் சொன்னதை இப்படித் தமிழில் மொழிபெயர்த்தான் அரசவையாள். உண்மையில் கோவன் இன்னும் கூட்டித்தான் சொல்லியிருந்தான். ஆனால், அந்தப் படைகள் அதைக் கேட்கத் தயாராக இல்லை.” (மேலது, ப.234) அழிவுக்கு மேல் அழிவை உண்டாக்கத் தொடங்கினார்கள். திடீரென்று கோவன் அருளாட ஆரம்பித்தான். இப்போது ஓலையான் எழுத ஆரம்பித்திருந்தான். “…. அந்த வனத்திலிருந்த துர்க்கை சோழனிடமிருந்து பலிகேட்டது. அது கேட்டபடி சோழன் சமைய முதலியை அழைத்து துர்க்கைக்கு ஒப்புக் கொள்ளச் சொன்னார். அவர் சொன்னபடி சமைய முதலியும் கரிகாற்சோழனாகிறவர் நகரமும் கட்டிவைத்து அதிலுண்டாகிறவர் ஆலயமும் கட்டிவைத்து உன்னையும் நிலைநிறுத்திவைத்து முப்பலியும் கொடுக்கிறேன் துர்க்கையம்மா” என்று சொல்ல…. கொங்கர்கள் பதியிலிருந்த காடுகளை வெட்டி விதைக்கத் தொடங்கினார்கள்.குப்பர்கள் படி நாட்டுக்கும் கல்கட்டிகள் புறமலை நாட்டுக்கும் போனார்கள்” (மேலது.)

இப்படிச் சொந்தமண்ணின் மக்களைப் புலம்பெயரச் செய்துவிட்டுத்தான் அவர்கள் காடுகொன்று நாடாக்கினார்கள். பண்பாடு ஒழித்துப் பணம் பெருக்கினார்கள். நாகரிகம் எனும் பெயரில் வாழ்வியல் சூழல்களைச் சுரண்டினார்கள்.

இந்திய விடுதலையின் வரலாறு, இவர்களிடம் இருந்து கவனிக்கப்படவேண்டும் என்பதை, ‘வெள்ளேக்காரெ தோட்டத்திலே’, ‘வாராண்ட வாராண்ட வெள்ளெக்காரே’, ‘சோதோ சோதோ சின்னாத்தொரே’ என்ற பாடல்களின் பதிவுகளை ஊன்றிக் கவனிக்கச் செய்கின்றன லட்சுமணனின் எழுத்துச்சித்திரங்கள்.

வரலாறு மட்டுமா, அவர்களின் அகவாழ்வையும் சித்திரப்படுத்திக்காட்டி யிருக்கிறார். “சப்பெ கொகாலுவில், ‘துண்டுமல்லிகை’ தொடங்கி ‘வெள்ளிங்கிரி சாமியோ’ வரைக்கும் 45 இருளர்களின் பாடல்களைத் தந்து அதன்பின் சிறு சிறு புனைவுகளின்மூலம் அவர்களின் வரலாற்றை வாழ்வியலாகக் காட்டி, நம்மையும் உடனிருத்தி உணர்த்திக் காட்டுகிறார்.பாறையாகிப்போன பொன்னான், கிழங்காய்ச் சமைந்த வள்ளி, தொன்மங்களாய் உறைந்த காளி, காரமடை ரங்கநாதப்பெருமானுக்கு வா(ழ்)க்கைப் பட்டுப்போன, துளசிலாம்பா எத்தனை கதாபாத்திரங்கள். எத்தனை உரிமையோடு சொல்கிறான் வைத்தியக் கிழவன் பூரடன். “அதுக்கு முன்னால இந்தக் கடவுளையெல்லாம் நம்த்தாளுக சீந்தியதே இல்லை. அவர் (காரமடை ரங்கநாதர்) துளசிலாம்பாவை கல்யாணம் செய்து, நம்க்கு மச்சான் ஒறவு வந்த பிந்துக்குதா, அவருக்குந்து ஒரு கிராக்கியே வந்ததுலா”. (மேலது, ப.272)

ஆண்டாள் போல இருளர்கள் வாழ்க்கையில் ஒரு துளசிலாம்பா. இவர்கள் வாழ்வு, பழந்தமிழ் மரபு சுட்டும் அன்பின் ஐந்திணை வாழ்வு.அதிலும் குறிஞ்சிநிலத்திற் கென்றே உரிய புணர்தலும் புணர்தல் நிமித்தமுமான கருப்பொருள் நிறைந்த கருணை வாழ்வு. வயதுக்கு வந்த இருளனும் இருளச்சியும் சுயமாய் முடிவெடுத்துத் தாமே காட்டில் கூரை கட்டிக் கொண்டு வாழத்தொடங்கினால் முடிந்து போயிற்று, கல்யாணம். இதற்குத் துணைவரும் தோழிகள் தாட்டிக் குருவிகளாக ஆகிறார்கள். ‘ஓடிப்போகுமோ’ என்று கேட்கும் ஆண்-பெண் இணைந்து பாடும் பாடல்களில் பழந்தமிழ் ‘உடன்போக்கு’ மரபு துலக்கமாகிறது. இற்செறித்தல் இல்லை. அலர் இல்லை. மறுப்பு இல்லை. எப்படியானதொரு சமத்துவ, பொதுமை வாழ்க்கை அவர்களது.(கீரைப்பாசி (தாலி) கட்டிக்கொள்ளும் வழக்கமும், சீர் (பரியப்பணம்) கொடுக்கும் வழக்கமும் இவர்களின் வாழ்வில் பின்னால்தான் வந்திருக்கும். அதுவும் பெண்வீட்டாருக்குத்தான் கொடுத்தாக வேண்டும்.அதுமட்டுமல்ல, தான் விரும்பும் பெண்ணோடு வாழ, விரும்பும் ஆண்மகன் தானாகவே வலியப்போய்ப் பெண் வீட்டில் ஆறுமாதங்கள் தங்கி அவளை மனைவியாக்க அவர்கள் வீட்டு வேலைகளை எல்லாம் செய்யவேண்டும்.அப்படிச் செய்யும் இருளனுக்கு மெனமாப்பிளெ என்று பெயர். அவ்வாறு செய்யும் வேலைக்கு பொண்ணுவேலை என்று பெயர். (செட்டிநாட்டு வழக்கில், ‘பொண்டுக செட்டி’ என்று சொல்லும் வழக்கம் நினைவுக்கு வருகிறது.) பெண்ஜாத்தி, ஆண்ஜாத்தி என்று பிரிந்து கேலி பேசி உறவுகளைச் சேர்த்து வைக்கும் வழக்கமும், தாய்மாமனுக்குக் கொடுக்கும் மலாடைப்பணம், குருமொடத்துக்குக் கொடுக்கும் பசதுபணம், ஊருக்குச் சேரவேண்டிய பதிப்பணம் என்ற காணிக்கைகளெல்லாம் வரிவசூலிக்கும் வழக்கத்திற்குப் பின்னர் வந்தவை யாக இருக்க வேண்டும். அந்தக் காலத்தில், அண்டி என்னும் நீர் எடுக்கும் மூங்கில் பாத்திரம் போன்றவை மட்டுமே தாய்வீட்டுச் சீதனமாய்ப் பெண் வீட்டுக்கு வந்து சேரும்.

அக்காலத்தில், வீணனும் வீணியும் வாழ்க்கை தொடங்குகையில், எந்தப் பொருளுக்கும் மாமனார் மாமியார் உற்றார் பெற்றோர் உதவிநாடாமல் காடே வீடாய் அவர்களுக்கு வேண்டின கொடுத்து விடுகிறதே. கத்தாரே, நூரே, ரியான் முள்ளி என்று கசங்குகள் (கிழங்குகள்), வசலடாகு, பொவிடாகு, முஸ்டெடாகு, பாலேடாகு என்று டாகு(கீரை)வகைகள், வெரகரிசி, ரூமுசாடே, மூங்கமூரி என்று வரகு,சாமை, மூங்கிலரிசிகள், என்று இயற்கை கொடுத்த உணவு வகைகள் எத்தனை எத்தனை. தானே வரும் நோய்க்கு மருந்துகளும், கொன்னான் வைக்கும் விஷ மை வைக்கு மருந்துகளும் அவர்களுக்குத் தெரியும். எல்லாம் பழங்கதை யாகப் போக நஞ்சுபோல் வந்து கலக்கிறது, நவீன வாழ்வும், நாகரிகப் போக்கும்.

அமுதெது, நஞ்செது என அறியும் கல்வி அவர்களது. நஞ்சைவிடவும் கொடிய நாகரிகக் கல்வியைக் கொண்டு வந்து திணித்துத் தாய்மொழியையும், தாயகத்தையும் களவு கொள்கிற கொடுமையைப் பள்ளிக்கூடம் என்கிற தலைப்பில் கவிதையாகத் தருகிறார் லட்சுமணன்.

வீடு..

…………..

அதான் தூங்குவமே

! கூரே

தாய்

ம் அஃகா

தந்தை….

அம்மே

தவளை

ம்கூம்

கப்பே

சொன்னதைத் திருப்பிச் சொல்லு

பிரம்பு பிஞ்சிடும்

…………………….

……………………..

வகுப்புக்கு வெளியே

முட்டி போட்டு நின்னுகொண்டிருக்கேம்

நானும்

எத்து மொழியும் (ஒடியன். ப.67)

ஆங்கிலத்தின் முன்னால் நம் தமிழும், தமிழினமும் இப்படித்தான் நிற்கிறது என்று சொல்லவும் வேண்டுமோ?

விஷம் தீண்டினால், சுண்டமுள்ளால் மூன்று முறை அடித்தால் போகும் என்பது அவர்கள் அனுபவம் அதைப்போக்கவும் தெரியும் அவர்களுக்கு. ஆனால், இந்த நாகரிகம் என்கிற பெயரில் வந்த நஞ்சை எத்தனை அடி அடித்தாலும் எப்படிப் போக்குவது என்று தெரியாமல் புலம்புகிறது இருள மனம்.

பல்வலிக்குப் புங்க இலையையும், பசிக்கு மாகாளிக் கிழங்கையும், பிறநோய்களுக்கு வேம்பும், கஞ்சாவும் எனப் பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்தி நோய் போக்கும் இருளர்களின் வாழ்வைக் காட்டுமிராண்டி வாழ்க்கை என்று நகையாடிய நாகரிகர்கள் அவற்றுக்கான காப்புரிமை பெற்றுக் கொள்ளை கொள்வதைக் கண்டு வினவும் ஒரு கவிதை:

பல்லுக்கூ புங்கே

பசிக்கூ மாகாளி

தலேக்கு ஊஞ்சே

காஞ்சா வேப்பே

துப்பினா காரி

இன்னூங் காயாலே

இப்பவே வருகே

எம்த்து மூளேயே

நிம்த்துன்னு பகிகாக்கு

வயித்து அழுக்குக்குதே ரேய கங்கு (ஒடியன், ப.30)

‘வயிற்றைச் சுத்தப்படுத்த ரேய கங்கு பயன்படுத்துவோம். உங்கள் மூளையைச் சுத்தப்படுத்த மருந்து இல்லையே’ என்று சொல்லாமல் சொல்லி முடிகிற இக் கவிதையில் அவர்களது கோபத்தைவிட, மனிதர்களைக் குணப்படுத்தும் அக்கறையே ததும்பி நிறைகிறது. காரணம், “பழங்குடிகள் எதையும் தனக்கென வைத்துக் கொள்ளும் தன்மையற்றவர்கள். கிடைப்பது கஞ்சாவாக இருந்தாலும், கண்ணீராக இருந்தாலும் எதையும் பகிர்ந்து கொள்ளும் இயல்புடையவர்கள். எழுத்தாளர் பாலமுருகன் குறிப்பிட்டதைப்போல, பாலின சமத்துவம், பொதுவுடமைக்கொள்கை, சுரண்டலற்ற சமூகம், விருந்தோம்பல் பண்பு, தோழமையைப் பகிர்ந்து கொள்ளும் தன்மை, இனம் சார்ந்த பற்று, பிற இனத்தவர்களை வெறுக்காத தன்மை, சனநாயகத்தன்மை, கடும் உழைப்பும் படைப்பாற்றல் கொண்ட திறன், மூதாதையர் வழிபாடு என பழங்குடியினர் எளிய நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். வாழ்வியல் மற்றும் நெறி முறைகளில் சமவெளி நாகரீக சமூகத்தை விட, மலைவாழ் பழங்குடிகள் உயர்ந்தே நிற்கின்றார்கள். ஆனால் ஆதிக்கசமூகம் அவர்களுக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருவதுதான் வேதனை” என்று ஊடகவியலாளர் வி.கிஷோர் சொல்வது உண்மையிலும் உண்மை. அவர்களுக்கு நன்மை செய்வதாகவும், தொண்டு செய்வதாகவும் வந்து வந்து செய்த செயல்களைக் கண்டு நொந்து சொல்கிறது ஒரு கவிதை:

ஆதிவாசிக்கு

அற்புதமான திட்டோம் தந்தேங்கே

டெவலப்புன்னு

டெண்டரு போடுகே

பேப்பருலே எழுதுகா

டீவிலே காட்டுகா

ஊரெல்லாம் பேசுகா

போட்டா புடிக்கா

நினாக்கு பெரியாபிசர் பதவி

காட்டோடே இருந்தே

இப்போ

நிம்து பேரு வாங்காக்கு

நேனு கடங்காரே

பரணுன்னு மேலே ஏறுகாக்கில்லே

கெழங்குன்னு கீழே தோண்டுகாக்குமில்லே (ஒடியன், ப.28)

வந்தவர்கள் எல்லாம் வளர்கிறார்கள். புகழ் பெறுகிறார்கள்.ஆனால், இந்த மக்களின் நிலை? தற்கால வாழ்வுக்கும் பழங்காலப் பண்பாட்டுக்கும், இயற்கைக் கும் செயற்கைக்கும் இடைப்பட்ட நிலையில் அந்தரமாகத் தொங்கிக் கொண்டு நிற்கும் வாழ்வு. ‘அஞ்சு இட்லிக்கு ஆறு ஏக்கரை (ஏமாந்து) கொடுத்துவிட்டு, சொந்த மண்ணில் சொந்த மண்ணையே வேகவைக்கும் செங்கல் சூளைக்கு மண்சுமக்கும் வேலை எத்தனை கொடூரம்? (ஒடியன், ப.19) மண்ணுக்குரியவர்களான இந்த மக்கள் என்ன செய்தாலும் தண்டிக்கும் அதிகாரவர்க்கத்தை நோக்கிப் பின்வரு மாறு வினாத்தொடுக்கிறது இருளமனம்.

கள்ளி எடுத்தா அடிக்கே

காட்டுக்குள்ளே போனா புடிக்கே

தேனெடுத்தா பாதி கேக்கே

தானிக்காய் பொரித்தா பாக்கே

எல்லாமே நிம்த்துதுங்கே

மீட்டிங்லே

சோம்பேரிங்கே

சொன்னா புரிகாதில்லேங்கே

காட்டான்னு பெணாங்குகே

சேத்திவெக்கா பழக்கோ இல்லே

சொத்து பேப்பரு ஒந்துமில்லே

காட்டுவினா

எம்தாளுலே

நின்னே போலே

பொறுக்கி திங்கா பீச்சேக்காரே (ப.31)

எத்தகு அறச்சீற்றம்?

பன்முனைப்பட்ட சுரண்டல்கள், வளர்ச்சி அதிகாரத்தில் இருப்போர்க்கு மட்டும். நவநாகரிக உலகில் நடத்தப்படும் இந்த வளர்ச்சி நாடகத்தில் என்னென்ன கூத்துகள்?

சங்க இலக்கியத்து கருப்பொருள்கள் போல, இந்த இலக்கியத்திலும் இயற்கை உயிரிகள் இவர்களின் வாழ்வையும் வலிகளையும் உள்ளுறைப் பொருள் கொள்ள வந்து சிறக்கின்றன. ஏமாந்த நாய்(ப.41), கோக்கிரி மாடு (ப.36) நல்லது நடக்கும் என்பதை முன்னறிவிக்கக் கத்தும் பெருமாட்டி குருவி (ப.44), கெட்ட சகுனத்தைக் குறுக்கே வந்து உணர்த்தும் செம்போத்து (ப.32), அந்நியன் கல் பட்டு மார்பில் குருதிவழியக் கிடக்கும் பசிலிக்காக்குருவி (ப.47), ஊரில் உள்ள எல்லோர்க்கும் சமமாய் ஏதாவது கிடைக்கும்; நல்லது நடக்கும் என்பதை உணர்த்த இருள்வரும் நேரத்தில் வாசலில் வந்து கத்துதலின் மூலமாக உணர்த்தும் கிளி(ப.21), உலகம் அழிந்தபோது, மனிதர்கள் யாரும் உள்ளார்களா என்பதை அறிந்துவரக் கடவுள் அனுப்பிய சுள்ளாம்பூக்குருவி (ப.50) எல்லாம் வருகின்றன. இவற்றுக்கு மத்தியில் ஓர் ஆடு, பேசாத ஆடு பேசுகிறது.நல்ல தீனி வேண்டும் என்று வனக்காப்பாளரிடம் லஞ்சம் கொடுத்து, ரிசர்வ் காட்டில் மேயவிட்டுத் தன்னை வளர்க்கிற கோசி என்ற இருளச்சியிடம் அந்த ஆடு சொல்கிறது:

கப்பம் கட்டி

காட்டுல உருகே

ஒப்பே சோலே வரே

ஓடியோடி மேய்க்கே

நல்லா மேஞ்சென்னா செய்காது.

எல்லாம் சரி இப்படியெல்லாம் மேய்த்து என்ன பயன்?

என்னை எதற்காக இப்படி வளர்க்கிறாய்?

அந்தப் பெண்ணுக்குத் தெரியாதது, அந்த ஆட்டுக்குத் தெரிந்துவிடுகிறது.என்னை காட்டு நரி தின்றாலும் பரவாயில்லை; நீ தின்றாலோ புண்ணியம்.

நீ திந்தா புண்ணியம்

பரவால்லே நரிதிந்தாலும்ஆனால்,

ஆருக்குமில்லாமே

ரேஞ்சர் பொண்ணு கண்ணாலத்துக்கூ

கரியாகப் போரே

இதோ தீய சகுனம் சொல்லிச் செம்போத்து குறுக்கே பறக்கிறது.எனவே,

கோசி,

என்னே

கொன்னு திந்துரு இப்பவே (ஒடியன்.ப.32)

என்னவொரு நன்றிப் பெருக்கு!

ஒடியன்- தாயின் கர்ப்பத்தில் இருந்து சிசுவை எடுத்து தைலம் செய்யும் மந்திரவாதி என்று விளக்கம் தருகிறார் லட்சுமணன். இந்தத் தலைப்பை முன்னிறுத்திக் கவிதை தருகிறார் ஆசிரியர்.அதில், கள்ளி முள்ளில் சிக்கி நிலவு குருதி வடிக்கும் ஒரு நள்ளிரவில், மலை பொரிச்சான குஞ்சான யானை குளிக்கப் போகிறது.வழியில் அந்நியன் நட்டுவைத்த கருவேல மரங்களை உடைத் தெறிகிறது. கேளையாடு எழுப்பும் ஒலிக்கு, பயிரமரம் காதுகளை விரித்துக் கொண்டு காத்துக்கிடக்கிறது.கண்ணில் விளக்கு வைத்து உணவும் நீரும் தேடுகிறது யானை. கொடுமை, நீரைத் தன்னுள் நிறையச் சேமித்திருக்கும் நீர்முள்ளிக் கிழங்குகூடக் கிடைக்கவில்லை. குந்திரிக்கே (தேள்) வந்து நாவில் கொட்டுவதுபோலத் தாகம்.

யானை சொல்கிறது: பசியில் சோர்ந்த என் காலில், தவளை ஏறிக் குதிக்கிறது. (எத்தனை அலட்சியம்!) பட்டிசாலை – ஊரின் தலைவன் வண்டாரி பொறை அடிக்கிறான், கிழக்கே. மொக்கையில் ஊரார் பட்டாசு வெடிக்கிறார்கள் மேற்கே. குள்ளான் என்னை விரட்டி அடிக்கக் குள்ளான் காத்திருக்கிறான். இப்படித் திசைதோறும் பகைகள். அட, நன்றி கெட்ட நாய் இந்த மனிதர்களோடு சேர்ந்து என்னைக் காட்டிக் கொடுக்கிறது’. இன்னும் சொல்கிறது யானை. இந்த இருளர்களின் மொழிகளிலேயே…

நித்துதே திருடி

நின்னே தெகேய் மேலே போட்டு

தொரைகா சத்து வெச்ச

பணத்தே! தின்னே…. ந்தாப்பா

(உன் காட்டைத் திருடி, உன்னை அநாதை(தேகேய்)ஆக்கிவிட்டு, அதில் பணப்பயிர் (வாழையும் கரும்பையும்) விதைக்கிறான் அந்நியன். அதைத்தானே தின்கிறேன்.(அதில் என்ன தவறு?)

ஏழு உருப்படியூம் லெத்து

ஒண்டியாகி வருகேமு

ஒன்னா நிப்பாமா

(காட்டில் இருக்கும் உனது பிரிவுகளான ஏழு குலங்களின் பெரும்பலத்தோடு நான் ஒருவனாய் வருகிறேன். ஒன்றாய் நிற்போமா?) ரேசா, (ரேசமூப்பனை இப்படித் தான் அழைக்கிறது, யானை)

ரேசா,

கீழ்நாட்டுகயிருந்து (கீழ்நாட்டில் இருந்து)

வெரகாட்டகாக்கு வருகாரு

எம்மே (விரட்ட வருகிறது என்னை)

கும்கிகா (கும்கி யானை)

இப்போ என்னே (இப்போது நான்)

அப்புறோ நின்னே (நாளை நீ)

கும்கியோடு கொலைவெறி கொண்டு காட்டைவிட்டு, இன்னும் துரத்தும் ஒடியன்கள் இன்றைக்கு கீழ்நாட்டில் இருந்து வந்து மலைமுழுவதையும் சிதைத்து அழித்து ஒழிக்க நிறைந்து கிடக்கிறார்கள் என்கிறது இக்கவிதை.

இப்போ என்னே

அப்புறோ நின்னே

இந்தச் சொல், இருளர்களுக்கு மட்டுமா?

நம் எல்லோருக்கும் தானே!


முனைவர் சொ.சேதுபதி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குறுந்தொகையும் சூழலியலும்”

அதிகம் படித்தது